விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கே.பி.என்ற செல்வராஜா பத்மநாதன் மலேசியாவின் கோலாலம்பூரில் வைத்தே கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் இறுதியாக சிங்கபூரில் உள்ள ஞானகோனுடன் தொலைபேசியில் உரையாடி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கடந்த காலங்களில் உலகில் பல பாகங்களில் இருந்து விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் பலர் ரகசியமான முறையில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு சிலரை தவிர ஏனையோர் தற்போது உயிருடன் இல்லை எனவும் அந்த புலனாய்வு அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இவ்விதமாகவே புலிகளின் புதிய தலைவர் கே.பி என அழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதனும் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்தியா, மலேஷியா, இலங்கை புலனாய்வு அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கை துரிதமாக முடுக்கிவிடப்பட்டது கே,பி எனப்படும் செல்வராஜா பத்மநாதனை நோக்கி, தாய்லாந்து, மலேஷியா, இந்தியாவில் துரிதமாக செயல்பட்ட இந்தக் குழுவினர் கே.பி ‐க்கு எதிரானவர்களையும் இக்கடத்தலுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மலேஷியாவில் நேற்றுக் கைது செய்யப்பட்ட கே,பி கொழும்பு கொண்டு செல்லப்பட்டபிறகுதான் கே,பி.யை இன்டர்போல் கைது செய்திருப்பதான செய்தியை இலங்கை அதிகாரபூர்வமற்ற முறையில் வெளியிட்டது. ஆனால் இனடர்போல் ஒருவரை கைது செய்தால் எந்த நாட்டில் கைது செய்கிறார்களோ அந்த நாட்டில் வைத்து விசாரிக்கும். அல்லது வழக்கின் முக்கியத்துவம் கருதி, இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் தலைமையகம் இருக்கும் பிரான்ஸ் நாட்டிற்குக் கொண்டு செல்லும்.
கைது செய்யப்படும் நபர் எந்த நாட்டு அரசால் தேடப்படுகிறாரோ அந்த அரசு அவரை முறைப்படி தங்களிடம் ஒப்படைக்குமாறு முறைப்படி கேட்டால் சர்வதேச விதிகளின் படி இண்டர்போல் அவரை ஒப்படைக்கலாம் அல்லது ஒப்படைக்காமலும் போகலாம்.
ஆனால் கே.பி யின் விஷயத்தில் நடந்தது ஒரு மனித உரிமை மீறல் எனவும் இன்று கே,.பிக்கு நடந்தது நாளை எவர் ஒருவருக்கும் நடக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கைப் புலனாய்வுத்துறையின் இந்தக் கடத்தலுக்கு சர்வதேச அளவில் நிலவும் மௌனமும், தமிழ் மக்களிடையே நிலவும் மௌனமுமே காரணம் என்றும் கூறப்படுகிறது.
Comments