“அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை…
சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள – பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது… “
தேசியத் தலைவர் மாவீரர் நாள் உரை 2005
“விடுதலைப் புலிகள் இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருப்பினும்- அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாகக் கருத முடியாது. எதிர்காலத்தில் அவர்கள் பலம் பெற முடியாதென்று கூறவும் முடியாது.”
இவ்வாறு இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் கூறியிருந்தார்.
அவரது இந்தக் கருத்து வெளியான சில நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தில் இருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
“வரலாற்றின் தேவை கருதி- பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப- புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன்- எமது இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பு மீள்-ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டுள்ளது. நீண்ட- விரிவான- ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் இறுதியாக, எமது நிர்வாகச் செயற்குழுவால் எடுக்கப்பட்ட கூட்டு முடிவுக்கு அமைய- எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளரான செல்வராஜா பத்மநாதன்- இனிவரும் காலத்தில் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு அமைவாக போராட்ட நகர்வுளை வழிநடத்திச் செல்வார். எமது போராட்டத்தை முனைப்புடன் முன்நகர்த்தும் நோக்கில்- எமது இயக்கத்துக்கான ஒரு தலைமைச் செயலகமும், பல்வேறு துறைசார் வேலைத்திட்டப் பிரிவுகளும், நிறைவேற்றுச் செயற்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன.”
என்று அந்த அறிக்கை நீண்டு செல்கிறது.
கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வந்து ஒருவித மாய நிலையில் இருந்து விடுபட்டு வருவதை இந்த அறிக்கை தமிழ்மக்களுக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களிலும் இடம்பெற்ற பல விரும்பத்தகாத சம்பவங்களும், அறிக்கைகள், சேறு பூசல்களும் தமிழ்மக்களைத் திகைப்பில் ஆழ்த்தியிருந்தது.
சரியான தீர்மானத்தை எடுக்க முடியாத வகையில் செய்யப்பட்ட பிரசாரங்களின் காரணமாக- தமிழ்மக்கள் உறுதியானதொரு முடிவை எடுக்க முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தனர்.
அது மட்டுமன்றி இந்த இரண்டு பட்ட நிலைக்குள் இருந்து விடுபட முடியாது போனதால்- தேசத்துக்காக உயிர்கொடுத்த மாவீரர்களுக்கு இறுதிவணக்கம் செலுத்த முடியாத ஒரு அவலமும் காணப்பட்டது.
தேசியத் தலைமை பற்றியதான விவாதமே இந்தக் காலத்தில் முதன்மை பெற்றிருந்தது. இந்த வாதப்பிரதிவாதங்களின் காரணமாக- தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வுகளை சரியாக முன்னெடுக்க முடியாத நிலை உருவானது.
சரியாகச் சொல்வதானால்- இந்த இரண்டு மாதங்களிலும் ஒரு முழுமையான வெறுமை நிலைக்குள் தான் ஈழத்தமிழினம் இருந்தது. எந்த அரசியல் நகர்வுகளை எடுப்பதற்கும் திராணியற்றவர்களாக, சிங்கள அரச பயங்கரவாதத்துக்கு எதிரான நிகழ்வுகளை ஒருங்கிணைக்க முடியாதவர்களாகவே இருக்க நேரிட்டது.
ஆனால், இந்த மாய நிலையில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கமும் சரி- தமிழ் மக்களும் சரி-விடுபடத்தொடங்கியிருப்பதான செய்தி- இலங்கை அரசாங்கத்துக்கு நிச்சயம் அதிர்ச்சியைக் கொடுப்பதாகவே இருக்கும்.
இதுவரை இருந்து வந்த தேக்க நிலையைப் பயன்படுத்திக் கொண்டு- இலங்கை அரசும் சரி, தமிழ்த் தேசியத்துக்கு விரோதமான சக்திகளும் சரி- “தமிழீழ விடுதலைப் போராட்டம் செத்து விட்டது. விடுதலைப் புலிகள் இயக்கமும் சரிந்து விட்டது” என்றே பிரசாரம் செய்து வந்தன.
விடுதலைப் புலிகள் இயக்கம் மறுபடியும் புத்துயிர் பெறும் என்றோ- பிரிந்துநின்றவர்கள் சேர்ந்துகொண்டு போராட்டத்தைமுன்னெடுப்பார்கள் என்றோ அவர்கள் எவரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
புலம்பெயர் நாடுகளில் உள்ள ஒருங்கிணைப்பாளர்கள், களத்தில் படையினரின் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளிவந்த போராளிகள், பொறுப்பாளர்கள் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் பலரையும் ஒருங்கிணைத்து- மேற்கொள்ளப்பட்ட நீண்ட- விரிவான கருத்துப் பரிமாற்றங்களின் தொடர்ச்சியாக- விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு என தலைமைச் செயலகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. நிறைவேற்றுச் செயற்குழுவொன்றும், துறைசார் வேலைத் திட்டப்பிரிவுகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இவை தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஆறுதல் அளிக்கின்ற ஒரு முடிவாக- செய்தியாக அமைந்திருக்கிறது என்பதில் வியப்பில்லை.
எதிர்காலத்தில் விடுதலைப் போராட்டம் எப்படிப்பட்ட சூழலுக்குள் முன்னகரப் போகிறது என்பதே முக்கியமான கேள்வியாக எழுந்திருக்கின்ற இந்த நேரத்தில்- தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புத்துருவாக்கம், தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுத் திருப்பமாகவே அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
மூன்று தசாப்த கால வரலாற்றைக் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கமே- தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தை வழிநடத்தி வந்தது. விடுதலைப் புலிகள் இயக்கமே தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே தமிழ்மக்கள் தமது ஏகோபித்த ஆதரவை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வழங்கியிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் மண்ணில் ஏற்பட்ட நிர்க்கதி நிலையில் இருந்து விடுபட முடியாதமல் தமிழ்மக்கள் தவித்து வந்தது யாவரும் அறிந்த ஒன்று. எங்கே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மறைந்து போய்விடுமோ- போராட்டம் அழிந்து விடுமோ என்று பயந்தவர்கள் தான் ஏராளம். இன்று அந்த நிலை மாற்றமடைந்து வருவதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
புலிகள் இயக்கம் புத்துயிர் பெற்றிருப்பதானது,
• விடுதலைப் புலிகள் அழிந்து போன சக்தியல்ல.
• தமிழீழம் என்பது வெறும் கனவாகிப் போன இலட்சியம் அல்ல
என்பதை சர்வதேசத்துக்கு- இலங்கை அரசுக்குஆணித்தனமாகத் தெளிவுபடுத்தியிருக்கிறது.
விடுதலைப் புலிகள் பலமானதாக இருந்தவரைக்கும் தான் சிங்கள அரசும் சரி- சிங்களப் பேரினவாதிகளும்சரி அடங்கிப்போயிருந்தார்கள். இப்போது புலிகள் தமது படைபலத்தை இழந்து போய்விட்ட நிலையில்- தமிழ்மக்களை வெறும் புழு பூச்சிகளைப் போல அவர்கள் கருதத் தொடங்கி விட்டார்கள்.
தமிழ்மக்களுக்கு எந்தவொரு அரசியல் தீர்வையும் வழங்கத் தயாரில்லை என்பதை வெளிப்படையாகவே கூறும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களுக்கு நியாயமான- அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல்தீர்வை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார் மகிந்த ராஜபக்ஸ.ஆனால், அண்மையில் ‘ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர்-
“சமஷ்டித் தீர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்தத் தீர்வை வழங்க வேண்டும் என்பது எமக்குத் தெரியும். கொடுப்பதை அவர்கள் ஏற்க வேண்டும்” என்று ஆணவத்தோடு கூறியிருந்தார்.அதைவிட, எந்தவொரு இனத்துக்கோ பிரதேசத்துக்கோ தனியான அதிகாரகளை வழங்க முடியாதென்றும் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். அதாவது- வடக்கு, கிழக்குக்கென சுயநிர்வாக அதிகாரமோ அல்லது உரிமைகளோ கிடைக்காது என்பது தான் இதன் உட்பொருள்.
புலிகள் இயக்கம் பலமாக இருந்தபோது- எப்போதாவது சிங்கள அரசு இப்படிக் கூறியதில்லை. காரணம்- அது புலிகள் இயக்கத்தையும் அவர்களின் போராட்டத்தையும் பலமடையச் செய்து விடும் என்ற பயம் அதற்கு இருந்தது. அரசியல்தீர்வைத் தருகிறோம் என்று ஏமாற்றி ஏமாற்றியே காலம் கடத்தி வந்தது சிங்கள அரசு.
இப்போது நிலைமை மாறியதும் யாருக்கென்றும் தனியான அரசியல்தீர்வு, உரிமைகள் வழங்கப்படாது என்று அப்பட்டமாகவே கூறும் நிலைக்கு வந்திருக்கிறது.
புலிகள் இயக்கம் பலமிழந்து விட்டது, ஈழக் கனவு சிதைந்து விட்டது- இனியென்ன தமிழ்மக்கள் யாரும் கேட்பாரற்ற அனாதைகள் என்று கருத்தித் தான் இலங்கை அரசு இப்படிக் குதியாட்டம் போடுகிறது.
இலங்கை அரசின் இந்தப் போக்குக்குப் பதிலடி கொடுக்கின்ற வகையில் புலிகள் இயக்கத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் அமையும் என்றே தமிழ்மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
இங்கு பதிலடி என்றதும் மீளவும் ஒரு ஆயுதப் போரைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக கருதக் கூடாது.
ஆயுத ரீதியான தமிழ்மக்களின் போராட்டம் தோல்வியடைந்து விட்டது. முள்ளிவாயக்காலில் இருந்தவாறு தமிழீழத் தேசியத் தலைவர் ஆயுதங்களை மௌனிப்பதற்கு முடிவை எடுத்த போதே ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.
ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதென்பதற்காக தமிழீழத் தேசியத்தை வெற்றெடுப்பதற்கான உரிமைப் போராட்டம் முடிந்து விட்டதாகவோ- தோல்வியடைந்து விட்டதாகவோ அர்த்தம் கொள்ளக் கூடாது.
போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் மாறாது என்று தேசியத்தலைவர்பிரபாகரன் 1987ம்ஆண்டுசுதுமலைப்பிரகடனஉரையில்கூறியது
இப்போதும்பொருத்தமுடையதாக இருக்கிறது.
புலிகள் இயக்கம் கெரில்லா ரீதியான ஆயுதப் போரில் தொடங்கி அறப்போர், உண்ணாவிரதப் போர் மீண்டும் ஆயுதப் போர், அரசியல் போர், இராஜதந்திரப் போர் என்று பலவற்றை நடத்தி விட்டது.
இந்த நீண்டபோர்களின் முடிவு விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குப் பேரழிவையே ஏற்படுத்தியது. இந்தப் போர்களின் மூலம் ஒன்றை மட்டும் அவர்களால் தெளிவாக உணர முடிந்தது.
ஆயுதங்களோடு இருந்து கொண்டு- விடுதலை அமைப்புகள் நடத்தும் எந்தப் போர்களையுமே உலகம் அங்கீகரிக்கத் தயார் இல்லை என்பதே அந்த உண்மை.
பலத்தைப் பார்த்து அதற்காகப் புலிகளோடு உறவாடிய உலகமே- அந்தப் பலத்தை வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்த்த போது- தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சுழலுக்குள் சிக்கிய படகாக மாறியது. புதிய உலக ஒழுங்குக்கு ஏற்ப- சர்வதேச சக்திகளின் நகர்வுகளுக்கேற்ப- தமிழீழ தேசிய விடுதலைப் போரின் பரிமாணங்களை மாற்றிக் கொள்ளத் தவறியதால் இந்த நெருக்கடியை-பேரழிவைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
எனவே, மீண்டும் ஒரு ஆயுதப்போருக்குள் புகுந்து கொள்வது சாத்தியமற்றதென்பது தமிழீழ விடுதலைப் புலிகளால் அனுபவபூர்வமாக உணரப்பட்டுள்ளது.
இந்தக் காலமாற்றத்தின் அடிப்படையில்- தமிழ் மக்களின் விடுதலைப் போர் விரைந்து வேகமாகச் முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை புலிகள் இயக்கத்துக்கு உருவாகியிருக்கிறது.
ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் இருந்து வந்த பல்வேறு நெருக்கடிகள், கருத்து வேறுபாடுகள் இந்த வேகமான நகர்வைத் தடுத்து நிறுத்தி- தாமதப்படுத்திக் கொண்டிருந்தது.
இந்தநிலை புலிகள் இயக்கத்துக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவில் கூட ஒரு விமர்சன ஏற்பட்டதையும் மறக்க முடியாது.
இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு- இலங்கை அரசும் தமிழீழ தேசியத்துக்கு எதிரான சக்திகளும், தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டிருந்தன.
அண்ணன் இல்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன் என்பது போல புலிகள் இயக்கத்தின் தாமதமான செயல்பாட்டு நிலையைப் பயன்படுத்திக் கொண்டு ஆளாளுக்கு தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பங்கு போடத் தொடங்கினர்.
புலம்பெயர்நாடுகளில் இருந்து ஒரு குழுவினர் கொழும்புக்குப் போய் நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு சுலபமாகச் சென்று வர வழியேற்படுத்திக் கொடுக்குமாறு மகிந்த ராஜபக்ஸ அரசிடம் கேட்டு விட்டு வந்திருக்கிறது.
இலட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் அடைபட்டுக் கிடக்க- அங்கு தொற்றுநோய்களாலும் அடிப்படை வசதிக்குறைவினாலும் மக்கள் நாளாந்தம் செத்துக் கொண்டிருக்க- அவர்களை விடுவிப்பது பற்றியோ அவர்களுக்கான அடிப்படை வசதிகள், உரிமைகள் பற்றியோ கதைக்காமல்- நல்லூருக்கு சென்று வர போக்குவரத்து வசதி கேட்டிருப்பது போன்ற கேவலத்தை யாரும் செய்வோரும் உளர்.
இதுபோலவே, அன்று இளைஞர்கள் ஆயுதமேந்தக் காரணமாக இருந்த வெள்ளைச் சட்டை அரசியல்வாதி ஒருவர் இப்போது கூறுகிறார்- இனிமேல் பிரிவினைவாதத்துக்கே இடமில்லையாம்.
அரசாங்கத்தின் அடிவருடியாக இருக்கும் ஒரு அரசியல்வாதி சொல்கிறார்- அண்டிப் பிழைப்பதே சிறந்த இராஜதந்திரமாம்.
இப்படிப்பட்ட இனத்தின் மானத்தை விற்கும் சக்திகளிடம் இருந்து தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தைக் காப்பாற்றுவதற்கும்- அடுத்த கட்டமாக விடுதலைப் போரை முன்னகர்த்திச் செல்வதற்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புத்துருவாக்கம் நிச்சயம் வழிவகுக்கும்.
சாத்தியமான அரசியல் வழிமுறைகளின் ஊடாக- தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான பாதைகளை புலிகள் இயக்கம் வகுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம். இக்கருத்தையே பலர் முன்மொழிகின்றனர்
விடுதலைப் புலிகள் இயக்கம் என்றால் உலகிலேயே மிகவும் கட்டுக்கோப்பான ஒரு அமைப்பு என்ற கருத்து உலகம் முழுவதும் பரவி நிற்கிறது. அந்த நிலையை உருவாக்கிக் கொடுத்தது தேசியத் தலைவர் பிரபாகரன் தான். அவர் தனது இரத்தத்தை வியர்வையாக்கி உருவாக்கி வளர்த்தெடுத்த புலிகள் இயக்கத்தை தொடர்ந்து சரியாக திசையில் வழிநடத்த வேண்டியது புதிய நிர்வாகச் செயற்குழுவினதும் அதற்குத் தலைமைச் செயலராக பொறுப்யேற்கப் போகும் செல்வராசா பத்மநாதனினதும் கடமையாகும்.
இனிமேலும் பிரிந்து நின்றோ- ஒளிந்து நின்றோ விமர்சனங்கள், பிரசாரங்களை முன்வைக்காமல்- ஒருவர் மீது ஒருவர் காழ்ப்புணர்வுகளை உருவாக்கி சேறடிக்காமல் ஆக்கபூர்வமான பாதையில் பயணிக்க வேண்டும். நான் பெரிது நீபெரிது என்றில்லாமல் நாடு பெரிது என்று உழையுங்கள் என்று இலட்சிய மொழிதந்த எங்கள் தேசியத்தலைவரின் வாய்மொழியை நிலை நிறுத்தி உறுதி எடுத்து செயல்படுதலே அவருக்கு நாம் கொடுக்கும் உயர்ந்த சிம்மாசனமாகும் .
என்னதான் இருந்தாலும் புலிகள் இயக்கத்தைப் பார்த்து இப்போதும் இலங்கை அரசு பயப்படுகிறது. எனவே புலிகள் இயக்கத்தை எப்படியாவது சிதைப்பதற்கு உலகின் முன்னணி நாடுகள் கூட முயற்சிக்கலாம்.
புலிகள் பலமான புலனாய்வு அமைப்பைக் கொண்டிருந்த போதே இதற்கான முயற்சிகள் நடத்திருக்கும் போது- இப்போது ஒன்றும் அவ்வளவுக்கு சிரமம் அவர்களுக்கு இருக்காது. இத்தகைய சதிவலைகளுக்குள் அகப்பட்டு விடாமல் ஆக்கபூர்வமான விமர்சனங்களை- பொருத்தமான வடிவங்ளில் எடுத்துரைத்து நடந்து கொள்வது அனைவரினதும் பொறுப்பாக இருக்கும்.
விடுதலைப் புலிகளுக்கு இது ஒரு புதிய களம். இதுவரை புலிகள் இயக்கம் கையாண்ட கொள்கையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது இந்த வடிவம். இங்கே தான் தடைகளும் பிரச்சனைகளும் அதிகளவில் வரும். அந்தத் தடைகளையும் பிரச்சினைகளையும் சரியான முறையில் இனங்கண்டு தீர்ப்பதன் மூலமே வெற்றியை நோக்கி நடைபோட முடியும்.
“நாம் இனத்துவேஷிகள் அல்லர். போர் வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோ கருத வில்லை. சிங்கள பண்பாட்டை கௌரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில், அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை. நாம் எமது வரலாற்று தாயத்தில் ஒரு தேசிய மக்கள் இனம் என்ற அந்தஸ்துடன், நிம்மதியாக, சுதந்திரமாக, கொரவத்துடன் வாழ விரும்புகிறோம். என்ற தலைவரின் உண்மையான சிந்தனையின் வடிவத்தை சிங்கள மக்களுக்கும் உலகுக்கும் உணர வித்து எந்த இடர்வரினும் இலட்சியப் பயணத்தை தொடர்வோம்…
தொல்காப்பியன்
Comments