மரணப் பொறியின் வாசலைத் திறந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் கடன்

யுத்தம் முடிவடைந்த பின்னர் ஒவ்வொரு தடைகளையும் மிக இலகுவாக எதிர்கொண்டு வெற்றி பெற்று வருகிறது இலங்கை அரசு.

பாதுகாப்புச் சபையிலும் மனித உரிமைப் பேரவையிலும் பன்னாட்டு நாணய நிதியத்தின் கடன் வழங்கும் கூட்டத்திலும் பலத்த ஆதரவோடு, மேற்குலகின் அழுத்தங்களையும் மீறி நிமிர்ந்து நிற்கிறது.

ஆனாலும் இறுதியாகக் கிடைத்த வெற்றி, மரணப் பொறியின் வாசலைத் திறந்து விட்டுள்ளதென்பதை ஆட்சியாளர் உணர்ந்தாலும் மக்களால் உணர முடியவில்லை. வரி அதிகரித்து, விலை வாசி ஏறும் போது, சுமையின் வலி உணரப்படும்.

எத்தனையோ மாபெரும் மனித உரிமைச் சங்கங்கள் எதிர்த்தும், எதனடிப்படையில் இந்த பன்னாட்டு நாணய நிதியத்தின் 2.5 பில்லியன் டொலர் கடனுதவி, இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதென்பதை புரிதல் வேண்டும்.

பன்னாட்டு நாணய நிதியத்தில் பங்குதாரர்களாக விளங்கும் உலகப் பணக்கார நாடுகள், வளர்ச்சியடையும் நாடுகளின் பொருளாதாரம் சிதைக்கப்படõமல், அதை காப்பாற்றியாக வேண்டிய தேவை கருதி இத்தகைய சிறு உதவிகளை வழங்குகின்றன.

1) சர்வதேச பொருண்மிய ஸ்திரத்தன்மையைப் பேணுதல்.
2) பன்னாட்டுச் சந்தையில் கடன் பெறும் தகைமையை இழக்கும் நிலையிலுள்ள நாடுகளுக்கு உதவுதல்.
3) தமது பொருளாதாரக் கட்டமைப்பை தவறான வழியில் நிர்வகிக்கும் நாடுகள், பன்னாட்டு நிதி அமைப்பினை சிதைக்காமல் தடுத்தல்.

இதனடிப்படையில், தமது சர்வதேச நிதி நிர்வாக வலையமைப்பிற்கு ஊறு விளைவிக்காமல் இருப்பதற்கும் தொடர்ச்சியான மூலதனச் சுரண்டலுக்கும் இந்த நாணய நிதியம் கடனுதவி வழங்குகிறது.

போர்க் குற்றம், மனித உரிமை மீறல் போன்ற விவகாரங்களைக் கையிலெடுத்தால் பூகோள சந்தைப் பங்கிடுதலை நேர்த்தியாகக் கையாள முடியாமல் போகுமென்று இந்நிதியம் கணிப்பிடுகிறது.
ஆகவே அரசு பிரகடனப்படுத்துவது போன்று, இக்கடனுதவியானது வெறுமனே போர் வெற்றிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாகவோ அல்லது நன்கொடையாகவோ கருதி விட முடியாது.

அவ்வாறு கூறுவது, அரசியல் இலாபம் என்கிற நடைமுறைக்குள் பொருந்தலாம். இவை தவிர, பெற்ற கடன் ஏற்படுத்தப் போகும் புதிய தலைவலிகளை, மக்கள் எதிர்கொள்ள முன்பாக, யுத்த வெற்றி என்கிற முதலீட்டைக் கொண்டு தேர்தல் ஒன்றினை நடத்திட ஆளும் கட்சியினர் அவசரப்படலாம்.

இந்நகர்வினைப் புரிந்து கொள்ளும் எதிர்க்கட்சியினர், பன்னாட்டு நாணய நிதியம் விதித்த நிபந்தனைகளை அரசு வெளியிட வேண்டுமென வலியுறுத்துகின்றன.

2001 ஏப்ரல் மாதம், இதே நாணய நிதியம் 253 மில்லியன் டொலர் கடனுதவிக்கான அங்கீகாரம் வழங்கி, முதல் தொகையாக 131 மில்லியன் டொலரை வழங்கிய போது, நிதியத்தின் நிபந்தனைகளை வெளியிடுமாறு பெரிதாக எவரும் அலட்டிக் கொள்ளவில்லை.

இந்த நிபந்தனைகள் என்கிற "சிதம்பர இரகசியம்' உலகறிந்த விவகாரம், நாட்டினை அழிவுப் பாதைக்கு இக் கடனுதவி இட்டுச் செல்லுமென்று நாடகமாடும் ஐக்கிய தேசியக் கட்சியினர், அவர்கள் ஆட்சி புரியும் போது பன்னாட்டு நாணய நிதியத்திடம் கையேந்த இல்லையா என்கிற கேள்வியை மக்கள் முன் வைக்கலாம்.

ஆனாலும் நாணய நிதியம் விதித்த முதல் நிபந்தனையானது பாதீட்டுப் பற்றாக்குறை தொடர்பானது.

2011 ஆம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை (ஊடிண்ஞிச்டூ ஈஞுஞூடிஞிடிt) 5 வீதமாக வேண்டும். இவ்வருட முதல் நான்கு மாதங்களில் இது 4 வீதமாக உள்ளது. ஆனாலும் இந்த வருட இறுதிக்குள் இப்பற்றாக்குறை வீதம் 9 ஆக உயருமென்று பொருளியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

அங்கீகரிக்கப்பட்ட 2.5 பில்லியன் டொலர் கடனுதவியில் முதற்கட்டமாக 322 மில்லியன் டொலர் இலங்கைக்கு உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. இப்பணத்தைக் கொண்டு, யுத்தத்தால் இடம்பெயர்ந்து வன்னி முகாமில் வாழும் மூன்று இலட்சம் மக்களை மீள் குடியேற்றம் செய்வதா? அல்லது நலிவடைந்துள்ள அரச கூட்டுத்தாபனங்களுக்கு பகிர்ந்தளிப்பதா? அல்லது ஏற்கெனவே பன்னாட்டு வங்கிகளிலிருந்து பெறப்பட்ட கடனை மீள் அளிப்பதற்குப் பயன்படுத்த முடியுமாவென்று அரசு திணறுகிறது.

கண்ணிவெடி அகற்றப் பல வருடங்கள் செல்லுமென்று, மீள் குடியேற்றத்தை இழுத்தடிக்கலாம். அத்தோடு பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மின்சார சபை போன்றவற்றை பன்னாட்டு கம்பனிகளுக்கு விற்கலாம். அதன் மூலம் பெருந்தொகையான நிதியையும் பெறலாம்.

ஆகவே சர்வதேச நாணயச் சபை வழங்கிய 2.5 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் அட்டையை (இணூஞுஞீடிt இச்ணூஞீ) முழுமையாக பயன்படுத்த அரசால் முடியுமாவென்கிற கேள்வி எழுவது நியாயமானதாகும்.
முதல் 20 மாதங்களுக்கு வேறெந்த நிதி நிறுவனத்திடமிருந்தும் கடன் அட்டையைப் பெறக் கூடாதென்கிற நிபந்தனை இதில் உள்ளடங்கும்.

பொதுவான கடன்அட்டை போன்றதே இதன் நிபந்தனைகளும். மாதாந்த தவணைக் கட்டணத்தை ஒழுங்காகச் செலுத்தாவிட்டால் உச்ச கடன் தொகை குறைக்கப்படலாம் அல்லது நிறுத்தப்படலாம்.

2.5 பில்லியன் 1.5 பில்லியனாக தேய்வடையும். ஏனெனில் கடன் வழங்கிய ஏகாதிபத்திய கூட்டுத் தலைமைக்கு சர்வதேச பொருண்மிய ஸ்திரத் தன்மை குறித்தே அக்கறை அதிகம். ஆனாலும் நட்டத்தில் இயங்கும் அரச மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனங்களுக்கு அரசால் வழங்கப்படும் மானியம் (குதஞண்டிஞீதூ) நிறுத்தப்பட வேண்டுமென பன்னாட்டு நாணய நிதியம் நிபந்தனை விதிப்பதால், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை எவ்வாறு நிலைநாட்டப்படுமென்கிற கேள்வி எழலாம்.

ஒன்றில், நட்டத்தில் தள்ளாடும் அரச நிறுவனங்களை, வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்று விட வேண்டும். அல்லது உற்பத்திப் பொருளின் விலையை அதிகரித்து, மக்கள் மீது அந்தப் பளுவைச் சுமத்தி, கூட்டுத்தாபனங்களின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.

இவை தவிர கடன்பெற்ற நாடுகள், தனியார் வங்கிகளு (ஏகுஆஇ) க்கு சேர வேண்டிய கொடுப்பனவுகளை உடனடியாகச் செலுத்த வேண்டுமென்பது இந்த நிபந்தனைகளிற்குள் அடங்கும். அத்தோடு பண வீக்கத்தை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மை நிலைநாட்டப்பட வேண்டும். கடனுதவி மூலம் செயற்படுத்தப்படும் சில வேலைத் திட்டங்களை நாணய நிதியம் மேற்கொள்ள வேண்டுமென நிபந்தனைகள் நீண்டு செல்கின்றன.

இக் கடனுதவியிலிருந்து, இராணுவக் கட்டமைப்பு விரிவாக்கத்திற்கு நிதி ஒதுக்க முடியாது என்கிற நிபந்தனையும் பல உயர்மட்டத்தினர் மத்தியில் மனக் கசப்புகளை உருவாக்கியுள்ளது. அதை நிவர்த்தி செய்ய, புனர்வாழ்விற்குப் பொறுப்பான ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்காவை நியமித்ததோடு, இறுதிப் போரில் பங்காற்றிய படைப்பிரிவுகளின் தலைவர்களுக்கு பதவியுயர்வுகளையும் அரசு வழங்கியுள்ளது.

இந்நிலையில் நாணய நிதியம் விதிக்கும் நிபந்தனைகளை ஓரளவிற்காவது நிறைவேற்றக் கூடிய நிலையினை எய்த வேண்டுமாயின் முதலில் கழுத்தைச் சுற்றி இறுக்கும் தனியார் வெளிநாட்டுக் கடன்களின் மாதாந்தக் கொடுப்பனவுகளை வழங்க வேண்டும். அடுத்ததாக யுத்தப் பிரதேசங்களில் ஏற்பட்ட அழிவுகளை புனர்நிர்மாணம் செய்வது போன்று சில அறிவித்தல்களை விடுத்து கண்ணிவெடிக் கதைகளோடு காலத்தை இழுத்தடிக்க வேண்டும்.

இதற்கு ஒத்து ஊதுவது போன்று 6 மாத காலத்துள் வன்னி முகாம் மக்களை மீளக் குடியேற்றுவோமென்று அரசு வாக்குறுதி அளித்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா சர்வதேசத்திற்கு உறுதியளிக்கிறார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனின் அண்மைய இந்திய விஜயத்திற்கும் நாணய நிதியத்தின் கடனுதவி ஒப்புதலிற்கும் இடையே உறவு நிலையொன்று இருப்பதாகக் கருத்தொன்று நிலவியது குறிப்பிடத்தக்கது.
மக்களைப் பொறுத்தவரை எதனை நம்பி இத்தனை பெரிய தொகையைக் கடனாக வழங்குகிறார்கள், இதனை எவ்வாறு அவர்களுக்குத் திருப்பிச் செலுத்த முடியும், இந்தச் சுமையெல்லாம் தமது தலையில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதுபோன்ற விடயங்களை உணரக் கூடிய நிலையில் அவர்கள் இல்லை.

இலங்கையின் பொருண்மிய, சமூக நிலை குறித்து இந்த பன்னாட்டு நாணய நிதியம் வழங்கிய புள்ளி விபரங்களைப் பாருங்கள். 2007 க்கான வறுமைக் கோட்டில் வாழும் மக்கள் 15.2%.

இவை தவிர 2008 ஆம் ஆண்டிற்கான வேலையற்றோர் 5.4% அரச கடனானது, தேசிய மொத்த வருமானத்தில் 81.1%.
29.08.1950 இல் பன்னாட்டு நாணய நிதியத்தில் இணைந்த இலங்கை அரசானது, எத்தனையோ தடவைகள் இந்நிதியத்திலிருந்து கடனுதவி பெற்று வந்தது வரலாறு. யுத்தச் செலவீனங்களும் தேசிய இனப்பிரச்சினையை அரசியல் விளையாடு களமாக பயன்படுத்தியமையும் நாட்டின் பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் வீழ்த்தி கடனாளியாக மாற்றியதே மிச்சம்.

யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம் என்பதே பொதுவான கூற்று.

இன்று யுத்தமற்ற நிலையில் இரத்தம் சிந்தா அரசியலில் அதிகாரப் போட்டி முனைப்படைந்து, மக்களின் வாழ்நிலை மறுபடியும் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப்படுகிறது.

அரசியல் ஸ்திர நிலையற்ற நாட்டில் முதலீடு செய்ய, பன்னாட்டு ஏகாதிபத்திய நிறுவனங்கள் முன்வர மாட்டா. ஆகவே யுத்தத்திற்கு உதவி வழங்கிய இந்த ஏகாதிபத்தியங்களே புனர்நிர்மாணத்துக்கும் அபிவிருத்திக்கும் உதவி செய்ய ஓடோடி வரும்.

அதிலும் ஏற்கெனவே வழங்கிய கடனுதவிகளை மீளப் பெறுவதற்கு மேலதிக நிதியுதவிகளை, பல நிபந்தனைகளை விதித்து வழங்கும். இதில் அரசின் நிதிக் கையாள்கை மற்றும் வேலைத் திட்டங்களை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ கண்காணிக்கும் உரிமையினையும் அவை எடுத்துக் கொள்ளும்.

அதாவது கடனட்டை வழங்கிய வங்கி நிறுவனமானது, அதைப் பெற்றவரின் தினசரி பொருண்மிய வாழ்வில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றதோ அதே வகையில் கடன்பெற்ற நாட்டு அரசிடமும் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் அல்லது திணிக்கும்.

இலங்கையைப் பொறுத்தவரை, இதில் அதிகம் பாதிப்படைபவர்கள், காலõதிகாலமாக ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிறுபான்மைத் தேசிய இனங்களே.

- இதயச்சந்திரன்

நன்றி - வீரகேசரி வாரவேளியீடு

Comments