இன்னும் முப்பதாண்டுகளுக்கு உலகத் தமிழ் மக்களை ஆட்டிப் படைக்கப் போகும் ஒரு சக்தி அது பிரபாகரன்தான்.

ராஜீவ்கொலைக்கு பழிவாங்கியாக வேண்டிய தேவையும் நினைவும் சோனியா குடும்பத்திற்கு இருந்திருக்கலாம். இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களுக்கு இந்து மகாச்சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவுக்கு, ரஷ்யாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையே ஒரு ஐக்கியம் ஏற்பட்டு அது தனது பிராந்திய நலனில் பேரிடியாக மாறும் கவலைகள் இருந்திருக்கலாம். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக மிக மோசமான முறையில் இலங்கைக்கு இந்தியா ராணுவ உபகரணங்களை வழங்கி வந்திருக்கிறது.

கடந்த வருடம் புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் சு.ப. தமிழ்ச் செல்வன் படுகொலை செய்யப் பட்ட போது. நீண்ட நேரம் போராடி மண்ணுக்குள் புதைந்திருந்த அவரது உடலைத் தோண்டி எடுத்ததாக தகவல்கள் வந்த போது மிக மோசமான க்ளஸ்டர் குண்டு வீசப்பட்டதான செய்திகளை இப்போது நம்ப வேண்டியிருக்கிறது. க்ளஸ்டர், பாஸ்பரஸ், கொத்துக் குண்டுகள், ரசாயன ஆயுதங்கள் என பேரழிவு ஆயுதங்களோடு மக்களைத் துரத்தும் துணிச்சலும் தைரியமும் இலங்கைக்கு இந்தியா கொடுத்தது.

விளைவு பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து போராளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் அழித்து முள்ளியவாய்க்காலில் ஒரு நரவேட்டையை நடத்தி முடித்து விட்டது. இன்று இலங்கையில் புதிய சந்தை ஒன்றை உருவாக்கி விட்டது இந்தியா.

ஒரு மாபெரும் இரத்தக் குளியலின் பின் இந்திய முதலாளிகளுக்கு அந்தச் சந்தையை பரிசளிக்கப் போகிறது இந்தியா. மீள்கட்டுமானம், புனர்நிர்மாணம் என்கிற பல பெயர்களால் இவர்கள் இதை அழைத்துக் கொண்டாலும் டி.வி.எஸ் நிறுவனம், இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்கள், ரிலை-யன்ஸ், எல்.என்.டி போன்ற நிறு-வன-ங்கள் அங்கே முதலீட்-டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றன.

வடக்கில் தேர்தலை நடத்தி டக்ளஸ், கருணா, ஆனந்தசங்கரி போன்ற துரோகிகளிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு வியாபாரத்தை பெருக்க வேண்டும் இது மட்டுமே இப்போது ஈழத்தில் இன்னும் எஞ்சியிருக்கிறது.

ஆனால் இது இந்தியாவோ இலங்கையோ நினைப்பது போலல்ல, இந்தப் பிரச்சனையை புதிய தலைமுறை கையிலெடுத்துள்ளது. புலத்திலும் தமிழகத்திலும் மாற்றங்கள் வரும். இந்தியா மீது கடுமையான வெறுப்பில் இருக்கும் ஒரு கடும்போக்கு ஈழத்திற்கான அரசியல் போராட்டமாக மாற்றப்பட வேண்டும்.

இந்நிலையில்தான் இதுவரை ஈழம் பற்றி வாயே திறக்காத சிலர். அல்லது அங்கு இனப்படுகொலை நடக்கவே இல்லை என்று பேசியும் எழுதியும் வந்த சிலர். எல்லாம் முடிந்து விட்டது. இருபதாயிரம் போராளிகளை இழந்து ஒரு இலட்சம் மக்களை இழந்து, மூன்று லட்சம் மக்களை அகதி முகாமுக்குள் முடக்கி விட்டு முப்பதாண்டுகளுக்குப் பிறகு நாம் தொடங்கிய இடத்திற்கே வந்திருக்கிறோம் என்கிறார்கள் சிலர்.


ஈழப் போராட்டம் தொடங்கிய இடத்திற்கா வந்திருக்-கிறது, ஐம்பதுகளில் ஈழப் போராட்டம் ஈழத்தைத் தாண்டு வேறு எங்கும் பேசப்பட்டதில்லை. இன்று ஈழப் போராட்டம் பல்வேறு விதங்களில் விவாதிக்கப்படுகிறது. தமிழகம் தழுவிய பிரச்சனையாக ஓரளவுக்கேனும் மாறியிருக்கிறது. புலத்தில் வாழும் மக்களின் பங்களிப்பு ஈழத்தை சர்வதேச சமூகம் பேசும் ஒரு பிரச்சனையாக மாற்றியிருக்கிறது. தொடங்கிய இடம் என்பது இதுவல்ல. அப்போது நாம் ஒப்பீட்டளவில் உயிர்களை இழக்கவில்லை. அதே நேரம் அது ஒரு இந்தியாவின் பிராந்திய நலனுக்கான சீட்டு விளையாட்டுப் பிரச்சனையாக இருந்தது. இன்றும் அப்படித்தான் ஆனால் இனி இந்தியா விரும்பியது போல இந்தப் பிரச்சனையை நீண்டகாலத்திற்கு நீட்டித்துச் செல்ல முடியாது.

ஆசியாவில் கடந்த ஐம்பதாண்டுகளில் நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்ட ஈழப் பிரச்சனை முன்னிலும் பார்க்க இந்து மகாச்சமுத்திரப் பிராந்திய அரசியலை பதட்டப்படுத்தும் ஒரு பிரச்சனையாக இருக்கும் என நம்பலாம். ஆனால் இந்த நிலைக்கு வந்து சேர ஈழ மக்கள் கொடுத்திருக்கும் விலை அதிகம். வடுக்களும் அதிகம். முடமாக்கப்பட்ட அம்மக்களிடம் இனி போராடக் கேட்பதே அபத்தமான விஷயமாகப் படுகிறது. ஆனால் அதே சமயம் இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது இலங்கைக்கு வெளியில் உள்ள பிராந்திய மற்றும் மேற்குலக நாடுகளின் கைகளில் இருக்கிறது என்று சொன்னால் அதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர் தமிழர்களிடமே உண்டு. தமிழகத்தில் ஈழத்துக்கு ஆதரவாகச் செயல் படும் தலைவர்கள் இனியாவது இந்தப் பிரச்சனையை தீவீரமாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். தமிழக மக்களின் கிளார்ச்சியிலேயே ஈழ மக்களின் வாழ்வுரிமை அடங்கியிருக்கிறது.

இன்று ஈழம் மூன்று கழுகுகளிடம் சிக்கியிருக்கிறது ஒன்று பேரினவாதப் பாசிச இலங்கை அரசு. இன்னொன்று இந்தியப் பேரினவாத அரசு, மூன்றாமவர்கள் மேற்குலகினர். இந்தப் பிரச்சனையை மனிதாபிமானப் பிரச்சனையாகப் பேசும் எல்லா நாடுகளுமே லாபம் கருதியே அங்கு தலையிடக் கோருகின்றன. உண்மையில் இந்த நாடுகள் இந்தப் போரை நிறுத்த நினைத்திருந்தால் இந்தியாவின் விருப்பத்தையும் மீறி இந்தப் போரை நிறுத்தியிருக்க முடியும். ஆனால் இவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது தங்களின் தன்னார்வக் குழுக்களை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என்பதைத்தான். அதாவது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க தன்னார்வக் குழுக்களை அனுப்ப வேண்டும் என்பதுதான். இயற்கைப் பேரிடர் நேரும் போதும் யுத்த அழிவு ஏற்படும் போது தன்னார்வக் குழுக்களுக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விடுகிறது. ஆனாலும் அம்மக்களுக்கு உண்ண உணவோ உடையோ கிடைக்கும் என்பதால் நாம் இதை அமைதியாக சகித்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று.

ஐநாவோ, பான்கிமூனோ, விஜய்நம்பியாரோ எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நாம் கண்கூடாக இலங்கையில் பார்த்தோம். ‘‘பெருந்தொகையான மக்கள் சாட்சியமற்ற முறையில் கொல்லப்பட அதை அமைதியான முறையில் ஐநாவின் கழுத்தறுத்து விட்டார் பான்கிமூன்’’ இன்னர் சிட்டி பிரஸ் கண்டித்தது இங்கே நினைவில் நிறுத்தலாம். சேனல் 4, டைம்ஸ், லே மாண்டோ ஆகிய இதழ்கள் வெளியிட்ட ஆவணங்கள் மட்டுமே நடந்த இனப்படுகொலைக்கு சாட்சியாக இருக்கிறது. இந்தியாவின் செல்லப் பிள்ளையாக ஐநா அவையில் இருக்கும் விஜய்நம்பியார் இலங்கைக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் சென்ற போது அங்கு சென்று விட்டு அவர் நேராக டில்லி வந்து விட்டு ஐநா அவைக்குப் போனார். அங்கே தனது இலங்கைப் பயணம் தொடர்பாக அறிக்கை சமர்பிக்க மறுத்திவிட்டார். புலிகளின் தலைமை துரோகத்தனமாக அழிக்கப்பட்ட அதே நாட்களில் இலங்கைக்குச் சென்ற விஜய்நம்பியார் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து அப்படியே திரும்பி நியூயார்க்கிற்குப் போனார். எல்லாம் முடிந்த பிறகு ஹெலிகாப்டரில் இருந்து போர்ப் பகுதியைப் பார்த்து விட்டு மௌனமாக இன்று வரை விஜயநம்பியார் இருக்க பான்கிமூனோ அங்கே கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான தடயங்கள் இல்லை என்றார். ஆனால் பான்கிமூன் இலங்கை செல்வதற்கு முன் டில்லிக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை செய்து விட்டுச் சென்றதாக செய்திகள் கசிந்தது.

ஆனால் இந்தியாவின் இத்தகைய போர் வெறியும் பிராந்திய அடாவடித்தனமும்தான் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. போர் முடிந்துவிட்டச் சூழலில் இந்தியா கண்டெடுத்த 13&வது சட்டத்திருத்தம் குறித்துக் கூட இந்திய, இலங்கை அரசுகள் பேச மறுக்கின்றன. 13&வது சட்டத் திருத்தத்தின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கை பிரித்த போது அது செல்லாமல் ஆகி விட்ட சூழலில் தமிழ் மக்களுக்கான உருப்படியான அரசியல் தீர்வை வைக்காமல் இலங்கை நிம்மதியாக இருக்க முடியாதபடி தமிழ் மக்கள் நெருக்கடிகளை முன்னெடுக்க வேண்டும். இதுவே தமிழ் மக்கள் இந்திய, இலங்கை அரசுகளுக்கு சொல்ல வேண்டிய செய்தி.

வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மக்களை அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களுக்கு 180 நாட்களுக்குள் அனுப்புவதாகச் சொன்னதாக வும் இந்தியாவுக்கு உறுதி மொழி கொடுத்ததாகவும் இந்தியத் தரப்புத் தெரிவித்தது. ஆனால்

இன்னும் மூன்றாண்டுகளுக்காவது அவர்களை முகாம்களுக்குள் முடக்கி வைத்திருந்தால் மட்டுமே வன்னியின் மீதான இராணுவ ஆதிக்கம் சாத்தியம். அதுவரை வதை முகாம்களுக்குள் தடுத்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை உளவியல் ரீதியிலும் உடல் ரீதியிலும் ஊனமாக்கி வெறும் நடை பிணங்களாக பாரம்பரீய பிரதேசங்களுக்கு அனுப்பினால் இனி தமிழீழம் என்றோ தமிழர் உரிமை என்றோ பேச சாத்தியம் இல்லை.


முப்பதாண்டுகளாய் ஏதோ ஒரு வகையில் நெருக்கடிக்குள் வாழ்ந்த மக்கள் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் வாழ்ந்ததை விட இராணுவத்தின் கீழ வாழ்வதை நினைத்துப் பார்க்கவே முடியாது. எப்படி இன்று உலகெங்கிலும் விடுதலைப் புலிகளுக்கு புதிய எழுச்சியும் ஆதரவும் கிடைத்துள்ளதோ அது போல வன்னியில் மீண்டும் புலிகள் அரசியல் எழுச்சியைப் பெறுவார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதற்குப் பிரபாகரன் தேவையில்லை.


இன்னும் முப்பதாண்டுகளுக்கு உலகத் தமிழ் மக்களை ஆட்டிப் படைக்கப் போகும் ஒரு சக்தி உண்டென்றால் அது பிரபாகரன்தான்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை போராட்டக் குறியீடாக முன்னை விட இப்பொழுது அதிக அளவில் முதன்மைபடுத்துவது மிக எளிதாக முடியும்.

உலகம் முழுவதும் அது இலகுவாக நடந்து வருகிறது. தடைகளும் கட்டுப்பாடுகளும் எதனையும் தடுத்துவிட இயலவில்லை.


ஆனால் தமிழகத்திலோ வழக்கம் போல எவ்வித அரசியல் செயல்பாடும் இல்லாமல் இருக்கிறது. உதாரணமாக பிரபாகரன் இறந்துவிட்டார் என்று சிங்கள ராணுவம் செய்தி பரப்பிய அன்று அதனை மிகப் பெரிய எழுச்சியாக மக்களிடம் மாற்றி இருக்க முடியும். அந்த எழுச்சியை மக்களிடம் ஏற்படுத்தி அதனை போராட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்றிருக்க முடியும். பிரபாகரன் இறந்துவிட்டார், இறக்கவில்லை என்பதைத் தாண்டி அந்த மரணச் செய்தியை அரசியலாக்கி இருக்க வேண்டும்.

ஆனால் ஈழ ஆதரவுப் போராட்டங்களுக்கு தமிழகத்தில் தலைமை தாங்கும் தலைவர்கள் அதற்குத் தயார் இல்லை. அல்லது அவர்களால் முடியவில்லை. இல்லை அவர்களுக்குத் தெரியவில்லை.

விளைவு லட்சக்கணக்கான ஈழ தமிழ் மக்களின் மரணம், தமிழ்நாட்டில் தீக்குளித்த போராளிகளின் மரணங்கள் எவ்வாறு அரசியலாக்கப்படவில்லையோ அதைப் போல பிரபாகரன் மரணமடைந்ததாகச் சொல்லப்பட்டதும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் சவமாய்க் கிடந்தது தமிழகம்.

இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் எக்காலத்திலும் ஈழ ஆதரவு அலையை மக்களிடம் உருவாக்க முடியாது. எழுச்சி மிக்க செயல்பாடு மட்டுமே அதனை உருவாக்க முடியும்.

இப்பொழுது உருவாகியுள்ள புதிய தலைமுறை இதனை முன்னெடுத்துச் செல்லும். செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்.

பொன்னிலா

Comments

ungalin katturai niraiya seithigalaiyum,thannabikkai ootuvathagavum ullathu.valthukkal.aanal tamil naatil thesiya thalaival kollapattathaga sonna naatkalil ingu oru pperiya arasiyalai pannavillai,theriyavillai endra vaatham thavaraanathu.naadu kadntha arasu pesum thalaivargalae india arasai parthu bayanthu aatharavu veadi muyarchikkumpothu,indhiya ranuvathiyae thakki sirai kodumaigalai anupavikkum PERYAR THI.KA.tholarkal ullanar enbathaium pathivu seiyya vendugiraen.