புலம்பெயர்ந்துவாழும் தமிழரின் பொருளாதார பலம் சாதிக்கவேண்டிய தளம்

சர்வதேச அரங்கில் எந்த ஒரு மாற்றத்தையும் தீர்மானிக்கும் மிகப்பிரதான சக்தியாக பொருளாதார பலம் எனப்படும் விடயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவே இன்றைய வேகமான உலகின் மிகப்பெரும் ஆயுதமாகவும் நோக்கப்படுகிறது.

உலக அரங்கில் இடம்பெறும் சமாதான உடன்படிக்கைகள் மற்றும் சமரச வரைவுகள் முதல் சண்டைகள் வரை எல்லாமே இந்தப் பொருளாதாரப் பலத்தைக் கையகப்படுத்துவதற்கான மூலோபாயமாகவே காணப்படுகிறது.

அந்த வகையில், உலகமயமாக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் சர்வதேச அரங்கில் தமிழர்களின் பொருளாதார பலத்தை நிரூபிக்கும் பாதையின் ஊடாகவும் பயணிக்கவேண்டிய தேவை தற்போது அதிகரித்துள்ளது.

தமிழ் மக்களின் அரசியல், இராஜதந்திர முயற்சிகளுக்குச் சமாந்தரமாக மேற்கொள்ளப்படக்கூடிய இந்தப் பொருளாதார நடவடிக்கைகள், ஒன்றிணைந்த தமிழர் சக்தியின் பலத்தை உலகுக்கு எடுத்துக்கூறுவதாகவும் அதேவேளை, தாயக உறவுகளின் விடிவுக்கு வித்திடும் இன்னொரு நடவடிக்கையாகவும் அமையவேண்டிய கட்டாயம் கருக்கட்டியிருக்கிறது.

இந்த விடயத்தின் தேவையையும் இது தற்போது செல்வாக்குச் செலுத்தும் தளம் மற்றும் அதன் பலம் ஆகியவற்றை நோக்குவதாயின் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்களின் ஓயாத விடுதலைப்பணி மற்றும் அவர்களின் பலம் ஆகியவற்றை ஆராயவேண்டியிருக்கிறது.

economyபுலம்பெயர்ந்துவாழும் தமிழ்ச் சமூகம் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் செலுத்திவரும் செல்வாக்கு பல பரிமாணங்களில் பலமான தாங்குதளமாக உள்ளதென்பது வெளிப்படை உண்மை. அந்தவகையில், புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் பொருளாதார பலம் என்பது எவ்வகையானதொரு பலத்தைத் தாயகத்தில் தமிழர்களது வாழ்வாதாரத்துக்கும் குறிப்பாக ஆயுதப்போராட்டத்துக்கும் நல்கி வந்தது என்பதை சற்று ஆழமாக நோக்குவதன் மூலம் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் சக்தி தன்னகத்தே கொண்டுள்ள பிரமாண்டமான பொருளாதார பலத்தைத் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தின் ஆரம்ப மைற்கல்லாக 83 இல் யாழப்பாணம் திருநெல்வேலியில் நடைபெற்ற கண்ணிவெடித் தாக்குதலைக் குறிப்பிடலாம். இந்தச் சம்பவம் தமிழர்களின் ஆயுதவழிப் போராட்டத்தின் அச்சாரமாக விளங்கியது.

இந்தத் தாக்குதல் நடைபெறும் வரை சில கோடி ரூபாவாகக் காணப்பட்ட சிறிலங்கா அரசின் பாதுகாப்பு செலவினம் -
1986 இல் 600 கோடி ரூபாவாக அதிகரித்தது.(1977 இல் சிறிலங்கா அரசின் பாதுகாப்பு செலவினம் 75 கோடி ரூபா என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.) ஏனெனில், உள்நாட்டில் வெடித்த ஆயுதப்போராட்டத்தை அடக்குவதற்கு தனது பாதுகாப்பு நிதியை உடனடியாக அதிகரித்து தமிழர்களின் போராட்டத்தை முளையிலேயே கிள்ளியெறிய கங்கணம் கட்டிநின்றது. அதன் பின்னர், தமிழ்மக்களின் ஆயுதப்போராட்டம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய, சிறிலங்கா அரசின் பாதுகாப்பு செலவீனமும் நூற்றுக்கணக்கான கோடிகளாக அதிகரித்தது.

இவ்வாறாக அதிகரித்துவந்து, 2009 இல் சிறிலங்கா அரசின் பாதுகாப்புச் செலவினமாக 17,710 கோடி 60 லட்சம் ரூபா என அறிவிக்கப்பட்டது.

இதில் ஆழமாக நோக்கப்படவேண்டிய கருத்து யாதெனில் -

தனது சகல நேச நாடுகளிடமும் பிச்சைப் பாத்திரத்துடன் போய் நின்ற சிறிலங்கா அரச தலைவர்கள், அந்த நாடுகளிடம் கோடி கோடியாகப் பணத்தையும் ஆயுத தளவாடங்களையும் வாங்கிக் குவித்தே,தமிழ்மக்களுக்கு எதிராக போரை நடத்தினார்கள்.

ஆனால், சிறிலங்கா அரசின் இந்தப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபா நிதி பெறுமதியான போருக்கு முன்னால் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் வீழ்ந்துவிடாமல் மறுபுறத்தில், தமிழர்களது போராட்டத்தை நிதி ரீதியாகத் தாங்கிய மாபெரும் சக்தி புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களது பொருளாதார பலமேயாகும்.

அன்று, சிறிலங்கா அரசின் 600 கோடி ரூபா பெறுமதியான போரையும் சரி 2009 இல் நடத்திய அண்ணளவாக 20000 கோடி ரூபா பெறுமதியான போரையும் சரி, தமிழர் சேனை எதிர்கொள்ளக்கூடிய இமாலய பலத்தைப் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வழங்கினார்கள் என்றால் -

சகல வழிகளிலும் உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் ஓர் அரசாங்கத்துக்கு ஈடு இணையாக நின்று போட்டியிடுமளவுக்கு தமிழ் மக்களின் பொருளாதார பலம் நினைத்துப் பார்க்க முடியாதளவு வளர்ச்சியை அடைந்துள்ளது என்பது பட்டவர்த்தனம்.

இதனை இன்னொரு வழியாகப் பார்க்கப்போனால் -

இன்றைய நாளில் சிறிலங்காவின் உள்நாட்டு வெளிநாட்டு கடன்தொகையை எடுத்து நோக்கினால், அது 3 இலட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபா என்று தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட சிறிலங்காவில் - இந்தக் கடன் அடிப்படையில் பார்க்கப்போனால் - தனிநபர் ஒருவரின் கடன் சுமை அண்ணளவாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபா என்று கணித்துப் பெற்றுக்கொள்ளலாம்.

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் அண்ணளவாக 12 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இந்த 12 இலட்சம் மக்களதும் மொத்தக் கடன் தொகையினைக் கணித்தால் 20 ஆயிரத்து 400 கோடி ரூபா.

இந்த தொகையினை இன்று புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒரேநாளில் திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார பலத்துடன் உள்ளார்கள் என்று அடித்துக்கூறலாம். அவ்வளவு தூரம் அவர்களது பொருளாதார பலம் சகல வழிகளிலும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வள்ர்ச்சியைப் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் சமூகம் நிரூபித்துமுள்ளது. தமிழ்மக்களின் இத்தகைய பிரமாண்டமான இந்த வளர்ச்சிக்கு முன்னால் சிங்கள தேசத்தின் பலம் வெறும் தூசு என்று கூறலாம்.

London_overhead_DSC00008

































ஆகவே, இவ்வளவு பிரமாண்டமான வளர்ச்சியைக் கொண்ட புலம்பெயர்ந்த தமிழினம், தனது பொருளாதார பலத்தை இனிவரும் காலத்தில் எவ்வாறான ஒரு பாதையில் பயன்படுத்தப்போகிறது என்பது மிக முக்கியமான கேள்வி.

தாயகத்தில் அவலப்படும் மக்களின் வாழ்நிலை முன்னேற்றத்துக்கு இந்தப் பலம் நிச்சயம் பயன்படுத்தப்படவேண்டும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்க முடியாது. சகலதையும் இழந்து நிர்க்கதியாக நிற்கும் அந்த மக்களுக்கு உலகம் உதவி செய்வதாகக் கூறினாலும், அதை தான் செய்கிறேன் என்று கூறும் சிறிலங்கா அரசு நிச்சயம் முழுமையாக ஒன்றுமே செய்யப்போவதில்லை.

அரசும் அதன் அடிவருடிகளும் இந்த உதவி நிதிகளை எவ்வளவுக்கு எவ்வளவு சுருட்டிக்கொள்ளலாமோ அவ்வளவுக்கு அவ்வளவு அள்ளிச்சென்று விடுவார்கள் என்பதில் தமிழ்மக்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆகவே, தாயகத்தில் உள்ள உறவுகளின் இருப்பும் அவர்களது சுபீட்சமும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் கைகளிலேயே உள்ளது.

ஆனால், இதற்கு அப்பாலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகம் தனது பொருளாதாரப் பலத்தினைப் பயன்படுத்த வேண்டிய தேவைகள் உள்ளன. அவை பல நாடுகளிலும் பல்வேறு தேவைகளுக்கு ஏற்றவாறு மாறுபடலாம்.

வெளிநாட்டு அரசியல் தளங்களை தமிழர் விவகாரங்கள் தொடர்பாக சாதகமான தீர்மானங்களை வெளியிடக்கூடிய தரப்பாக மாற்றவேண்டுமாக இருந்தால், பிரசார உத்திகள், இராஜதந்திர சந்திப்புக்கள் ஆகியவற்றுக்கு அப்பால் அந்த நாட்டு அரசியல் தரப்பினருடன் இணைந்து, அவர்களது அரசியல் வேலைத்திட்டங்களிலும் தமிழர் தரப்பு பங்குகொள்ளவேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. அந்த நிலைமையைத் தவிர்த்துவிட்டு, எமது பிரச்சினைகளை அவர்களுக்குள்ளால் எடுத்துச் செல்வது என்பது கடினமான பாதையாக அமையலாம்.

ஆகவே, அந்தந்த நாடுகளில் உள்ள அரசியல் தரப்பினருடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை பயனுள்ளதாக செய்வதற்கு, தமிழ்மக்களின் பொருளாதார பலத்தை பயன்படுத்துவதன் மூலம், எமது பிரச்சினைகளை இலகுவாக அவர்களிடம் அணுகி பேசி, தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

இதனை இன்று சிறிலங்கா அரசு தனது தூதரக மட்டத்தில் முழு மூச்சாக மேற்கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிரான பிரசாரத்தை முடுக்கிவிட்டிருக்கின்றது. ஆகவே, அதனை முறியடித்து தமிழர்கள் தமது பலத்தை நிலைநாட்டுவதற்கான களமாகவும் காலமாகவும் இது காணப்படுகிறது.

இதுஒருபுறமிருக்க, சில நாடுகளுக்கு படகுகள் மூலமும் ஏனைய வழிகளின் மூலமும் வந்து சேர்ந்துள்ள தாயக உறவுகள் -

தமது வாழ்வின் அடுத்த கட்டத்தை எவ்வாறான வழியில் முன்னெடுப்பது என்பது தொடர்பில் சிந்தித்துக் குழம்பிப்போயுள்ளார்கள். அவர்களுக்கு பல வழிகளிலும் சட்ட உதவிகள் அதற்கான நிதி உதவிகள் ஆகியவை கட்டாய தேவைகளாகக் காணப்படுகின்றன.

அவர்களுக்கு இந்தப் புலம்பெயர்ந்த சமூகம் தனது ஆதரவுக் கரத்தினை நீட்டி உதவிகளை அள்ளி வழங்கலாம்.

மறுபுறத்தில் பார்க்கப்போனால், பல நாடுகளிலும் தமது அடுத்த சந்ததியினருடன் வாழ்ந்தவாறு தாயகம் தொடர்பான சிந்தனையிலேயே காலத்தை கழித்துவரும் பல்லாயிரக்கணக்கான முதியவர்கள், இன்று தாயகத்தின் மீதான சிங்களத்தின் வன்பறிப்பால் மனமுடைந்து போயுள்ளார்கள். மீண்டும் தாம் பிறந்த மண்ணுக்குச் செல்லமுடியாதா என்ற மனநிலையால் விரக்தியடைந்து போயுள்ளார்கள்.

இவர்களுக்குச் சரியான உளநிலை பராமரிப்பு திட்டங்களை மேற்கொண்டு உதவி புரிவதற்கு ஏற்றவாறு புலம்பெயர்வாழ் தமிழ்ச் சமூகம் தனது பொருளாதார பலத்தினைப் பயன்படுத்தவேண்டும்.

அதாவது புலம்பெயர்ந்து வாழும் சமூகம் தனது பொருளாதார பலத்தினை எந்தெந்த வகையான ஆரோக்கியமான வழிகளில் சரியான திட்டமிடலுடன் பயன்படுத்தலாம் என்பவை தொடர்பான பல்வேறு சிந்தனைகள் புலம்பெயர் வாழ் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் நிச்சயம் உண்டு. அவற்றைச் சரியாகவும் முறையாகவும் அமல்படுத்துவதற்கு தெளிவான கட்டமைப்பு அலகுகளைத் தெரிந்து, செய்யும் செயல்களின் உச்சப்பயனுக்கு உத்தரவாதத்தை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

இது இன்று புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் முன்னாலுள்ள - அவர்களால் நிச்சயம் செய்யப்பட வேண்டிய - செய்யப்படக்கூடிய - சவாலான பணி.

பொற்கோ

ஈழநேசன்

Comments

I would say before forming a trans
tamilnational govt. a eelam investment company should be formed.it should mobilise funds from eelam tamils (similar to a mutual fund).the investors will receive shares with lock in period of 15 years,the company will make strategic investment in oil companies,shipping,airlines industries.when the fund grows it will give you bargaining power.
for example when india was planning to buy advanced jet trainers for its airforce,lot of diplomatic visits from british ,french and russian delegates tried to get the order.
so when you show billions of dollars worth legal money naturally you get a bargain for the cause .with this bargain you can get british and french support for eelam