![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2DhIWo2IHvbjLPMwmbs8f0lT0YlbaWXeEcMui3ibVuAHsSf6EDbRHryi4tl48ltD_YHc-l-5MQfRa9sDbS_Mp-uORLmz0fkma18wnMbPGzgtUBHPc3tJnVzoo8QqpO5-iCo17wIf_4wd1/s400/capt.photo_1250724098277-1-0.jpg)
![](http://www.dinamani.com/edition/images/dina_logo.jpg)
"ஈழப்போர் 4' முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு கடந்த மே 19 அன்று அறிவித்துவிட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த செய்திகளும் மறுப்புகளும் ஊடகங்களிலும் இணையதளப் பதிவுகளிலும் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கி நடத்துவார் என்று சுட்டிக்காட்டப்பட்ட செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்டு கொழும்புவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இது விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்ச்சியான பின்னடைவுகளைச் சந்தித்து வந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது.
கைது செய்யப்படுவதற்கு முன்பாக, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சர்வதேசப் பிரிவின் இணையதளக் கட்டுரைகளில் அந்த இயக்கத்தின் அடுத்தகட்டப் பயணம் பற்றிய விளக்கங்களை பத்மநாதன் அளித்திருந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுதங்களை மவுனிக்கச் செய்து அரசியல் ராஜதந்திரப் பாதையைப் பின்பற்ற முடிவு செய்துள்ளது என்பது அதன் தலைவர் முள்ளிவாய்க்காலில் வைத்து எடுத்த தீர்மானம் என்று அழுத்தமாகக் கூறும் பத்மநாதன், இரண்டு முக்கிய சர்வதேச நிலைமைகளைக் கவனப்படுத்தியுள்ளார்:
1. தென்னாசியாவினதும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தினதும் புவிசார் அரசியல் நலன்கள் அடிப்படையில் இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற வல்லாண்மைச் சக்திகள் இலங்கைத் தீவினை ஒரே நாடாகப் பேணியவாறு தமது நலன்களை அடைந்து கொள்வதே உசிதமானதாகக் கருதியமை. இது தமிழீழம் என்ற நமது லட்சியத்திற்கு எதிரான உலக நிலைப்பாட்டுக்கு வழிகோலியது.
2. இலங்கைத் தீவில் ஆயுதப் போராட்டம் ஏதோ ஒரு வழியில் முடிவுக்கு வர வேண்டும் என்பதிலும் அனைத்துலகும் ஒரே கருத்துக்கு வந்திருந்தது. இதனால் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்திற்கும் உலக ஆதரவைத் திரட்டுவது சாத்தியமற்றதாகவிருந்தது''.
இந்தப் பின்புலத்தில், "தமிழீழ விடுதலைப் போராட்டம்' எதிர்கொண்ட பெரும் பின்னடைவைக் கருத்தில்கொண்டு அரசியல் ராஜதந்திர வழிமுறையே சாத்தியமானதும் வலுவானதுமாகும் என்ற முடிவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வந்தது. இந்த அரசியல் ராஜதந்திரப் பாதையை முன்னெடுக்கும் அதேவேளையில் ஆயுதப் போராட்டத்தையும் சமநேரத்தில் முன்னெடுப்பது முரணான இருதிசைகளில் பயணிப்பதற்கு ஒத்ததாக இருக்கிறது. இது எமது மக்களின் நலன்களை மையப்படுத்தும் விடுதலைப் போரை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்குப் பலவித நடைமுறைத் தடைகளை ஏற்படுத்தும்'' என்றும் பத்மநாதன் கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஐரோப்பிய யூனியனில் செயல்படும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு ஒன்றை ஜெர்மனியில் நடத்தியது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கூர்ந்து கவனிக்கத் தக்கவையாகும்.
வன்னியிலிருந்து ராணுவ நடவடிக்கையால் வெளியேற்றப்பட்டு முள்கம்பி வேலிகளுக்குள் ராணுவம் சுற்றி வளைத்துள்ள முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghJW5GzwbMfJZG4ulSr-0lHn8-KKLaxV-zEPPEUeuUFJMMsBx3WErSyE9SJwKmIeXHT4MvfzIpylFBoHZZaedEEqJmSHYidTdY-tsIHiEcHol0WkJU7WBPQrGkSAFbrJSgWM4KP5NVPpy5/s400/capt.photo_1250749511140-1-0.jpg)
அவர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தப்படுவதற்குரிய நடவடிக்கையை இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் எடுக்க வேண்டும்.
இலங்கை அரசிடம் சரண் அடைந்ததாகக் கூறப்படும் சுமார் பத்தாயிரம் இளைஞர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி அவர்களின் புனர்வாழ்வுக்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்; முகாம்களில் உள்ளவர்களில் குற்றவாளிகளென இலங்கை அரசு அடையாளம் காட்டுபவர்களை நீதி விசாரணைக்கு உள்படுத்த வேண்டும்;
முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள் குறித்த முழு விவரங்களை மனித உரிமைகள் நிறுவனங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கை அரசு அறிவிக்க வேண்டும்; சர்வதேச உதவிகள் அந்த மக்களின் புனர்வாழ்வுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்;
மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவி வழங்கிய நான்கு தமிழ் மருத்துவர்களையும் முல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரையும் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும்;
ஏற்கெனவே அகதிகளாக உள்ள முஸ்லிம் தமிழ் மக்களையும் சமகாலத்தில் தத்தம் இடங்களில் மீள் குடியேற்ற வேண்டும் என்ற தீர்மானங்களை உலகின் பல நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ஏற்று, ஒற்றுமையாகச் செயல்படுவதற்கு ஒத்துழைக்குமாறு அந்த இயக்கம் கேட்டுக் கொண்டது.
விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்றது. இலங்கை இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை வரையறுத்து வருவதாகவும், அதனை விரைவில் வெளியிடுவதாகவும் தெரிவித்த அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், "தனித்துவமான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அனைத்து அதிகாரங்களுடனான முழுமையான சுயாட்சி தேவை. காணி, பாதுகாப்பு, விவசாயம், கைத்தொழில் என முக்கிய அதிகாரங்கள் எங்களுடைய கையில் இருக்க வேண்டும்' என்ற வகையில் இந்தத் திட்டம் அமையும் என்று கோடிட்டுக் காட்டினர். கூடவே "இலங்கை இனப்பிரச்னைக்கு இந்தியாவுடன் இணைந்தே தீர்வைக் காண முடியும்' என்றும், "இலங்கை அரசுடனும் அனைத்துலக சமூகத்துடனும் பேசுவதற்குத் தயாராக உள்ளோம்' என்றும் அவர்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
இலங்கைக்கு வெளியே நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதற்கான ஆலோசனைக்குழு ஒன்று இயங்கி வருகிறது. நாடு கடந்த தமிழீழ அரசின் கட்டமைப்பையும் அதனது ஆட்சிக்குழுவைத் தோற்றுவித்து நடைமுறைப்படுத்தும் பாதையையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் இக்குழு அதேவேளையில் தமிழ் மக்கள் வெளிப்படுத்திய அபிலாஷைகளை ஜனநாயக, அமைதி வழிகளில் வென்றெடுப்பதிலும் தன் கவனத்தைச் செலுத்துமென உறுதி கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்புகள் எல்லாம் அரசியல் ராஜதந்திரத் தீர்வு என்பதை முன்னிலைப்படுத்தி உள்ளபோதிலும், இவற்றில் தனித்தமிழ் ஈழம் என்ற கோரிக்கை கைவிடப்படவில்லை என்பதை நினைவில் நிறுத்த வேண்டியுள்ளது. ஈழத்தமிழர் தேசம், தமிழர் தேசியம், தாயகம், தனித்துவமான சுயநிர்ணயம் என்ற வாசகங்களில் இது உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இது புரிந்துகொள்ளக்கூடியதே. தமிழ் ஈழம் என்ற கோட்பாடு இந்த இயக்கங்களின் இருப்புக்கு அடிப்படையானது. எனினும் அது நீண்டகால லட்சியம் என்ற அளவில் மட்டும் தொலைதூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடிக் கோரிக்கையாக அரசியல் தீர்வு முன்வந்துள்ளது என்பது ஒரு நல்ல அம்சம்.
ஆனால் இலங்கையில் இருந்து வெளியாகும் தகவல்கள் அங்குள்ள தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்த ஆழமான கவலைகளை எழுப்புகின்றன.
வவுனியாவில் உள்ள முகாம்களில் 60 வயதுக்கும் அதிகமான முதியவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களை முன்னுரிமை அடிப்படையில் சொந்தக் குடியிருப்புகளுக்குச் செல்ல அனுமதிப்பதாகக் கூறும் இலங்கை அரசு, அவர்களின் குடும்பத்தாரை மட்டும் முகாம்களிலேயே நீடிக்க வலியுறுத்துகிறது. இதன் காரணமாக இத்தகைய முதியவர்களில் 400 பேர் மட்டுமே முகாம்களை விட்டு வெளியேற, மற்றவர்கள் குடும்பத்தோடு முகாம்களிலேயே அல்லல்படுகின்றனர்.
இதே முகாம்களில் குடும்பத்தினர் அனைவரையும் இழந்து அனாதைகளாக அடைபட்டுக் கிடக்கும் ஆதரவற்ற சிறுவர் சிறுமியர்களைப் பராமரிக்க முன்வரும் தன்னார்வ அமைப்புகளுக்கும் இலங்கை அரசு அனுமதி அளிக்க மறுக்கிறது. மாறாக, 13 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களைத் தனியாகப் பிரித்து ஒரு புனர்வாழ்வு முகாம் அமைக்க இலங்கை அரசு முற்பட்டுள்ளது. இது அவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பில் வைப்பதற்கான ஏற்பாடாகத் தெரிகிறது.
180 நாள்களுக்குள் முகாம்களில் உள்ளவர்களை மீள் குடியமர்த்துவோம் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்தப் பணி கண்ணி வெடிகளை அகற்றுவது என்ற பெயரால் தாமதப்படுத்தப்படுகிறது. இலங்கை அதிபரின் சகோதரரும் அவரது அரசியல் ஆலோசகருமான பாசில் ராஜபட்ச, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஐரோப்பாவை உதாரணங்களாகச் சுட்டிக்காட்டி அங்கெல்லாம் உள்நாட்டிலேயே அகதிகளாக இருந்தவர்களைக் குடியமர்த்துவதற்குப் பல பத்தாண்டுகளும், ஒரு நூற்றாண்டு காலம் கூடப் பிடித்திருக்கிறது என்று பேசியுள்ளது இந்த இழுத்தடிப்பை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இலங்கையில் அமலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான அரசுப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்:
""போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட லட்சக்கணக்கிலான மக்கள் இன்று அகதி முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.என்றார் அவர்.
இந்த மக்களைச் சென்று பார்வையிடவும் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் எமக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இங்கு ஊடகவியலாளர்கள் கூட அனுமதிக்கப்படுவதில்லை. முள்கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் கம்பிகளுக்கு அப்பால் தாயும் மறுபக்கத்தில் பிள்ளையும் என்ற நிலைமையே காணப்படுகிறது.
தொடர்ந்தும் அந்த மக்களின் உரிமைகள், சுதந்திரம், சகவாழ்வு மறுக்கப்படுவதாக இருந்தால் முகாம்களுக்குள்ளேயே அவர்கள் சத்தியாக்கிரகம் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்துவதற்குத் தள்ளப்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை''
சிங்கள இனவாதத்தின் குரலாகச் சித்திரிக்கப்படுகிற ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினரே இவ்வாறு பேச நேரிட்டுள்ளது என்பது அங்குள்ள சற்றொப்ப மூன்று லட்சம் தமிழ் அகதிகளின் மனிதப் பேரவலத்திற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.
சொந்த நாட்டிலேயே அகதிகளாக நிறுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களின் துயர் துடைப்புப் பணியும் அவர்கள் முகாம்களிலிருந்து சொந்தக் குடியிருப்புகளுக்குத் திரும்பக் கொண்டு செல்லப்பட்டுக் குடியமர்த்தப்படுவதும் இலங்கை அரசின் முன்னுள்ள அவசர அவசியக் கடமை. கடுமையான சர்வதேச நிர்பந்தம் இருந்தால் ஒழிய ராஜபட்ச அரசு இதில் வெளிப்படையாகவும் உள்ளார்ந்த அக்கறையுடனும் செயல்படும் என்றும் எதிர்பார்க்க வாய்ப்பில்லை.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் ""13-வது அரசியல் சட்டத் திருத்தத்திற்கும் கூடுதலாக'' அரசியல் தீர்வு காண இலங்கை அரசு உறுதியளித்துள்ளதாக இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறி வருகிறது. ஆனால், தமிழர் வாழும் பகுதிகளில் தனி மாநிலம் என்பதையோ, சுயாட்சி அதிகாரம் என்பதையோ ஏற்க முடியாது என்றும், வடக்கு கிழக்குப் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதைத் தடுக்க இயலாது என்றும் இலங்கை ஆட்சியாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்த செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
இவை இலங்கைத் தமிழர் பிரச்னைக்கான அரசியல் தீர்வை நோக்கி ராஜபட்ச அரசு அடியெடுத்து வைக்குமா என்கிற ஐயப்பாட்டை எழுப்புகின்றன.
இந்தப் பின்னணியில் இலங்கைக்கு உள்ளும் புறமுமாக அரசியல் தீர்வை வலியுறுத்தி எழுந்துள்ள குரல்களும் இதுகுறித்து இந்திய அரசின் தலையீடு குறித்த எதிர்பார்ப்புகளும் இந்திய அரசு தன் செயல்பாட்டில் வேகத்தையும் விவேகத்தையும் காட்ட வேண்டியதை வலியுறுத்துவனவாக உள்ளன.
மன்மோகன் சிங் அரசு இத்திசையில் இனியேனும் பயணிக்குமா?
-உ . ரா. வரதராசன்-
Comments