கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஒரு பாரம்பரிய ஆங்கில நாளிதழில் தொடர்ந்து வந்த பேட்டியும், பல வாரப் பத்திரிக்கைகளில் வருகின்ற பரபரப்பு கட்டுரைகளும்,
தமிழ்நாட்டின் தலைவர்கள் சிலரின் பேச்சும் ஈழத் தமிழர்கள் மட்டுமின்றித் தமிழக மக்களின் மனத்திலும் ஒரு கருத்தை ஆழமாக பதிய வைக்கும் முயற்சியாக தெரிகின்றன.
அது இதுதான்: “தமிழீழ விடுதலைப் போராட்டம் செத்துவிட்டது”
|
தமிழீழம் என்றில்லாவிட்டாலும் அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சுயாட்சியாவது பெற்றுத் தர மத்திய அரசின் வழியாக முதலமைச்சர் முயற்சி எடுக்க வேண்டும் என்றும், இராணுவ ரிதீயாக விடுதலைப் புலிகளை வென்றுவிட்டோம் என்பதற்காகத் தமிழர்களுக்கு நியாயமான ஒரு அரசியல் தீர்வை வழங்காமல் போனால் அது சரித்திரம் மீண்டும் திரும்புவதற்கே வழிவகுக்கும் என்றும் தமிழக சட்டப் பேரவையில் உண்மையான அக்கரையுடன் சில உறுப்பினர்கள் பேசினர்.
சிறிலங்க இராணுவ முகாம்களில் முடக்கப்பட்டுள்ள மக்களின் துயர நிலை கண்களைக் குளமாக்குகிறது என்று அங்கு நிலவும் மோசமான சூழலை சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சியின் கொறடா பீட்டர் அல்போன்ஸ் விளக்கினார்.
இந்த நிலையில்தான், இலங்கைக்கு வெளியே சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் குரலை ஓங்கி ஒலிக்கும் அந்த பாரம்பரிய நாளிதழ், அங்குள்ள முகாம்கள் எவ்வளவு ‘சிறப்பாக’ பராமரிக்கப்படுகிறது என்பதை பல படங்களுடன் செய்திகளை வெளியிட்டு தமிழக மக்களைப் புல்லரிக்கச் செய்தது.
தமிழர்களை அடைத்து வைத்திருக்கும் முகாம்களை இந்த அளவிற்கு சிறிப்பாக பராமரிக்கும் சிறிலங்க அரசு பிறகு ஏன் பத்திரிக்கையாளர்களை அங்கே அனுப்ப தயங்குகிறது என்ற ஒரு கேள்வி யாருக்கும் எழவே எழாது என்ற நம்பிக்கையுடனும், தனக்கே உரித்தான தற்பெருமையுடனு்ம அச்செய்தியை வெளியிட்டிருந்தது.
இரண்டே முக்கால் இலட்சம் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள (அவர்களின் 13,000 பேர் காணாமல் போன விடயத்திற்கு இன்றுவரை பதிலேதுமில்லை) அந்த முகாம்களின் நிலை அடிப்படை வசதிகள் ஏதுமின்றி எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை ஐ.நா.பொதுச் செயலர் பான் கீ மூனில் இருந்து கொழும்புவிற்கான ஐ.நா. தூதரகத்தின் பேச்சாளர் கார்டன் வீஸ் வரை கூறியுள்ளார்கள். ஆயினும் அந்த முகாம்கள் சிறப்பாக உள்ளது என்று கூறுவதற்கு அந்த நாளிதழ் ஆசிரியர் ஒரு ஒப்பீட்டை செய்திருந்தார். அது ‘தமிழ்நாட்டிலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கான அகதிகள் முகாம்களை விட அங்கு சிறப்பாகவே இருந்தது’ என்று கூறியுள்ளார். இது புரிந்துகொள்ளக் கூடிய ஒப்பீடு!
|
அவ்வாறு விவரித்துவிட்டதோடு அவர் நின்றுவிடவில்லை. செட்டிக்குளம் முகாமில் ஒவ்வொரு கூடாரத்திலும் 10 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவராலும் ஒரே நேரத்தில் எழுந்து கூட நிற்க முடியாது என்று அவர்கள் படும் துன்பத்தைக் எடுத்துக் கூறினார். இடம் பெயர்ந்த மக்கள் தங்களின் உரிமைக்காக நீதிமன்றத்தைக் கூட நாட முடியாத நிலை தங்கள் நாட்டில் உள்ளதை வேதனையோடு குறிப்பிட்டார்.
தாங்கள் தமிழர்கள் என்பதற்காகவே இப்படிப்பட்ட துன்புறுத்தல்களுக்கு ஆளாக நேர்ந்தது என்ற அவர்களின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டவராக இவ்வாறு அவர் கூறினார்: “நமது நாட்டில் பெரும்பான்மை இனமோ, சிறுபான்மை இனமோ இல்லை, ஒரே இனம்தான் இருக்கிறது என்று நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்போம் என்றால் அது முழுப் பொய்யாகத்தான் இருக்கும்” என்று கூறினார்.
அவர் நீதிபதி, தான் அரசால் தண்டிக்கப்படலாம் என்ற நிலையிலும் அவர் உண்மையைக் கூறினார். ஏனெனில் அவர் சிறிலங்க அரசின் பெளத்த, சிங்கள இனவாத கட்டமைப்பில் அடங்கிவிடாத சுதந்திர மானுடராக இருந்தார். ஒரு சுதந்திர மனோ நிலையுடன் வாழ்பவனுக்கே மற்றொரு மனிதனின் தேவையும், வேதனையும் புரிகிறது.
அங்கு எல்லாம் அற்புதமாக உள்ளது என்று கூறிபவர், அந்த பெளத்த சிங்கள மேலாதிக்கத்திடமிருந்து விருது பெற்றவராயிற்றே? எப்படி சுதந்திரத்தின் அவசியமும், மனிதனின் வேதனையும் புரியும்?
முகாம்களின் நிலையை மிகவும் சிலாகித்து எழுதப்பட்ட அந்த செய்தியே, “போரின் கடைசி கட்டத்தில் நடந்த குறைந்த தாக்கம் கொண்ட (low intensity) இராணுவ நடவடிக்கையில் ஒரு இராணுவ சக்தியாக இருந்த விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது மட்டுமின்றி, அவர்களின் பிடியில் இருந்த 3 இலட்சம் மக்களையும் மீட்டது சிறிலங்க இராணுவம் என்று கூறுகிறார். கடைசி கட்டத்தில் பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்த பல பத்தாயிரக்கணக்கான மக்களை ஒருசேர கொன்று அழித்ததை அறிந்து உலகமே அதிரிச்சியடைந்து கண்டித்தது. அங்கு நடந்தது குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று இன்றுவரை உலக நாடுகள் கோருகின்றன. ஆனால் அப்படி ஒன்று நடக்காதது போல மிக லாவகமான பிரச்சாரத்துடனேயே செய்தியைத் துவக்குகிறார்!
இன அடையாளத்தை அழிக்கும் அரசியல் தீர்வு!
மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட ராஜபக்சேயின் அந்தப் பேட்டி, அவருடைய ‘அரசியல் தீர்வு’ எப்படிப்பட்டதாக இருக்கப் போகிறது என்பதை நன்றாகவே விளக்கியுள்ளது.
|
தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு குறித்து ராஜபக்சவின் கருத்து இதுதான்: “சிறிலங்காவில் சிறுபான்மை என்று யாருமில்லை, நாட்டை நேசிப்பவர்கள், நேசிக்காதவர்கள் என்ற இரண்டே பிரிவினர்தான். இதனை அவர்கள் திரித்துக் கூறலாம். ஆயினும் எனது கருத்தியல் இதுதான்” என்று தீர்வு காண்பதற்கான தனது அடிப்படையை விளக்கியுள்ளார்!
உங்களுடைய அரசியல் தீர்வுதான் என்ன என்ற கேள்விக்கு ராஜபக்ச அளித்த தீர்ப்புதான் மிகவும் கவனித்தக்கது: “அரசியல் தீர்விற்கு நான் தயார். எதை கொடுக்க வேண்டும், எதை கொடுக்கக் கூடாது என்பது எனக்குத் தெரியும். என்னைத்தான் மக்கள் தேர்வு செய்துள்ளனர், அவர்கள் அளித்த தீர்ப்பை (mandate) பயன்படுத்தப் போகிறேன். இதற்கு அவர்களின் சம்மதத்தை (தமிழர் தேசியக் கூட்டணி) பெற்றாக வேண்டும்.
அவர்கள் விரும்புவது (சுயாட்சி அல்லது தமிழ் மாநிலம்) கிடைக்காது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நாட்டில் கூட்டாட்சி (Federalism) என்பது கிடையாது.
ஒரு இணக்கப்பாடு ஏற்பட வேண்டுமெனில் இனக் கலப்பு நடக்க வேண்டும். சிங்களர், தமிழர், முஸ்லீம் அனைவருக்குள்ளும் கலப்புத் திருமணம் நடக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
தமிழர்களுக்கு “கெளரமான அமைதி” தீர்வை வழங்கப் போகும் இந்த நாடாளுமன்றவாதி (அப்படித்தான் தன்னை பெருமையாகக் குறிப்பிட்டுக் கொள்கிறார், நம்புவதற்கு்த்தான் எதிரில் ஆள் உள்ளாரே!) எப்போது அந்த அரசியல் தீர்வை அளிக்கப்போவதாக கூறியுள்ளார் தெரியுமா? “முதலில் மக்களின் தீர்ப்பை பெற்றாக வேண்டும், அதன் பிறகுதான் அரசியல் தீர்வு வருகிறது” என்று தானும் தெளிவான அரசியல்வாதிதான் என்பதை நிரூபித்துள்ளார்.
இனப் பிரச்சனைக்குத் அரசியல் தீர்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கெல்லாம், இணக்கப்பாடு (Reconciliation) என்றும் மேம்பாடு (Development) என்றும்தான் ராஜபக்ச பேசுகிறார். தீர்வு என்றோ, அதிகாரப் பகிர்வு என்றோ எதையும் பேசவில்லை. ஆனால் தனது அரசியல் திட்டத்திற்கு (அவரே கூறியதுபோல கருத்தியலிற்கு) தமிழர் தேசியக் கூட்டணியை ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்.
அவரது பேட்டியில் இருந்து நம்மால் புரிந்துகொள்ள முடிவது:
1) தமிழர் தாயகம் என்று குறிப்பிடப்படும் தமிழர் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்துவரும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படப் போவதில்லை.
2) தமிழர், சிங்களர், முஸ்லீம் இனக் கலப்பு என்பதின் மற்றொரு பொருள், தமிழர் பாரம்பரிய பகுதிகளில் சிங்களர் குடியேற்றம் செய்வது, அதற்கு பாதுகாப்பாக தமிழர் பகுதிகளில் இராணுவ முகாம்களை (யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தியது போல) உருவாக்குவது. அங்கு நிரந்தரமாக இராணுவத்தை நிறுத்த மேலும் 2,00,000 இலட்சம் பேர்களை (ராஜபக்ச குறிப்பிடுகிறார்) நியமிப்பது.
3) தற்போது சிறிலங்க இராணுவத்தின் இடைத் தங்கல் முகாம்களில் உள்ள மக்களை அவர்கள் ஏற்கனவே வாழ்ந்து வந்த பகுதிகளில் குடியமர அனுமதிக்காமல் வேறு இடங்களுக்கு (இதனை அரசு முகவர் இமால்டா கூட தெரிவித்துள்ளார்) கொண்டு சென்று குடியமர்த்துவது. தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்களை (குறிப்பாக இராணுவத்தினரின் குடும்பங்களை) குடியமர்த்துவது.
|
5) சிங்களர் உட்பட எல்லோரும் தமிழ் படிக்க வேண்டும், தமிழர்களும், முஸ்லீம்களும் சிங்களம் படிக்க வேண்டும் என்று கூறுவதை ஒரு பன்மொழிச் சமூகமாக இலங்கையை இவர் மாற்ற திட்டமிட்டுள்ளார் என்று கருதுவதற்கில்லை. தமிழி்ற்கு சம நிலை அளிப்பது அவரின் விருப்பமாக இருந்தால் சிங்களம் போன்று தமிழும் ஆட்சி மொழியாகும் என்ற உறுதியை இந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கலாமே? ஆக நோக்கம் என்னவெனில், சிறிலங்க அரசில் இடம்பெற வேண்டுமானால் தமிழர்கள் சிங்கள மொழியை கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்பதே.
ஆக, தமிழர்களின் மீது ஒரு தீர்வைத் திணிக்க ராஜபக்ச அரசு - தனது அண்டை நாடுகளின் முழு ஒப்புதலுடன் - திட்டம் வகுத்துள்ளது என்பதும், அதற்கு எப்படியாவது தமிழர் தேசிய கூட்டணியின் ஒப்புதலைப் பெற்று, ஒரு அரசியல் தீர்வு காணப்பட்டதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, தற்பொழுது இலங்கையில் உள்ள பெளத்த - சிங்கள மத இன மேலாதிக்க அரசை வலிமையாக நிலைநிறுத்தி, தமிழர்களை நிரந்தரமாக இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்குவதற்கு சதி நடைபெறுகிறது என்றே புரிகிறது.
பெளத்த சிங்கள தேசமே!
தென் இலங்கையின் சிங்களக் கட்சிகள் எதுவாயினும் அவர்கள் அனைவரும் இலங்கை என்பது ஒரு பெளத்த நாடு என்பதையும், அது சிங்களவர்களின் இனத்திற்குச் சொந்தமானது என்ற மகாவம்ச புராணத்தை ஏற்றுக் கொண்டு, அதையே தங்களின் அரசியல் அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பதையும் புரிந்து கொண்டவர்களுக்கு ராஜபக்சவின் பேட்டியில் புதைந்திருக்கும் இந்த சதித் திட்டம் சுலபமாகப் புரியும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்துவிட்டது என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தப் பிறகு அவர் பெளத்த மதத்தின் முன்று பெரிய குருமார்களிடம் சென்று ஆசி பெற்றார் ராஜபக்ச.
இன்று காலை வெளிவந்த ஒரு வார இதழில் கூறப்பட்டிருப்பதைப் போல, பெளத்த குருமார்களிடமிருந்து பெறக் கூடிய மிக உயர்ந்த ‘உலக தர்மதுவீபம்’ விருதைப் பெறுவதற்கு எல்லா விதத்திலும் தகுதி பெற்றவராக தான் ஆகியுள்ளதாக மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இலங்கையில் சிங்கள பூமியில் அவர்களை எதிர்த்து அரசியலும் கிடையாது, அரசும் கிடையாது என்பதே இன்றுவரை நிதர்சனம்.
எனவே ஈழ்த தமிழர்களுக்கு கெளரமான ஒரு அரசியல் தீர்வு கிட்டும் என்பதோ, அதனை இந்தியாவோ அல்லது மற்ற உலக நாடுகளோ உறுதி செய்யும் என்று நம்புவதோ கடைந்தெடுத்த மடமையாகும்.
அரசியல், ஜனநாயக உரிமைகள் எல்லாம் தமிழர்களுக்கு நியாயமாக வழங்கக்கூடிய ஒரு தலைவர் சிங்கள பூமியில் இருந்திருந்தாலோ அல்லது அதற்கான அரசியல் சூழல் ஒரு காலத்தில் நிச்சயம் மலரும் என்று நம்பியிருந்தாலோ ஈழத் தந்தை செல்வாவின் மனதில் விடுதலைதான் ஒரே வழி என்று தோன்றியிருக்குமா?
Comments