தெளிவாகத் திட்டமிடும் சிங்களம்; குழம்பிப் போயிருக்கும் தமிழினம்; இனி நாம் என்ன செய்யப் போகின்றோம்???

என்ன செய்வது என்று தெரியாத நிலையில் குழம்பிப் போயிருக்கும் தமிழர்கள், அடுத்த கட்ட நகர்வுகளை செய்தேயாகவேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் தங்களுக்குள்ளேயே குழம்பமடைந்து கொண்டும், கருத்துப் பிளவடைந்து கொண்டும் சிலபேர் மனமுடைந்தும் இருப்பதை கண்ணூடாகக் காணமுடிகின்றது.

நமக்குள் ஏன் இந்தக் குழப்பம்?
ஏன் இந்தக் கருத்து வேறுபாடு ??
ஏன் இந்த மனமுடைவு???

நாம் செய்யவேண்டிய கடமைகள் மலைபோல் குவிந்து காத்திருக்கின்றன. ஆனால் நாமோ... நொடிந்துபோய் உட்கார்ந்திருக்கின்றோம்.

சிங்களம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை படிமுறைப்படுத்தி தமிழினத்தினை அடிமைப்படுத்துவதற்கான மிகத் தெளிவான செயற்திட்டத்தினை தமக்கு ஆதரவான வல்லரசுகளின் பக்கபலத்துடன் அமுற்படுத்தத் தொடங்கிவிட்டது. கைப்பற்றப்பட்ட தமிழர் பிரதேசங்கள் உட்பட அனைத்து தமிழர்வாழ் பிரதேசங்களையும் சிங்கள,பெளத்த மயப்படுத்துவதன் மூலம் தமிழரிற்கான பிரதேச தனித்துவத்தினை இல்லாமற் செய்வதற்கான சதித்திட்டத்தினை சத்தமில்லாமல் ஆரம்பித்துள்ளது சிங்கள அரசு.

பிரதேச ரீதியாக மட்டுமல்லாமல் தமிழர்களுக்கு, அவர்களினது மனரீதியாகவும் தனித்தமிழ் பிரதேசம் என்ற எண்ணமோ அல்லது தமிழீழம் பற்றிய நினைப்போ வந்துவிடக்கூடாது என்பதற்காக சில கொடுமையான வழிமுறைகளைக் கையாள முனைகின்றது.

அதன் வழியிலேயே, "புனர்வாழ்வு முகாம்" என்ற பெயரில் நம் தமிழ் உறவுகளை அடைத்துவைத்து தனது கொலைவெறித்தனமான களையெடுப்பு நடவடிக்கைமூலமும் உணவு,மருந்துப் பற்றாக்குறை மற்றும் சுகாதாரச்சீர்கேடுகள் போன்றவற்றினை திட்டமிட்டு ஏற்படுத்தி நோய்த்தொற்றல்களை உருவாக்கி மறைமுகக் கொலைகளைப் புரிவதன் மூலமும் முடிந்தவரைக்கும் இனவழிப்பினை மேற்கொண்டுவருகின்றது.

"புனர்வாழ்வு முகாம்" என்ற பெயரில் இயங்கும் வதை முகாம்களில் நம் தமிழுறவுகள் அனுபவிக்கும் அவலங்களை வார்த்தைகளில் விபரிக்கமுடியாது. அம்முகாம்களுக்குள் நடக்கும் கொடுமைகள் பல வெளியே தெரியாமலேயே போய்விடுகின்றன. ஊடகங்களையும் தொண்டு நிறுவனங்களையும் சுதந்திரமான முறையில் அனுமதிக்காத நிலையில் இவ்வாறான கொடுமைகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. பசி பட்டினி, நோய்கள் என்பவற்றை விட உளரீதியாக அவர்கள் அடைகின்ற பாதிப்பும் அதனால் ஏற்படுகின்ற மனவலிகளும் தாங்கமுடியாதவை. காலத்தினால் அழியாத வடுக்களை அவை ஏற்படுத்தும்.

"வதை முகாம்களில் இவ்வாறு வதைபடுவதைவிட போரிலேயே செத்துமடிந்திருக்கலாம்" என்ற வாழ்க்கை வெறுத்துப் போன மனநிலையிலேயே அங்குள்ள மக்கள் இருப்பதை பார்க்கும்போதும், அங்கு நடக்கும் கொடுமைகளைக் கேள்விப்படும்போதும் நெஞ்சமெல்லாம் பதைபதைக்கின்றது.
காணாமல் போதல்கள்,சித்திரவதைகள், கொலைகள்,மரணங்கள் எல்லாம் அங்கு சர்வசாதாரணமாய் நடந்தேறுகின்றன. அங்குள்ள பெண்களின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் பாலியல் கொடூரங்கள் வரையறையில்லாமல் தொடர்கின்றன. விசாரணை என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளிற்கு அளவேயில்லை.

பெற்றோரை போரில் இழந்து அநாதரவாய் திரியும் சின்னஞ்சிறுசுகளை நினைக்கையில்... நெஞ்சு கனக்கின்றது. கல்வி கற்பதற்கான அடிப்படை வசதிகள் எதுவுமே ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலையில், தமிழர்களின் மூலாதாரமான கல்வியறிவும் சிதைக்கப்பட்டு ஒரு சந்ததியின் எதிர்காலமே கேள்விக்குறியாக்கப்படுகின்றது.

இவ்வாறு, அப்பாவித் தமிழர்கள் படும் வேதனைகளிற்கு ஒரு முடிவேயில்லாமல் தொடருகின்றபோதும்... இந்த அவலங்களை இல்லாமற் செய்வதற்கோ குறைப்பதற்கோ ஆரம்பவேலைகளையேனும் மேற்கொள்ளாத நிலையில்...
தமிழருக்கான தீர்வுத்திட்டம் , மீள்குடியேற்றம் என்பவை குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர்களிற்கான சுபீட்சமான எதிர்கால வாழ்க்கையை அளிக்கப் போவதாகவும் தமது பொய்வாக்குறுதிகளை அள்ளி வீசி சர்வதேசத்தினை ஏமாற்றி, தனது திட்ட நிரலின்படி காலம் கடத்தி வருகின்றது சிங்கள அரசு.

இக்கால இடைவெளிக்குள் சர்வதேசத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தனது சதிவேலைகள் அனைத்தினையும் வெற்றிகரமாக செய்து முடித்துவிடும் இனவெறிபிடித்த சிங்கள அரசு. சிறிலங்கா அரசாங்கம் தமிழருக்கு நிரந்தரமான நியாயமான தீர்வை வழங்குமென சர்வதேசம் சகட்டுமேனிக்கு நம்பிக்கொண்டிருக்கின்றது. ஆனால் எந்தக் காலத்திலும் ஈழத் தமிழருக்கான நியாயமான தீர்வை முன்வைக்க சிங்கள இனவாதிகள் முன்வரமாட்டார்கள் என்பதை கடந்தகால வரலாறுகளிலிருந்து தமிழர்கள் பட்டறிந்து கொண்டுள்ளனர்.

தமிழர்களை அடிமைப்படுத்தி ஆழுவதையே அது விரும்புகின்றது. தீர்வுத்திட்டம் ஒன்றினை சிங்கள அரசு சர்வதேச நாடுகளின் தலையீடின்றி தன்னிச்சையாக முன்வைக்குமானால், அது தமிழர்களை அடிமைப்படுத்துவதற்கான அடிமை சாசனமாகவே அமையும். அடிமையாக்கப்பட்டவர்கள் கொஞ்சங் கொஞ்சமாக அழிக்கப்பட்டு இலங்கையென்ற தேசத்தில் தமிழர் என்ற இனமும் அதற்குரிய அடையாளங்களும் முற்றுமுழுதாக இல்லாதொழிக்கப்படும்.

ஆனால் வழமைபோல், இதையெல்லாம் சர்வதேசம் மெளனமாக பார்த்துக்கொண்டிருக்கும். மிஞ்சிப்போனால் ஒன்றிரெண்டு கண்டன அறிக்கைகளை மாத்திரம் தெரிவிக்கும்.

இந்த சிங்கள இனவாதமும், சர்வதேசமும் ஈழத்தமிழர் விடயத்தில் இவ்வாறு நடந்து கொள்வதற்கு யார் காரணம்???
உண்மையிலேயே, வேறு யாருமல்ல... நாங்களேதான் காரணம்.

நம்மிடையேயுள்ள ஒற்றுமையின்மை, கருத்து வேறுபாடு, சுயநலப் போக்கு, ஒதுங்கி நிற்கும் மனப்பான்மை போன்ற பல குறைபாடுகள் அவர்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. நாங்களே இவ்வாறு நடந்து கொள்ளும்போது சர்வதேசத்தினை கேள்வி கேட்பதற்கு எமக்கு எந்த அருகதையும் இல்லை என்றாகிறது. நம்மை நாம் மாற்றுவோம்! நம் உறவுகளுக்காகக் குரல்கொடுப்போம்!

சிங்களத்தின் கொலைவெறிக் கரங்களிலிருந்து நம் சொந்தங்களைக் காப்பாற்றுவோம்! அத்தோடு... நம்மையும் நமது இனத்தின் அடையாளங்களையும் காப்பாற்றிக் கொள்ளுவோம்!

உறவுகளே!

சிங்கள வல்லாதிக்கம் நடத்தி முடித்த போரில் நமது நிலங்களை மட்டுமே வெற்றி கொண்டிருக்கின்றார்களே ஒழிய... நமது மனங்களையோ, போராட்ட உணர்வினையோ, விடுதலை வேட்கையையோ அவர்கள் வெற்றிகொள்ளவில்லை

எமது விடுதலைப் போராட்டம் இப்போது புது பரிமாணத்தோடு முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. இது இன்னும் முழுவீச்சோடு முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதுவரை நாளும் நமக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு ஓரணியில் திரள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது நம்பிக்கையை கொடுப்பதாக இருக்கின்றது. இந்த ஒற்றுமை என்றுமே நிலைக்க வேண்டும். நமது ஒற்றுமைதான் நமது போராட்டத்தினை வலுப்படுத்தும்.
சிங்களமும் அதனுடன் சேர்ந்தியங்கும் இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க சக்திகளும் தமிழர்களின் போராட்டத்தினை சீர்குலைக்கும் சதிவேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.தமிழர் நிலங்களை ஆக்கிரமித்த சிங்களம், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை இல்லாதொழிக்க வழிதேடுகின்றது.

அதற்கு நாங்களே வழியமைத்துக் கொடுக்கக் கூடாது. நமது போராட்டத்தினை யாராலும் அழிக்கமுடியாது என்பதனை நிரூபிப்பதற்குரிய சந்தர்ப்பம் இது.

இழப்புக்களிலிருந்தும் தமிழினம் இமயமாய் வீறுகொண்டெழும் என்பதனை சிங்களத்துக்கும், சர்வதேசத்துக்கும் உணர்த்தும் தருணமிது.

ஆனால் இதெல்லாம் "நாம் தமிழர்" என்ற ஒரே உணர்வுடன், "தமிழீழம்" என்ற மாறாத இலட்சியத்துடன் ஓரணியில் திரண்டு போராடினால்தான் சாத்தியப்படும்.

நமது தேசியத்தலைவரின் கருத்துக்களுக்கமைய போராட்டத்தினை முன்னெடுப்பதென்பது அவரையும் தமிழீழ மண்ணையும் நேசிக்கும் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய கடமை. எதிர்காலம் பல கேள்விகளுக்கு பதிலளிக்கும். ஆனால் நிகழ்காலமே எதிர்காலத்திற்கு வழியமைக்கும்.

எனவே தலைவன் வழியில் நிற்போரின் வழிநின்று ... இன்று நாம் செய்ய வேண்டிய கடமையினைச் சரிவரச் செய்வோம். நாளை நமதாகும்.

ஒரு விடுதலைப் போராட்டம் அது எவ்வகையில் அமைந்தாலும், அதனை தாங்கும் மிக முக்கிய பங்கு அச்சமூக மக்களையே சாரும். மக்களின் ஆதரவின்றி எந்தவொரு விடுதலைப் போராட்டமும் வென்றதாக சரித்திரம் இல்லை. வெல்லவும் முடியாது.நமது விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டத்தினை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட்ட காலத்தில் மக்களின் ஆதரவு கிடைக்கப் பெற்றதனாலேயே பேரளவு வளர்ச்சி கண்டிருந்தது. அதேபோல,

தற்போது மீள்கட்டியமைக்கப்பட்டு புதிய போராட்டப் பரிமாணத்தோடு பரிணமித்திருக்கும் போராட்டத்திற்கும் தமிழர்கள் தமது முழு ஆதரவையும் கொடுத்து அதனை நிலைநிறுத்துவார்களாயின்... தமிழீழம் மலர்வதை யாராலும் தடுக்க முடியாது

என்ற நிலையை உருவாக்கும் என்பது மட்டும் உறுதி. தமிழர்கள் எடுத்திருக்கும் புதிய அரசியல் விஸ்வரூபம், அவர்கள் தூக்கிய ஆயுதங்களை விட வலிமையானது. இந்த இராஜதந்திர ஆயுதம் சாதிக்கக் காத்திருக்கும் சரித்திரம் தமிழீழத்தினை உருவாக்கும். இது நம் மாவீரர்கள் மேல் ஆணை.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

வீட்டையிழந்தும் நாட்டையிழந்தும் வீழ்ந்து கிடப்பது பாவம்!!!
வேற்றுமையில்லா ஒற்றுமையிருந்தால் இப்படி நேருமா சோகம்???


-பருத்தியன்-

Comments