எமது விடுதலை அமைப்பு சிதைக்கப்பட்டிருந்தாலும் விடுதலைப்போராட்டம் அழிந்துவிடவில்லை - கேணல் ராம்


தமிழீழ மக்களிற்கும், புலம்பெயந்த மக்களிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரும் செயற்குழு உறுப்பினருமாகிய கேணல் ராம் அவர்கள் தற்போதய நிலை தொடர்பாக ஓர் வேண்டுதல் விடுத்துள்ளார்.

அவரது வேண்டுகையில்:

தமிழீழ விடுதலை அமைப்பு சிதைக்கப்பட்டிருந்தாலும் விடுதலைப்போராட்டம் அழிந்துவிடவில்லை. தாயகத்தில் எமது தளபதிகளும், போராளிகளும் நம்பிக்கையோடும் உறுதியோடும், எமது மக்களின் பேராதரவுடன் விடுதலைப் பயணத்தை முன்னெடுத்துச் செல்வோம்.எமது தேசியத் தலைவர் அவர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து சென்று எமது இலட்சிய விடுதலையை வென்றெடுப்போம். என கூறியுள்ளார். அவரது கடிதத்தின் முழு வடிவமும் வருமாறு :

தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
24-08-2009

எமது அன்பார்ந்த தமிழீழ மக்களே, புலம்பெயர்வாழ் அனைத்துத் தமிழ் உறவுகளே!

அண்மையில் தமிழீழத்தில் நடந்த அனைத்து விடயங்களும் யாவரும் அறிந்ததே. சிறிலங்கா அரசாங்கமும், சில வெளிநாட்டுச் சக்திகளும் இணைந்து எமது மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச்சென்ற தலைமைத்துவத்தை அகற்றிய நிலையில், தற்போது களத்திலுள்ள தளபதிகள், பொறுப்பாளர்கள் மற்றும் போராளிகளாகிய நாங்கள் உறுதியுடன் எமது மக்களின் விடுதலைக்கான பயணத்தை தொடர்ந்தும் எம்முடைய தாயகத்தில் முன்னெடுத்து வருகிறோம்.

இந்நிலையில் நாங்கள் அனைவரும் விளங்கிக் கொள்ளவேண்டியது என்னவெனில், தற்போது சிறிலங்கா அரசும் அதன் புலனாய்வு அமைப்புக்களும் இணைந்து எமக்குள் ஊடுருவல்களைச் செய்வது மட்டுமல்லாது, அரசியல் ரீதியாகவும் எம்மைப் பலவீனப்படுத்தி முற்று முழுதாக எஞ்சியுள்ள இயக்கக் கட்டமைப்புக்களையும் உடைக்கும் பணியில் மிகவும் வேகமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

தேசியத் தலைவர் அவர்கள் 2008-ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராகவும் அனைத்துலக மட்டத்தில் அரசியல் பணியை முன்னெடுப்பதற்காகவும் திரு.செல்வராஜா பத்மநாதன் அவர்களை நியமித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்குக் கொடுக்கப்பட்ட பணியை அதிதீவிரமாக முன்னெடுத்து வரும்போது சில ஆசிய நாடுகளின் துணையுடன் சிறிலங்கா அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்பினரால் திரு.செல்வராஜா பத்மநாதன் அவர்கள் கடத்தப்பட்டார்.

இதனையடுத்து அரசாங்கத்தின் கைக்கூலிகள் பல நாடுகளில் இருந்துகொண்டு, ஊடகங்கள் வாயிலாக பொய்யான பரப்புரைகளை செய்து வருகின்றார்கள். இந்த குழப்பகரமான நிலையை அனைத்து நாடுகள் வாழ் தமிழ் உறவுகளும் சாரியாகப் புரிந்துகொண்டு அனைத்துலக மட்டத்திலான பணியை புதிய வடிவில் முன்னெடுத்துச் செல்வதற்கும், தாயகத்தில் நின்று செயல்படும் தளபதிகள், பொறுப்பாளார்கள் மற்றும் போராளிகளுக்கு உறுதுணையாக தொடர்ந்தும் செயல்படவேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இந்திய மக்கள், தமிழ்நாட்டு தமிழ் உறவுகள் மற்றும் அரசியல் தலைவர்கள், கடந்த 30 ஆண்டு கால தமிழீழப் போராட்ட வரலாற்றில் எங்களுடைய விடுதலைக்காக உங்கள் ஆதரவைக் கொடுத்து வந்தீர்கள். தற்போதய சூழ்நிலையிலும் உங்கள் ஆதரவு வலுவான நிலையில் உள்ளது. தொடர்ந்தும் நாங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்வது என்னவெனில், ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு கடைப்பிடித்து வரும் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்து ஈழத் தமிழர் விடுதலையைப் பெற்றுத் தருவதற்கு நீங்கள் இந்திய மத்திய அரசுமீது தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுக்கவேண்டுமென மிகவும் அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.

உலகில் தமது நாட்டின் விடுதலைக்காகப் போராடிய பல இயக்கங்களை மிக மோசமான பின்னடைவுகளை சந்தித்த நிலையிலும் மீண்டும் புத்துயிர் பெற்று விடுதலையை வென்றெடுத்த வரலாறுகள் பல உண்டு என்பதை அனைவரும் அறிவோம். இந்த வகையில் எமது விடுதலை அமைப்பு சிதைக்கப்பட்டிருந்தாலும் விடுதலைப்போராட்டம் அழிந்துவிடவில்லை. தாயகத்தில் எமது தளபதிகளும், போராளிகளும் நம்பிக்கையோடும் உறுதியோடும், எமது மக்களின் பேராதரவுடன் விடுதலைப் பயணத்தை முன்னெடுத்துச் செல்வோம். எமது தேசியத் தலைவர் அவர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து சென்று எமது இலட்சிய விடுதலையை வென்றெடுப்போம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

ஏ. ராம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்

Comments