இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'தினமணி' நாளேட்டில் இன்று சனிக்கிழமை வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சொந்த மண்ணில் அகதிகளாக, உறவுகள் இருந்தும் அநாதைகளாக, உரிமைகள் இருந்தும் அடிமைகளாக கம்பி வேலிகளாலும், கழுகுப் பார்வை பார்க்கும் துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்களாலும் ஆட்டு மந்தையைப்போல இலங்கையிலுள்ள முகாம்களில் அடைபட்டு அல்லல்படும் ஏறத்தாழ மூன்று லட்சம் பேர்களின் பரிதாப நிலைக்காக நாம் இரத்தக் கண்ணீர் வடிப்பது, அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல, அவர்களும் மனிதர்கள் என்பதால்தான்.
எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு இனத்திற்கும் இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் அவர்களுக்காகக் குரலெழுப்பவும், அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கவும் நமக்குக் கற்றுத் தந்தவர்கள் அன்னிய நாட்டுப் போராளிகளோ, மேதாவிகளோ அல்ல. நமது தேசப்பிதா மகாத்மா காந்தி!
அங்கே அடுத்த வேளைச் சாப்பாடு கிடக்கட்டும், வறண்டுபோன தொண்டையின் தாகம் தீர்க்கத் தண்ணீர் கூடக் கிடைக்காமல், இயற்கையின் அழைப்பை எதிர்கொள்ள இடமில்லாமல், இரணத்தின் வேதனையிலிருந்து நிவாரணம் பெற வைத்திய வசதி பெற முடியாமல் தவிக்கும் மூன்று லட்சம் பேர்களும் ஆறு அகதிகள் முகாமில் அடைந்து கிடக்கிறார்கள். அவர்களது நிலைக்குப் பரிதாபப்படாமல், இந்தியாவிலுள்ள அகதிகள் முகாம்களைவிட நேர்த்தியாகவும், வசதியாகவும் இலங்கை அரசு அந்த முகாம்களை நிர்வகிக்கிறது என்று நற்சான்றிதழ் வழங்கத் தமிழக ஊடகங்களே தயாராகிறதே, அதுதான் விசித்திரமாக இருக்கிறது.
மூன்று லட்சம் பேர். ஆறு முகாம்களில் - சுமார் 85,000 குடும்பங்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து கையறு நிலையில். இவர்களை செல்வச் செழிப்பான அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளால்கூட வசதியாகப் பராமரிக்க முடியாதே, அப்படி இருக்கும்போது, இந்த அகதிகளுக்கு உண்ண உணவும், நோய்க்கு மருந்தும் கொடுக்க வழியில்லாமல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் கையேந்தும் இலங்கை அரசு மகிழ்ச்சியாகவும், நேர்த்தியாகவும் முகாம்களில் சகல வசதிகளுடன் பராமரிக்கிறது என்று நற்சான்றிதழ் கொடுப்பவர்கள் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்கள்? யாருக்குத் தூதுவர்களாகச் செயல்படுகிறார்கள்?
பிரபல பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று அவர்கள் மூலம் தனது கபட நாடகங்களுக்கு, உலக அரங்கில் அங்கீகாரம் தேடும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதும், அதற்கு நம்மவர்கள் சிலரே கூடத் துணை போகிறார்கள் என்பதும் ஒருபுறம் இருக்கட்டும். அங்கே தமிழ் ஈழ அகதிகள் முகாம்களின் உண்மை நிலைதான் என்ன?
வட இலங்கையில் வவுனியா பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு ஆறு முகாம்களில் கம்பி வேலிகளுக்குள்ளே இந்த அகதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சுற்றிலும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் இவர்கள் வெளியில் சென்றுவிடாமல் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 10,000-க்கும் அதிகமான தற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் அதில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
முறையான கழிப்பறை வசதிகள் கிடையாது. குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் வசதி கிடையாது. வயிறு நிறைய உண்ண உணவு கிடையாது. மருத்துவ வசதியும் முழுமையாகக் கிடையாது. 13,000 அகதிகள் இருக்கும் முகாமில் எட்டு மருத்துவர்களும், நான்கு செவிலியர்களும், போராட்ட பூமியிலிருந்து காயங்களுடன் கதறித் துடிக்கும் அகதிகளுக்கு என்னதான் மருத்துவ உதவி அளித்துவிட முடியும்?
உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் என்று ஐக்கிய நாடுகள் சபையால் வர்ணிக்கப்படும் செட்டிக்குளம் முகாமின் நிலைமை அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறுவது நாமல்ல, சரத் நந்த சில்வா என்கிற இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. அவர் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபை செயலர் பான்கி-மூன் இதையே வருத்தப்பட்டுத் தெரிவித்திருக்கிறார்.
இலங்கை இராணுவத்தைவிடக் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இந்திய இராணுவம் திறமை வாய்ந்தது. இந்திய இராணுவத்தின் உதவியுடன் அடுத்த ஒரே மாதத்தில் கண்ணிவெடிகளை அகற்றவும், அகதிகள் முகாம்களைப் பராமரிக்கவும் இலங்கை அரசு முன்வர வேண்டும். அதற்கு இந்திய அரசு வற்புறுத்தவும் வேண்டும்.
முகாம்களில் அடைந்து கிடப்பவர்கள் அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பாதவரை, நாளும் பொழுதும் செத்து மடியும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம்தான் இருக்கும். இராணுவம் முற்றிலுமாக அகன்று, பொது நிர்வாகம் செயல்பட்டால்தான் சகஜ வாழ்க்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் திரும்பப் போகிறது. அதற்குப் பிறகுதான், ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்பதையும், அரசியல் தீர்வு எப்படி அமைய வேண்டும் என்பதையும் யோசிக்க முடியும். இதுதான் யதார்த்த உண்மை.
நீங்கள் நிதி உதவியும், பொருள் உதவியும் தாருங்கள். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்கிற இலங்கை அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அவதிப்படும் அகதிகளுக்கு உதவ இந்திய அரசு முன்வந்தால் மட்டுமே, அவர்கள் வாழ்வில் நம்பிக்கை மலரப் போகிறது. இனியும் நாம் வாளாவிருந்தால் நியாயமல்ல!
நம்மை வழி நடத்துவது "காந்தி'தானே? மகாத்மா காந்திதானே?" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments