எதிரியின் சதி வலைகளை முறியடிப்போம் வாருங்கள்


அன்பான தமிழ் உறவுகளே:

மிகவும் இக்கட்டானதொரு காலகட்டத்தில் தள்ளப்பட்டு இருக்கும் தமிழினத்தின் ஒருமைப்பாட்டினையும் மக்களின் உணர்வு ஒத்த நிலையையும் ஒன்றாகச் செயற்படும் செயற்பாட்டு திறனையும் சின்னாபின்னமாக்க தமிழின எதிரிகள் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

எமது ஒருமைப்பாட்டினை பலவீனப்படுத்து முகமாக இலங்கை அரசும், இலங்கை அரசுக்குத் துணைபோகும் சில தமிழ் விரோத சக்திகளும், தமிழ் மக்களுக்கும் அவர்களது சுய நிர்ணயத்திற்கு எதிரான சில ஊடகங்களும் தொடர்ச்சியாக சளைக்காது பல வதந்திகளைப் பரப்பி வருகின்றன.

தமிழ் மக்களின் திட சிந்தனையையும் திட சங்கற்பத்தினையும் அழித்து எந்த ஒரு நாட்டிலும் எக் காலத்திலும் தமிழர்கள் தலை தூக்க முடியாதபடி செய்வதற்கு சதி வலைகள் பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு வழிகளிலும் பின்னப்பட்டு வருகின்றது.

ஆதாரமற்ற செய்திகளையும் வதந்திகளையும் பகுத்தறிந்து உண்மையினை புரிந்து கொள்ளாது இச் சதிவலைக்குள் வீழ்ந்து எம்மில் சிலரும் வதந்திகளைப் பரப்பிவருவதனால் எதிரிக்கு வெற்றியினைத் தேடிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தச் சூழ்நிலையில் தெளிவான சிந்தனையுடன் வதந்திகளின் உள்நோக்கினை புரிந்து கொண்டு எமது இனத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள சகலவிதமான அடக்கு முறைகளிலிருந்தும் எம் மக்களை விடுவிக்கச் செய்ய வேண்டியது ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும்.

தமிழ் மக்கள்மீதும் அவர்களது விடிவின் மீதும் அக்கறை கொண்டு இயங்கும் தனிப்பட்டவர்களையும் கனடாவில் இருக்கும் பொது அமைப்புக்களையும் முடக்கி விட்டால் , தமிழின அழிப்பை வெளிநாடுகளிலும் செயற்படுத்தலாம் என இலங்கை அரசு புரிந்து அதற்கேற்ப தனது திட்டங்களை செயற்படுத்துகின்றது.

சிங்கள அரசின் பயங்கரவாதக் கரங்கள் , பிரச்சார சாதனங்கள் , கூலிப் படைகள் யாவும் கடல் கடந்தும் தேசம் விட்டு தேசம் பாய்ந்தும் செயற்படுகின்றன. இதை உணர்ந்து செயற்பட வேண்டிய காலம் இது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இவ் வரலாற்றுத் திருப்பு முனையில் சரியான திசையில் நாம் போகவேண்டியது மிகவும் முக்கியமாகும். இது எங்கள் ஒவ்வொருவரது கையிலும் தரப்பட்டிருக்கும் பொறுப்பாகும். தன்னம்பிக்கையும் பகுத்தறிவும் கொண்டு எதிரியின் சூழ்ச்சியினை முறியடித்து. நாலாபக்கமும் சூழப்பட்ட வலையில் விழுந்து விடாது நாசகாரரை நலிவுறச் செய்ய கரங்களை வலுப்படுத்துங்கள்.

விஷமத்தனமான வதந்திகள் மூலம் நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ பாதிக்கப்பட்டிருப்பின் அதற்குரிய ஆதாரங்களை சேகரித்து சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதனையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இது தொடர்பாக கனடாவில் சட்டத்தினையும் ஒழுங்கினையும் நிலைநாட்டும் பிரிவினருடன் கனடியத் தமிழர் பேரவை ஆலோசித்து வருகின்றது. உங்கள் கருதுக்களையும் சந்தேகங்களையும் எங்களுடன் பகிர்ந்து உண்மை நிலைகளை தெரிந்து கொள்ளுங்கள்

நன்றியுடன்

ஸ்ரீ றஞ்சன் Ph.D., P.Eng.

தலைவர் ,
கனடியத் தமிழர் பேரவை

Comments