நாம் இறந்த காலத்திற்கும் பதில் சொல்ல வேண்டும்


இலங்கையில் சிறிலங்க அரசு நடத்திய போரில் கொல்லப்பட்டவர்களுக்கும், அவர்களை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக விடப்பட்டுள்ள மக்களுக்கும் நாம் பதில் கூறியாக வேண்டும் என்று வன்னி அகதிகள் முகாம்களுக்கு சென்றுத் திரும்பிய முனைவர் பால் நியூமேன் கூறினார்.
http://www.meenagam.org/wp-content/uploads/2009/08/Image016.jpg
விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்க அரசு நடத்திய போரில் தங்கள் வீடுகளையும், சுற்றங்களையும் இழந்து, அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் நிலையை விளக்கி பெங்களூரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் பால் நியூமேன் உரையாற்றினார்.

சென்னை லயோலா கல்லூரியில் மக்கள் சமூக உரிமைக் கழகம் ஏற்பாடு செய்திருந்து நிகழ்ச்சியில் வன்னி மக்களின் துயர நிலையை புள்ளி விவரங்களுடன் பால் நியூமேன் விளக்கினார்.

தனது உரையைத் துவக்குவதற்கு முன்னர், போரினால் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்போது முகாம்களில் முடங்கிக் கிடக்கும் மூன்று இலட்சம் தமிழர்களுக்கு நிவாரணம் அளிப்பது, அவர்களின் வாழ்விடங்களில் குடியமர்த்துவது, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது தொடர்பாக அவதியுறும் மக்களுக்காக கவலைப்படும் தெற்காசிய குடிமக்கள் எனும் அமைப்பின் சார்பாக தயாரிக்கப்பட்ட ஒரு திட்டத்தை அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா பெங்களூவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கொடுத்த காணொளி காட்சி காட்டப்பட்டது.

வன்னி முகாம்களின் நிலை குறித்து பால் நியூமேன் கூறியது :

2,59,000 தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள வன்னி முகாம்களே உலகிலே மிக அதிக அளவிற்கு உள்நாட்டு மக்களை அகதிகளாக வைக்கப்பட்டுள்ள முகாமாகும்.

உணவு, தூய குடி நீர், போதுமான இருப்பிட வசதி, கழிப்பிட வசதி என்று எதுவுமே இல்லாத வன்னி முகாம்களை ‘நலம்புரி கிராமங்கள்’ என்று கூறுகிறது சிறிலங்க அரசு.

15,000 பேரை மட்டுமே தங்க வைக்கும் திட்டத்துடன் உருவாக்கப்பட்ட மாணிக்கம் பண்ணை முகாமில்தான் இப்போது இரண்டரை இலட்சம் தமிழர்களை அடைத்து வைத்துள்ளது சிறிலங்க அரசு.

போர் துவங்குவதற்கு முன்னரே தமிழர்களின் பொருளாதார வாழ்வை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொண்ட சிறிலங்க அரசு, தமிழர்களின் முக்கியத் தொழில்களான விவசாயத்திற்கும், மீன் பிடித்தலிற்கும் கடுமையான தடைகளை ஏற்படுத்தியது.

எல்லா தமிழர்களையும் விடுதலைப் புலிகளாகவே பாவிக்கிறது சிறிலங்க இராணுவம்.

போர் துவங்குவதற்கு முன்னரே வடக்குப் பகுதிக்கு அத்‌தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வண்ணம் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே சாலை வழிகளைத் துண்டித்தது.

தமிழர்களை கொன்றொழிக்கும் திட்டத்துடன் சிறிலங்க அரசு செயல்பட்டதன் விளைவாக 1990 முதல் 2000 வரையிலான பத்து ஆண்டுகளில் மட்டும் 16,000 பேர் காணாமல் போனதாக புகார்கள் பதிவாகியுள்ளது. இவர்கள் தவிர மேலும் பலலாயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட புகார்களை எல்லாம் தனது கணினி கோப்புகளில் இருந்து நீக்கிவிட்டது. இதனை சைபர் கிரேவ் (கணினியிலேயே சமாதி என்று பொருள்) என்று குறிப்பிடுகின்றனர்.

பயங்கரவாத தடுப்புச் சட்டம், அவசரகால நெறிமுறைச் சட்டம் என்பனவற்றை பயன்படுத்தி பல்லாயிரக் கணக்கானவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களை 18 மாதங்க‌ள் வரை புகார் எதுவும் பதிவு செய்யாமல் சிறையில் வைத்திருக்க இச்சட்டங்களில் வகை செய்யப்பட்டுள்ளது.

தமிழர்களின் வாழ்விடங்களான வடக்கிலும், கிழக்கிலும் கைது செய்யப்படுபவர்கள் அங்குள்ள சிறைகளில் வைக்கப்படாமல், சிங்களர்கள் அதிகம் வாழும் தென் இலங்கை சிறைகளில் வைக்கப்படுகின்றனர்.

மே மாதத்தில் இறுதிப் போர் நடைபெற்றப் போது வெளியேறிவர்களை முல்லைத் தீவில் இருந்து நடக்க வைத்தே வன்னி முகாம்களுக்கு அழைத்து வந்துள்ளனர். பசியால் வாடிய நிலையில் தாங்கள் நடக்க வைத்து அழைத்து வரப்பட்ட அந்த அனுபவத்தை ‘எலும்புக் கூடுகள் நடந்து வந்தது போல் இருந்தது’ என்று தமிழ்ப் பாதிரியார் ஒருவர் கூறியுள்ளார்.

“போர் நடந்துக் கொண்டிருந்தபோது வெள்ளைக் கொடிகளுடன் வருபவர்கள் எவராயினும் அவர்களை நோக்கி சுடக்கூடாது என்று இராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தங்களுக்கு யாரால் பாதிப்பு ஏற்பட்டதோ அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை போர்களத்தில் இருக்கும் இராணுவத்தினர்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, கொழும்புவில் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருப்பவர்கள் அல்ல” என்று சிறிலங்க இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா கூறியுள்ளார். அதனால்தான் வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழர்களுக்கு எதிரான போர் நடந்தபோதோ அல்லது பேச்சுவார்த்தை நடந்தபோதோ எந்த ஒரு தீர்வுத் திட்டத்தையும் இன்று வரை சிறிலங்க அரசு முன்வைக்கவில்லை.

தமிழர்களுக்கு எதிரான போர் நடந்தபோது சர்வதேச உடன்படிக்கைகள் எதையும் சிறிலங்க அரசு மதித்து நடக்கவில்லை.

இந்தப் போரினால் முல்லைத் தீவு மாவட்டத்திலுள்ள 55 விழுக்காடு குடும்பங்கள் தங்கள் குடும்பத் தலைவரை இழந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் 44 விழுக்காடு குடும்பங்கள் தங்கள் குடும்பத்தை காப்பாற்றி வந்தவரை இழந்து நிற்கின்றன.

முகாம்களில் உள்ள தமிழர்களை மீண்டும் அவர்களின் வாழ்விடங்களில் குடியமர்த்துவதற்கு அங்கு கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டதாகக் காரணம் கூறி வருகிறது. ஒவ்வொரு சென்டி மீட்டரிலும் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டதாக ஆங்கில வார இதழிற்கு அளித்த பேட்டியில் ராஜபக்ச கூறுகிறார். அப்படியானால், அந்த கண்ணி வெடிகளை எல்லாம் தாண்டி சிறிலங்கப் படைகள் முன்னேறிச் சென்று புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கைப்பற்றியது எப்படி என்று ஒருவரும் கேள்வி எழு்ப்பவில்லை.

முகாம்களில் ஒரு நாளைக்கு ஒரு முறைதான் உணவளிக்கப்படுகிறது. காலை உணவு இரவு 10 மணிக்குத்தான் கிடைக்கிறது.

அகதிகளுக்கு உதவ எந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் அனுமதிக்க மறுக்கின்றனர்.

முகாம்களில் உள்ள தமிழர்களின் மறுவாழ்விற்காக ரூ.500 கோடி இந்தியா அளித்துள்ளது. அது எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. இந்த நிலையில் விரைவில் மேலும் ரூ.500 கோடி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் 50 ஆயிரத்தி்ற்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் விதவைகளாக உள்ளனர். இவர்களில் 37,000 பேர் யாழ்ப்பாணத்தில் உள்ளனர்.

இறுதி கட்டப் போரில் 20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐரோப்பிய ஊடகங்கள் கூறுகின்றன, ஆனால் 70 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறுகின்றனர். எதற்கும் எந்த ஆதாரமும் இல்லாத சாட்சிகளற்ற போர் நடைபெற்றுள்ளது. இந்தப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு நாம் நியாயம் தேடியாக வேண்டும். போரினால் அகதிகளாக்கப்பட்டவர்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலத்தை அமைக்கப் போகிறோம் என்பதும் முக்கியமானது.

எனவே, எதிர்காலத்தி்றகு மட்டுமல்ல, இறந்த காலத்திற்கும் நாம் பதில் கூறியாக வேண்டும் என்று கூறி முடித்தார் முனைவர் பால் நியூமேன்.

Comments