தமிழின அடையாளத்தை அழிக்கமுற்படும் சிங்களத்தை நிராகரிக்கத்துணிந்துள்ள தமிழ் மக்கள்

சிறுபான்மை அரசியலை சுதந்திரக் கட்சிக்குள் சிறைப்படுத்த முயலும் புதிய தேர்தல் சட்டம் இனப்பிரச்சினைக்கான இராணுவத்தீர்வின் மற்றுமொரு அம்சம்

அரசாங்கத்திதினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய தேர்தல் சட்டத்தின் கீழ் இன, மத பெயர்களில் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் கட்சிகள் பாதிப்பினை எதிர்நோக்கவுள்ளன. ஏதாவது கட்சியொன்று இவ்வாறான முறையில் பெயர் கொண்டிருக்குமாயின் ஓராண்டுக்குள் கட்சியின் பெயரை மாற்றி மீள பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இன அடையாளத்தினை வெளிப்படுத்தும் கட்சிகளில் பெரும்பாலானவை சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளாகும். தற்போதைய அரசாங்கமானது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினுள் அல்லது சுதந்திரக் கட்சியினுள் சிறுபான்மை மக்கள் தமது அரசியலை நடத்த வேண்டும் என்ற கொள்கையினை கொண்டிருக்கின்றார்கள். யாழ் தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தலைமைத்துவம் கொண்ட கட்சி அரசாங்கக் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டு போட்டியிட்டமை இதற்கு உதாரணமாகும். புலிகளிடமிருந்த விலகிய முரளிதரனுக்கும் இதே நிலை ஏற்பட்டதுடன் பிள்ளையானின் கட்சிக்கும் அவ்வாறு செய்வதற்கான அழுத்தங்கள் பலமாகப் பிரயோகிக்கப்பட்டன. தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் பலருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு அழுத்தம் வழங்கப்படுவதுடன் மலையகத்தின் பிரதான கட்சிகளும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளன.

கட்சிகளின் பதிவினை நீக்கி விடும் அதிகாரம் தேர்தல் ஆணையாளர் நாயகத்திற்கு இச்சட்டமூலத்தினால் கிடைக்கின்றது. இதன்படி தொடர்;ச்சியாக இரண்டு தேர்தல்களில் போட்டியிடாத கட்சிகளை நீக்கி விடும் அதிகாரமும் அவருக்கு கிட்டுகின்றது. இந்த புதிய சட்டம் அரசியலமைப்பில் 10வது சரத்தினையும், 14ம் சரத்தினையும் அப்பட்டமாக மீறுகின்றது.

இலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைவர், பொதுச்செயலாளர், தவிசாளர், பிரதமர் வேட்பாளர், ஜனாதிபதி வேட்பாளர் ஆகிய முக்கிய பதவிகளுக்கு இதுவரை சிறுபான்மையினர் எவரும் நியமனம் பெற்றதே இல்லை. இந்த பின்னணியின் கீழ் தான் சிறுபான்மை கட்சிகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் உள்ளடக்க முனைகின்றது.

புலிகளின் புதிய தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட கே.பியினை கைது செய்ததன் ஊடாக சீர்திருத்தத்திற்கான வாய்ப்பினை அரசாங்கம் குறைத்து விட்டது. தமிழீழத்தினை மட்டுமன்றி அனைத்து சிறுபான்மையினத்தவர்களும் தமது தேசியத்தின் அடிப்படையில் அதிகாரத்தினை கோரும் போக்கினை அடக்குமுறைக்குட்படுத்தி, சிறுபான்மை அரசியலை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற சிறைக்குள் தள்ள முயற்சிப்பதானது இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் வழங்கப்போகும் இராணுவத்தீர்வில் ஓரு அம்சமாகும்.

அரசாங்கத்தின் கண்களைத் திறப்பதற்கு அண்மையில் நடந்து முடிந்த யாழ் வவுனியா தேர்தல் முடிவுகள் போதுமானதாகும். இந்த தேர்தல் முடிவுகள் குறித்து அமைச்சர் டக்ளசும் அதிருப்தியினை வெளியிட்டிருந்தார். தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் யாழில் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைப்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு லட்சத்திற்கு அதிகமான மக்கள் சமூகமளித்திருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. எனினும் ஆகஸ்ட் 8ம் திகதி வாக்களித்தவர்கள் சதவீதம் 22 ஆகும். இவர்களில் அரசாங்கத்திற்கு வாக்களித்தது 10,602 பேராகும். தமிழ் மக்களின் அவலங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்று அரசாங்கம் குறிப்பிடும் தமிழ்க் கூட்டமைப்பினருக்கு யாழில் 8008 வாக்குகள் கிடைத்துள்ளன. வவுனியாவில் இவர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர்.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கருத்துக்களைக் கூறுகிறார்கள். எனினும் ஒரு விடயத்தினை மட்டும் புறக்கணித்து விட முடியாது. அது என்னவெனில் பயங்கரவாதத்திலிருந்து தமிழ் மக்களை விடுவித்து விட்டதாகக் கூறும் அரசாங்கத்தினை வட பகுதி தமிழ் மக்கள் நிராகரித்து விட்டுள்ளனர். புலிகளின் கைப்பொம்மைகள் என்று கூறப்பட்ட தமிழ்க் கூட்டமைப்பு இன்னும் புலிகள் இல்லாத பின்னணியில் பலமாக இருக்கின்றது என்பது மற்றுமொரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த விடயங்களைப் புரிந்து கொள்ள சிங்கள மக்கள் முயற்சிக்க வேண்டும். சிறுபான்மை அரசியற் கோரிக்கைகளை அடக்குமுறைக்குட்படுத்தி வைத்துக்கொள்ளும் நடைமுறையை நீண்ட காலத்திற்கு தொடர முடியாது. அடக்குமுறையின் அழுத்தம் வெடித்து சிதறி பிரிந்து செல்லும் போக்கினை முனைப்புச் செய்யும் என்பதனை 90களில் சோவியத் பிரிந்ததன் ஊடாக நாம் அவதானிக்கலாம்.

இனங்களை பலாத்காரமாக கலந்து விட முடியாது. அரசாங்கம் எதிர்பார்ப்பதனைப் போன்று இன வேறுபாடுகள் அற்ற அரசியல் நாட்டில் ஏற்பட வேண்டுமாயின் முதலில் சிங்கள அடிப்படை வாதப்போக்கினை அரசாங்கம் கைவிட வேண்டும்.

Comments