"உயிர்த்தெழுவோம்" நிகழ்வில் புலம்பெயர் மக்கள் பேரெழுச்சியுடன் கலந்துகொள்ள வேண்டும்: பழ.நெடுமாறன், சீமான் அழைப்பு

"உயிர்த்தெழுவோம்" எழுச்சி நிகழ்வில் புலம்பெயர் மக்கள் பேரெழுச்சியுடன் கலந்துகொள்ள வேண்டும் என, தமிழின உணர்வாளர்கள் பழ.நெடுமாறன், சீமான் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இலண்டனை தளமாகக் கொண்ட அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழிற்கு (ஐ.பி.சி தமிழ்) செவ்வி வழங்கிய இவர்கள் இருவரும் இந்த அழைப்பினை விடுத்தனர்.

தமிழீழ மக்களின் விடிவுக்காக தம்மை ஆகுதியாக்கி, காவியமாகிப்போன கரும்புலிகள் நினைவு நாளான நாளை, புலம்பெயர் நாடுகளில் "உயிர்த்தெழுவோம்" எழுச்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மிக முக்கிய கால கட்டத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கலந்துகொண்டு, தமது விடுதலை வேட்கையை பன்னாட்டு சமூகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் என, தமிழின உணர்வாளரும், ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் இணைப்பாளருமான ப.நெடுமாறன் அழைப்பு விடுத்துதள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் முக்கிய காலகட்டத்தில் இருப்பதால், புலம்பெயர்ந்த மக்கள் அனைவரும் இந்த நிகழ்வில் தவறாது கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். "உயிர்த்தெழுவோம்" எழுச்சி நிகழ்வு பற்றி கருத்துரைத்த தமிழின உணர்வாளர் சீமான், பன்னாட்டு சமூகத்தின் கவனத்தையும், இந்தியப் பேராதிக்கத்தையும் தமது பக்கம் திருப்புவதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை பற்றிக் கருத்துரைத்த அவர், குழப்பங்களைத் தவிர்த்து, பிணக்கின்றி, இணக்கமான வழியில், காலத்தின் வழியில் பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

"உயிர்த்தெழுவோம்" எழுச்சி நிகழ்வு அனேகமான நாடுகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள போதிலும், கனடாவில் ஒன்ராறியோ நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் 4 மணிமுதல் இரவு 8 மணிவரை நடைபெறவுள்ளது.

Comments