சதி வலை சந்தேகங்கள்

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தில் கடந்த செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இலங்கைப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க- “விடுதலைப் புலிகள் புதிய தலைமையின் கீழ் ஒன்றிணைய முனைகின்றனர். அவர்கள் எந்த வடிவத்தில் தலையெடுக்க முயன்றாலும் வேரோடு அழிக்கப்படுவர்” என்று கூறியிருந்தார்.

அவர் இந்தக் கருத்தை தெரிவித்து 24 மணிநேரம் முடிவதற்கு முன்னரே- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலரான செல்வராசா பத்மநாதன் (கே.பி) மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகத் தகவல்.

கே.பி அவர்கள் கைது செய்யப்பட்ட முறையும், அவர் கைது செய்யப்பட்டிருக்கும் காலமும்- இலங்கை புலனாய்வுத்துறையின் திறமையால் மட்டும் இது சாத்தியப்படவில்லை என்பதை உறுதி செய்கின்றன.

உள்ளிருந்தே கொல்லும் வியாதி படைத்தவர்களே இதற்குத் துணை போயிருப்பதாக தமிழ் மக்கள் பலரும் நம்புகின்றனர். உண்மைகளின் உயிர் நாடி என்று ஆய்வு செய்து ஆய்வு செய்து துரோகம் புரிந்தவரின் செயல்களும் இக் கைதுக்கு துணை புரிந்ததாகவே ஆதங்கப்படுபவரும் உண்டு
மலேசியாவில் வைத்துக் கடத்தப்பட்ட கே.பி அவர்கள் தாய்லாந்து வழியாக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதும்- அங்கு இடம்பெறும் விசாரணைகளும், புலிகள் இயக்கத்தை வேரோடு கருவறுக்கும் நோக்கத்தை மட்டும் கொண்டதல்ல.

புலிகளுக்கு இதுவரையும் முண்டு கொடுத்தவர்கள், உதவியோர் பற்றிய தகவல்களைக் கறந்து அவர்களின் மூலங்களையும் தேடியழிப்பது தான் சிங்கள அரசின் திட்டம்.

கே.பி அவர்களை கைது செய்திருக்கும் இலங்கை அரசு அடுத்த கட்டமாகப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்கள் மீது கை வைக்கலாம் என்ற பரவலான கருத்து உருவாகத் தொடங்கி விட்டது. இதை இலங்கை இராணுவப் பேச்சாளர் உறுதி செய்துமுள்ளார்

இஸ்ரேலின் மொசாட் உளவுப்பிரிவு தான் இதுபோன்ற காரியங்களை துணிந்து மேற்கொண்டது.

ஆசியாவின் மற்றொரு இஸ்ரேலாக- இலங்கை வளர்ந்திருப்பதாக சிங்களதேசம் குதூகலிக்கிறது.

இதிலிருந்து கே.பியைப் போன்று மேலும் பலரைக் கடத்தி கொழும்புக்குக் கொண்டு செல்லும் எண்ணம்- சிங்கள அரசுக்கு இருப்பது தெளிவாகிறது.

இலங்கை அரசு வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளின் துணையுடன் தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக, அவற்றுக்கு நன்றி கூறியிருக்கிறது. ஆனால் அரசாங்கம் வெளிப்படையாக நன்றி கூறாத தரப்பு ஒன்றும் இருக்கலாம்.

கே.பிக்கு எதிரானவர்கள் இவரது இருப்பிடம் பற்றிய தகவல்களை இலங்கையின் புலனாய்வு அமைப்புகளுக்கு வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுந்திருக்கிறது.

இதை மறைக்கவே- தலைவர் பிரபாகரனின் செய்மதித் தொலைபேசியில் இருந்து கிடைத்த கே.பியின் தொலைபேசி இலக்கத்தை வைத்து- அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்ததாகப் புதிய கதையொன்று பரப்பப்படுகிறது.

தலைவர் பிரபாகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செய்மதித் தொலைபேசியில் சிம் அட்டை இருக்கவில்லை என்று முன்னதாக இலங்கை புலனாய்வுத்துறை கூறியிருந்தது.

இப்போது அதில் இருந்து கே.பியின் இலக்கத்தைப் பெற்றதாகக் கூறுகிறது. அப்படியானால் முன்னை கருத்து சரியா? அல்லது இப்போது கூறுவது சரியா? எதற்காக இந்த மறைப்பு நாடகம்.

கே.பி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக்கட்டியெழுப்ப முற்பட்டதை இலங்கை அரசு விரும்பவில்லை.

அதேவேளை இதுபோன்ற எண்ணத்துடன் வேறு சில தரப்புகளும் இருந்ததை மறந்துவிட முடியாது. என்பதற்கு சில ஊடகங்களே சாட்சியாகின்றன

புலிகள் இயக்கத்தை ஜனநாயக வழியில்- அரசியல் ரீதியாக கட்டியமைப்பதே கே.பியின் எண்ணம். கடைசி நேரத்தில் முள்ளிவாய்க்கால் களமுனையில் இருந்து தேசியத் தலைவர் பிரபாகரன் அவருக்கு வழங்கிய உத்தரவும் இதுவே.

ஆனால் இதை விரும்பாத சில தரப்புகள் - இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்குள் மக்களைத் தள்ளிவிடும் எண்ணத்தில் இருப்பதும் கண்கூடு.

தமது நோக்கத்துக்கு இவர் தடையாக இருக்கலாம் என்பதற்காக கே.பி காட்டிக் கொடுக்கப்பட்டாரா என்ற கேள்வி தமிழ் மக்களிடத்தில் நிறையவே இருக்கிறது.

ஒரு கட்டுக்கோப்பான இராணுவ அமைப்பாக உலகெங்கும் அறியப்பட்ட- புகழப்பட்ட புலிகள் இயக்கத்துக்குள் இப்படியெல்லாம் நடக்கும் என்று சில மாதங்களுக்கு முன்னர் எவரும் கற்பனை கூடச் செய்திருக்க முடியாது.

ஆனால் முள்ளிவாய்க்கால் இறுதிச் சமருக்குப் பின்னர் எல்லாமே தலைகீழாகியிருக்கின்றன.

கே.பியை சிங்கள அரசு கைது செய்து கொண்டு சென்றது- தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை முழுமையாக நசுக்கும் எண்ணத்துடன் தான்.
கே.பி ஒருவரே புலிகள் இயக்கத்தை மீள்கட்டுமாணம் செய்யக் கூடிய ஒருவராக இருப்பார் என்ற எண்ணத்தில் தான் சிங்கள அரசும் புலனாய்வுத்துறையும் இந்த நடவடிக்கையில் இறங்கியது.

புலிகளைப் பொறுத்தவரையில் இது ஒரு பெரும் பின்னடைவு.

இதன் தொடர்ச்சியாக பல நெருக்கடிகளை- அழுத்தங்களைப் புலிகள் இயக்கம் எதிர்கொள்ளலாம்.

இவையெல்லாம் புலிகள் இயக்கத்தின் புதிய கொள்கையான- அரசியல் ரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற முயற்சிக்குப் பெரும் தடையாக அமையவும் வாய்ப்புள்ளது.

அரசாங்கம் நினைத்திருந்தால் புலிகள் இயக்கத்தை அரசியல் ரீதியாகச் செயற்பட இடமளித்திருக்க முடியும்.

ஆயுதப் போராட்டத்தில் இரண்டு தடவைகள் தோல்வி கண்ட ஜேவிபிக்கு- ஒன்றுக்கு இரண்டு பொதுமன்னிப்புக் கொடுத்தது இலங்கை அரசு.

அவர்களில் பெரும்பாலானோர் சிங்களவர்களாக இருந்ததால் அது சாத்தியமானது. ஆனால் புலிகளுக்கு பொதுமன்னிப்புக் கொடுத்து அரசியல் நீரோட்டத்தில்- இயல்பு வாழ்வில் இணைவதற்கு இடம்கொடுக்க அரசாங்கம் தயாரில்லை. இது உறுதியான விடயம்.

புலிகள் இயக்க முக்கிய தலைவர்கள் பலர் கைது செய்யபட்டு- தடுத்து வைக்கப்பட்ட பின்னர் கொல்லப்பட்டதாக வெளியாகின்ற தகவல்கள் இதை உறுதிசெய்கின்றன.

புலிகள் இயக்கத்துக்கு சித்தாந்த ரீதியாக உயிர் கொடுக்கக் கூடிய தலைவர்கள் என்று கருதப்படுவோரைக் கொன்று போடும் இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு அரசியல் ரீதியாகச் செயற்படும் வழியைத் திறந்து விடப் போவதில்லை.

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இது ஒரு ஆபத்தான முடிவாக இருக்கும்.

புலிகள் இயக்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இப்போது கைது செய்பட்டு விட்டதாகவோ- சரணடைந்து விட்டதாகவோ கருத முடியாது.

சிதறிப் போயிருந்த புலிகளை ஒன்றிணைத்து ஆயுதப் போராட்டத்தில் இருந்து அவர்களை வெளியே கொண்டு வரும் முயற்சியில் கே.பி இறங்கியிருந்தார்.

இப்போது இந்த முயற்சி தடைப்பட்டு ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தொடர்புகளை இழந்து போயிருக்கும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முற்பட்டால் அது இலங்கை அரசுக்கே ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

இதனைக் கருத்தில் கொண்டே சில சர்வதேச நாடுகள் கே.பியின் முயற்சிக்கு ஆதரவு கொடுத்ததாகவும் தெரிகிறது.

ஆனால் இந்த நாடுகள் எதுவுமே கே.பியின் கைது அல்லது கடத்தல் பற்றி வாய் திறக்காதிருப்பது தான் வேதனை.

தமிழ் மக்களை வழிநடத்தும் அமைப்பாக இருந்த புலிகள் இயக்கத்தை மிச்சம் மீதி கூட இல்லாமல் துடைத்தழிக்க முனையும் இலங்கை அரசுக்கு சர்வதேசம் துணை போகிறது. இது புலிகள் இயக்கம் அழிந்தாலும்- ஆயுத நடவடிக்கைகளை முழுமையாக இல்லாமல் செய்வதற்கு உகந்த வழியாக இருக்காது.

ஆயுத நடவடிக்கையை கட்டுப்படுத்த யாருமற்ற நிலையில் உள்ள புலிகள் எதைச் செய்து விட்டுப் போனாலும் ஆச்சரியம் இல்லை.
இப்படியொரு ஆபத்தான பாதையைத் தான் சர்வதேச சமூகமும் இலங்கை அரசம் திறந்து விட்டிருக்கின்றன.

தமிழ்மக்களை ஆயுதக் கலாசாரத்துக்குள் தள்ளி விடுவதையே இந்த நாடுகள் விரும்புகின்றன போலும்.

கே.பியின் கைதை அடுத்து வரும்காலங்களில் தமிழ்மக்களின் போராட்டம் பெரும் அச்சுறுதல்களை சந்திக்க நேரிடலாம்.

புலிகளின் தேசியத் தலைமையை இல்லாதொழித்து- புதியதொரு தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட கட்டமைப்பையும் சிதைத்து- சிங்கள தேசம் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க முனைகிறது.

இத்தகையதொரு கட்டத்தில்- இப்படிப்பட்ட முயற்சிகளுக்குத் துணைபோகும் எந்தத் தரப்புமே தமது தலையில் தாமே மண்ணை அள்ளிப் போடுகின்றனர் என்றே அர்த்தம்.

இனிமேலாவது ஒன்றுபட்டு நிற்க முயற்சிப்பது தான் ஒவ்வொருவரினதும் பொறுப்பு.

இந்தச் சந்தரப்பத்தில் ஒருவரை ஒருவர் ஏறி மிதித்து நடக்கலாம் என்று நினைத்தால்- அது இன்னும் இன்னும் பேரழிவுகளுக்குள்ளேயே தள்ளிவிடும்

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்குச் சமாதி கட்டுவதாகவே அமைந்து விடும்.

இதற்காகவா நாம் இலட்சக்கணக்கான மக்களையும்- ஆயிரக்கணக்கான போராளிகளையும் பறிகொடுத்துப் போராட்டம் நடத்தினோம்? சிந்தியுங்கள் செயற்படுங்கள்..

இல்லை இது முடியாது எனில் கொலைவாளினை எடுங்கள் கொடியோர் செயலறவே....

Comments