சிறீலங்காவின் துப்பாக்கிகளுக்கு மத்தியில் இருந்துகொண்டு மருத்துவர்கள் வழங்கிய வாக்குமூலம்!

சிறீலங்கா இராணுவ மற்றும் புலனாய்வுத்துறையினரால் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக இரகசிய இடங்களில் வைத்திருந்து அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு தற்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட வைக்கப்பட்டுள்ளனர் வன்னியில் இறுதி வரை தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றிய மருத்துவர்கள்.

மோதல் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மருத்துவ சேவையாற்றி தற்பொழுது சிறீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐவரடங்கிய மருத்துவக் குழுவினரே இவ்வாறு தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலிலேயே தாங்கள் பொய்யான கருத்துக்களை வழங்கியதாக தற்போது சிறீலங்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இருந்துகொண்டு அவர்களது பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இம் மருத்துவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

சர்வதேசத்தால் வியந்து நோக்கப்பட்டு விருதுகளும் அறவிக்கப்பட்ட மருத்துவர்கள் தற்போது சிறீலங்காவின் துப்பாக்கி முனையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் முன்னாலேயே பத்திரிகையாளர் மாநாடும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வடபகுதியில் கடந்த ஜனவரி முதல் மே 15ம் திகதி வரை நடைபெற்ற மோதல்களில் பொதுமக்களின் இழப்புகள் குறித்த தொகையை விடுதலைப் புலிகளின் நிர்ப்பந்தத்திலேயே வெளியிட்டதாகத் தெரிவித்துள்ள ஐவரடங்கிய இந்த மருத்துவர்குழு இக்காலப்பகுதியில் நடைபெற்ற மோதலில் சுமார் 800 பொதுமக்களே பலியானதாகவும் 850 க்கும் அதிகமானோரே காயமடைந்ததாகவும் தெரிவித்தனர்.

ஆனால், திருகோணமலைக்கும், புல்மோட்டைக்கு படுகாயமடைந்த நிலையில் கொண்டு செல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனை விட அதிகம் என்பதற்கு ஆதாரபூர்வமான சான்றுகள் இருக்கின்றன. மோதல் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சேவையாற்றியவர்களான முல்லைத்தீவு வைத்திய அத்தியட்சர் வீ.சண்முகராஜா, கிளிநொச்சி சுகாதாரப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் மருத்துவர்களான வரதராஜா, சி.சிவபாலன், இளஞ்செழிய பல்லவன் ஆகியோரே இச்செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்திருந்தனர்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இச்செய்தியாளர் மாநாட்டில் இக்குழுவினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 2009 ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நடைபெற்ற மோதல்களில் 450 பொதுமக்கள் பலியானதுடன் 650 க்கும் அதிகமான மக்கள் காயமடைந்திருந்தனர். அத்துடன் ஏப்ரல் 15ம் திகதி முதல் மே 15 வரை நடைபெற்ற காலப்பகுதியில் மட்டும் 350 தொடக்கம் 450 வரையான பொதுமக்கள் பலியானதுடன் 200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தனர்.

இக்காலப்பகுதியில் நடைபெற்ற மோதல்களில் பொதுமக்களின் இழப்புகள் குறித்து இதுவே உறுதியானதும் இறுதியானதுமான தொகை. இப்பொதுமக்கள் மோதல்கள் நடைபெறும்பொழுது இடையில் சிக்கியே உயிரிழந்தனர். பொதுமக்களின் இழப்புகள் குறித்து எம்மால் முன்னர், அதாவது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது புலிகளின் நிர்ப்பந்தத்திலேயே தொகைகள் வெளியிடப்பட்டன. அத்தகவல்கள் உறுதியானவை அல்ல.

விடுதலைப் புலிகள் ஒரு பட்டியலைத் தரும்போது அவர்களின் அச்சுறுத்தலிலேயே அத்தொகையை கூறவேண்டியிருந்தது. அதேவேளை, அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட மோதல் சூனியப் பகுதி முன்னணி பாதுகாப்பு எல்லைக்கு அருகில் இருந்தமையும் இழப்புகள் அதிகளவில் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தது. மோதல் நடைபெற்ற காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான உடல்கள் ஒருநாளில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக நாம் கூறியிருந்தோம்.

ஆனால் அது தவறான தொகையாகும். ஒருநாளில் ஆகக் கூடியதாக எமது மருத்துவமனைக்கு வந்த உடல்களின் எண்ணிக்கை அறுபதே ஆகும். மோதல்களில் காயப்பட்ட பொதுமக்களுக்கு எம்மால் இயன்றவரை சிகிச்சை அளித்து வந்தோம். அரசினால் மருந்துவகைகள் அனுப்பப்பட்டிருந்தும் அவை பற்றாக்குறையாகவும் இருந்தன. அத்துடன் மருந்துகள் குறிப்பிட்ட காலப்பகுதியில் வந்தடையவும் இல்லை. அதற்கு கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட காலதாமதங்களும் காரணமாக உள்ளது.

மோதல் நடைபெற்ற இறுதித் தருணத்தில் கூட 3 கப்பல்களில் மருந்துவகைகள் அனுப்பப்பட்டது. அம்மருந்துப் பொருட்களில் முழுவதும் எமக்கு வந்தடைவதில்லை. ஏனெனில் விடுதலைப் புலிகளும் அம்மருந்துகளை தமது போராளிகளிற்காக எடுத்துக் கொண்டனர். உணவுப் பொருட்கள் தொடர்பாக கூறினாலும் அரசினால் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு தேவையான உணவு அனுப்பப்பட்டது. அதிலும் தமக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்ட பின்னரே மீதியான உணவு பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் நாம் சிலவேளைகளில் சிகிச்சைகளை வழங்கியுள்ளோம். ஏனெனில், அவ்வாறான நிர்ப்பந்தத்திலேயே நாம் இருந்தோம். அதேவேளை, விடுதலைப் புலிகளும் தமக்கென மருத்துவமனைகளை நிர்மாணித்து வைத்திருந்தனர். தமது போராளிகளுக்கு அம்மருத்துவமனைகள் மூலமே சிகிச்சை அளித்து வந்தனர். குறிப்பிட்ட மோதல் நடைபெற்ற காலப்பகுதியில் நாம் அங்கு எமது பணிகளை செய்திருக்காமல் முன்னரே அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்றிருந்தால், ஏராளமான உயிரிழப்புகளை தமிழ் மக்கள் எதிர்நோக்கியிருப்பார்கள்.

இறுதிவரை எம்மால் இயன்ற பணிகளை நாம் எமது மக்களுக்காக செய்துள்ளோம். புதுக்குடியிருப்பு மருத்துவமனைமீது கூட எறிகணை ஒன்று வந்து வீழ்ந்து சேதங்கள் ஏற்பட்டது. ஆனால், அந்த எறிகணை எப்பகுதியிலிருந்து வந்து வீழ்ந்ததென உறுதியாகக் கூறமுடியாது. காரணம், இரவு 1 மணியளவிலேயே அந்த எறிகணை வீழ்ந்தது. அதில் டொக்டர் வரதராஜாவின் மனைவியும் மகனும் சிறுகாயமடைந்தனர். கூடுதலான பொதுமக்கள் மோதல் நடைபெற்றபோது இடையில் சிக்கியே உயிரிழந்தனர்.

பொதுமக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை இருந்தது. கடந்த மூன்று தசாப்தகாலமாக நடைபெற்று வந்த தேவையற்ற யுத்தம் தற்பொழுது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு அவா இருந்தது. அதாவது அதிகமாக ஒன்றைக் கோரும் பட்சத்தில் குறைந்தளவையாவது பெற்றுக் கொள்ளலாமென்ற எண்ணம் சமஷ்டியோ, மாகாண ரீதியிலான ஆட்சியோ கிடைக்குமென மக்கள் நம்பினர்.

மக்களின் கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்றுவாரென்ற நம்பிக்கையுள்ளது. விடுதலைப் புலிகள் இந்த யுத்தத்தை தேவையற்ற விதத்தில் நடத்தி எமது மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தருவார்களென நம்பியிருந்த மக்களுக்கு எதிராகவே புலிகள் துப்பாக்கியைத் திருப்பிவிட்டனர். 2006ம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் இளைஞர்களை தமது அமைப்பில் கட்டாயமாக சேர்த்துக்கொண்டனர்.

2009 ஜனவரிக்குப் பின்னர் 15, 16 வயதுக்கு குறைந்தவர்களைக் கூட தமது அமைப்பில் கட்டாயமாக இணைத்துக்கொண்டனர். இவ்வாறாக ஒரு பிரயோசனமற்ற யுத்தத்தை புலிகள் நடத்தியதற்கு சாட்சியாக நாம் இருக்கின்றோம். பெருமளவு 15, 16 வயது சிறுமிகளுக்குக் கூட எம்மால் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விடுதலைப் புலிகளினால் கட்டாயமாக தமது அமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள். அச்சிறுமிகளுக்கு எம்மால் சிகிச்சை அளிக்கப்பட்டபோது நாம் மிகவும் வேதனை அடைந்தோம்.

இவ்வளவு காலமும் இவ்வாறான ஒரு அமைப்பிற்காகவா நாம் பாடுபட்டோம், கடமைபுரிந்தோம் என எண்ணத் தோன்றியது. பிரயோசனமற்ற யுத்தத்தை நடத்தி பொதுமக்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குச் செல்லவிடாமல் தடுத்துவைத்தனர். விடுதலைப் புலிகளின் தந்திரோபாயத்தைப் பார்த்தால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படவேண்டும். அதனை சர்வதேச அளவில் பிரசாரப்படுத்தி வெளிநாட்டு அமைப்புகளை நாட்டுக்குள் வரவழைத்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள முயன்றனர்.

இவ்வாறு பல தேவையற்ற செயல்களைப் புரிந்து இறுதியில் தமிழ் மக்களின் அழிவுக்கு காரணமாக விடுதலைப் புலிகள் இருந்ததை எமது கண்கூடாக நாம் கண்டோம். ஆகவே, தற்பொழுது விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் அழிந்துவிட்டது. தமிழ் மக்கள் விடிவு பெறவேண்டிய காலம் வந்துவிட்டது. தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அப்பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படவேண்டும்.

மோதல் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப் பகுதியிலேயே எம்மால் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றிருக்க முடியும். ஏப்ரல் 20ம் திகதியே எம்மால் வெளியேறக்கூடிய சாத்தியம் இருந்தது. இருந்தாலும் முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே மே 15ம் திகதிவரை இருந்தோம். அன்றைய தினம் நாங்கள் அனைவரும் ஒரு பங்கருக்குள் இருந்தபோது வீழ்ந்து வெடித்த எறிகணைகளின் சிதறல்களால் டொக்டர் வரதராஜாவிற்கு காயம் ஏற்பட்டது.

அதன்பின்னர் நாம் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம். அதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் மூலம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றோம். விசாரணைகள் முடிவுற்ற நிலையில் வெகுவிரைவில் விடுதலை செய்யப் படுவோமென நம்புகின்றோம் என்றனர்.

இந்நிலையில், இராணுவத்தினரிடம் சரணடைந்து 50 நாட்கள் கடந்த நிலையிலேயே நீங்கள் செய்தியாளர் மாநாட்டை நடத்துகின்றீர்களே? என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மருத்துவர்கள், இராணுவத்தினரிடம் சரணடைந்தவுடன் உடனடியாக எம்மால் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தக் கூடிய சூழ்நிலை இருக்கவில்லை. அதற்குப் பின்னர் நாம் பல சட்டப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய தேவை இருந்தது.

அத்துடன் எமக்கு சில நோய்களும் ஏற்பட்டிருந்தன டாக்டர் வரதராஜா கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய தேவையும் இருந்தது. இது போன்ற இன்னோரன்ன காரணங்களுக்காகவே நாம் இக்கால தாமதத்துடன் இச்செய்தியாளர் மாநாட்டை நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதெனத் தெரிவித்தனர்.

இதேவேளை, "விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் அவர்களின் அச்சுறுத்தலில் பொதுமக்களின் இழப்புகள் குறித்து மிகைப்படுத்திய தரவுகளை வெளியிட்டதாகக் கூறிய நீங்கள், தற்பொழுது அரச கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு மாறுபட்ட தகவலைத் தருவதற்கு சாத்தியம் உள்ளது. அத்துடன் நீங்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் இன்னொரு நாட்டிலிருந்து இன்னொரு கருத்தையும் கூறும் சாத்தியம் உள்ளதே?" எனக் கேட்டபோது, "இல்லை, நாம் தற்பொழுது சிறந்த முறையில் அரசினால் கவனிக்கப்பட்டு வருகின்றோம்.

எம்மை சிறையில் தடுத்து வைக்கவில்லை. குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் அலுவலகத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளோம். ஆதலால், நாம் தற்பொழுது கூறுவதுதான் உண்மை. இக்கருத்தையே நாம் என்றும் எங்கும் கூறுவோம்" எனத் தெரிவித்தனர். இராணுவத்தின் துப்பாக்கி முனையில் நின்றுகொண்டு இவர்களால் இதனைத்தான் கூறமுடியும்.

நன்றி: ஈழமுரசு -11.17.2009

Comments