அந்தவகையில் தென் ஆசியப்பிராந்திய நாடுகளின் நலனைப் புறக்கணித்து இந்த உலகம் இயங்க முடியாது என்பது வெளிப்படையாகின்றது. இத்தகைய பின்புலத்திலே தென் ஆசியப் பிராந்தியத்திலே சீனாவின் அரசியல் பொருளதாதர மூலோபாயக் கொள்கைகளும், இராசதந்திர ரீதியிலான அணுகுமுறைகளும் பாரிய வெற்றியை நோக்கி நடைபோடுகின்றது.
சீனாவினுடைய வெளியுறவுக் கொள்கையில் முதற் கோட்பாடாக அமைந்திருப்பது உலக நாடுகளுடன் முரண்பாடுகளைத் தவிர்த்து, அமைதியாக தன்னை பல முனைகளிலும் வலுப்படுத்திக் கொள்வதாகும். தென் ஆசியப்பிராந்தியத்திலே இரு பெரும் வல்லரசுகளாக மட்டுமல்லாது உலகின் சனத்தொகையை அதிகமாகக் கொண்ட இரு பெரும் நாடுகளாக திகழும் சீனாவினதும் இந்தியாவினதும் நகர்வுகள் அனைத்துலக ஒழுங்கிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
இந்த வகையில் இந்தியாவின் தென் ஆசிய பிராந்திய நகர்வை மையமாகக் கொண்டு விரிகின்றது இச் சிறிய அரசியல் பார்வை. இந்தியா - பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்டு, சுதந்திரம் பெற்றுக் கொண்ட ஆரம்ப காலத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேருவின் அணிசாராக் கொள்கையை இந்தியா தனது வெளியுறவுத்துறையில் இறுக்கமாக கடைப்பிடித்திருந்தது.
தொடர்ச்சியாக இந்திரா காந்தி அம்மையாரின் காலம் வரை இந்தியாவின் வெளியுறவுத் கொள்கை இறுக்கமானதாகவும் உறுதித்தன்மையாகவும் காணப்பட்டது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கூற்று. இந்திரா காந்தி அம்மையாரைத் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் அணிசாரக் கொள்கையிலிருந்து விடுபட்டமையானது, பல உலக வல்லாதிக்க நாடுகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த தசாப்த காலத்தில் இந்தியாவில் மாறி மாறி ஆட்சியில் அமர்ந்த இந்திய அரசுத் தலைமைகள் உலக வல்லரசுகளாகிய அமெரிக்காவுடனும் ரஷ்யாவுடனும் நட்புறவை காத்திரமான முறையில் வளர்த்துக் கொண்டது.
உலகின் முக்கிய முன்னோடி நாடுகளான ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடனும் மூலோபாய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதோடு, அதே வகையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யப்பான் சீனா நாடுகளுடன் தனது நட்பை வளர்த்துக் கொண்டது. தாராளமாக இந்தியாவுடன் இராசதந்திர நட்பை வளர்த்துக் கொள்வதில் பல வல்லமை நாடுகள் விருப்புக் கொண்டிருந்தன. ஆனால் இந்நேரத்தில் குறிப்பிட்டு காட்ட வேண்டிய விடயம் என்னவென்றால் இத்தகைய அதாவது மேற்குநாடுகளுடனும் உலகின் முக்கிய பிராந்திய வல்லரசுகளுடன் இந்தியா மேற்கொண்டிருக்கும் ஆக்கபூர்வமான நட்புறவு போன்று, தனது பிராந்திய நாடுகளுடனும் மேற்கொள்ளவில்லை என்பது பல முக்கிய ஆய்வாளர்களின் கருத்தாகவிருக்கின்றது.
தூர நோக்கற்ற இராசதந்திர ரீதியிலான அணுமுறையை இந்தியா தனது பிராந்திய நாடுகளுடன் மேற்கொண்டிருக்கின்றது. மிக அண்மைக் காலங்களிலேயே இந்தியாவில் ஏனைய உலகின் வல்லமை பொருந்திய நாடுகளின் அழுத்தங்களினாலும் உள்நாட்டு அரசியல் அழுத்தகங்களினாலும் இந்தியாவின் தென் ஆசியப் பிராந்தியம் நோக்கிய வெளியுறவுத்துறை கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மிக முக்கியமாக பாகிஸ்தான் நாடு இந்தியாவிற்கு மிகவும் அச்சுறுத்தலான நாடாகவே தொடர்ச்சியாக செயற்படுகின்றது.
குறிப்பாக அரச பயங்கரவாதம் என்று சொல்லக் கூடிய வகையில் பாகிஸ்தான் அரசின் ஆதரவுடனேயே சில தீவிரவாதக் குழுக்கள் இந்தியாவின் பொருண்மிய மையங்களில் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன. எடுத்துக்காட்டாக அண்மையில் பம்பாயில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை குறிப்பிடலாம். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, எல்லைப்புற பாதுகாப்பு, இந்திய மக்களின் உயிர்களுக்கான பாதுகாப்பு ஆகியவற்றை பாகிஸ்தான் நாடு இந்தியாவிற்கு அச்சுறுத்தலாகவே விளங்குகின்றது.
அத்தோடு மற்றுமொரு இந்தியாவின் அயல்நாடான நேபாளத்தை எடுத்துக் கொண்டால் அந்நாட்டில் சீன சார்பு மாவோ ஆட்சியார்களின் கையில் அரசாங்கம் சென்றிருப்பதோடு, மட்டுமன்றி, நேபாளத்தின் இடதுசாரிக் கட்சிகளும் சீன சார்புவாதிகளாகவுள்ளனர். இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்திலிருந்து நழுவிய நிலையிலேயே காணப்படுகின்றது. அந்தவகையில் இந்தியாவின் தென் ஆசியப்பிராந்தியக் கொள்கையின் உறுதித் தன்மையைப் பொறுத்தே ஏனைய உலக நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கையும் பலப்படும் என்பது வரலாற்றாசிரியர்களின் மாறக் கருத்து.
அதாவது இந்தியா தனது பிராந்திய நாடுகளுடன் உறுதித்தன்மையற்ற உறவுகளை வைத்துக்கொண்டு, ஏனைய உலக நாடுகளுடன் காத்திரமான உறுதியான உறவைப் பேண முடியாது என்பதே பொருளாகும். ஒவ்வொரு தேசமும் தனது அயல்நாடுகளின் சனநாயகத் செயற்பாடுகளுக்கு ஊக்கமளிப்பதிலிருந்தும், அந்நாடுகளின் அமைதியைப் பேண ஒத்துழைப்பதிலிருந்துமே அனைத்துலக அரங்கிலே தன் தேசத்தின் நல்லெண்ணத்தை நிறுவ முடியும்.இந்திய உபகண்டத்திலும் இந்து சமுத்திர பிராந்தியத்திலும் தனது ஆதிக்கத்தை நிறுவிக்கொள்ள இந்தியா அரசியல் விருப்பற்ற நிலையில் காணப்படுகின்றது என்பது பல இந்திய ஆய்வாளர்களின் நேரடி குற்றச்சாட்டு.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் நாடாளுமன்றத்திலும், எல்லைப் பகுதியிலும், பம்பாய் நகரிலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அடுத்தும் கூட இந்தியா பாகிஸ்தானுடனான உறவில் மிதவாதப் போக்கை கடைப்பிடிப்பதானது உள்நாட்டிலும் மட்டுமன்றி ஏனைய பிராந்திய நாடுகளும் இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கை வகுப்பாளர்கள் மீது சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் இந்தியாவினுடைய தென் ஆசிய பிராந்திய குறித்த வெளியுறவுக் கொள்கை பற்றிய ஆய்வுகள் பல வெளிவந்துள்ளன. பல ஆய்வாளர்களின் ஆய்வுக் கருத்தின்படி, 2004ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டுவரை இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கையானது எவ்வித மூலோபாய நகர்வுகள் இன்றி செயற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய பின்புலத்தில் நடந்து முடிந்த இந்திய தேர்தலுக்கு பிற்பாடு இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக எம்.கிருஸ்ணா நியமிக்கப்பட்டுள்ளார். பிராந்திய சமநிலையை நிலைப்படுத்தும் செயற்பாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் முதன்மை பணியாக அமையும் என்ற கருத்து தற்போது முதன்மைப்படுத்தப்பட்டு வருகின்றது. எல்லைப் போரினால் மனக்கசப்புற்றிருக்கும் சீனா மற்றும் பாகிஸ்தான் நாட்டுடன் நட்புறவை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவது, ஏனெனில் இந்தியா ஏனைய உலக வல்லரசுகளுடன் இணைந்து தமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக, சீனாவும் பாகிஸ்தானும் தொடர்ச்சியாக சந்தேகம் கொள்கின்றன.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்கள் இந்திய தேர்தலில் மன்மோன்சிங்கின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, இரு நாடுகளும் இணைந்து பொருளாதார சரிவு, காலநிலை மாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் செயற்பட வேண்டும் என தெரிவித்திருந்தமை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் பணியை இலகுவாக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடத்தில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களின் கொள்கை மாற்றத்திற்கான செயற்பாட்டில் புதுடில்லி உள்ளடக்கப்படவில்லை என்ற பரவலான செய்தி அனைத்துலக ஊடகங்களிலும் பராக் ஒபாமா அவர்களின் பதவியேற்பு காலத்தில் முக்கியத்துவப்படுத்தப்பட்டிருந்தது. இந்தியத் தேர்தலில் கொங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றியானது, கொங்கிரஸ் கட்சிக்கு மேலை நாடுகள் உட்பட சீனா பாகிஸ்தான மற்றும் ஏனைய உலக நாடுகளுக்கு பல சமிக்ஞைகளை காட்டியுள்ளது.
அதாவது இத்தேர்தல் முடிவானது இந்திய உள்நாட்டு அரசியல் நிலவரத்தின் உறுதித்தன்மையை வெளிப்படுத்தியிருக்கின்றது. இந்தப் பின்னணியிலேயே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் வாழ்த்துச் செய்தியை இந்திய ஊடகங்கள் நோக்குகின்றன. இத்தேர்தல் வெற்றியானது அனைத்துலக ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் இந்தியாவின் பேரம்பேசும் பலத்தை அதிகரித்துள்ளது. ஒபாமாவின் புதிய அமெரிக்க நிர்வாகம் இந்தியாவின் அணு சக்தி ஒப்பந்தம் மற்றும் அத்துறை சார்ந்த செயற்பாட்டில் இந்தியாவுடன் இணைந்து செயற்பட தயக்கம் காட்டி வருகின்றது.
ஆயினும் இந்தியா ஏனைய உலக நாடுகளான ரஷ்யா, யப்பான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், மேற்கு ஆசிய நாடுகள், தென் ஆபிரிக்கா மற்றும் முக்கிய ஆபிரிக்க நாடுகள், பிரேசில் ஆகியவற்றுடன் தன்னுடைய செல்வாக்கை பலப்படுத்திக் கொள்ளும். எது எப்பியிருப்பினும் அனைத்துலக ரீதியில் தனது பேரம் பேசும் பலத்தை மிகப் பெரிய அளவில் கொண்டிருக்கும் இந்தியா பிராந்திய ரீதியில் தனது பேரம் பேசும் பலத்தை வலுவாக இழந்திருப்பதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் கொங்கிரஸ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலே நேபாளத்திலும் பங்களாதேசிலும் பல் கட்சி சனநாயக முறைமையை உருவாக்கவும், மிகக் காத்திரமாக பரஸ்பர உறவை பலப்படுத்தவும் முயலும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இச்செயற்பாட்டில் முக்கியமாக இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய நலன்களும் அடங்கியுள்ளது என்பது இந்நாடுகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப் பின்புலத்தில் சிறீலங்காவில் அதிகாரப் பரவலாக்கததிற்கு அழுத்தம் கொடுக்கும் வல்லமை இந்தியாவிற்கு உள்ளதாகவே ஆய்வுகள் கூறுகின்றன.
சிறீலங்காவில் அகலக் கால் பதித்திருக்கும் சீனாவின் வலுவைக் குறைக்க வேண்டுமாயின் நிச்சயமாக அமெரிக்காவின் ஒத்துழைப்பு இந்தியாவிற்கு அவசியமாகும். தனது நாட்டை சூழவுள்ள நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் பரவியிருக்கும் சூழலில் சிறீலங்காவில் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவ இந்தியா முயற்சிக்குமா என்பதே தற்போது இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சரின் முன்னாள் உள்ள பெரும் பணியாகும். இத்தகைய இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க செயற்பாட்டிற்கு மத்தியில், தமிழ் மக்கள் தங்களது அரசியல் தீர்வு பற்றி மீண்டும் மீண்டும் எடுத்துரைக் வேண்டியது வரலாற்றுக் கடமையாகும்.
- நோர்வேயிலிருந்து வெற்றித் திருமகள் -
நன்றி: ஈழமுரசு
(11.17.2009)
Comments