''சமாதானம், போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என்பன எல்லாம், தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அர்த்தமற்ற சொற்பதங்களாக, யதார்த்த மெய்ந்நிலைக்குப் பொருந்தாத வார்த்தைப் பிரயோகங்களாக மாறிவிட்டன.
சமாதானச் சூழலில் நிகழ்த்தப்படும் மறைமுக யுத்தம், போர்நிறுத்த விதிகளுக்கு முரணாகத் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, சமரசப் பேச்சுக்களைப் பயன்படுத்திப் பின்னப்படும் சர்வதேச சதிவலைப் பின்னல் - இப்படியாக அமைதி முயற்சி திரிவுபடுத்தப்பட்டுத் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் எமது மக்களுக்கு எல்லாவற்றிலுமே நம்பிக்கை இழந்துவிட்டது''.
மகிந்த பதவியேற்ற பின்னர் மோதல்கள் உக்கிரமடைந்த காலகட்டத்தில் நடைபெற்ற மாவீரர்தின உரையின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்ட வார்த்தைகள் மேல் உள்ளவை.
தொடர்ச்சியாக பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் அனைத்தும் இதனை தான் செய்துவந்தன. உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்களின் உரிமை போரை முற்றாக சிதைத்துவிட சிறீலங்கா அரசுகள் முனைந்து வந்தனவே தவிர தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைப்பதற்கு அவர்கள் முற்படவில்லை.
தற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சா ஏறுக்கு மாறாக மேற்கொண்டுவரும் கருத்துக்களில் இருந்து இன்றும் நாம் அதனை உணரமுடிகின்றது. தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வையோ அல்லது அவர்களுக்கு சிறீலங்காவில் வாழும் உரிமைகளையோ சிங்கள தேசம் ஒரு போதும் வழங்கப்போவதில்லை என்பது தான் உண்மையானது.
இதனை உலகமும் தமிழ் மக்களின் ஆயுதப்போருக்கு எதிரான போக்கை கொண்டவர்களும் தற்போதும் உணரவில்லை என்றால் அதனை நாடகம் என்றே கொள்ள முடியும். தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என அரச தலைவராக பதவியேற்க முன்னர் பேசி வந்த முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்கா, யாழ்ப்பாணம் வந்து கேணல் கிட்டுவுடன் பேச்சுக்களை மேற்கொண்டு நட்புறவுடன் பழகிய அவரது கணவர் விஜய குமாரணதுங்கா ஆகியோரின் அரசியல் நாடகங்கள் சந்திரிகா அரச தலைவர் ஆனதும் காற்றில் பறந்துவிட்டன.
சிங்கள தேசத்தின் அடக்கி ஆட்சிபுரியும் மனப்பான்மைக்கு முன்னால் சிங்கள தேசத்தில் பதவிக்கு வரும் எந்த அரசுகளும் தப்பி பிழைத்தது கிடையாது. பெரும்பான்மை சிங்கள மக்களின் மனவோட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தியே சிங்கள அரசுகளும் தமதுபதவி சுகங்களை தக்கவைப்பதுண்டு. இது தான் கடந்த அறுபது வருடங்களாக நடைபெற்று வரும் சம்பவங்கள்.
1948 ஆம் ஆண்டு சிறீலங்கா சுதந்திரம்அடைந்த பின்னர் 1976 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக தோற்றம் பெறும் வரையிலும் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக அகிம்சை வழியில் பல போராட்டங்களை «ம்றகொண்டு வந்திருந்தனர். ஏறத்தாள மூன்று தசாப்தங்கள் அகிம்சை வழியில் அவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் தோல்வியடைந்த காரணத்தினால் தான் அது பின்னர் ஆயுதப்போராக உருவெடுத்தது.
ஆயுதப்போரும் பல வடிவங்களின் ஊடாக 1976 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை ஏறத்தாள மூன்று தசாப்தங்களுக்கு மேலாக (33 வருடங்கள்) பயணித்துள்ளது. இருந்த போதும் தற்போது நாம் மிகவும் நெருக்கடியான கட்டத்தில் நிற்கின்றோம். அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது தொடர்பாகவும் பல குழப்பங்கள் உள்ளன.
எமது போராட்ட வரலாற்றை பொறுத்தவரையில் முன்னைய மூன்று தசாப்தங்களை விட பின்னைய மூன்று தசாப்தங்களும் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை பல வலிகளையும், இழப்புக்களையும் எமக்கு ஏற்படுத்தியிருந்தாலும், எமது இனத்தின் பிரச்சனைகளையும், வேதனைகளையும் உலகறியச்செய்த பெருமை தமிழ் மக்கள் வரித்துக்கொண்ட ஆயுதப்போருக்கு உண்டு.
'ஆயிரம் மேடைப் பேச்சுக்களை விட ஒரு கெரில்லா தாக்குதல் மிகச்சிறந்த பிரச்சாரம்' என்ற கியூபாவின் முன்னாள் விடுதலைப்போராட்ட வீரரும் அதிபருமான பிடல் கஸ்ரோவின் வார்த்தைகளின் யதார்த்தத்தை இந்த காலம் மீண்டும் ஒரு தடவை உலகிற்கு உணர்த்தியிருந்தது.
இந்தக் காலப்பகுதி சிங்கள தேசத்திற்கும் பெருமளவான இழப்புக்களையும், பொருளாதாரச் சீரழிவுகளையும் ஏற்படுத்தியிருந்தது. ஒரு இனத்தை அடக்கி ஆட்சிபுரிவதற்கு என்ன விலையை செலுத்த வேண்டும் என்ற யதார்த்தத்தையும் அவர்களுக்கு உணர்த்தியிருந்தது. அகிம்சை வழியில் போரிட்ட போது நாம் தான் இழப்புக்களை சந்தித்திருந்தோம் ஆனால் எமது ஆயுதப்போர் சிங்கள தேசத்திற்கும் இழப்புக்களினதும், வேதனைகளினதும் வலியை உணர்த்தியிருந்தது.
ஆனாலும் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பூகோள அரசியல் நகர்வுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதில் சிறீலங்கா அரசுகள் அதிக முனைப்பை காட்டியிருந்தன. 1980 களில் ஏற்பட்டிருந்த மேற்குலகம் - சோவியத்து ஒன்றியம் என்ற முனைவாக்கத்?தை தனக்கு சாதகமாக பயன்படுத்தியது போல, 2009களில் ஏற்பட்டுள்ள சீனா - மேற்குலகம் என்ற இந்துசமுத்திர பிராந்திய முனைவாக்கத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்
களின் விடுதலைப் போரின் படை வலுவை மிகப்பெரும் படை வலுக்கொண்டு சிறீலங்கா அரசு முறியடித்துள்ளது.
ஆனால் கடந்த மூன்று தசாப்தங்களில் நடைபெற்ற போர்களில் சந்தித்த இழப்புக்களை விட பல மடங்கு அதிகமான இழப்புக்களை சிங்கள தேசம் சந்தித்திருந்தது என்பதும் உண்மை. வெற்றி பெறுபவர்களுக்கே வரலாறு சொந்தம் என்ற தத்துவத்திற்குள் சிங்களம் தனது இழப்புக்களை மறைத்துவிட்டது.
ஆனால் சிறீலங்காவை அனுசரித்து போவதன் மூலம் கூட தனது பிராந்தியத்தின் உறுதித்தன்மையை பேண
முடியாது என்பதை இந்தியா உணர்ந்து கொண்ட போதும் தமிழ் மக்களின் உரிமைப் போரை நயவஞ்சகமாக அழிக்கத் துணைபோனது தான் மிகவும் வேதனையானது.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு முன்னரும் தனது படை வலு கொண்டு சின்னஞ் சிறிய ஒரு அமைப்பை இந்தியா முற்றாக துடைத்தளிக்க முற்பட்டிருந்தது. அவரின் மரணத்திற்கு பின்னரும் இந்தியா அதனையே மறுபடியும் மேற்கொள்ள முயன்றுள்ளது. ஆனால் 1987களில் இந்தியாவின் முயற்சிகளை விடுதலைப் புலிகளின் கெரில்லா போர்முறை உத்திகள் எவ்வாறு முறியடித்தனவோ அதனைபோலவே தற்போது இந்திய அரசின் முயற்சிகள் இடை நடுவில் தொங்கிபோய் உள்ளன.
அதாவது விடுதலைப் புலிகளின் மரபுவழியிலான படைக் கட்டுமானங்களை இந்திய - சிறீலங்கா படையினரால் முறியடிக்க முடிந்ததே தவிர உலகெங்கும் பரந்திருக்கும் தமிழ் மக்களின் விடுதலை வேட்கைகயையும், விடுதலைப் புலிகளின் வலையமைப்பையும் அவர்களால் முறியடிக்க முடியவில்லை.
ஒருவேளை 1991 ஆம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் அவர் மீண்டும் பதவிக்கு வந்திருந்தால் 1992 ஆம் ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த வருடங்களிலோ தற்போது முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை போன்றதொரு மிகப்பெரும் படுகொலைகளுடன் விடுதலைப் புலிகளை இந்திய மீண்டும் ஒருதடவை அழிக்க முற்பட்டிருக்கலாம்.
அன்று அவ்வாறு நிகழ்ந்திருந்தால் அதனை எதிர்கொண்டு எமது விடுதலைப்போரை முன்னெடுக்க வேண்டிய முதிர்ச்சியும், வளர்ச்சியியும் புலம்பெயர் நாடுகளில் இருக்கவில்லை. எனவே தற்போதைய அழிவை விட மிகப்பெரும் பேரழிவை தமிழ் மக்களின் விடுதலைப்போர் அன்று சந்தித்திருக்கும்.
ஒரு வகையில் பார்த்தால் ராஜீவ் காந்தியின் மரணம் தமிழ் மக்களின் விடுதலைப்போரை 18 வருடங்கள் காப்பாற்றி உள்ளது என்றே கொள்ள முடியும். இந்த 18 வருடங்களில் தமிழ் மக்களின் போராட்டம் கண்ட வளர்ச்சிகள் அதிகம்.
மேலும் 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது உடனடியாகவே 25,000 இந்திய இராணுவ கொமோண்டோக்களை யாழ்நகரத்தில் தரையிறக்கி மிகப்பெரும் படுகொலை ஒன்றை நிகழத்தி பழிதீர்த்துக்கொள்ளும் நடவடிக்கையை இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ திட்டமிட்டிருந்தது.
அதற்கு ஏதுவாக 25,000 படையினரை திருவானந்தபுரம் விமானநிலையத்திற்கு கொண்டுவரும் ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் என்ன காரணமோ தெரியாது இறுதி நேரத்தில் அந்த திட்டம் கைவிடப்பட்டிருந்தது. எனவே வட இந்தியர்களும், தென்இந்திய பார்பானியர்களும் ஈழத்தமிழ் மக்கள் மீதான படுகொலை உணர்வுகளில் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு எப்போதும் சலித்தவர்கள் அல்ல.
ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் அமைப்புக்களையும், பிரதிநிதிகளையும் அழித்துவிட முற்படும் இவர்கள் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை முன்வைப்பதிலும் சிங்கள தேசத்திற்கு ஒப்பான போக்கையே கையாண்டு வருகின்றனர்.
2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட சமாதான காலத்தில் கூட விடுதலைப் புலிகள் சுயாட்சி அதிகாரத்திற்கான திட்டம் ( Interim self governing authority proposal) ஒன்றை முன்வைத்திருந்தனர். ஆனால் அன்றைய சிங்கள அரசு அதனை விவாதிக்க கூட முற்படாமல் குப்பை தொட்டியில் போட்டதுடன், அதற்கு எதிராக ஜே.வி.பி, ஜாதிக கெல உறுமய போன்ற பேரினவாத கட்சிகளை ஏவிவிட்டிருந்தது.
சுயாட்சிக்கான அதிகாரம் என்பது தனிநாட்டிற்கான முதற்படி என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் காலஞ்சென்ற கதிர்காமர் சிங்கள மக்களுக்கும், வெளி உலகிற்கும் போலியான எச்சரிக்கையையும் விடுத்திருந்தார். போர் நிறுத்தம் என்பது அரசியல் தீர்வை காண்பதற்கு மேற்கொள்ளப்படும் சமாதான பேச்சுக்களுக்கான ஒரு திறவுகோல் அதனை வீணாக இழத்தடிப்தை விடுத்து ஆக்கபூவமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது விடுதலைப் புலிகளின் குறிக்கோளாக இருந்தது.
விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்ட திர்வுத்திட்டமானது 1978 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்களால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுத்திட்டங்களை ஒத்ததாகும். ஆனால் அவையாவும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.
மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை வழங்கக்கூடிய 13 ஆவது திருத்தச்சட்டத்தை கூட நிறைவேற்றுவதற்கு சிறீலங்கா அரசு முன்வரவில்லை. தமிழ் மக்களின் மீதான தனது படை நடவடிக்கையை நியாயப்படுத்த இந்திய அரசு 13 ஆவது திருத்த சட்டத்தை நிறைவேற்ற 1988 களில் முற்பட்டிருந்தது. அதன் ஓரங்கமாக வடக்கு - கிழக்கு இணைப்பையும் மேற்கொண்டிந்தது. ஆனால் அதனையும் தற்போதைய அரசு இல்லாது செய்துவிட்டது.
மீண்டும் 13 ஆவது திருத்த சட்டத்தையாவது நிறைவேற்ற வேண்டும் என தற்போது அமெரிக்காவும் குரல் கொடுத்துள்ளது. ஆனால் சிறீலங்கா அரசினை பொறுத்தவரையில் அது தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை கொடுப்பதற்கு எப்போதும் முன்வந்ததில்லை. தற்போது அவ்வாறனதாகவே அதன் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
தமிழ் மக்களின் பிரதேசங்களை முற்றுமுழுதாக இராணுவ நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதுடன், அவர்களின் பூகோள பாரம்பரியத்தையும், இன விகிதாசாரங்களையும் மாற்றியமைக்கும் திட்டங்களையும் அரசு மேற்கொண்டு வருகின்றது.
அண்மையில் சிறீலங்கா இராணுவத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களும் அதனை தான் தெளிவுபடுத்தி நிற்கின்றன. மூன்று தடவை பதவி நீடிப்பு பெற்ற சிறீலங்காவின் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் இடத்திற்கு வவுனியா மாவட்ட கட்டளை தளபதியும், வன்னி படை நடவடிக்கையின் ஒருங்கிணைப்பு தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயசூரியா இந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என கடந்த வருடம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் ஏனெனில் பொதுவாக யாழ் மாவட்டம் அல்லது வவுனியாமாவட்ட கட்டளை தளபதிகளே இராணுவத்தளபதிகளாக நியமிக்கப்படுவதுண்டு. எனினும் ஜெயசூரியாவுக்கு சம நிலையில் இருந்த முன்னாள் யாழ்மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறீ வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக றியர் அட்மிரல் மோஹான் ஜெயவிக்ரமா நியமிக்கப்பட்டதும் நினைவுகொள்ளத்தக்கது. வடக்கு கிழக்கு மாகாணங்களை முற்று முழுதாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவந்துள்ள சிறீலங்கா அரசு அதன் நிர்வாகங்களையும் இராணுவமயப்படுத்தி வருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் மாவட்டங்களின் எல்லையில் உள்ள சிங்கள கிராமங்களை தமிழ் மாவட்டங்களுடன் இணைப்பதற்கும் சிறீலங்கா அரசு முற்பட்டு வருகின்றது. இதன் மூலம் அந்த மாகாணங்களில் உள்ள இனவிகிதாசாரத்தை மாற்றவும் முற்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் உரிமைப் போரை முற்றுமுழுதாக புதைத்துவிடுவதற்கு தனது வளங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி செயற்பட்டு வருகின்றது. இந்த வளங்களில் தமிழ் இனத்திற்கு எதிரான தமிழ் குழுக்களும், அமைப்புக்களும், கட்சிகளும் அடக்கம்.
வேல்ஸில் இருந்து அருஷ்
ஈழமுரசு (24.07.09)
Comments