![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYYsGaffqodckqlpnRpUL_M7-WivJHIxGOaCAUn0Ez96qvgGogtAXhhFZFOwPDTAX-T8uUyJNibQ94k5Gl0rLUncboxtD-aWdgTqnVQJGjVMcRiE3qiftpF3J7bwkpJV01NizDjPmNgtj-/s400/AIR8.jpg)
சுமார் இரண்டு தலைமுறைகளாக நீடித்த உரிமைப் போரொன்று, இந்தியத்தின் துணையோடும் , சர்வதேசத்தின் ஆசியோடும் தற்காலிகமாக அடக்கப்பட்டிருக்கிறது!
இலங்கை வரலாற்றில்- பெரும்பான்மை அரசு தனது அதிகாரத்தாலும், படைபலத்தாலும் புரிந்துவந்த அடக்குமுறைகளுக்கு எதிராக, அங்கு உருவான தமிழர்களது அரசியல் எதிர்ப்புணர்வுகள்; ஜனநாயக வழிகளில் அணுகப்படுவதற்குப் பதிலாக இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்ட காரணத்தால், ஆரம்பத்தில் வெறும் அரசியல் போராட்டங்களாக இருந்துவந்த ஈழத்தமிழர்களது உரிமைக்கான முன்னெடுப்புகள் காலப்போக்கில் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்திருந்தது.
இதற்கு இந்திராகாந்தியின் தலைமையில் இருந்த அன்றைய இந்திய அரசும் ‘பச்சைக் கொடி’காட்டிப் போராளி இயக்கங்களுக்குப் பயிற்சியும் வழங்கியது.
அதேசமயத்தில் இந்தியப் பேரரசின் தென்கோடியில் இருக்கும் தமிழகத்தின் அரசியல் தலைவர்களும், தங்களது அரசியல் போட்டிகள் காரணமாக- ஈழப் போராளிகளிடையே அப்போது நிலவிய வேறுபாடுகளை தமக்குச் சாதகமாக்கி அதில் ‘குளிர்காயத்’ தவறவில்லை. அது இன்றும் தொடர்கிறது என்றாலும் அன்று அந்தத் தலைமைகளது நடவடிக்கைகள் ஈழத்தின் போராட்டக்களத்தினைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை.
ஆனால், இன்று ஈழப்போராட்டம் மூர்க்கமாக நசுக்கப்பட்டு மூன்றுலட்சம் தமிழர்கள், சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக; வன்னிப்பெரு நிலத்தின் திறந்த வெளிச்சிறைகளில் அடைக்கப்பட்டும், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் உள்ள ‘ராஜபக்ஷாசுர’ தாண்டவத்தின் பின்னரும்கூடத் தொடர்ந்துகொண்டிருப்பது வேறு விஷயம்! இதனைப் பிறிதொரு கட்டுரையில் பார்ப்போம்.
எந்த உரிமைகள் தமிழர்களுக்கு மறுக்கப்படுகின்றன என்று; இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து ‘தந்தை செல்வா’ முதல் ‘பிரபாகரன்’ வரை போராடிவந்தார்களோ----- அந்த உரிமைகளில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்பதும், மாறாக; மக்கள் ‘மாக்க’ளிலும் கீழாய்ச் சிங்கள அரசால் நடாத்தப்படும் நிலைதான் ஏற்பட்டிருக்கிறது என்பதே உண்மை.
இதனை இந்தியமும், சர்வதேசமும் நன்கு அறியும்.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் -----
இந்தியா ஈழத்தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவதில் அக்கறை செலுத்துகிறது என்றும்; அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உட்பட மேற்கு நாடுகள் அனைத்தும் இலங்கையின் இனப்பிரச்னையைத் தீர்ப்பதில் நாட்டங் கொண்டுள்ளன என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சர்வதேசமும், இந்தியாவும் கடந்த இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக அந்நாட்டில் நடைபெற்று வந்த இனஒடுக்கல் பற்றியும் அதற்கு எதிராக ஈழத்தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள் குறித்தும் எதுவும் அறியாது இருந்தனவா?
அதிலும் குறிப்பாக, இந்தியாவுக்கு--- இலங்கையின் இனப் பூசலும், சிங்கள ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளும் ஆரம்ப காலம் முதலே தெரிந்திருக்கிறது!
1964ல் சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தம் உருவான சமயத்தில் அது இந்தியவம்சாவழித் ‘தமிழர்கள்’ பற்றியது என்பது புரியாமல் இந்தியா அதனை அணுகியது என்று கூறிவிடமுடியாது. அதிகம் ஏன் ,1961ல் தமிழ் மாவட்டங்களில் ‘சிறீமாவோ’ அரசுக்கெதிரான அஹிம்சைப்போர் ‘தந்தை செல்வா’வால் வழிநடாத்தப் பட்டபோது அது தமிழகத்திலும் உணர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு முன்பும் ‘நேரு-கொத்தலாவலை’ காலத்திலேயே இலங்கையில் தமிழர்களுக்கு உரிய அரசியல் பாதுகாப்பு அந்நாட்டின் ஆளும் வர்க்கத்தால் வழங்கப்படவில்லை என்பது தெரிந்தே இருக்கிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS6SeBzzOG0wE5UISha1uQz1kLklB0Yu0Y8rLJixNMFo-EtkIyVtNsSJIRurUSclwt8ml_08FfB1sYK-xZjJc3MHSzxOL_Q8y0RQELtU55M22buDkM0LS5EDA2m0P7uhfTYAdWtOzvdTtr/s400/Boosa1986Tamilprisoners.jpg)
1983ல் நிகழ்ந்த ‘கறுப்பு யூலை’ ஈழத்தமிழர்களது உயிர்களுக்கும் அந்நாட்டில் பாதுகாப்புக் கிடையாது என்பதை வெளி உலகுக்கு எடுத்துக்காட்டியதாகக் கூறலாமேயன்றி--- அதற்கு முன்புவரை அவர்கள் அங்கு பூரணமான உரிமைகளை அனுபவித்து வந்தார்கள் என உலகம் நம்பியதாக பொருள்கொள்ள முடியாது.
இந்த உண்மையைப் புரிந்து கொண்டதால்தான், ’இந்திராவின் இந்தியா’-ஈழத் தமிழர்களை ஆயுத ரீதியில் பலப்படுத்த முன்வந்தது. அதனைச் சர்வதேசமும் ‘பார்வையாளர் நிலையில்’ ஏற்றுக்கொண்டுமிருந்தது!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCGm33JV6fsIM_Rl0h6H9WOyaALqP66FJylIqM8gLggKDq5I8PUDFBB2vNUI9OCgdK3caXu3PdmkMC3bMV2XBI_KAnvh4-Lb_LodgxzHTz7IrNGaFDQ6qGdboI3qN_jTbakcpEfuPHZ_9-/s400/capt.photo_1250749511140-1-0.jpg)
இதில் வேடிக்கை யாதெனில்,இந்தியா தமிழ்ப் போராளிகளுக்குப் பயிற்சி வழங்கிய போதும், பின்னர் இன்று அதேபோராளிகளின் புதிய தலைமுறையினரோடு சேர்த்து அவர்களனைவரையும் சிங்கள அரசின் கரங்களால் அழிப்பதற்கு முன்நின்ற போதும் இந்தச் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் ‘பார்வையாளர்களா’கவே செயற்பட்டுவந்திருக்கிறது என்பதுதான்!
இந்தியாவின் அணுகுமுறை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtQYobdPvXEyleFZyordfumfpvGL7xixRjHC0ZehahMOi-xN3I8MYsgEQdSyPEJro-GGdPHsyxOZC2IOSJ0STmR03sM3AtGIHp9vdQMrp2Mnwp8MaFfBNhysXZOtPt_b_78dI2D7hBzozy/s400/rajiv_-_praba_photo.jpg)
இந்தியாவைப் பொறுத்த மட்டில், 21ம் நூற்றாண்டின் மிகப் பெரிய மனிதப் படுகொலைகள், தனது காலடியில் நிகழ்ந்து கொண்டிருக்கையில், அவை அனைத்தையும் காணாதது போன்று செயல்பட்டது மட்டுமல்லாமல் அதனை நிகழ்த்துவதற்குரிய எல்லாவகையான தொழில் நுட்ப-ஆயுத உதவிகளையும் சிங்கள அரசுக்கு அது வழங்கியிருக்கிறது.
தென் தமிழகத்து மக்கள் தங்கள் உடன் பிறப்புகளையொத்த ஈழத்தவர்கள் கோரமாகக் கொத்துக்கொத்தாகக் கொல்லப்படுவதைப் பொறுக்காது ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டபோதும், உணர்வுக் கொந்தளிப்பால் சில இளைஞர்கள் தீக்குளித்து மாண்டபோதும் தமிழகத் தலைமை ஒப்புக்காக கண்ணீர் விடவும்,(செல்லாத ஊருக்கு) கடிதம் எழுதவும் முன்வந்ததோடு தனது அரசியல் நாடகத்தை முடித்துக் கொண்டது. இது வேதனையானது மட்டுமல்ல வெட்கக்கேடானதுங்கூட..
இவ்வாறு இந்திய நடுவண் அரசோ, தமிழ் மாநில அரசோ சிறிதுகூட மனச்சாட்சியின்றிச் செயல்பட்டதை ஒவ்வொரு தமிழனும் அறிவான்.உலகும் அறியும்.
பின்னர், மேற்கு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து , இறுதிப் போரின்போது மனிதப் படுகொலைகளை நிகழ்த்திய ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராகப் பன்னாட்டு அவையில் எழுப்பமுயன்ற ‘மனித உரிமை மீறல்’ குற்றச் சாட்டிலிருந்து ஸ்ரீலங்கா அரசினைப் பாதுகாப்பதற்காக இந்தியா செயற்பட்டதையும், தனது கூட்டாளிகளான வேறு சில வளரும் நாடுகளையும் இந்த அநீதிக்குத் துணைபோக வைத்ததையும் எவரும் மறந்துவிடவில்லை.
இந் நிலையில்தான் இந்தியா ஈழத் தமிழர்களது அரசியல் பிரச்னையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவுள்ளது என்னும் பேச்சு கிளம்பியிருக்கிறது.
இந்தியா, உண்மையாகவே தமிழர்களின் உணர்வுகளையும் அவர்களது நீண்ட நெடிய போராட்டத்தின் பொருளையும் உணர்ந்து, அதற்கேற்ப ஓர் அரசியல் தீர்வினை அந் நாட்டில் ஏற்படுத்தித்தருமா ?
அவ்வாறு அது எண்ணினாலும் அந்நாட்டின் சிங்கள அரசு இந்தியாவின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி செயல்படுமா? என்பது கேள்விக்குரியதே.
உண்மையில், இந்தியா; ஈழத்தமிழர்களது உணர்வுகளையோ அன்றித் தமிழகத்தின் சகோதரத் தமிழர்களது ஆதங்கத்தையோ புரிந்துகொண்டு செயல்படும் என்பது சந்தேகந்தான்!
ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த சமயத்திலும், அதன் பின்னர் இலட்சக்கணக்கான தமிழர்கள் முகாம்கள் என்னும் பெயரில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத ‘மந்தைத் திடல்’களில் அடைத்து வைக்கப்பட்டு அவர்களது தன்மானத்தையும், அவர்களுக்கான மனித உரிமைகளையும் சிறுமைப்படுத்தும் செயலினைச் சிங்க்ள அரசு செய்கின்றபோதும் அதனை மாற்றுவதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டதாகத் தெரியவில்லை.
ஸ்ரீலங்கா அரசினால் ‘போர் முடிந்துவிட்டது’ என்று அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தமது பதவிகளையும்-வாரிசுகளின் வசதியான வாழ்க்கையினையும் மட்டுமே பெரிதாக நினைத்து, இனமானத்தையும் மனிதாபிமானத்தையும் அடகு வைத்துவிட்டு வெறும் வாய்ப் பேச்சில் தேனாய்-பாகாய் கசிந்துருகும் தமிழகத் தலைமையும் அதன் தோழமை நடுவண் அரசும் திடீரென தமது ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு திறந்த மனதுடன் நியாயமான தீர்வொன்றினை ஏற்படுத்தித் தருவார்கள் என்று எவராவது கூறினால் அதனை நம்புவது கடினமாகத்தான் உள்ளது.
சர்வதேசத்தின் சாதனை
மற்றொரு பக்கத்தில்; விடுதலைப் புலிகளது ஆயுதப் போராட்டம் எதனால் ஆரம்பிக்கப்பட்டது----- அதன் அரசியல் பின்னணி என்ன என்பதை ஆராயாமல், ஆளுவோர்-ஆளப்படுவோர் என்னும் இருவித கண்ணோட்டத்தினை மட்டுமே கருத்தில்கொண்டு- ஆளும் வர்க்கத்துக்கு மற்றொரு ஆளும் வர்க்கம் உதவுவதே ‘உலக தர்மம்’ என்னும் சித்தாந்தத்தில் ஊறிப்போய் கண்முன் நிகழும் அநீதிகளையும் அடக்குமுறைகளையும் கண்டுங்காணாதார் போன்று செயலாற்றுவதில்; சர்வதேசம் வல்லமை மிக்கதாக உருப்பெற்றிருக்கிறது.
அந்த வகையில் இலங்கை அரசின் எல்லாவகையான மனித உரிமை மீறல்களுக்கும் மறைமுகமாகத் துணைசென்றவையும், செல்பவையும் இந்தச் சர்வதேசங்கள்தாம்.
தமது நாட்டின் அரசியல்-பொருளாதார மேம்பாட்டிற்கு எது துணைசெய்வதாக அமைகின்றதோ –அது நியாயமற்றது ஆயினும் அதற்கு ஒத்தூதும் ‘நவீன சித்தாந்தத்திற்கு அடிமைப் பட்டுப்போன இந்தச் சர்வதேசங்கள்தாம் இவ் வருட முற்பாதியில் இலட்சக்கணக்கான மனித உயிர்கள் சிறிய கால இடைவெளியில் கொன்றழிக்கப்பட ஏதுவாக ஸ்ரீலங்காவுக்கு( முன் கூட்டியே) ஆயுதங்களை வழங்கியிருந்தன.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipiYutr531PmqQ41AFleoeZn28JMkFl8xZjpvblTBaFq5cP__lz6eixxZfF7mE7fgOahw1M3wzrry0Dqb1ermQDUri8Rzj5g0k5-UhBrLfuZBYqQ00jsvBEVdXyTA1dOf_qILAISs2rOOU/s400/move-.jpg)
ஒருபுறம் அடக்குமுறை அரசுக்கு ஆயுதங்களையும், போர் நிபுணத்துவத்தையும் “நாடுகளுக்கிடையேயான புரிந்துணர்வு” என்னும் பெயரில் வழங்கிவரும் இந்நாடுகள், இது போன்ற “புரிந்துணர்வின்” பின்னால் மிதிபடும் மனித உரிமைகளையும், அதனால் ஏற்படும் மனித அவலங்களையும் பற்றிச் சிறிதுகூடச் சிந்திப்பதில்லை.
மாறாகத் தமது செயல்களுக்கு ஆதரவு தேடும் முகமாக, உரிமைகளுக்காகப் போராடும் இயக்கங்களுக்கு ‘பயங்கரவாத’ முத்திரை குத்தி அவற்றைத் தனிமைப்படுத்தும் செயலிலும் முனைப்புக் காட்டுகின்றன.
விடுதலைப் போராட்டம்- பயங்கரவாதம்- தீவிர வாதம்- இவை யாவும் உருவாவதற்கான பின்னணியே, சமூகத்தினதும்-ஆளும் வர்க்கத்தினதும் ‘அடிப்படை உரிமை மீறல்களே’ என்னும் அரிச்சுவடியினைப் புரிந்து கொள்ளாது-
அல்லது புரிந்து கொள்ள மறுத்து,
மேம்போக்காகத் தமக்குப் பிடிக்காத
அல்லது
அடங்காத இயக்கங்களுக்கு ‘பயங்கரவாத’ அடையாளம் இடும் அநீதியான அணுகுமுறை, இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவாகிவிட்டிருக்கிறது.
ரஷ்ய-அமெரிக்கப் பனிப்போர் முடிவுற்று, தனக்குச் சவாலாக இருந்த “ரஷ்ய’ கட்டமைப்பு குலைந்து விட, அடுத்தடுத்து சோவியத் சார்பு கம்யூனிஸ நாடுகள் அனைத்தையும் ஏதோவொரு வகையில் சிதறடிப்பதன் மூலமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆற்றலை “நீண்ட கால நோக்கில்” உறுதிப்படுத்திய பின்னர், அமெரிக்காவின் கவனம் மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தின் மீது படிந்தது.
போரிடும் வலிமை பெற்ற, அதே சமயம் தனது ஆற்றலுக்குச் சவாலாகவிருந்த சோவியத் ஒன்றியத்தையும் அதன் சித்தாந்தத்தில் ஊறிய நாடுகளையும் வலியழித்தாகி விட்டது. அடுத்து உலகப் பொருளாதார வளங்களைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க வல்லரசு தனது கையில் எடுத்த ஆயுதந்தான் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்பது.
அதன் இந்தத் திட்டத்துக்கு வலுசேர்ப்பது போன்று ‘இரட்டைக் கோபுரத் தகர்ப்பும்’ ‘அல்கெய்டா’ நடவடிக்கைகளும் அமைந்து விட்டன.
தொடர்ந்து, அதிபர் ‘புஷ்’ நிகழ்த்திய ; ‘சதாம் ஹுசெய்னின் இரசாயன ஆயுதங்கள்’ குறித்த மிக்குயர் தொழில் நுட்ப உத்திகளுடன் கூடிய ‘நாடகம்’ சதாமுக்கு எதிரான போரிற்கு ஐ.நா வின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
உலகில் மற்றொரு ‘சண்டிய’ராக உருவாகிவந்த சதாமை அடக்கவும், போரிடுவதன் காரணத்தால் அவ்வாறு போரிடும் அணிகளது வளங்கள் நலிவடையும் என்னும் கணிப்பினாலும்- அமெரிக்கா-ஈராக் இவை இரண்டினையும் மோதவிடுவதில் (மறைமுகமாக) விருப்புக்கொண்ட வளரும் நாடுகளிற் சிலவும் அதிபர் ‘புஷ்’ஷின் இம் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடாமல் விலகி நின்றன.
இதன் பயனாக விளைந்ததுதான் ‘சதாம் வதம்’!
அதனைத் தொடர்ந்து, வளர்ச்சியடைந்த அமெரிக்க-மேற்குலகிற்கு மாற்றாக, கிழக்கில் ‘சோவிய’த்தின் இடத்தைப் பிடிப்பதில் சீனாவும்-இந்தியாவும் போட்டியிட ஆரம்பித்தன.
இலங்கையின் இனப் பூசலில் இவ்விரு நாடுகளும் மூக்கை நுழைத்துக் கொண்டதும், ஈழத் தமிழரது விடுதலையினை செயலற்றுப் போகச்செய்ததையும், இந்தக் கோணத்தில்தான் ஆராயவேண்டும்
மேற்கு நாடுகள் பலவற்றில் ஸ்ரீலங்காவின் இனப் படுகொலைகளைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களும்- அதனைத் தொடர்ந்து ‘ஸ்ரீலங்காவைக் கண்டித்து மேற்குலகம் .பன்னாட்டுச் சபை வரை இலங்கை அரசின் ‘மனித உரிமை மீறல்களை’ எடுத்துச் சென்றதும், இந்தக் கிழக்கு-மேற்கு அரசியல் பலப் பரீட்சைக்கு களம் அமைத்துத் தந்தன.
இதில் ’பலிக் கடா’ ஆக்கப்பட்டது ஈழத் தமிழினந்தான்!
மனித உரிமை- மக்களாட்சிப் பண்பு- தனிமனித் சுதந்திரம்- பேச்சுரிமை- உயர்ந்த வாழ்க்கைத் தரம் என்று பல வகைகளிலும், கிழக்கை விடவும் பலபடிகள் முன்னேற்றம் பெற்றவையாக மேற்குலகம் உள்ளது!
பணத்துக்காக அல்லது அற்ப சலுகைகளுக்காக தனது உரிமையை விற்பது- பணத்தின் மூலம் பதவிகளை அடைவது-மனித விழுமியங்களைக் மதிக்காதிருப்பது- காலை வாருதல்- மத இன துவேஷம் போன்றவற்றில் இருந்து இன்னும் விடுபடாத நிலையே கிழக்கில் அதிகம் காணப்படுகிறது.
எனவே ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டில் அவர்களது அடிப்படை உரிமைகளை நியாயமான வகையில் பெற்றுத்தரும் நிலை இந்தியாவை விடவும், மேற்குலகத்திடமே அதிகம் உள்ளது.
இதற்குச் செயலுருக் கொடுக்கும் ஆற்றலும் ,இன்று புலம் பெயர் தமிழர்களிடமே தங்கியிருப்பதை மறுப்பதற்கில்லை.
இக்கட்டுரையை நிறைவு செய்வதற்கு முன், ஈழத்தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான பழ மொழி ஒன்று என் ஞாபகத்துக்கு வருகிறது.
“அழுதாலும், பிள்ளை(யை) அவளே பெறவேண்டும்” என்பது அந்தப் பழமொழி!
ஆகையால், எமது ‘ஈழக் குழந்தை’யை நாம் பெற்றெடுக்க வேண்டுமாயின் நாம் தான் அதனை முயன்று பெற்றெடுக்கவேண்டும். பிறர் எமக்காக அதனைப் பெற்றுத் தருவர் என நினைப்பது அறிவுடமையாகாது.
Comments