விடுதலைப்புலிகள் மீதான அவதூறுகளை அள்ளி வீசூம் சீர்குலைவு சக்திகள்

ஈழத்தமிழினம் ஒரு மிகப்பெரிய அழிவை சந்தித்திருக்கிறது. 2.85 லட்சம் மக்கள் சிங்கள இனவெறி அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். ஈழத்தமிழர்களின் விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழினம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. தமிழகத் தமிழர்கள் புழுங்கிச் சாகின்றனர்.

இத்தகையச் சூழலில், ஈழத்தமிழர்களின் இந்த அவல நிலைக்குக் காரணமான சிங்கள இனவெறி அரசையோ, அதற்கு முழு உதவிகள் புரிந்த இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளையோ கண்டிக்க வக்கில்லாத ஒரு கூட்டம்,

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும், போராட்ட இயக்கத்தையும், இயக்கத் தலைமையையும் வேண்டுமன்றெ கொச்சைப்படுத்தியும், அவதூறு செய்து எழுதியும் பேசியும் மகிழ்ச்சி கொள்கிற மனசாட்சி இல்லாதவர்களாக இன்றைக்கும் உலவி வருகின்றனர்.

ஒரு இனவாத அரசு தன்னால் ஒடுக்கப்படுகின்ற ஓர் இனம், அதன் விடுதலைக்காகப் போராடும் பொழுது அந்த இனத்தில் உள்ள பலவீனமான குழுக்களை முதலில் அடையாளம் காணும் வேலையைச் செய்யும். அப்படி அடையாளம் காணும் குழுக்களை நேரடியாக ஒடுக்குகின்ற இனத்தின் ஆளும் வர்க்கம், தன்னுடன் இணைத்துக் கொள்வதும் உண்டு. மாறாக, அவர்களை இருக்குமிடத்தில் அப்படியே வைத்துக் கொண்டு அங்கிருந்து நீங்கள் எங்களுக்கான வேலையை செய்யுங்கள் என உத்தரவிடுவதும் உண்டு.

டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்றவர்கள் முதல் வகையறா. “இந்து வெறி” அ.தி.மு.க., பார்ப்பனீய பா.ச.க., பூணூல் கம்யுனிஸ்ட்கள் மட்டுமின்றி முற்போக்கு முகமூடி போட்டுத் திரியும் ம.க.இ.க, உள்ளிட்ட அமைப்புகள், “துக்ளக்” சோ, சு.சுவாமி, “இந்து” என்.ராம், அ.மார்க்ஸ், இரயாகரன், சோபாசக்தி உள்ளிட்ட முற்போக்கு முகமூடிகள் அணிந்த தனிநபர்கள் என இரண்டாம் வகையறா பட்டியல் நீள்கிறது.

அ.தி.மு.க., பா.ச.க., பார்ப்பனக் கம்யுனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளையும், சோ, சு.சுவாமி, இந்து ராம் போன்றவர்களைப் பற்றி நாம் விவாதிக்கத் தேவையில்லை. அவர்கள் நேரடியாக எதிரி முகாமில் எச்சம் தின்பவர்கள் என்பது வெளிப்படை. ஆனால், ம.க.இ.க., இரயாகரன், அ.மார்க்ஸ், சோபா சக்தி உள்ளிட்டவர்கள் அப்படியானவர்கள் அல்ல. அதாவது சிங்கள அரசின் வெளிப்படையான சேவகர்கள் அல்ல. மறைமுக சேவகர்கள் அவ்வளவே. ம.க.இ.க.வினரின் அரசியலைக் கேள்விக்குட்படுத்தி எழுதப்பட்ட எமது முந்தைய கட்டுரைக்கு “கீற்று” இணையதளத்தில் சிலர் எதிர்வினை புரிந்திருந்தனர்.

கேள்விகளுக்கு பதில் கேட்டால் அதற்குப் பதிலளிக்காமல் அக்கேள்விகளை மறுபடியும் கேள்விக்குட்படுத்துவதும், “நக்கல்” அடித்து பேசி கேள்வியை திசைமாற்றுவதும், வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு “நாங்கதான்டா புரட்சியாளர்கள்.. நீங்களெல்லாம் துரோகிகள்/எதிரிகள்" என்று நகைச்சுவை செய்வதும் இவர்களுக்கு கைவந்த கலை என்பதனை இவர்களது கமெண்ட்டுகள் நமக்கு உணர்த்தியது.

விமர்சனம் என்ற போர்வையில் ம.க.இ.க., இரயாகரன் உள்ளிட்டோர் செய்து வரும் வேலைகளை மென்மையான முறையில் அ.மார்க்ஸ், சோபா சக்தி வகையறாக்கள் “முற்போக்கு” முகமூடியில் ஒளிந்து கொண்டு செய்கின்றனர்.

ஈழவிடுதலைக்கு உதவ முடியாமலும், தம் இரத்த சொந்தங்களை போர் அழிவிலிருந்து காப்பாற்ற முடியாமலும் போய் விட்டதே என்ற வருத்தம் தமிழ்நாட்டுத் தமிழர் மனதில் ஆறாக் காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து சிங்கள அரசிற்கு உதவிகளை வாரி இறைத்து சிங்களனுடன் “நட்புறவு” பேணும் இந்தியாவின் இவ்வகை போக்கால், இந்த வருத்தம், இந்திய அரசின் மீதான கோபத்தை கிளறிவிட்டிருக்கிறது. இந்திய அரசின் மீது மட்டுமல்ல, தமிழ்நாட்டை இந்திக்காரர்களுக்குக் காட்டிக் கொடுத்து லாபம் பெறும் தமிழ்நாட்டு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் மீதும் தமிழக மக்களுக்கு இயல்பானதொரு கோபமும் இருக்கின்ற நிலையில், இவற்றைத் தணிக்க பெருந்திட்டம் தீட்டி வருகின்றது,

ஆரிய இந்திய அரசு. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் தமிழ்நாட்டில் எழுந்து வரும் தமிழ்த் தேசியம், ஈழவிடுதலை குறித்த கருத்தியல்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றது, இக்கூலிக் கும்பல.

விடுதலைப்புலிகள் மீதான விமர்சனங்கள்

“புலிகள் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. வடதுசாரிய சிந்தனையுள்ளவர்களாக இருந்தனர். சாதி ஒழிப்பைப் பற்றி எங்கும் அவர்கள் பேசவில்லை. புலிகள் முஸ்லிம்களை விரட்டினார்கள். சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து புலிகள் செயல்படவில்லை. மாற்று இயக்கத்தினருடன் இணைந்து பணியாற்றவில்லை. தமிழ் மக்களை புலிகள் அழித்தொழித்தனர்”

- மேற்கண்டவை தாம் புலிகள் மீதான இக்கூலிக்கும்பலின் பிரதான குற்றச்சாட்டுகள். இந்தக் குற்றச்சாட்டுகளை எழுப்புவதால் இவர்கள் எல்லோரும், ஏதோ சனநாயகவாதிகள் என்றோ, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்றோ கருத முடியாது. என்.ஜி.ஏ. அமைப்புகள் செய்யும் பணிகளுக்கு பின்னால் ஏகாதிபத்தியம் எப்படி ஒளிந்து கொண்டுள்ளதோ அதே போன்று தான் இவர்களது நடவடிக்கைகளுக்குப் பின்னால், ஆரியம் ஒளிந்து கொண்டுள்ளது.

இவர்களது செயல்பாடுகளை உற்று நோக்கினால், சிங்களப் பேரினவாதம் செய்யும் வேலையை இவர்கள் நம்முடன் இருந்து கொண்டே செய்கிறார்கள் என்பது புலப்படும். இன்னும் சரியாக சொல்லப் போனால், சனநாயகம், மார்க்சியம் போன்ற முற்போக்கு கருத்தியலின் சொல்லாடல்களைக் கொண்டு, அவதூறுகளை அள்ளி வீசும் அற்பத்தனங்களை திறம்பட செய்பவர்கள் இவர்கள் என வரையறுக்கலாம்.

புலிகள் என்றுமே விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர்கள் கிடையாது. அவர்களும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள் தான். அந்த விமர்சனத்தை அவர்கள் மீது எழுப்புகின்றவர்களின் நோக்கமும், விதமும் தான் விமர்சனங்களை எழுப்புபவர்களின் அரசியலைத் தீர்மானிக்கிறது.

தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கம், தன் மீதான விமர்சனங்களுக்கு ஏற்ப தன்னை திருத்திக் கொண்டு செயல்பட வேண்டும் என்று இவர்கள் எண்ணுவதில்லை. மாறாக, அப்போராட்ட அமைப்பு மீது சேறடித்து வீழ்த்துவதன் மூலம், சிங்களப் பேரினவாதத்திற்கு மறைமுகமாக துணை போவது தான், இந்த எழுத்துப் போர் “ஏகாம்பரங்களின்” வேலைத்திட்டம்.

கீற்று இணையதளக் கட்டுரையின் பின்னூட்டத்தில் ம.க.இ.க. தோழர் ஒருவர் எழுதியிருந்தார், ”நல்ல நண்பன் குறைகளை சுட்டிக் காட்டுவான்” என்று. நான் திருப்பிக் கேட்கிறேன், “நீங்கள் என்றைக்கு புலிகளுக்கு நண்பனாக இருந்தீர்கள் என்று சொல்லுங்கள் முதலில்”. வாய்த்திறந்தாலே “புலிகள் பாசிஸ்ட்கள்” என்று சொல்வதும், எழுதுவதும் தவிர தமிழ்நாட்டில் இவர்களது ம.க.இ.க.வும் அதன் தலைமையும் ஈழத்திற்காக செய்த வேலை தான் என்ன?

“பிரபாகரன் ஒரு பாசிஸ்ட்டு” - “புலிகள் இயக்கம் ஒரு பாசிச இயக்கம்” என்று வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் இவர்கள் முழங்காமல் அடக்கி வாசித்ததும், புலிகள் சர்வாதிகாரிகள் என்று சொல்லி விட்டு பின்னர், அவர்களுக்கே ”வீரவணக்கம்!” போட்டுக் கொண்டதும் தானே இவர்களது ”வீரதீர” நடவடிக்கைகள்.

விமர்சனம் என்ற பெயரில் தான் மேற்கொண்டுவரும் காட்டிக்கொடுப்பு வேலைகளையும், அவதூறுகளையும் இதுவரை யாருமே அங்கீகரித்தில்லை என்பது தெரிந்தும் அதனை மட்டுமே தொடர்ந்து செய்து வரும் இவர்களது “வீரதீர” நடவடிக்கைகள் வேடிக்கையாக இருக்கிறது. ஈழப் போராட்டம் பற்றி இவர்கள் எழுதுவதை கண்டாலே இதனை தெரிந்து கொள்ளலாம். இவர்களைப் போன்ற சிங்கள இனவெறி அரசின் துணைக்குழுக்கள் எழுப்பும் கேள்விக்கெல்லாம் நாம் பதிலெழும் பட்சத்தில் அவர்கள் திருந்திவிடப் போவதில்லை. மாறாக, அப்படிப்பட்ட துரோகக் குழுக்களில் உண்மை தெரியாமல் சிக்கியிருக்கும் அப்பாவி தமிழ் இளைஞர்களை மீட்டெடுப்பதற்கும், அவர்கள் மீது கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பங்களை உடைத்தெறியவுமே அவை உதவும்.

புலிகள் அரசியலை முன்னெடுக்கவில்லையா?

புலிகள் அரசியலை முன்னெடுக்கவில்லை என்று இக்குழுக்கள் கூறுகின்றன. இதற்கான பதிலை புலிகளே தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு வெளியிட்ட “சோசலிச தமிழீழம்” என்று தலைப்பிடப்பட்ட விடுதலைப்புலிகளின் அரசியல் வேலைத் திட்டம் குறித்த நூலில் இதற்கான பல விளக்கங்கள் உள்ளன. அதன் முதற்பகுதி விடுதலைப்புலிகள் இயக்கமும், தேசிய விடுதலைப் போராட்டமும் என்று தலைப்பிடப்பட்டது. இரண்டாம் பகுதி அரசியல் வேலைத்திட்டமும் கொள்கை விளக்கமும் என்று தலைப்பிடப்பட்டதாகும். இந்நூலை தற்பொழுது எடுத்துக்காட்டுவதன் நோக்கம், புலிகள் இயக்கம் வீரியமுடன் செயல்படத் தொடங்கிய காலத்திலிருந்தே மேற்கொண்டு வந்த பல கொள்கைகளும், வரையறுப்புகளும் தற்பொழுது பெரும்பாலானோர்க்கு தெரிந்திருப்பதில்லை. அதனால் இதனை இப்பொழுது எடுத்துக் காட்டுகிறேன்.

அதே நேரத்தில், தொடக்கத்தில் லட்சிய உறுதியுடனும் போர்க் குணத்துடனும் செயல்படத் தொடங்கியவர்களில், இறுதி வரை அதே போர்க்குணத்துடனும் லட்சிய உறுதியுடனும் நீடித்தவர்கள் சிலரே. ஆனால், புலிகள் அவ்வாறல்லாமல், தனது தொடக்க காலத்தில் தனக்கென வரையறுத்த கொள்கைகளையும், கோட்பாடுகளையும் இறுதி வரை கடைப்பிடித்தனர். அதனால் தான் அவர்களது இயக்கம் இன்று வரை உலகத் தமிழர் மனதில் நீங்கா இடத்துடனும், உலக வரலாற்றில் வேறு எந்த கெரில்லா விடுதலைப் போராட்ட இயக்கமும் செய்திராத மாபெரும் சாதனைகளை செய்தும் உள்ளது.

“எமது இயக்கம் அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அரசியல் இலட்சியமே ஆயுதப் பாதையை வழிநடத்த வேண்டும் என்பதில் நாம உறுதியாக இருக்கிறோம்.

ஆரம்பகாலத்திலிருந்து எமது இயக்கம் அரசியல் பிரிவிலிருந்து இராணுவ அமைப்பை வேறுபடுத்தவில்லை. பதிலாக, இரு பிரிவுகளும் ஒன்றிணைக்கப்பட்ட அரசியல் - இராணுவ வேலைத் திட்டத்தின் அடிப்படையில் எமது இயக்கம் செயற்பட்டு வருகிறது. இந்த வேலைத்திட்டம் ஆயுதப் போராட்டத்தை ஒரு அதியுயர்ந்த அரசியற் போராட்ட வடிவமாகவே கொள்கிறது."

(பக்கம் 9 பத்தி 2இன் பிற்பகுதி முதல் பத்தி 3 வரை, முதல் பகுதி)

இது 1980களில் புலிகளால் எழுதப்பட்டது. ஒரு அரசியல் சக்தியாக இல்லாவிட்டால், புலிகள் அம்மண்ணில் கடந்த 35 வருடங்களாக காலூன்றி நின்றிருக்க முடியாது. மக்களை அரசியல்மயபடுத்தியதன் காரணமாகத்தான், புலிகள் கைகாட்டியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்கள். மக்களை அரசியல்படுத்தியதால் தான், “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற பிரகடனம் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று இன்றைக்கு உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகின்றது.

புலம் பெயர் மக்களை புலிகள் அரசியல்படுத்தியதால் தான் அவர்கள் புலம் பெயர் நாடுகளில், அந்தந்த நாடுகளின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் மக்கள் திரளாக அவர்களால் வளர முடிந்திருக்கிறது.

இவ்வாறு, ஈழத்தமிழர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் தனது இராணுவ நடவடிக்கைகளின் மூலமாகவே அரசியல்படுத்தியவர்கள் புலிகள். இவர்களைப் பார்த்து மக்களை அரசியல்படுத்தவில்லை என்ற குற்றம் சாட்டுகின்றது, இக்கூலிக் கும்பல்.

புலிகள் மீது மட்டுமின்றி, தமிழகத்தில் ஆயுததாங்கியப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மாவோயிஸ்டுகள் மீது ம.க.இ.க. - புதிய ஜனநாயகக் கும்பல் அவதூறுகளை அள்ளி வீசின. புதிய ஜனநாயகத்தின் இந்த அவதூறுகளுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் ஒரு வெளியீட்டைக் கொண்டு வந்தனர். அதற்கு பதில் கொடுக்கும் விதமாக புதிய ஜனநாயகமும் ஒரு வெளியீட்டைக் கொண்டு வந்தது. அவ்வெளியீட்டில், புதிய ஜனநாயகம் தானே அம்பலப்பட்டது.

“அரசியல் போராட்டத்தின் முதிர்ந்த வடிவம்தான் ஆயுதப் போராட்டம் என்பதையும், அரசியல் போராட்ட அனுபவத்தினூடாக ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தை மக்கள் உணரச் செய்யவேண்டும்” என்று நாம் கூறுவதையும் மாவோயிஸ்டு அமைப்பினர் ஏளனத்துடன் மறுக்கிறார்கள்.”

(மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள் கருவிலே சிதைவது ஏன்?, பு.ஜ.வெளியீடு, சனவரி 2008, பக்கம் 63, பத்தி 3 தொடக்கம்)

அரசியல் போராட்டத்தின் முதிர்ந்த வடிவம் தான் ஆயுதப் போராட்டம் என்று தானே கூறும் ம.க.இ.க. - புதிய ஜனநாயகக் கும்பல், அதனை புலிகளோ, மாவோயிஸ்டுகளோ செய்தால் தூற்றுவார்களாம். அவதூறு செய்வார்களாம். அதனை அவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டுமாம். மற்ற யார் செய்தாலும், அது சாகசவாதம் என்பார்களாம். நக்சல்பாரிகளின் ஆயுததாங்கிய எழுச்சி மிக்க போராட்டத்தைப் பற்றி புகழ்ந்தும் இவர்கள் எழுதுவார்கள், அதே சமயம் அதனை சாகசவாதம் என்றும் வாதாடுவார்கள். இவர்களது துண்டறிக்கைகள் பலவற்றில், “ஆயுதாங்கிய பாதையில் அணி திரள்வோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், 30 வருடங்களாக தன்னை நம்பியுள்ள தோழர்களிடம் அட்டைக் கத்தியைக் கூட இவர்கள் காட்டியது கிடையாது. இது தான் இவர்களின் அரசியல் லட்சணம். அப்பாவித்தனமாக இவர்களிடம் சிக்கியிருக்கும் இளைஞர்களின் நிலை தான் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

புலிகள் வலதுசாரிச் சிந்தனையுள்ளவர்களா?

தனது இலக்கு சுதந்திர சோசலிச தமிழீழத் தனியரசே என்று முதலிலேயே தனது அரசியலை பிரகடனப்படுத்தியவர்கள் புலிகள். தேசிய இன விடுதலைப் பற்றிய மார்க்சியப் புரிதல்களுடன் தான் அவர்களது போராட்ட இயக்கம் கட்டமைக்கப்பட்டது. தேசிய விடுதலையும், சோசலிச சமூகப் புரட்சியுமே தமது இயக்கத்தின் அடிப்படை அரசியல் இலட்சியங்கள் என்று பிரகடனப்படுத்தப்பட்டவை.

உலகமயம் அழித்து வரும் தேசிய இன அடையாளங்களை பாதுகாப்பதன் மூலமும், தேசிய இன அடையாளத்தை மீட்டெடுப்பதன் மூலமும், தேசிய இன விடுதலைக்குப் போராடுவதன் மூலமும் உலகமயத்திற்கு எதிரான போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் புலிகள். ஈழ மண்ணில் எந்தவொரு ஏகாதிபத்தியமும் காலூன்ற முடியாத படி தனது இராணுவத்தைக் கட்டமைத்தது புலிகள் இயக்கம். ஏகாதிபத்தியம், காலனித்துவம், நவ-காலனித்துவம், இனவாதம் ஆகியவையே உலக மக்களின் பொது எதிரிகள் என்று புலிகள் வரையறுத்திருந்தனர்.

“தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. அதே சமயம், எமது சமூகத்தை பிரபுத்துவ சமூக வடிவமாகவும் சித்தரிக்க முடியாது. தமிழீழ சமுதாய அமைப்பானது தனக்கேயுரிய ஒரு தனித்துவமான பொருளுற்பத்தி வடிவமாகத் திகழ்கிறது.

வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு சிக்கலான பொருளாதா அத்திவாரத்தில் எமது சமுதாயம் கட்டப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் எமது சமுதாயத்திற்கு அத்திவாரமாக விளங்கும் பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்குமுறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது.

எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்.”

(பக்கம் 11 பத்தி 8 மற்றும் 9, இரண்டாம் பகுதி)

1980களில் எழுதப்பட்ட மேற்கண்ட வரிகள், புலிகளின் தமிழ்ச் சமூகத்தின் மீதான புரிதல்களையும், மார்க்சிய இயங்கியல் கண்ணோட்டத்திலேயே தமிழர் பிரச்சினையை புலிகள் அணுகியதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

சாதி ஒடுக்குமுறை பற்றி புலிகள் பேசவில்லையா?

சாதிய ஒடுக்குமுறை பற்றி புலிகள் எங்குமே பேசவில்லை. யாழ்ப்பாண வெள்ளாள சமூகத்தினரின் மனநிலையே புலிகள் இயக்கத் தலைமையின் மனநிலை என்று ஒரு பெரும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த அவதூறுகளுக்கும் புலிகளின் முதல் அரசியல் அறிக்கையே பதில் அளிக்கிறது.

“எமது சமுதாய மேம்பாட்டிற்கு ஒரு சாபக்கேடாகவும் சமூக சமத்துவத்திற்கு ஒரு முட்டுக்கட்டையாகவும் இருந்துவருவது சாதியக் கொடுமையாகும். சாதிய அமைப்பு எமது கிராமியப் பொருளாதார வாழ்வுடன் ஒன்று கலந்திருக்கிறது. வர்க்க அமைப்புடன் இணைப்பெற்றிருக்கிறது. தொழிற் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட பொருள் உற்பத்தி உறவுகளுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. மத சித்தாந்த உலகிலிருந்து வேரூன்றி வளர்ந்திருக்கிறது.

தொழிலின் மகத்துவத்தை இழிவுபடுத்தி, மனிதனை மனிதன் வேறுபடுத்தும் இந்த மூட வழக்குமுறையை முற்றாக ஒழித்துக்கட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் திடசங்கற்பம் பூண்டிருக்கிறது. சாதியத்தின் பெயரால் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து நசுக்கப்பட்டுவரும் தமிழீழப் பாட்டாளி வர்க்கத்தின் விடிவிற்காக எமது இயக்கம் அயராது உழைக்கும். உழைப்பின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிச பொருளாதாரத் திட்டத்தை அமுலாக்குவதன் மூலமும், புரட்சிகரமான கல்விமுறை வாயிலாகவும் இந்த சமூக தீமையை எமது இயக்கம் ஒழித்துக்கட்டும்.”

(பக்கம் 12 பத்தி 1 மற்றும் 2, இரண்டாம் பகுதி)

சாதியைப் பற்றி எங்குமே புலிகள் பேசவில்லை என்ற அவதூற்றை, 1980களிலேயே எழுதப்பட்ட புலிகளால் எழுதி வெளியிடப்பட்ட அரசியல் அறிக்கையின் மேற்கண்ட வரிகள் தோலுரித்துக் காட்டுகின்றன. சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும் உடனடியாக அதனை ஒழிக்க முடியாது என்பதையும் அதற்கு தொடர்ச்சியான நீண்டகாலத் திட்டங்கள் தேவை என்பதனையும் புலிகள் உணர்ந்திருந்தனர் என்பதனை இவை காட்டுகின்றன. புலிகள் இயக்கத் தோழர்கள் அவரவர் சொந்த சாதியிலேயே திருமணம் செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்ததை இச்சமயம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.


முஸ்லிம்கள் மீதான அணுகுமுறை

இலங்கை வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் தனித்துவமான ஒர் இனக்குழு என்றும் முஸ்லிம்களின் தாயகம் வடகிழக்குப் பிரதேசமே என்றும் புலிகள் அங்கீகரித்திருந்தனர்.

“வடகிழக்குப் பிரதேசத்தில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் பொதுவான தாயகத்தையும், பொதுவான மொழியையும், பொதுவான பொருளாதார வாழ்வையும், பொதுவான நலன்களையம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விதம் ஒன்றிணைந்த சமூகப் பொருளாதா வாழ்வு காரணமாக ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் தங்கியிருப்பதால் தமிழரும் முஸ்லிம் மக்களும் ஒன்றுபட்ட சக்தியாக ஒருங்குசேர்ந்து தமது உரிமைக்காகப் போராடுவது அத்தியாவசியமானதாகும். முஸ்லிம் மக்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்றால், தமது நலன்களை அடைந்து நல்வாழ்வு காண வேண்டுமென்றால், முக்கியமாக, தமது இன, மத, கலாச்சார தனித்துவத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமென்றால் தமிழருடன் ஒன்றுபட்டு வாழ்ந்து, தமிழருடன் ஒருங்கிணைந்து போராடுவதே சாலச்சிறந்ததாகும்.”

(பக்கம் 13 பத்தி 7, இரண்டாம் பகுதி)

“தமிழ் பேசும் மக்களின் ஐக்கியத்தைக் குலைத்து, தமிழ்த் தேசிய ஒன்றியத்திணை சிதறடிக்கும் நோக்கத்துடன் சிங்கள இனவாத அரசானது தமிழர் முஸ்லிம் மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டிவிடும் நாசகார முயற்சிகளில் ஈடுபட்டு வருவதோடு எமது பொதுத் தாயகப் பூமியையும் படிப்படியாக விழுங்கி வருகின்றது. பொதுவான எதிரியையும், பொதுவான இலட்சியங்களையும் எதர்கொள்ளும் தமிழ் முஸ்லிம் மக்கள் தமது தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட ஒன்றுபட்டுப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.”

(பக்கம் 14 பத்தி 1, இரண்டாம் பகுதி)

[புலிகள்] புலிகள் முஸ்லிம் மக்களுடன் உறவு பேண விரும்பியதையும், அவர்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற ஈடுபாட்டையும் புலிகள் கொண்டிருந்தனர் என்பதனை மேற்கண்ட வரிகள் தெளிவுபடுத்துகின்றன.

காலப்போக்கில், முஸ்லிம் மக்கள் சிங்கள இனவெறியர்களுடன் உறவு பேணியதால், சில உரசல்கள் ஏற்பட்டன. முஸ்லிம் மக்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற நோக்கில், புலிகளின் முதல் முஸ்லிம் போராளியின் படத்தைத் தாங்கியபடி “ஒன்றிணைந்து போராடுவோம்” என்று புலிகளின் அரசியல் பிரிவு ஒரு புத்தகத்தையும் இந்நேரத்தில் வெளியிட்டது. அந்த புத்தகத்தில் புலிகள் முஸ்லிம் மக்களுக்கும் தமிழர்களுக்குமான பொது எதிரியான சிங்களப் பேரினவாதத்தை முறியடிக்க ஒன்றிணைந்து போராடுதல் அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தி இருந்தார்கள்.

சிங்களப் பேரினவாதம் தமிழ் - முஸ்லிம் மக்களிடையிலான உறவை சீர்குலைத்து, பகைமையைக் கட்டமைக்கும் வழிமுறைகளில் ஈடுபட்டிருந்ததையும் புலிகளின் வெளியீடுகள் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தன. ஆனால், முஸ்லிம் இனவாதக் குழுக்கள் பல உருவாக்கப்பட்டு, சிங்கள இனவெறி சக்திகளுடன் இணைந்து கொண்டு ஆயுதம் தரித்து தமிழர்களை வேட்டையாடிதை வரலாறு கண்டது.

சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து நடவடிக்கைகளில் பல முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் ஈடுபட்டு வந்தன. இவர்களுக்கு எதிராக புலிகளின் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட சிலரை வைத்துக் கொண்டு, ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களுக்கும் எதிரானவர்கள் புலிகள் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது. மூதூர் வெளியேற்றம் குறித்து மூச்சுக்கு முன்னூறு தடவை பேசுகின்ற பலரும், அந்த வெளியேற்ற நடவடிக்கைக்காக புலிகள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டது குறித்து வாய்த்திறக்காமல் முடிக்கொள்வதற்கு, பின்னணியில் பேரினவாதம் தான் ஒளிந்து கொண்டுள்ளது.

சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடவில்லையா?

“சிறீலங்காவின் பாசிச அரசானது தமிழ் பேசும் மக்களது விரோதி மட்டுமின்றி ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் சிங்களப் பாட்டாளி மக்களதும் பிரதான எதிரியாகும். இந்தப் பாசிச அரச இயந்திரத்தை இயக்கிவரும் ஆளும் வர்க்கமானது தமிழருக்கு எதிரான இனவெறியைக் கிளறிவிட்டு தனது ஆட்சி அதிகாரத்தை நீடித்து வருகிறது. பேரினவாத சித்தாந்தத்தைப் பரப்பி தமிழ் - சிங்கள பாட்டாளி வர்க்க ஒருமைப்பாட்டையும் சிதறடித்து வருகிறது. இந்தப் பேரினவாத பாசிச அரசையே விடுதலைப் புலிகள் இயக்கம் தனது எதிரியாகக் கருதுகிறதே தவிர, சிங்களப் பொது மக்களை அல்ல. சிங்கள பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர தோழமை சக்தியாகவே எமது இயக்கம் செயல்படும். சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக நாம் முன்னெடுக்கும் சுதந்திரப் போராட்டம் சி்ங்களப் பாட்டாளி வர்க்கத்தின் சுபீட்சத்திற்கும் வழி வகுக்கும் என்பது திண்ணம்.

.... சுதந்திர தமிழீழத்தில் தமிழ் பேசும் மக்களோடு ஐக்கியமாக வாழவிரும்பும் சிங்கள மக்களை தமிழீழப் பிரஜைகளாக ஏற்று, அவர்களுக்கு சகல சனநாயக சுகந்திரங்களையும், உரிமைகளையும் வழங்க எமது விடுதலை இயக்கம் முடிவு செய்திருக்கிறது.”

(பக்கம் 14 பத்தி 1, இரண்டாம் பகுதி)

தனது முதல் கொள்கை அறிக்கையிலேயே தெளிவுடன் சிங்களப் பாட்டாளி வாக்கத்துடன் இணைந்து போராட தயாராக இருந்ததாக புலிகளின் மேற்கண்ட வரிகள் தெரிவிக்கின்றன. புலிகளின் இம்முடிவை அங்கீகரித்து தமிழ்ப் பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து போராட முற்பட்ட சிங்கள பாட்டாளி வர்க்க சக்திகள் ஏதேனும் ஒன்றையாவது இந்தக் கூலிக்கும்பல் அடையாளம் காட்ட முடியுமா?

முடியாது. சிங்கள இனத்தில் அப்படிப்பட்ட பாட்டாளி வர்க்க சக்திகளே இல்லாத நிலையில், தமிழ்த் தேசிய இனம், தனது விடுதலைப் போராட்டத்தை ஒத்தி வைத்து விட்டு, சிங்கள இனத்தின் பாட்டாளி வர்க்கம் எழுந்து நிற்கிற வரை சிங்கள இனவெறிக் கும்பலின் ஒடுக்குமுறைகளை தாங்கிக் கொண்டு அப்படியே அழிந்து போக வேண்டுமாம். இது தான் பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்று புளுகுகிறது, சோபாசக்தி, அ.மார்க்ஸ், ம.க.இ.க. கும்பல். இது தான் இந்திய சிங்கள ஆரியக் கும்பலின் ஆசையும் கூட..

“ஒன்றுபட்ட இலங்கை” என்ற பெயரில் ஓலமிடும் இந்திய சிங்கள ஆரியக்கும்பலின் முழக்கத்திற்கும் “சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடுங்கள்” என்று முழக்கமிடும் ம.க.இ.க., சோபாசக்தி உள்ளிட்ட ஆரியக் கூலிக்கும்பலின் முழக்கத்திற்கும் வித்தியாசம் இது தான். ஆசியக் கும்பல் “தேசிய ஒருமைப்பாடு” என்று கூச்சலிடுவதை, இந்தக் கூலிக்கும்பல் மார்க்சிய சாயம் புசி வாந்தி எடுக்கிறது. அவ்வளவு தான் வித்தியாசம். இந்தியாவின் போலிக் கம்யுனிஸ்டுகளின் “ஒன்றுபட்ட இலங்கை” முழக்கத்தையே அதிலிருந்து பிறந்த ம.க.இ.க.வும் வலியுறுத்துகிறது. பாட்டாளி வர்க்க சர்வதேசிய சாயமடித்து பார்ப்பனியத்தை திணிக்கும் கலையில் ம.க.இ.க.விற்கு நிகர் அவர்களே தான்.

முதலில் தமிழ் இனம் ஒர் அங்கீகரிக்கப்பட்ட தேசத்தை பெற வேண்டும் அதற்குப் பிறகு தான் சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து சர்வதேசியத்தைப் பற்றி சிந்திக்க முடியும் என்று இக்கும்பல் சொல்வதற்கு வக்கில்லை. ஆனால், தனித்தமிழ் ஈழத்திற்காக போராடும் புலிகளை மட்டும் சிங்களர்களைப் போலவே இவர்களும் சேர்ந்து இழிவுபடுத்துவதை மட்டும் தவறாமல் செய்வார்களாம். என்னே இவர்களது சர்வதேசியம்..!

ஒரு பாட்டாளி வர்க்கம் தனக்கான ஒரு நாடு, வரையறுக்கப்பட்ட எல்லைகள் கொண்ட இறையாண்மையுள்ள ஒர் ஆட்சிப் பகுதி இருந்தால் தான் அங்குள்ள அதிகார வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தையும், உலகு தழுவிய உலகமயமாக்கலுக்கு எதிரான சர்வதேசியப் போராட்டத்திலும் பங்கெடுக்க இயலும். தனக்கருககில் உள்ள அண்டை தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து போராடவும் இயலும். இதுவே மார்க்சிய அடிப்படை.

ஒடுக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் தேசிய விடுதலைக்கான தீர்வை இன்னொரு நாட்டின் பாட்டாளி வர்க்கம் வரையறுக்கக் கூடாது என்றும் சிலர் சொல்கிறார்கள். தனித்தமிழ் ஈழக் கோரிக்கை தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை என்பது போல அரைவேக்காட்டுத் தனமாக புரிந்து கொண்டிருக்கும் ம.க.இ.க. கும்பலின் கூற்று இது. ஈழசிக்கலுக்கு தமிழ்த் தேசிய இன மக்கள் நாடிய தீர்வே தனித்தமிழ்ஈழம் என்பது. இதனை அவர்கள் 1977இல் நடந்த தேர்தலில் மெய்ப்பித்தார்கள். இதனடிப்படையில் தான் புலிகளும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான தனித்தமிழ் ஈழமே தமது இலட்சியம் என கொண்டனர். இது ம.க.இ.க.விற்கு நன்கு தெரியும். ஆனால், அதை அவர்கள் எவ்வாறெல்லாமோ மழுப்பி கடைசியில் “ஒன்றுபட்ட இலங்கை” குட்டைக்குள்ளும் “பாட்டாளி வர்க்க சர்வதேசிய” சொல்லாடல்களிலும் விழுந்து விடுவார்கள்.

ஒடுக்குகின்ற இனத்தின் பாட்டாளி வர்க்கம் தனது விடுதலைக்காக முன்னெழுந்து போராடுகின்ற நிலையில், ஒடுக்கப்படும் இனத்தின் பாட்டாளி வர்க்கம் அதனுடன் சேர்ந்து செயல்பட முடியும். ஆனால், ஒடுக்கும் இனத்தில் அவ்வாறான பாட்டாளி வர்க்க சக்திகள் இல்லாத நிலையில், ஒடுக்கப்படும் இனம் எவ்வாறு அவர்களுடன் சேர்ந்து செயல்பட இயலும்?

ஜனதா விமுக்தி பேரமுனா கட்சி சிங்கள இனத்தின் பாட்டாளி வர்க்கக் கட்சியாக அடையாளப்படுத்தப்பட்டு, இன்று சீரழிந்த இனவாதக் கட்சியாக உள்ளது. இது போன்ற சிங்களப் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் இனவாதத்தில் விழுந்து போவதற்குக் காரணம் என்ன?

சிங்கள உழைக்கும் மக்களின் உளவியல் தான் காரணம். இவ்வாறான உளவியலைக் கொண்ட சிங்கள உழைக்கும் மக்கள், தமிழ்ப் பாட்டாளி வர்க்கத்தின் விடியலுக்காக இதுவரை செய்தது தான் என்ன?

செய்யப் போவது தான் என்ன?

ஒன்றுமில்லை..

ஆனால் இவை பற்றி எண்ணாமல், சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் உறவு பேணவே புலிகள் விரும்பினர். எழுச்சியுடன் ஜே.வி.பி. வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவர்களுடன் உறவு பேண புலிகள் முயற்சி எடுத்தனர். “ஹீரூ” -HIRU என்ற ஜே.வி.பி. ஆதரவு பத்திரிக்கை புலிகளின் முயற்சியை வரவேற்று, புலிகளின் கொள்கைகளையும் அங்கீகரித்து எழுதியது. பின்னால், அப்பத்திரிகையின் ஆசிரியர் துரத்தியடிக்கப்பட்டு அம்முயற்சி ஜே.வி.பி.யாலேயே உடைத்தெறியப்பட்டது. இது மறுக்க முடியாத உண்மை.

புலிகள் மாற்று இயக்கத்தினருடன் இணைந்து செயல்படவில்லை என்கிறார்கள். மாற்று இயக்கத்தினர் என்று இக்கூலிக்கும்பல் சொல்லும் அனைத்து இயக்கங்களையும் அவர்களே “ஒட்டுக்குழுக்கள்” என்று தான் விமர்சிப்பார்கள்.

சிங்கள பேரினவாதத்துடன் இந்திய ஆரியத் தலைமையுடனும் சமரசம் செய்து கொண்ட அது போன்ற ஒட்டுக்குழுக்களுடன் புலிகளும் இணைந்து தமிழ் மக்களுக்கு “சேவகம்” புரிய வேண்டுமாம்.

இதைத் தான் இந்தக் கூலிக்கும்பல் விரும்புகிறது. அதாவது, சிங்கள பேரினவாதத்துடனும், இந்திய உளவுத்துறையினருடனும் சமரசம் செய்து கொண்டு புலிகள் இருக்க வேண்டுமாம்.


இந்த ஒரு வாதமே இந்தக்கூலிக்கும்பலை யாரென அம்பலப்படுத்துகின்றது. தமிழ் மக்களை புலிகள் கொல்லுகிறார்கள் என்று சிங்களர் குரலில் பேசும் இந்தக் கூலிக்கும்பலுக்கும், அந்தக் கூலிகளே “சதியாளர்கள்” என விமர்சிக்கும் இந்து என்.ராம், பார்ப்பன செயா, சோ, சு.சுவாமி போன்றவர்களுக்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்தும் இந்தத் துரோகக் குழுக்கள், இந்த விமர்சனங்களை எழுப்புகின்ற போர்வையில் ஒளிந்து கொண்டு

நீங்கள் இதுவரை தமிழ் மக்களுக்காக செய்தது என்ன என்று கேள்வி எழுப்பினால் மட்டும் இருந்த இடம் தெரியாமற் காணாமற் போய்விடுவார்கள்.

புலிகளின் மீது இந்த ஆரியக் கூலிக்கும்பலுக்கு இருக்கும் வன்மம், புலிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் செயல்படும் தமிழ்த் தேசிய சக்திகளையும் விட்டுவைப்பதில்லை.


இந்தியாவின் ராஜதந்திரம் தோற்றுவிட்டதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அய்யா கூறிவருகிறார். இன்னும் இந்தியத் தேசிய மனநிலையிலிருந்து முற்றிலும் விடுபடாத அவரது இக்கருத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியவாதிகள் அனைவரும் இந்தியத் தேசியததை ஏற்பவர்கள் தாம் என்று முழங்கி வரும் ம.க.இ.க.வின் பார்ப்பனீய செயல்பாடுகள் இதற்கொரு எடுத்துக்காட்டு.

உண்மையான தமிழ் உணர்வாளர்கள், இந்தியத் தேசியத்தை ஏற்கவில்லை என்பது இந்த கும்பலுக்கு நன்கு தெரியும்.

இருந்தாலும், அவ்வப்போது நெடுமாறன் போன்ற பலவீன சக்திகளை மய்யப்படுத்தி தமிழ் உணர்வாளர்களை, இனவாதிகள் எனறு சேறடிக்க வேண்டும் என்று செயல்படுவது இவர்களது தமிழ்நாட்டு வேலைத்திட்டத்துள் ஒன்று. இது தனது எஜமானர்களிடமிருந்து ம.க.இ.க. கற்றுக் கொண்ட பார்ப்பனிய ராஜதந்திரம் போலிருக்கிறது.

இதன் ஒரு பகுதியாகத் தான், புலிகள் மீது எப்படி யாழ்ப்பாண வெள்ளாளர் மனநிலை உள்ளவர்கள் என்று முத்திரைக் குத்தப்படுகின்றதோ அதே போல, தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்கள் மீது தொடர்ந்து ஆதிக்க சாதி வெறி முத்திரை குத்தப்படுகின்றது. புலிகளுக்கு சோபாசக்தி போல, தமிழ்நாட்டு தமிழ்த் தேசியர்களுக்கு மதிமாறன் போன்றவர்கள் இதற்கேற்ப செயல்படுகின்றனர்.

வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் தனது மரண சாசனத்தில் குறிப்பிட்டது போல, தமிழர் என்ற ஒற்றுமை உணர்வை சீர்குலைக்கவே உளவுத்துறையினர் சட்டக்கல்லூரி சாதி மோதலை தூண்டியிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.

ஈழத்தில் ஏற்பட்டுள்ள இன அழிவால் தமிழகத்தில் தற்பொழுது ஓரு தமிழ்த் தேசிய அலை மெல்ல எழுந்து வருகின்றது. அனைத்துத் தரப்பிலிருந்தும் “நாம் தமிழர்” என்ற முழக்கம் சாதி வேறுபாடின்றி, மத வேறுபாடின்றி மெல்ல அரும்பி வருகின்றது.


இச்சூழல் ஆரிய இந்தியத் தலைமைக்குத் தலைவலியைக் கொடுத்துள்ளது. இதனை சீர்குலைக்க மற்றொரு வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழர் என்ற அடையாளத்தை அழித்து சாதி வேற்றுமையை முதன்மைப்படுத்துவது தான் அது. இல்லையெனில், எப்பொழுதோ எழுந்த ஒரு விவாதத்தை “நாம் தமிழர்” என்று எல்லோரும் உணர்ந்து வரும் இவ்வேளையில் வெளியிட்டு,

தமிழ்ச் சமூகத்தின் சாதி வேற்றுமைகளை வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டும் என்று எண்ணுகிற “குமுதம்” இதழ் குசும்பிற்கு சற்றும் சளைக்காத மதிமாறன்கள் தற்பொழுது வேகமாக செயல்படவேண்டிய அவசியம் என்ன?

நட்பு சக்திகள் போல் வேடமிட்டு வரும் சீர்குலைவு சக்திகளை நாம் அடையாளம் கண்டு கொண்டால் தான் நாம் எதிரியை நோக்கி முன்னேறிச் செல்ல முடியும் என்ற புரிதலை நாம் பெற்றாக வேண்டும்.

இது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட.

இந்தக் கூலிக்கும்பலில் சிக்கியிருக்கும் இளைஞர்கள், இனியாவது சிந்திக்க வேண்டும்.


- அதிரடியான் -
( athiradiyaan@gmail.com இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

Comments

Unknown said…
hello,
what you written in this article is 101 percentage correct.they are mother fckers the time will give punishment to them.now every thing is over but what is the acion of srilankan govt.did they asked ,they wont fuckers.
Unknown said…
Good post.

Please keep posting like these.
Unknown said…
Author correctly expressed the Tamil Tigers freedom fight, all tamils want to be part of Tamils freedom fight.