ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து, அதனை அழிப்பதாகக் கூறி இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை அழித்தொழித்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரச பயங்கரவாத நடவடிக்கைக்கு தெற்காசிய நாடுகள் வழங்கிவரும் கண்மூடித்தனமான ஆதரவின் மற்றுமொறு வெளிப்பாடே இந்த ஆள் கடத்தல் நடவடிக்கையாகும்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகத் தான் மேற்கொண்ட இனப் படுகொலையை வெளிப்படுத்திய பத்திரிக்கையாளர்களையே வெள்ளை வேன்களில் கடத்திப் படுகொலை செய்த மகிந்த ராஜபக்சவின் ‘ஜனநாயக அரசு’, தனது கடத்தல் ஆற்றலை முதல் முறையாக இலங்கைக்கு வெளியே நடத்தியுள்ளது என்பதைத் தவிர அதன் சட்டத்திற்குப் புறம்பான இந்த நடவடிக்கையில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
ஆனால் இதற்கு மலேசிய அரசும், செல்வராசா பத்மநாதன் கடத்தப்பட்டதற்கு ஒத்துழைத்ததாகக் கூறி சிறிலங்க அயலுறவு அமைச்சர் கேகலிய ரம்புக்வெலா பெயர் குறிப்பிடாமல் நன்றி தெரிவித்த மற்ற தெற்காசிய நாடுகளின் ‘ஒத்துழைப்பு’தான் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
ஒரு நாட்டிலோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட நாடுகளிலோ சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டிருக்கும் ஒருவரைக் கைது செய்ய பல்வேறு ஒப்புக் கொள்ளப்பட்ட சர்வதேச சட்ட நடைமுறைகள் உள்ளன. அதன்படி, சர்வதேச காவல் துறையின் (இண்டர்போல்) வாயிலாக எச்சரிக்கை அறிவிக்கை (Red corner notice) விடுக்கப்பட்டு அதன் மூலம் உலக நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று அப்படிப்பட்ட நபரை கைது செய்யும் சட்ட நடைமுறை உள்ளது.
FILE
இண்டர்போல் அறிவிக்கையின்படி கைது செய்யப்படும் நபரை நாடு கடத்துவதற்கும், உலக நாடுகளுக்கு இடையிலான குற்றவாளிகள் பரிமாற்ற (Extradition Treaty) உடன்படிக்கை செய்துகொள்ளும் வழமையும் உள்ளது.
அப்படிப்பட்ட குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தம் இல்லாத நிலையில் அந்த நாட்டின் நீதிமன்றத்தில், கைது செய்யப்பட்ட நபரை தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்லக் கோரி சம்பந்தப்பட்ட நாட்டின் சார்பாக வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்ற ஒப்புதலோடு நாடு கடத்தப்பட்டதும் நடந்துள்ளது.
செல்வராசா பத்மநாதனை கடத்த உதவிய மலேசிய நாட்டில்தான் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளி ஒட்டோவியோ குட்ரோக்கி பதுங்கியிருந்தபோது, அவரை இந்தியாவிற்கு கொண்டுவர மலேசிய நீதிமன்றத்தில் இந்தியாவின் மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) மனு செய்து வாதிட்டது. ஆனால், அவருக்கு எதிராக குற்றச்சாற்றிற்கு பலமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த மறுத்தது மலேசிய நீதிமன்றம். மேல் முறையீட்டிலும் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு கிட்டவில்லை.
மற்றொரு உதாரணம்: 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக வழக்குத் தொடரப்பட்ட அபு சலீம். அபு சலீமிற்கு எதிராக சர்வதேச காவல் துறையின் மூலம் எச்சரிக்கை அறிவிக்கை செய்தது மத்திய புலனாய்வுக் கழகம். தனது காதலியான நடிகை மோனிகா பேடியுடன் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் இருந்தபோது சர்வதேசக் காவல் துறையால் அபு சலீமும், மோனிகா பேடியும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரையும் உடனடியாக விமானத்தில் ஏற்றி இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவில்லை போர்ச்சுகல் அரசு. சர்வதேசக் காவல் துறையும் அப்படிப்பட்ட ‘ரகசிய வேலைகளில்’ ஈடுபடுவதும் இல்லை. இருவரையும் லிஸ்பன் நீதிம்ன்றத்தில் நிறுத்தி நீதிமன்றக் காவலில் வைத்தது போர்ச்சுகல் அரசு.
FILE
சலீம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டாலும் அவருக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்றும், விசாரணை நடத்தும் போது சித்ரவதைக்கு ஆட்படுத்தக் கூடாது என்றும் இந்தியா சார்பில் ஒப்புதல் வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே சலீமை நாடு கடத்த லிஸ்பன் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இப்படி சர்வதேச சட்டங்களும், உடன்படிக்கைகளும் அது சார்ந்த நடைமுறைகளும் உள்ள இன்றைய உலகில், 257 பேர் கொல்லப்பட்ட மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட ஒரு தாதாவை நாடு கடத்தவே ஒப்புதல் வாக்குமூலங்களை தாக்கல் செய்து சர்வதேச அளவிலான சட்டப் பூர்வமான வழிமுறைகளை கடைபிடிக்கும் இன்றைய உலகில், ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் பொறுப்பாளரை இரண்டு அரசுகள் - மற்ற தெற்காசிய அரசுகளின் உதவியோடு - கடத்திச் செல்கின்றன என்றால் சர்வதேச நீதிமுறைகள் எதற்காக?
செல்வராசா பத்மநாதனுக்கு எதிராக சர்வதேசக் காவல் துறையின் எச்சரிக்கை அறிவிக்க இருக்கின்றதென்றால், அவரை மலேசிய நீதிமன்றத்தில் நிறுத்தி, சட்ட ரீதியாக இலங்கைக்கு கொண்டு வந்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை. ஏனென்றால் அவர் மீது கூறப்படும் குற்றச் சாற்றுகளை நிரூபிக்கக் கூடிய எந்த ஆதாரமும் இல்லை. அதனால் கொள்ளைக் கும்பல்களும், கடத்தல் பேர்வழிகளும் செய்வதைப் போல, சற்றும் வெட்கமின்றி இரு அரசுகளின் அயல் புலனாய்வு அமைப்புகளும் இணைந்து (இது மலேசிய காவல் துறைக்குக் கூட தெரிவிக்காமல் நடத்தப்பட்டதாகத் தகவல்) ஆள் கடத்தல் செய்துள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அந்த இயக்கத்தின் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, பல்வேறு நாடுகளுடன் அரசு ரீதியான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டே செல்வராசா பத்மநாதன் செயல்பட்டு வந்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவர் தலைமறைவாக இருந்து செயல்படாமல், வெளிப்படையாகவே செயல்பட்டு வந்துள்ளார்.
பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இறுதிக் கட்டப் போரின்போது, தங்கள் மக்களைக் காக்க சரணடைய விடுதலைப் புலிகள் முடிவு செய்தபோது, அதற்கான நடைமுறைகளில் மனித உரிமை அமைப்புகளோடும், அரசுகளோடும் தொடர்பு கொண்டு வெளிப்படையாக பத்மநாதன் செயல்பட்டார்.
அப்போதெல்லாம் சர்வதேசக் காவற்படைக்குத் தெரிவித்து கைது செய்திருக்கலாமே? சட்டத்திற்குப் புறம்பாக கடத்திக் கொண்டுவந்தப் பிறகும், அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணைக்கு எடுக்காமல் மறைவிடத்திற்குக் கொண்டு சென்று விசாரிப்பதேன்.
விடுதலை போராட்டத்தை அழிப்பதே நோக்கம்
ஏனென்றால், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட வேண்டும் என்பதே! அதைத்தான் ஒளிவு மறைவு ஏதுமின்றி “இனி விடுதலைப் புலிகள் இயக்கம் தலையெடுக்கவே முடியாது” என்று பத்மநாதன் கைது குறித்துப் பேசியுள்ள கோத்தபய ராஜபக்ச கூறியுள்ளார்.
FILE
சம உரிமை கோரி ஈழத் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி கொச்சைபடுத்தி, அதனை ஒழித்துக் கட்டுவதாகக் கூறி, நிராயுதபாணியாக நின்ற ஐம்பதினாயிரம் தமிழர்களை கொன்று குவித்து ஒரு மாபெரும் இனப் படுகொலை நடத்தி முடித்த அரச பயங்கரவாத சிங்கள பெளத்த மேலாதிக்க அரசின் நடவடிக்கைகளை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் தெற்காசிய அரசுகள், சர்வதேச சட்டங்களையும், மனித உரிமைகளையும் புறந்தள்ளிவிட்டு மேற்கொண்டுள்ள இந்தக் கடத்தல் நடவடிக்கையை ஐ.நா.வும், சர்வதேச பொது மன்னிப்புச் சபையும் கண்டிக்க வேண்டும்.
தமிழர்களும் எங்கள் நாட்டு மக்கள்தான் என்று பேட்டியளித்துக் கொண்டு, முகாம்களில் முள் வேலிகளில் அடைத்து வைத்து 3 இலட்சம் தமிழர்களை மெல்ல மெல்ல கொல்லும் ஒரு பயங்கரவாத அரசின் கோர முகம் இந்த கடத்தல் நடவடிக்கை.
செல்வராசா பத்மநாதன் என்ற ஒரு தமிழனின் சுய மரியாதைக்கும், கண்ணியத்திற்கும், உயிருக்கும் எந்த ஆபத்து ஏற்பட்டாலும் அது உலகளாவிய அளவில் தமிழனின் சுய மரியாதைக்கும், கண்ணியத்திற்கும் விடப்பட்ட சவாலாகவும் அதன் எதிர்வினை சட்டத்தின் மீதும், மானுட மாண்புகளின் மீதும் தமிழருக்கு உள்ள நம்பிக்கையையும், ஐ.நா. போன்ற பன்னாட்டு அமைப்புகளின் மீதான நம்பிக்கையையும் குறைத்துவிடும் என்பதை உலக நாடுகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
செல்வராசா பத்மநாதனை ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடைய ஒரு அரசியல் தலைவராகவே கருதி சட்டத்திற்கு உட்பட்டு நடத்துவதை உலக நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும்.
சர்வதேச சட்டங்களை புறந்தள்ளிவிட்டு சிறிலங்காவும், மலேசியாவும் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு ஐ.நா. விளக்கம் கோர வேண்டும். இன்று தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சிறிலங்கா, மலேசியா போன்ற தமிழர் விரோத அரசுகள் செய்யும் நடவடிக்கை அதற்குரிய எதிர்வினையை உண்டாக்கும் என்பதை புரிந்து கொண்டு உலக நாடுகளும், ஐ.நா.வும் செயல்பட வேண்டும்.
Comments