கதற வைக்கும் காட்சிகள்! - ஜெகத் கஸ்பர்



அகப்பட்ட துண்டு துணிகளைக் கொண்டு பெற்றுத் தாலாட்டிய பிஞ்சுப் பிள்ளைகளின் சிதறிய உடல்களை இயன்றமட்டும் பொதிந்து, மண் தோண்டி அடக்கம் செய்கிற அவகாசம் இல்லாத காரணத்தால் வீதியில் எரிந்தும் எரியாமலும் நின்ற வாகனங்களுக்குள் சொருகி வைத்துச் சென்ற தாய்மார்களின் சோக வலியை நீங்கள் அறிவீர்களா? முள்ளி வாய்க்கால் - வட்டுவாகல் பிரதான வீதியில் மே-17-ம் தேதி நான் கண்டேன். அழுது புலம்பும் இடைவெளி கூட இல்லாத, கடவுளால் சபிக்கப்பட்ட இனமாய் நாங்கள் ஆனோம்.

கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன்.

அங்குமிங்கும் சிங்களக் காட்டேறிகள் ஏவிக் கொண்டிருந்த எறிகணைகள் கூவிக் கூவிப் பறந்து பாய்ந்து கொண்டிருக்க வீதியோர மரத்தடியொன்றின் கீழ் தாயொருத்தி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளது கணவன் சற்று முன்னர்தான் எறிகணை வீச்சில் இறந்திருக்க வேண்டும். இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் கணவனை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த இளம் தாய் பிரசவ வலியில் வீறிட்டுக் கதறிய அவலத்தின் கோலத்தை எப்படி நான் மறப்பேனய்யா?

மல்ட்டிபேரல் (ஙமகபஒ இஆததஊக) எறிகணைகளின் அதிர்வில் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை முல்லைத்தீவு மண்ணில் விழுந்தது. குழந்தையின் காலைப்பிடித்து இழுத்து அந்தத் தாய் தன் மார்போடு போர்த்தினாள். அவ ளுக்கு உதவ உறவுப் பெண்களோ வேறெவருமோ அங்கிருக்கவில்லை. பிறந்த பிள்ளையை அணைப்பதா, அருகில் இறந்து கிடக்கும் கணவனுக்காய் அழுவதா என்று தெரியாமல் இடது கையால் கணவனின் உடலையும் வலது கையால் இப்போது பெற்ற தன் செல்வத்தையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறிய காட்சியை எப்படி நான் பதிவு செய்வேன்?

தன் ஆடைகளை ஒதுக்கி ஒழுங்கு செய்யும் பிரக்ஞை கூட இல்லாதவளாய் அந்தத்தாய் அழுது கொண்டிருந்தாள். உடல் சோர்ந்தவளாய் மண்தரையில் தலை சாய்ந்து படுத்தவரை மட்டும் தூரத்தில் நின்று பார்த்தேன். முதல் தாகம் தீர்க்க தாய்ப் பாலுக்காய் அக்குழந்தை வீறிட்டு அழுததையும் கண்டேன். ராஜபக்சேவும், கோத்தபய்யாவும் ரத்தமும் சதையும் சேரப் பிணம் தின்னும் கொடிய ராட்சதக் கழுகுகளாய் என் கண்முன் நின்றார்கள். நீங்கள் அழிவீர்களடா... சிங்களம் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் தீர வேண்டுமடா... என்றெல்லாம் மனது கொதித்தது.

கையறு நிலையின் கைதியாய் முன் நகர்ந்தேன். அந்தத் தாயும் பிள்ளையும் என்ன ஆனார்களோ என்று எண்ணியே பல இரவுகள் தூக்கமும் நிம்மதியும் இழந்து தவிக்கிறேன். இப்படித்தான் மே முதல் வாரம் முள்ளி வாய்க்கால் தற்காலிக வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். ஓலைக் குடிசைதான் அன்று எங்களின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு. குடிசையின் தாழ்வாரத்தில் குண்டுவீச்சில் தாய், தகப்பன் இருவரையும் இழந்த சுமார் ஒரு வயதுக் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அதே குண்டுவீச்சில் தன் இரு கால்களையும் இந்தக் குழந்தை இழந்திருந்தது. கிட்டப் போய் அக்குழந்தையை கண்களில் நீர் மல்கப் பார்த்தேன். குளு கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குளுகோஸ் வயரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டே என்னைப் பார்த்து அக்குழந்தை சிரித்தது. நடந்த வற்றின், நடந்து கொண்டிருப்பவற் றின் கொடூரங் களும், விபரீதங் களும் அந்தக் குழந் தைக்குப் புரிந்திருக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவ தாதியிடம், ""தாய், தகப்பன்...'' என்று ஆரம்பிக்கவே, ""எல்லாம் இப்போது நான்தான்'' என்று கூறியபடியே என்னை நிமிர்ந்து நோக்கி குடிசைக்கு சற்று தூரத்தில் குவியலாய் கிடந்த தமிழர் சடலங் களைக் காட்டினார். ""இதுக்குள்ளதான் இந்தக் குழந்தையிண்ட தாயும் தகப்பனும்'' என்றார்.

பெற்றோரை இழந்து, இரண்டு கால் களையும் இழந்து என்ன நடந்ததென்றே தெரியாது குளுகோஸ் ஒயரை பிடித்து விளையாடிப் புன்னகைத்த இந்தக் குழந்தையின் முகமும், சற்றுமுன் வீதியோரத்தில் பிறந்து தாயின் முதற் பாலுக்காய் வீறிட்டு அழுத அந்தப் பிஞ்சின் முகமும் என்னை விட்டு அகல மறுக்கின்றன. எனக்கு மரணம் வருகின்றவரை இந்த அவலத்தின் காட்சிகள் என்னை விட்டு நீங்குமென்றும் நான் நினைக்கவில்லை.

மனதில் வெறுப்பும், நெருப்பும் விரக்தியு மாய் -இப்படியா எங்கள் விடுதலைப் பய ணம் முடிவுறவேண்டுமென்ற வேதனையுடன் தொடர்ந்து நடக்க முயன்றேன். அவலத்தின் அடுத்த காட்சி அங்கே அரங்கேறிக்கொண்டி ருந்தது.

வீதியை விட்டு சற்று தொலை. எறிகணை விழுந்து வெடிக்கிறது. பிளிறிச் சிதறிய புழுதி அடங்கியபின் பார்க்கிறேன். மரத்தடியில் இருந்த ஒரு தமிழ்க் குடும்பம் கண்ணெதிரே கணப்பொழுதில் சிதறிக் கிடக்கிறது. எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுகாயமடைந்த தகப்பனின் கால்களும் கைகளும் விட்டுவிட்டுத் துடிப்பது மட்டும் தெரிகிறது. எறிகணை விழுந்தபோது அந்தத் தாய் தன் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையை இறுக அணைத்தபடியே அத்தாய் சிதைந்துபோய் உயிர் பிரிந்து கிடக்கிறார். அவளது இடதுபுற மார்பில் ஷெல் குண்டு பாய்ந்து சிதைத்திருக்கிறது. இப்போதும் கொடூரத்தின் கொலைவெறி புரியாத அப்பிஞ்சுக் குழந்தை தாயின் வலதுபுற மார்பை பாலுக்குத் தேடுகிறது.

பக்கத்தில் ஓர் சிறுமி நான்கு வயது இருக்கலாம், முந்திய பிள்ளையாக இருக்கக் கூடும். அந்தப்பிள்ளை கையில் ஓர் தட்டுடன் "அம்மா பசிக்குது... அம்மா பசிக்குது...' என்று அழுதுகொண்டிருந்தது. தகப்பனுக்கு அருகில் பையன். சுமார் ஆறு வயது இருக்கலாம். ""அப்பா... எல்லாரும் போகினும் வாங்க, போவோம் ஆமி வறான், எழும்புங்கோ அப்பா... தண்ணீர் விடாக்குது... கெதியா எழும்புங்கோ அப்பா...'' என்று குளறிக்கொண்டிருந்தான்.

நின்று நிதானித்து அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறதென்று சிந்திக்கிற நிலையிலோ, ஒருவருக்கொருவர் உதவும் நிலையிலோ ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் நிலையிலோ எவரும் இருக்கவில்லை. எங்கும் மரணம் வெறியாடிக்கொண்டிருந்தது. ஈவிரக்கம் ஏதுமின்றி இன அழித்தலின் இறுதி காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. மரணத்தின் நிலமாய் தமிழ் ஈழம் நின்றது. இறந்து கிடந்த தாயின் மார்பில் பால் முகர்ந்து தேடிய அப் பச்சிளங்குழந்தை எமது அவலநாளின் அழியா காட்சியாய் காலம் முழுதும் நிற்கும்.

தொடர்ந்து நகர்ந்தேன்.

தேசியத் தலைவர் அடிக்கடிச் சொல்வாரே...
""அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு'' என்று... அப்படிச் சொன்னதோடு நிறுத்தாமல் சிங்களனுக்கும் நாங்கள் இப்படி ஈவிரக்கமின்றிக் கொடுமை செய்திருந்தால் ராஜபக்சேவும் கோத்தபய்யாவும் இந்த வெறியாட்டம் ஆடியிருக்கமாட்டார்களே...
என்றெல்லாம் மனது எண்ணியது.

முன்பொருமுறை சட்டக்கல்லூரி உரையொன்றில் தந்தை செல்வநாயகம் சொன்னாரே...

""தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித பாதுகாப்பும் இருக்காது -கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்...'' என்று, ஆம் கடவுளும் எம்மைக் கைவிட்ட நாளில் நா வறண்டு நடந்துகொண்டிருந்தோம். தமிழனாய் பிறந்ததையிட்டு என்னை நானே சபித்துக்கொண்டேன். உலகத்தின் சகலர் மீதும் கோபமாய் வந்தது. மீண்டும் முன்பு நான் குறிப்பிட்ட உணர்வு... :

""ஐயா, ஒபாமாவே... கடைசி நம்பிக்கையாய், நீங்கள் ஏதாவது செய்வீர்களெனக் காத்திருந்தோமே... வானில் வந்த ஒவ்வொரு விமானத்தையும் பார்த்திருந்தோமே... ஏமாற்றி விட்டீர்களே....'' என்று மனம் புலம்பியது.

(நினைவுகள் சுழலும்)

Comments