"உயிர்த்தெழுவோம், வீறுகொள்வோம், விடுதலையை வென்றெடுப்போம்'

சிறீலங்காவின் இனப்படுகொலைக்குள் சிக்கி அழிந்து சிறைப்பிடிக்கப்பட்ட தமிழினத்தின் குரல்வளை நெரிக்கப்படும்வேளையில் எமக்கான குரல்கள் சர்வதேசத்தில் ஒலிக்கத்தொடங்கிவிட்டன. நியூசிலாந்துப் பாராளுமன்றத்தில் எமக்கான குரல் ஒன்று ஓங்கி ஒலித்துள்ளது. வரலாற்றின் பதிவில் சேர்க்கப்படும் ஒரு குரலாக எமது வலிகளைத் தமது குரலிலே ஒலிக்கச் செய்துள்ளார் ரிமீவீtலீ லிஷீநீளீமீ எனப்படும் நியூசிலாந்துப் பாராளுமன்ற உறுப்பினர்.

அவரின் முழுமையான உரை வருமாறு :

சிறீலங்காவில் தமிழர்கள் எதிர்நோக்கும் அபாயகரமான நிலையினைப் பற்றி எமது அரசாங்கம் உடனடியானதும் தொடர்ச்சியானதுமான பார்வையைச் செலுத்த வேண்டும். அவர்களது சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையானது மாபெரும் அசுரபலத்தால் நசுக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தொடர் வான் தாக்குதல்களாலும், எறிகணைத்தாக்குதல்களாலும் சிறீலங்கா அரசு குறைந்தது 20,000 தமிழர்களை இறுதி நேரத்தில் கொலை செய்துள்ளது. அந்தப் பகுதியில் இருந்த 3 இலட்சம் மக்கள் தடுப்புகளின் பின்னால், முட்கம்பிகளின் பின்னால் வதைமுகாமிற்குள் தள்ளப்பட்டுள்ளனர். கிட்லரின் வதைமுகாம்களில் சிக்கிய மக்களின் நிலைபோலவே தமிழர்கள் நிலையும் உள்ளது. கிட்லர்போல் முகாமிற்குள் பெரியளவில் படுகொலைகள் செய்யப்படவில்லையேதவிர, கிட்லரின் வதைமுகாமிலிருந்து வேறு எந்த வேறுபாடும் இங்கு இல்லை. சிறீலங்கா அரசாங்கம் இப்படியான வதைமுகாம்களிற்கும் மக்களை அடைப்பதன் மூலம் விடுதலைப் புலிகளின் நிர்வாக அடையாளங்களை முற்றாக அழிக்க முற்படுகின்றது. இதே போலவே கிட்லரும், கொம்யூனிஸ்டுக்களையும், சோசலிஸ்டுக்களையும் ஒரு அரசியல் பலமாக உருவாக விடாது வதைமுகாம்களிற்குள் வைத்து அழித்தொழித்தான். விடுதலைப் புலிகளுடன் தொடர்புவைத்த அனைவரும் நீண்ட பெரும் சிறைக்குள் தள்ளப்பட்டோ ‘சீர்திருத்தம்’ என்ற பெயரால் மூளைச் சலவை செய்து திசை திருப்பப்பட்டோ அல்லது ‘காணாமல்’ போக வைக்கப்பட்டோ அழிக்கப்படலாம். ஏற்கெனவேமுகாம்களிற்குள்ளும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் வெள்ளை வானால் கடத்தப்படுகிறார்கள். கிட்லர் கொம்யூனிஸ்டுக்களை அழிக்கஎந்தக்கொடூரங்களையும் மேற்கொண்டு அதை நியாயப்படுத்தினாரோ அதேபோல் மகிந்தராஜபக்சவும் புலிகளையும், தமிழர்களையும் அழிக்க எந்தக் கொடூர வழிகளையும் பின்பற்றி அவற்றைப் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று நியாயப்படுத்துகிறார். கிட்லரின் பாதையும் மகிந்தவின் பாதையும் ஒரே இன அழிப்பை நோக்கியே செல்கின்றது.

இது இப்படியாக நடந்திருக்கவேண்டியதில்லை. 2002 - 2003ல் உருவாக்கப்பட்ட யுத்த நிறுத்தத்தின்போதே தமிழர்களிற்கான சுயநிர்ணய உரிமையை வாங்கிக்கொடுப்பதற்கான சந்தர்ப்பம் அமைந்தது. நானும் இந்த யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் சென்றிருந்தேன். அங்கு எல்லாமே நன்றாகவே சென்றுகொண்டிருந்தது. நான் சிறீலங்கா அரச தரப்பினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும் பேச்சுவார்த்தைக் குழுவினருடன் நிறையவே பேசியுள்ளேன். இரு பகுதியினரும் நம்பிக்கையுடனும், ஒருவருக்கொருவர் மரியாதையுடனும் நடந்துகொண்டனர். நான் விடுதலைப் புலிகளின் தலைநகரமாயிருந்த கிளிநொச்சிக்குச் சென்றிருந்தேன். அங்கு அவர்கள் ஒரு இடைக்கால சுயநிர்ணய ஆட்சி உரிமைக்கான வரைவை நோர்வேஜிய தூதுக் குழுவினரிடம் கையளித்தனர். இது அனைத்து சர்வதேச ஊடகங்களாலும் சாட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர்களின் சுயநிர்ணய உரிமைக்கான பேச்சுக்களை அரசாங்கம் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கவேயில்லை. அதற்கான காரணம் இரு தரப்பிலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் சிறீலங்கா அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து மீண்டும் போர் தொடக்கப்படாது சிறீலங்கா அரசாங்கத்தை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவரத் தவறியதே சர்வதேச சமூகத்தின் பாரிய குற்றமாகும். சர்வதேசம் இரு தரப்பினருக்கும் சம அந்தஸ்த்து அளித்து பேச்சுவார்த்தையைக் கொண்டு செலுத்தாமல் ஒருபக்கம் அரசாங்கம் எனவும், மறுபக்கம் பயங்கரவாதிகள் எனவும் பார்த்து நடவடிக்கை எடுத்தமையே இந்த சர்வதேச சமூகத்தின் தோல்விக்குக் காரணம். ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்திருந்தபோதும், சிறீலங்காவின் எந்தப் பகுதியிலும் புலிகளை ஒரு சட்டபூர்வமான அமைப்பாக ஏற்றுக்கொண்டு செயற்பட அனுமதியளித்தது. விடுதலைப் புலிகளும் கடந்த காலங்களில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு அரசியல் கொலைகளையும் நடத்தியிருந்தனர். ஆனால் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை போன்றவற்றின் அறிக்கையின்படி இந்தப் பயங்கரவாதச் செயல்களையும், படுகொலைகளையும் சிறீலங்கா அரசு பாரிய அளவில் நிகழ்த்தி மாபெரும் மனித உயிர் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். 2003 -2005 பகுதியில் நிகழ்ந்த யுத்த நிறுத்த மீறல்களின் முடிவாக இவ் ஒப்பந்தமே கேள்விக்குறியானது. 2005ல் மகிந்தராஜபக்ச பதவிக்கு வந்ததும் சமாதான தீர்வைப் புறந்தள்ளி இராணுவத் தீர்வுக்குத் தாவினார். இந்த முடிவு தமிழர்களின் இழப்புகளிற்கு வழிவகுத்தன.

சிறீலங்கா அரசாங்கம் ஐ.நா பணியாளர்களையும், மனிதாபிமானப் பணியாளர்களையும், ஊடகவியலாளர்களையும் முகாம்களிற்குள் அனுமதிக்க வேண்டும் எனவும், சிறீலங்காவின் தமிழர்களின் நிலை குறித்துத் தாம் கவலைப்படுவதாகவும் 2ம் திகதி யூன் மாதம் நியூசிலாந்து அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை வரவேற்பிற்குரியது. ஆனாலும் நியூசிலாந் அரசாங்கம் தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக ஐ.நாவையும், சிறீலங்கா அரசையும் தொடர்புகொண்டு மேற்கூறிய வழிமுறைகளை உடனடியாகச் செயற்படுத்துவதற்கு முழுப்பொறுப்பையும் ஏற்றுக் களத்தில் இறங்கவேண்டும். இங்கு ஊடகங்கள் சுதந்திரமாக இயங்க வழிவகுத்தல் வேண்டும். இப்போது நடைபெறும் சந்திப்புக்கள் இராணுவத்தால் வழிநடத்தப்பட்டு அவர்களின் நடைமுறைகளின் கீழ் சுதந்திரமற்ற முறையில் துப்பாக்கி முனையிலேயே அந்தக் கைதிகளிடம் பேச முடிகிறது. ஆம், அவர்கள் நிலையில் நான் அவர்களைக் கைதிகள் என்றே கூறுவேன். அத்தோடு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள், போராளிகள், ஆதரவாளர்கள், அவர்களது குடும்பத்தினர் அனைவரும் நீதியான முறையிலும், மனிதாபிமான முறையிலும் இன அழப்பிற்கும், பழிவாங்கலுக்கும் ஆளாக்கப்படாமல் காக்கப்படல் வேண்டும். இது அவர்களைத் தண்டித்து துன்புறுத்துவதற்கான நேரமல்ல. அவர்களிற்கு ஆதரவு வழங்கி, ஆற்றுப்படுத்தவேண்டிய நேரம். மக்கள் தங்கள் இருப்பிடங்களிற்கு மீளச் செல்வதற்கு அனுமதிக்கப்படல் வேண்டும். நடந்த போர்க் குற்றங்கள் அனைத்தும் நேரடி சர்வதேச தலையீட்டுடன் விசாரணை செய்யப்படல் வேண்டும்.

விடுதலைப் புலிகளின் சிறிய பகுதிக்குள் இருந்த மக்களைத் தொடர் விமானக் குண்டுவீச்சுக்களாலும், எறிகணைத் தாக்குதல்களாலும் பெருமளவில் தமிழர்களை அழித்த சிறீலங்கா அரசாங்கத்தையும் போரில் கடைசிக் காலத்தில் மக்களைத் தம்முடனே வைத்திருந்ததற்காக விடுதலைப் புலிகளையும் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இது இங்கு ஒரு சர்வதேச விசாரணையை வேண்டி நிற்கின்றது.

இங்கு நியூசிலாந்தில் இருக்கும் தமிழர்கள் இந்த இனப்படுகொலைகளால் நிறையவே ஒவ்வொரு குடும்பமும் தனிப்படப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உறவுகள் கொல்லப்பட்டும், சிறைப்பிடிக்கப்பட்டும் உள்ளனர். இங்கு வசிக்கும் தமிழர்கள் இந்த நாட்டுப் பிரஜைகள். அவர்கள் மீது கவனம் செலுத்தவேண்டிய கடமை எமக்குள்ளது. அவர்களுடைய உறவுகளிற்கு என்ன நடந்தது என்று அறிந்தும், உயிர்தப்பி இருக்கும் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கும் அவர்களுக்குரிய நிவாரணம் கிடைப்பதற்கும் சர்வதேச அமைப்புகளுடாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அதே
வேளை நாம் தமிழர்களின் பிரச்சினைக்குரிய அடிப்படைய நியாயத்தை மறந்துவிடக்கூடாது. இன்று வெற்றி மிதப்பில் இருக்கும் சிறீலங்கா அரசாங்கம் தமிழர்களின் அடிப்படை சுயநிர்ணய உரிமையை மறுத்தமையே இந்நிலைமைக்குக் காரணம். இவரகள் போராட்டம் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே ஆரம்பமானது. புலிகள் தோற்றம் பெறுவதற்கு எவ்வளவோ காலத்திற்கு முன்னரே தமிழர்கள் உரிமை மறுக்கப்பட்டார்கள். இங்கு வாழும் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் பயங்கரமான கசப்பான அனுபவங்கள் உள்ளன. நான் 2003ல் சிறீலங்கா சென்றபோது பேச்சுவார்த்தைகளிலும், அரசியல் பணிகளிலும் முக்கியமானவர்களான திரு.நடேசன் அவர்களையும், திரு. புலித்தேவன் அவர்களையும் சந்தித்திருந்தேன். பேச்சுவார்த்தையிலும், அரசியல் பணிகளிலும் இவர்கள் பங்கு பெரியது. போரின் கடைசி நேரத்தில் இவர்கள் சர்வதேச சமூகத்துடன் தொடர்பில் இருந்தனர். மேரி கொல்வின் அவர்கள் இவர்களுடனான தொடர்பில் இருந்தார். சர்வதேச சமூகம், செஞ்சிலுவைச் சங்கம், சிறீலங்கா அரசாங்கம் ஆகியோருடன் தொடர்புகொண்டு இவர்களின் சரணடைவு பற்றிப் பேசியபடி இருந்திருக்கிறார். இவர் தனது முழு விபரங்களையும் மே 25ல் வெளியான Dominion postல் எமக்குச் சொல்லியிருந்தார். அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு, வெள்ளைக் கொடியுடன் சரணடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவர்கள் சரணடைய வந்தவேளை அவர்களையும், அவர்களின் உறவினர்களையும் சிறீலங்கா இராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். என்மனதை மிகவும் ஆளமாகப் பாதித்த சம்பவம் இது. இன்று நாங்கள் பெரும் துயரமான நிலைக்கு முகம் கொடுக்கின்றோம்.

இவ்வாறு அவர் தனது உரையை முடித்திருந்தார்.

சர்வதேசத்தின் குரல் எமக்காக ஒலிக்கும் வேளையிலே கனடாவிலிருந்து மூன்று இளைஞர்கள் அமெரிக்காவின் மௌனத்தைக் கலைக்க முழுவேகத்துடன் புறப்பட்டுள்ளனர். அவர்களின் அந்த ஆயிரம் மைல் பயணத்தில் அவர்களின் பின்னே ஆயிரமாயிரமாய் தமிழர்கள் அணிவகுக்கிறார்கள். தமிழினக் கொலையை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்கா தமது மௌனத்தைக் கலைக்கவேண்டிய நேரம் வந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவை நோக்கி மனித உரிமை அமைப்புக்கள் முறையீடுகளோடு வெளிவரத் தொடங்கிவிட்டனர்.

அனைத்துலக மன்னிப்புச்சபை (Amnesty), த கார்ட்டர் மனித உரிமைப் பிரிவு (The Carter center), சுதந்திர இல்லம் (Freedom Hpuse), அனைத்துலக மனித உரிமைகள் குழு (International League For Human Rights), ஜேக்கப் புளூஸ்டைன் மனித உரிமை மேம்பாட்டிற்கான கல்லூரி (Jacob Bluestein For The Advancements Of Human Rights), மனித உரிமைகளிற்கான மருத்துவர் அமைப்பு (Physician For Human Rights) ஆகியோர் சிறீலங்காவின் இனப்படுகொலைகளையும், போரில் நடாத்தப்பட்ட போர்க் குற்றங்களையும் விசாரிக்கும்படி ஒபாமாவைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மௌன சாட்சியாகப் படுகொலைகளை அனுமதித்த அமெரிக்காவிற்கும் பாவங்களைக் கழுவிக்கொள்ள இது நல்லதொரு சந்தர்ப்பமாகிறது.

சிறீலங்கா அரசு வைத்தியர்களைக் குறிவைத்துத் தாக்கியதோடல்லாமல், அந்த ரண களத்துள் நின்று தம் உயிரைப் பொருட்படுத்தாது இரவு பகலாகக் கடமையாற்றிய வைத்தியர்களையே இன்று பயங்கரவாதிகளாகக் கைது செய்து குற்றவியல் விசாரணை செய்கின்றமையைத் தடுத்து நிறுத்தும் திறன் ஒபாமா அரசிற்கு இருக்கின்றதா? நவிப்பிள்ளை மீது மகிந்த சமரசிங்க தனது சீற்றத்தைத் தெரிவித்துள்ளார். ஐ.நாவிற்கான இந்தியத் தூதரும் தன் அதிருப்தியைக் காட்டியுள்ளார். காரணம் நவிப்பிள்ளை ஒரு தமிழர். லூயிஸ் ஆர்ப்பர் மீது காட்டாத கோபத்தையும், பகைமையையும் அதே விடயத்தை எடுத்துக்கூறியுள்ள நவிப்பிள்ளை மீது காட்டியுள்ளனர். தமிழர்கள் என்பவர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் எதிர்க்கப்படவேண்டியவர்கள் அல்லது அழிக்கப்படவேண்டியவர்கள் என்பது இவர்களது இந்திய இலங்கை கூட்டுக்கொலையாகவே உள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் சிறீலங்கா அரசால் போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதாக அறிவித்த பின்னர் சிறீலங்கா தமிழருக்கு ஆபத்தான நாடு என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது. இது சிறீலங்கா அரசின் பொய் முகத்தை சர்வதேசம் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளதற்கான அறிகுறி.

நோபல் பரிசுபெற்ற ணிறீவீமீ கீவீமீsமீறீ இலங்கைத் தமிழரைப் பலிகொள்வதை சிறீலங்கா அரசாங்கம் நிறுத்தவேண்டுமென்று குரல் கொடுத்
துள்ளார். எங்கெல்லாம் சிறுபான்மையினர் நசுக்கப்படுகின்றார்களோ அங்கெல்லாம் எம் குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும். சிறீலங்காவில் தமிழர்கள் அரசாங்கத்தால் இன அழிப்பிற்குள்ளாக்கப்படுகின்றனர். அவர்களிற்கு அநீதி இழைக்கப்படுகின்றது. இவை தடுக்கப்பட்டு தமிழர்கள் தம் தாய்நிலத்தில் உரிமையுடன் வாழ வழிஅமைக்க வேண்டுமென Marion and Elie Wieselநிறுவனத் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ணிறீவீமீ கீவீமீsமீறீ மேலும் தெரிவித்தார். இன்று உலகில் பல மட்டங்களிலும் எமக்கான ஆதரவுக் குரல்கள் எழும்பத் தொடங்கியுள்ளன.

உலகத்தில் தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் ஓங்கி ஒலிக்கும் குரலாக உயிர்த்தெழுவோம் நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழர் தம் உறவுகள் காக்க ஒன்றாய் எழுந்து கைகோர்த்து சர்வதேச மௌனத்தை உடைக்கும் நாளது. தமிழர்கள் நாம் எல்லோரும், எம் கைகள், முட்கம்பிகளின் பின்னால் நிற்கும் எம் உறவுகளின் கைகளைத் தொடும்வரை எம் போராட்டக் குணம் மாறாது உயிர்தெழவேண்டிய தருணம் இது. சர்வதேசம் எம் நிலை உணர்ந்து எமக்காகக் குரல்கொடுக்க முனையும் இந்த வேளையை நாம் பயன்படுத்தி எல்லா நாடுகளிலும் எமது போராட்டத்தை முடுக்கிவிட்டு ‘உயிர்த்தெழுவோம்’ எழுச்சியோடு உயிர்த்தெழுந்து செந்தணலாகக் கனன்றுகொண்டிருக்கும் எம் விடுதலைத் தீயை பெருநெருப்பாய் வீசியெரியச் செய்வோம்.

எம் எழுச்சிமிக்க ஒன்றுபட்ட மாபெரும் சுதந்திரவேட்கைத் தீயின் வெப்பத்தில் தமிழீழத்தைப் பிரசவிப்போம்.

சோழ.கரிகாலன்

நன்றி:ஈழமுரசு(10.07.09)

Comments