விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு ஆதரவு கொடுக்குமாறு சர்வதேசத்தைக் கெஞ்சிக்கொண்டிருந்த இலங்கை அரசு- இப்போது சர்வதேச சமூகத்தின் தலையிலேயே மிளகாய் அரைக்கும் அளவுக்குப் போய்விட்டது. தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிப் பேச அமெரிக்காவுக்கு உரிமையில்லை என்று கூறும் அளவுக்கு வந்திருக்கிறது இலங்கை அரசு.
போருக்குப் பிந்திய இலங்கை அரசின் நிலைப்பாடுகள்- தமிழ்மக்களின் உரிமைகள், பாதுகாப்பு நியாயமாக அரசியல் தீர்வு என்பவற்றுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. போரினால் இடம்பெயர்ந்த வன்னிப் பகுதியைச் சேர்ந்;த மூன்று இலட்சம் மக்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கிறது அரசாங்கம்.
சுதந்திரம் தருகிறோம் வாருங்கள் என்று கூவிக்கூவி அழைத்த அரசாங்கம் அவர்களின் சுந்திரத்தை முட்கம்;பி வேலிகளுக்குள் முடக்கிப் போட்டிருக்கிறது. அதுமட்டுமன்றி இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வுக்கு சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தவும் இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது.
இன்னொரு புறத்தில் புலிகள் தான் அரசியல் தீர்வுக்குத் தடையாக இருப்பதாக கூறிவந்த அரசாங்கம்- போர் முடிவுக்கு வந்ததும் அரசியல் தீர்வு ஒன்றை நடைமுறைப்படுத்தப் போவதாகவும் பூச்சாண்டி காட்டியிருந்தது. ஆனால் போர் முடிந்து மூன்று மாதங்களை எட்டுகின்ற நிலையிலும் அரசாங்கம் அரசியல் தீர்வு பற்றியே இப்போது வாய் திறப்பதில்லை. அப்போது- இப்போது என்று கூறி வந்த அரசாங்கம் இப்போது என்னவென்றால் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தான் அரசியல் தீர்வு பற்றித் தீரமானிக்க முடியும் என்கிறது.
புலிகள் இயக்கம் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டது- இனிமேல் தமிழருக்கு அரசியல் தீர்வு தேவையில்லை என்று அரசாங்கம் இப்போது பேசத் தொடங்கியுள்ளது. சமஷ்டியும் கிடையாது அதிகாரப்பகிர்வும் கிடையாது. கொடுப்பதை வாங்கிக்கொள்ள N;வண்டியது தான் தமிழரின் தலைவிதி என்று மகிந்தவே கூறியிருக்கிறார். போருக்குப் பின்னர் தமிழ் மக்களின் உரிமைகளை நசுக்குகின்ற போக்கில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ்மக்கள் தமது உரிமைகள் மறுக்கப்பட்ட போதுதான் போராடக் கிளம்பினார்கள். ஆனால் இன்று அரசாங்கம் போரை வென்று விட்ட பேரினவாதத் திமிரில்- சலுகைகளை நீட்டி தமிழரின் உரிமைகளை விலைபேச முற்படுகிறது.
இலங்கை அரசின் இந்தச் செயல் அமெரிக்காவை வெகுவாகச் சினமடைய வைத்திருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. போர் நடந்து கொண்டிருந்தபோது- அமெரிக்;கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு சில வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது.
பேச்சுக்குத் தடையாக இருக்கும் புலிகளை அழிப்பதற்கு உதவினால் அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்துவதாக கூறியிருந்தது. ஆனால் சர்வதேசத்தின் ஆதரவுடன்- போரில் வெற்றிபெற்ற பின்னர் முன்னர் கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் மறந்துவிட்டது.
முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் நடந்து கொண்டிருந்த போதே புலிகள் இயக்கம் ஆயுதங்களை மௌனிக்க முடிவுசெய்தது. இதனை சர்வதேச சமூகத்துக்கு அறிவித்து அவர்களின் அங்கீகாரத்துடன் பா.நடேசன், சீ.புலித்தேவன் போன்ற புலிகளின் சில தலைவர்கள் சரணடையச் சென்றபோது அவர்களை சுட்டுக்கொன்று வெறியைத் தீர்த்துக் கொண்டது சிங்களப் பேரினவாதம். அதுமட்டுமன்றி சரணடைந்த புலிகளின் முக்கிய தலைவர்களை போர் நியமங்களுக்கு முரணாக சித்திரவதை செய்து கொன்று குவித்துள்ள அரசாங்கம்- இப்போது வெளிநாடுகளில் இருக்கும் புலிகளின் செயற்பாட்டாளர்களை குறிவைக்க ஆரம்பித்துள்ளது.
புலிகள் இயக்கம் என்பது உலகில் எந்த மூலையிலும் இருக்கவே கூடாதென்று கருதுகிறது அரசாங்கம். புலிகள் ஜனயநாயக வழிக்கு திரும்புவதாக அறிவித்த போதும்- அதற்கு இடமளிக்காத வகையில் சிங்களப் பேரினவாதம் தனது இன வக்கிரங்களுக்கு வடிகால் தேடுகிறது. இவையெல்லாம் மேற்கு நாடுகளை விசனமடையச் செய்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
போர் முடிவுக்கு வந்த பின்னர், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு மற்றும் அரசியல் தீர்வு குறித்து அமெரிக்கா அடிக்கடி வலியுறுத்தியது. ஆனால் அதுபற்றி இலங்கை அரசு கவனத்தில் கொள்ளாமல் தட்டிக்கழித்து வந்த நிலையில் தான் அமெரிக்காவின் விசனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்காசிய விவகாரத்துக்குப் பொறுப்பான துணைச் செயலர் றொபேர்ட் ஓ பிளாக்.
'25 வருடகாலப் போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலும் தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் விடயத்தில் இலங்கை அரசு தோல்வி கண்டுள்ளது. இது மீண்டும் வன்முறைகள் தலைதூக்குவதற்கு வழிவகுத்து விடக்கூடும்.
அடுத்த ஜனாதிபதித்; தேர்தல் நடந்து முடியும் வரைக்கும் அரசியல் தீர்வு பற்றி ஆர்வம் காட்டப் போவதில்லை என்று அரசாங்கம் கூறியிருப்பது எம்மை விசனமடைய வத்துள்ளது.
விரைவாகஅரசியல் தீர்வு நோக்கி முன்னேறுவதற்கான வழிவகைகளை அரசு கண்டறிய வேண்டும். ஏனெனில் மக்கள் நம்பிக்கை இழக்கும் ஆபத்து இருக்கிறது. அது பயங்கரவாதத்துக்கான புதிய உந்துதலை, பலத்தைக் கொடுக்கக்கூடும். தமது விருப்பத்துக்கு மாறாக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சம் தமிழ் மக்களுக்கு அரசு நடமாட்ட சுதந்திரம் வழங்க வேண்டும்." என்று கூறியிருந்தார் றொபேர்ட் ஓ பிளாக்.
தமிழருக்கு அதரவாக அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாடுகளை- அமைப்புகளைச் சாடுவது இலங்கை அரசுக்கு கைவந்த கலை ஆயிற்றே. வழக்கம் போலவே அது அமெரிக்காவுடன் வரிந்து கட்டிக்கொண்டு வம்புக்குப் போயிருக்கிறது. 'தமிழர்கள் சார்பில் பேசுவதற்கு றொபேர்ட் ஓ பிளாக்கிற்கு உரிமையில்லை" என்று இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
'தமிழ் மக்கள் சந்தோசமாக இப்போது வாழ்கின்றனர். அறிமுகமானவர்கள் மூலம் தமது பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதையே அவர்கள் விரும்புகின்றனர். இலங்கை தேசத்திற்கு எது பொருத்தமானது என்பதனை இந்த நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். றொபேர்ட் ஓ பிளக் போன்ற சிரேஸ்ட இராஜதந்திரி ஒருவர் இவ்வாறான கருத்தை முன்வைத்துள்ளமை பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறியிருக்கிறார் அமைச்சர் கெஹலிய. இப்போது அமெரிக்கா என்ன- யார் எதைச் சொன்னாலும் அதைக் கேட்கின்ற நிலையில் அரசாங்கம் இல்லை.
தமிழ் மக்களின் சார்பில் பேசுவதற்கு அமெரிக்காவுக்கு அருகதையில்லை என்று கூறும் அளவுக்குப் போயிருக்கும் இலங்கை அரசாங்கம்- தமிழர்களைக் கொல்வதற்கு இதே அமெரிக்காவிடம் உதவி கேட்டு கைகட்டி நின்றதை மறந்து விட்டது. அப்போது கொடுத்த வாக்குறுதிகள் மறந்து போய்விட்டன. இந்த நேரம் தான் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் இலங்கை அரசின் கபட நாடகத்தை புரிந்துகொள்ளவதற்கான தருணமாகும்.
அரசியல் தீர்வு என்று கூறிக் கூறி, காலம் கடத்தி தமிழரை ஏமாற்றியது தான் சிங்கள அரசுகளின் வரலாறு. இதனால் தான் புலிகள் இயக்கம், பேச்சுக்களின் போது அரசுடன் நெருங்கிச் செல்லாமல் முன்னெச்சரிக்கையுடன் எட்ட நிற்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் சர்வதேசமோ புலிகள் தான் பேச்சில் இருந்து ஒதுங்குவதாக தவறான புரிதலைச் செய்திருந்தது.
2006 இல் ஜெனீவா பேச்சுக்களின் போது புலிகளிடம் அரசியல் தீர்வு ஒன்றுடன் வருகிறோம் என்று கூறிச் சென்ற அரச தரப்புக்குழு கடைசியில் என்ன செய்தது? மூன்று வருடங்களாகியும் அரசாங்கம் அரசியல் தீர்வு ஒன்றுக்கான அடிப்படைகளைக் கூட உருவாக்கவில்லை. இப்படிப்பட்ட சிங்கள அரசு தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்கவோ- அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கவோ முன்வரப் போவதில்லை. இதை சர்வதேச சமூகம் சரிவரப் புரிந்து கொள்ள மறுத்ததால் தான் புலிகளுக்கு எதிரான போரை ஆதரித்திருந்தது.
ஆனால் இப்போது இலங்கை அரசின் சுயரூபத்தை- சர்வதேசம் காலம் கடந்து புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறது என்பதையே றொபேர்ட் ஓ பிளாக்கின் கருத்தில் இருந்து விளங்கிக்கொள்ள முடிகிறது. இது கண்கெட்ட பின்னர் செய்யப்படும் சூரிய நமஸ்காரமே. புலிகளை அழிக்க இலங்கை அரசுக்கு உதவிய அனைத்து நாடுகளுக்கும் ஒரு கடமை- பொறுப்பு இருக்கிறது.
பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கும் போருக்கு ஆதரவளித்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் இந்த நாடுகள்- இன்னொரு பக்கத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் நசுக்கப்படுவதற்கு துணை போயிருக்கிறோம் என்பதை இனியாவது உணர வேண்டும்.
தமிழ்மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுமாறு இலங்கை அரசுக்கு வலியுறுத்த வேண்டிய- அழுத்தம் கொடுத்து அடிபணிய வைக்க வேண்டிய பொறுப்பு இந்த நாடுகள் ஒவ்வொன்றுக்கும் உள்ளது. அமெரிக்காவையே தூக்கியெறிந்து பேசத் தொடங்கிவிட்ட இலங்கை அரசாங்கம்- தமிழ்மக்களின் பிரச்சினைகள் சர்வதேச மயப்படுவதை விரும்பப் போவதில்லை.
தமிழ்மக்களின் சார்பில் யாரும் கதைக்கக் கூடாதென்பதே அரசின் நினைப்பு. இதே போக்கை சர்வதேசம் தொடர்ந்து அனுமதிக்குமேயானால் தமிழ்மக்களுக்கு உரிமைகளை வழங்குவதற்கு இலங்கை அரசு ஒருபோதும் முன்வரமாட்டாது. அவர்களைத் தன் கால்களுக்குள் நசுக்கி வைத்திருக்கவே முற்படும். இது தமிழ்மக்கள் மீண்டும் ஆயுதப் பேராட்டத்தில் இறங்க வேண்டிய நிலையை ஏற்படுத்தும்.
தெற்காசியாவில் இனனொரு வலுவான ஆயுதப்போராட்டம் உருவாவதை சர்வதேசம் விரும்பவில்லை என்றால்- இலங்கை மீதான அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும். இது தட்டிக்கழிக்கப்படுமானால் இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வருவது முடியாத காரியமாகி விடும் என்பதுடன் இன்னொரு ஆயுதப் போரும் தவிர்க்கப்பட முடியாததாகிவிடும்.
- சுவிசில் இருந்து துருவாசன் -
Comments