இன்று ஊடகங்கள் ஆனாலும் சரி சில தமிழர்களானாலும் சரி , பத்தி, பகுத்தறிவு , இராணுவ, புலனாய்வு ஆய்வாளர்கலானாலும் சரி விடுதலைப்புலிகளின் தலைமையை “யார் இந்த புலித்தலைமை” என்று விழிப்பதை அவதானிக்க முடிகின்றது.
எனவே எந்த இலட்சியமோ கொள்கையோ இல்லா ஊடகங்குக்கும் அதன் மேதிலிகளுக்கும் “நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால்” என்று அடம்பிடிக்கும் தமிழர்களுக்கும் ஒரு விளக்கம்? ஒன்றே ஒன்றுதான்
தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் தமிழர் தாயக,தேசிய சுயநிர்ணய உரிமையை தீர்மானிக்கும் தகமையுள்ள ஓரே தலைமை ஒட்டுமொத்த தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழீழத் தேசியத்தலைமைதான் மேற்சொன்ன கேள்விக்கான பதிலாகும்!
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியான பின்னடைவை அல்லது இழப்பை சந்தித்துள்ளார்கள் என்பதற்காகவும் போர்காலத்தின் இறுதிக்கால ஒருசில துன்பியல் சம்பவங்களை மேற்கோள்களாகக் கொண்டு 37 வருடகால விடுதலைப்புலிகளின் தியாகத்தை அர்பணிப்புக்களை உன்னதமான உயிர் தியாகங்களை, நம்பிக்கையுடன் நடந்துவந்த இலட்சியப் பயனத்தில் உழைத்தவர்களை கொச்சைப் படுத்துவதற்கும் விமர்சிப்பதற்கும் கேலி செய்வதற்கும் எவருக்கும் உரிமை இல்லை என்பதை மேற்சொன்னவர்கள் அறித்தலும் புரிதலும் அவசியமாகின்றது
அத்துடன் இராணுவ பலம் சிதைக்கப்பட்டது என்பதற்காக புலிகள் அரசியல் இராஜதந்திர பலம் இல்லாதவர்கள் என்கின்ற முடிவும் தவறானதாகும்
தவறுகளைச் சுட்டிக்காட்டும் ஆரோக்கியமான விமர்சனங்களுக்கும் உண்மைகளை ஆதார பூர்வமாக எடுத்து சொல்வதற்கும் எல்லோற்கும் உரிமையுண்டு என்பதை கொள்கையாக ஏற்றுக்கொண்டவர்கள் புலிகள் என்பதையும் இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் .
காரணம் தமிழீழ தேசியத்தின் தலைமை மீது எம் மக்களுக்கு இன்றும் இருக்கும் அசையாத நம்பிக்கையின் அடிப்படையில் பயணித்தலே மிகமுக்கியமானதுமாகும்.
புலித்தலைமை முடிவுக்கு வந்தது, புலித்தலைவர் கொல்லப்பட்டர், புலிகளின் மாற்றுத்தலைமையும் கடத்தப்பட்டார். எனவே புலித்தலைமை மாற்றப்பட வேண்டும்,அதாவது வரலாற்றின் நல்ல பக்கங்கள் அனைத்தையும் கழுவித்துடைத்து விட்டு வரலாற்றில் எங்கெல்லாம் வடு இருக்கின்றதோ, வரலாற்றில் எங்கெல்லாம் சில தவறுகள் இடம் பெற்றுள்ளதோ அவற்றை மட்டும் தம் மடியில் கட்டிக்கொண்டு அலைகின்றது சில “முற்போக்கு சிந்தினையாளர்கள் வட்டம்”
புலித்தலைமையால் எதுவும் செய்ய முடியாது.
என்று கூக்குரலிட்டு எகத்தாளமிடுபவர்கள் வேறு யாருமல்ல
சில இலங்கை இந்திய ஊடகத்தினரும், சில ஈழத்தமிழினத்தின் முற்போக்குவாதிகள் என்ற போர்வைக்குள் இருக்கும் பிற்போக்கு வாதிகளும்,
வருமானத்தை நோக்காகக்கொண்ட சில பத்தி எழுத்தாளர்களுமே.
இது ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் அரோக்கியமானதல்ல என்பதை உணர்ச்சி வசப்படும் அவர்களால் உணரமுடியாது. நாளும் பொழுதும் இந்த இனத்தின் விடுதலைக்காய் போராடி வீழ்ந்த 35000க்கு மேற்ப்பட்ட போராளிகளின் கல்லறைகள் மீது இவர்கள் கறைபூசாத குறை!
அந்த போராளிகள் எந்த தலைமை நேசித்தார்களோ, அவர்கள் எந்த தலைமையால் வளர்க்கப்பட்டார்களோ அவர்களை புறந்தள்ளும் இந்த வட்டத்தினால் அதிக பட்சம் சாதிக்க கூடியது புலிகளை இன்றும் விமர்ச்சிப்பது என்ற பெயரில் தங்களை தாங்களே விமர்சிப்பது. தங்களுக்கான இருப்பை நிலைநிறுத்துவது.
முள்ளிவாய்க்காலில் கடைசிவரை நின்று வந்த மக்கள் இன்றும் தலைமைபற்றி நன்மதிப்பை வைத்துள்ள அதே நேரம் மக்களுகாகவே மரணத்தை தழுவுதல் என்ற தலைமையின் இலட்சிய உறுதியையும் பெருமையாகவே பேசுகின்றனர்.
புலிகளின் தலைமையை ஏற்றுக்கொண்டவன் என்ற வகையில் நான் மாற்றுக்கருத்து என்ற வட்டத்தை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, இவர்களின் மாற்றமில்லா கருத்துக்களை ஏற்க்கொள்ள முடியாதபடி அவர்களின் செயல்கள் இருப்பதை உணர்கின்றேன் .
இன்றும் தலைமைச் சண்டைக்கு இவர்கள் தயார் எனினும் தடை முகாம்களில் இருக்கும் மக்களை பற்றி கரிசனை அரிதாகவே இவர்கள் மனதில் படமாகின்றது. முகாம்களில் குடிநீரே இல்லாத போதும் அங்கு ஒழுங்காக உணவு கிடைக்கின்றது, அது கிடைக்கின்றது இது கிடைக்கின்றது என்று தமது வாய்க்கு வந்தபடி பேசக்கூடியவர்களாக இவர்கள் வந்து விட்டார்கள்.
ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட முடியாதவர்கள், மாற்றுக்கருத்து என்ற பெயரில் எம் மானத்தையும் தமது தன்மானத்தை விற்க்கும் செயல் வருந்தத்தக்கது.
கால ஓட்டத்தில் இன்று அனைவரும் புலித்தலைமை என்று விழிக்கும் நிலைக்கு வந்திருப்பதும் அதனிலும் வருத்ததக்கது.
புலித்தலைமை என்று இவர்கள் கூறும் போது “இது எங்கோ கேட்ட குரல் என்று எனக்கும் புரிகின்றது” அதே குரல்கள் இன்று புலத்தில் ஒலிப்பது ஆரோக்கியமானதல்ல. தமிழீழ தேசியத்தலைமை ஒன்றை தவிர புலித்தலைமை என்ற ஒன்றை நான் அறியவில்லை. முள்ளிவாய்க்காலில் மூண்ட தமிழின அழிப்பு தமிழ் தேசியம் மீதான கறையாகவே பலரும் கருதுகின்றனர்
முட்டாள் தனமான சிந்தனைகள், முடிவெடுக்க முடியாது புலம் தேடி ஓடி வந்தவர்களின் இயலாமை எல்லாம் புலிகள் என்ற தமிழீழ தேசிய தலைமை மீதான கோபமாக மாறுவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தியாவை ஆதரிக்கும் இவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இந்தியாவில் காலில் விழ்ந்து மடிப்பிச்சை கேட்க வேண்டும் என்று கோருகின்றனரே தவிர தமிழீழ விடுதலைப்போரில் நாம் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒன்று பட்ட தமிழினமாய் ஒன்றுபட இவர்கள் எப்போதுமே தயாராய் இருந்ததில்லை.
இவர்களின் இந்தச் செயலால் கடந்த ஆறு மாதங்களாக ஈழமண்ணில் நடைபெற்று வரும் கொடிய நிகழ்வுகளாலும் அதை முன்னிறுத்தித் தமிழக மண்ணில் அரங்கேறிவரும் நாடகங்களாலும் மிகுந்த மனநெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் சமீப காலமாகத் தமிழகத்தில் தமிழர் போராட்டத்தை சாட்டி அரசியல் நடத்தி வந்த தமிழக தலைமைகள் சில உலகத்தமிழருக்கான ஈழப்பிரகடனம் என புதிய ஏமாற்று வேலைகளில் களமிறங்கி தமிழீழ மக்களுக்கும் தாமே தலைமை என்பதை நிலை நிறுத்த முற்படுகின்றனர்
அதே சமயம் ஈழத்துப்போரில் மிக முக்கியப் பங்கு வகித்துத் துரோக நாடகம் ஆடிய இந்தியர்கள் வெறும் ஆதரவு என ஒரு குறுகிய நோக்கத்தோடு சந்தர்ப்பவாத அரசியல் புரிவதுவும். மக்களின் மரணத்துக்கும் அவர்கள் மீது நடைபெற்று வந்த கொலைவெறித் தாக்குதல்களுக்கும் தமிழகப் புலி ஆதரவு அரசியல்வாதிகள் முக்கியக் காரணமாயிருந்திருக்கிறார்கள் என தமிழகத்தின் தமீழீழ ஆதரவு நிலைப்பாட்டைக்கொண்ட மக்கள் நம்புகின்றனர்
ஒரு நெருக்கடியான பின்னடைவை ஈழப்போர் சந்தித்த பின்னரும், ஒரு தற்காலிகத் தோல்வியை ஏற்று மக்களைக் காப்பாற்ற ஈழத்தமிழினத்துக்கு யோசனை கூறுவதை, அதற்கான வழிகாட்டுதல்களையும் உதவிகளையும் அளிப்பதை விடுத்துத் தம்வீர வசனங்களால், வாய்ச்சவடால்களால், போலியான ஆருடங்களால் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை குறிப்பாக எமது நம்பிக்கை நட்சத்திரங்களான இளம் சமுதாயத்தையும் ஏமாற்றி அவர்களின் உண்மையான உணர்வுகளை கட்டுப்படுத்தி கொம்புசீவி விட எத்தணிப்பதையும் நாம் மறந்துவிட முடியாது?
பத்தாயிரம் பேரைத் திரட்டிக்கொண்டு வன்னிக்குச் செல்வோம், கடலை நீந்திக் கடந்து போரில் பங்கேற்றுத் தமிழீழத்துக்கான போரில் ஈடுபடுவோம் என தமிழக தமிழர்களின் உணர்வுகளைத் தூண்டியவர்களால் தாக்கத்தை ஏற்படுத்தும்படியான எந்தவொரு அர்த்தமுள்ள போராட்டத்தையும் நடத்த முடியாமல் போனது.
வேதனையானது அப்பாவிகளான இளைஞர்களில் பலர் ஈழத் தமிழர் படும் துயர் தாளாமலும் இந்திய அரசின், சர்வதேசச் சமூகத்தின் கவனத்தை ஈழத் தமிழர் பக்கம் ஈர்க்கவும் செயல்பட வைக்கவும் தீக்குளித்தது நினைவுக்கு வருகிறது.
அந்த இழப்புகளை அரசியலாக்குவதற்கும் பின்னர் தேர்தலில் வாக்குகளாக்கவும் அவர்கள் பட்டபாடு நினைவுக்கு வருகிறது. புலிகளின் பெயரால் தமிழீழ ஆதரவாளர்கள் பலர் தமிழக மண்ணில் நிகழ்த்திய அரசியல் துரோகம் இது. இதை உணராத புலம்பெயர் தமிழர்களும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஊடகங்களும் அவர்களை காக்குக் இரட்சகர்களாக கருதுதல் மடமையானது
போரில் விலை மதிப்பற்ற தளபதிகள் போராளிகள் கொல்லப்பட்ட பின்னரும் நான்கே நாட்களில் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட பின்னரும் ஆயிரக் கணக்கான மக்களை சிங்கள இராணுவம் துரத்தித் துரத்தி வேட்டையாடப்பட்டுக்கொண்டிருந்த வேளையிலும் தமிழகத்தின் தலைவர்கள் புலி நாமம் போடும் ஆதரவாளர்கள் பிரபாகரன் சாகவில்லை எனவும் அவர் உயிர்த்தெழுவார் எனவும் ஆருடம் கூறிக்கொண்டிருந்தார்கள்.
கொல்லப்பட்ட மக்களைப் பற்றியோ முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களைப் பற்றியோ இவர்கள் யாரும் பேசவில்லை. குறைந்தபட்சம் கைதுசெய்யப்பட்ட புலித் தலைவர்களைப் பற்றியும் உயிர் தப்பிக் காடுகளில் பதுங்கியிருக்கும் புலிகளைப் பற்றியுங் கூட அவர்களால் பேச முடியவில்லை.
புலிகளுக்கும் ஈழப் போருக்கும் ‘பேராதரவு’ கொடுத்துவந்ததமிழகப் புலனாய்வு இதழ்கள் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக வந்த செய்திகளைமுன்வைத்துத் தம் விற்பனையைப் பெருக்கிக்கொள்வதில் தீவிரம் காட்டின.
பிரபாகரன் கொல்லப்படவில்லை, அவர் தப்பிவிட்டார், விரைவில் மீண்டு வரப்போகிறார் என கிராபிக்ஸ் பட ஆதாரங்களோடு ஒரு வார இதழ் செய்திக் கட்டுரைகளை வெளியிட அதற்கு எதிரிடையாக அவர் கொல்லப்பட்டுவிட்டார் என மற்றொரு வார இதழும் ஆதாரங்களோடு செய்திக் கட்டுரைகளை வெளியிட்டது.
போர் திடீரென முடிந்துபோனதால் ஏற்பட்ட இழப்புகளை இவ்வகையான ‘புலனாய்வு’க் கட்டுரைகள் மூலம் அவை ஈடுகட்டிக்கொண்டன. அரசியல் நீக்கம் செய்யப்பெற்ற ஆயுதந்தாங்கிய போரைத் தம் அரசியல் ஆதாயங்களுக்காக ஆதரித்த பக்தர்களால் வேறு என்ன செய்ய முடியும்?
இவர்களின் இந்த கூத்துக்களை அப்படியே கொப்பியடிக்கும் சில புலத்துப் புல்லுருவிகள் தமிழகத்தின் கனவுலக கற்பனைகளையே புலத்து மக்களிடமும் திணிக்க முற்பட்டனர் அத்தோடு உறுதியோடு வாழ்ந்த மக்களை நிலைகுலையச்செய்தனர்
புலிகளின் வீரவரலாறு, புலிகளின் போராட்ட வரலாறு இவையிரண்டுக்கும் இடையேதான் தமிழ்ரின் உண்மையான வரலாறு இருக்க முடியும். ஆயிரக்கணக்கான கருவறைகளச் சுமக்கும் அந்த மாவீரர் கல்லறைகளில் துயிலும் மாவீரர்கள் அனைவரையும் ‘துரோகிகள்’ என யாராலும் அடையாளப்படுத்திவிட முடியாது.
ஒரு விடுதலை இயக்கத்தின் போர்கள தவறுகள் ஒரு போராட்டத்தின் நியாயத்தை முடக்கிவிட முடியாது. பயங்கரமான ஒரு யுத்தத்தில் நிற்க வேண்டிவந்த படையணிகளை, மனித பேரவலம் என்கின்ற மதிப்பீடுகளின் இறுகிய பிடிக்குள் அடக்கி தாயக விடுதலை என்ற இலட்சிய பயணத்துக்காய் போர்முனை சென்ற சூரியப் புதல்வர்களை வெறும் ‘பயங்கரவாதிகள்’ எனப் புறந்தள்ளிவிட முடியாது.
பிராந்திய நலன், நாடுகளுக்கிடையிலான இராணுவபொருளாதார உறவுகள் என கட்டமைக்கப்பட்டிருக்கும் இவ்வுலகைப் புரட்டிப்போடும் பெருங் கனவொன்றுக்கான நியாயங்கள் உள்ளவரை சுயநலமற்றவர்களாய்ப் புரட்சிகர இயக்கங்களில் அணி சேரும் இளைஞர்களின் தியாகங்களுக்கான தேவைகளும் நியாயங்களும் இருந்து வரும்.
அதே நேரத்தில் எந்தவொரு நியாயத்தின் பெயராலும் ஒரு சர்வாதிகாரத்தைக் கட்டமைக்க, ஒடுக்கு முறையைக் கட்டவிழ்த்துவிட யாருக்கும் உரிமையில்லை. காணாமல் போனவர்களின் நிலையைக் கண்டறிவதில் சட்டப்படியும் நியாயப்படியும் அக்கறை காட்டாத சிங்களப் பேரினவாத அரசின் சட்டங்களும் நீதிமன்றங்களும் இன்றைய வன்னி முகங்களில் சிறைபட்டும் வதை பட்டும் கிடக்கும் எம் மக்களை போன்றவர்களின் தற்போதைய நிலை குறித்து எதுவும் சொல்லப்போவதில்லை.
சிறைச் சுவர்களின் பின்னால் நீளும் அந்த இருள்வெளியில் நிகழக்கூடிய அபாயங்கள் கொழும்பிலும் தென்னிலங்கையிலும் உள்ள சிங்கள இன வெறியர்களுக்கான கொண்டாட்டங்களாக மாறியிருப்பது நிலைமையை மிகப் பயங்கரமானதாக்கியிருக்கிறது. இது போன்ற ஒரு சூழலில் தமிழகத்தில் நடப்பவற்றைப் பற்றி தாயகத்து மக்களுக்கும் புலம்பெயர் மக்களுக்கும் இப்போது தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்காது
கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாகத் தன்னெழுச்சியான போராட்டங்கள் நிகழ்ந்தன. இவற்றில் பங்கேற்றவர்களில் பலர் ஈழத் தமிழரின் மேல் உண்மையான அக்கறை கொண்டவர்கள். பெண்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், அரவானிகள் ஆகிய பல்வேறு பிரிவினரும் ஈழத் தமிழர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன ஒடுக்குமுறைகளுக்கெதிராகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். இவர்களது உணர்வுகளைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
ஆனால் தமிழகத்தில் ஈழத்தமிழருக்கான அவர்களின் குரலாய் ஓங்கி ஒலிக்கக்கூடிய நம்பிக்கையான ஒரு நேர்மையான தலைமை இல்லாமல் போனதால், தலைமையேற்றவர்கள் பலரின் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளால் அப்போராட்டங்களால் ஈழத் தமிழரின் மீதான சிங்கள ராணுவத்தின் கொடூரமான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவோ சர்வதேசச் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவோ முடியாமல் போனது என்ற உண்மை எத்தைபேருக்கு தெரிந்திருக்கும்.
இதே வேளை அங்கும் சரி இங்கும் சரி ‘தமிழீழ ஆதரவாளர்கள் மனநிலையில் இப்போதுகூட மாற்றங்கள் ஏற்பட்டுவிடவில்லை.இப்போதிலிருந்தே நவம்பர் மாதம் மாவீரர் நாளை எப்படிக் கொண்டாடுவது என்று திட்டமிட்டுவருவதாகச் செய்தி.யாரை அழைப்பது? ‘தம்பி’ சீமானையா, பாரதிராஜாவையோ இல்லை வை.கோ அண்ணாச்சியையோ வேறு யாரையுமா என்னும் குழப்பத்திலிருக்கிறார்கள். போரில் வெற்றிபெற்றால் என்னவெல்லாம் நடக்கும் எனக் கனவுகளில் மிதந்துகொண்டிருந்தவர்களுக்குத் தோல்வியைப் பற்றிச் சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்ப்பது சிரமமாய்த்தானிருக்கிறது.
ஆனால்
இவர்களின் பின்னால் ஈழ மக்களின் பால் அக்கறைகொண்ட அவர்களது நிலையறிந்து கொதிப்புற்றிருக்கிற எண்ணற்ற தமிழ்மக்கள், இளைஞர்கள் இருக்கிறார்கள்.
கொடுஞ்சிறைகளிலும் இலங்கையின் கிழக்கிலும் வடக்கிலும் உள்ள காடுகளுக்குள்ளும் சிதறுண்டு கிடக்கிற போராளிகள் வாழ்வை எண்ணி புலம்பெயர் தமிழ்ச்சமூகம் தவறுகளை ஆராய்ந்து ஒரு நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய நிலையில் யாருமே இல்லை.
எனினும் இவர்களால் தமது இனப்பெருமைகளையும் வீராவேசத்தையும் தற்காலிகமாகவேனும் துறந்துவிட்டு ஈழத்தமிழர்கள் உடனடியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிற மனிதஉரிமை, வாழ்வியல் நெருக்கடிகள் பற்றியும் இனச் சிக்கலுக்கான தீர்வைக் குறித்தும் தொலைநோக்குடன் அர்த்தமுள்ள வகையில் எதையாவது யோசிக்க முன்வருவார்களா என்பது கேள்விக்குறிதான்.
தமிழனின் வீரம் பற்றிய புறநானூற்றுக் கால வசனங்களுமே இன்னமும் அவர்களிடம் எஞ்சியிருப்பவை.படிக்கவும் திருமாவளவனின் உரையினை இதற்கு காரணம் புலிகள் அல்ல… *தகவல் பிரேமா ரேவதி
மாற்றுக்கருத்துடையவர்கள் என்போரின் மற்றும் உண்மையான மாற்றம் மிக்க தமிழீழ தலைமைத்துவத்தை ஏற்க முடியாத அவர்களது விட்டுக்கொடுத்து இனத்தின் வாழ்வு தொடர்பாக சிந்திக்க முடியாத மனது!
இப்போதும் இவர்கள் தம் இனத்தைவிட தமிழீழ தேசிய தலைமை மீதான தமது வசைபாடல்களை தொடர்ந்து செய்வதால் இவர்கள் எப்போதும் திருந்த மாட்டார்கள் என்பது திண்ணம்.
தேசியப் போராட்டத்தை முன்னெடுத்து மக்களுக்கான விடிவை ஏற்ப்படுத்த வேண்டியவர்கள், தாம் ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் போல் மற்றவர்களை கேள்வி கேட்பது மடமை!இன்றைய இளைஞர்கள் மீது இந்த விடுதலைப்பாரத்தை சுமத்திய பாரிய பொறுப்பு இவர்களையும் சாரும் என்பதை இவர்கள் மறந்து விடுகின்றனர்.
37 வருடம் இந்த ஆயுதப்போராட்டம் இலக்கை அடையாமல் தொடர்ந்தது என்றால்
அதற்கு ஒற்றுமைப்படாத எமது இனம் காரணமே அன்றி விடுதலைப்புலிகளோ, அல்லது தேசியத்தலைவரோ அல்ல!
இருந்தாலும், மீண்டும் இவர்களுக்கான சந்தர்ப்பம் வந்திருக்கின்றது, முயன்று பார்க்கட்டும் சிங்களவன் காலில் வீழ்ந்து கிடக்கட்டும், இந்தியாவின் செருபாகட்டும், மேடைபேச்சில் மயங்கி போதித்தனம் பண்ணும் தமிழகதலைவர்களை நம்பியே காலத்தை ஓட்டட்டும்
ஆனால் தமிழகளுக்கான தாயகம் ,தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற தமிழ் மக்களின் அபிலாசைகளை இவர்களால் பெற்றுத்தர முடியுமெனில்…
இந்தியாவிற்காக வக்காலத்து வாங்கும் இவர்களால் அவர்கள் காலடியில் தான் நாம் கிடக்க வேண்டும் என விரும்பும் இவர்களால் தமிழீழ விடுதலைப்போராட்ட முன்னோக்கி நகரும் எனில்……….
ஆனால் ஒடுக்குமுறைகள் உள்ளவரை போராட்டம் இருக்கும். நம்முடைய தவறுகளுக்கும் கையாலாகாத்தனங்களுக்கும் வரலாறுதான் தீர்ப்பெழுதும்
இது இவர்களுக்கான காலம்…என்பதை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம்
Comments
//தமிழகத்தின் தலைவர்கள் புலி நாமம் போடும் ஆதரவாளர்கள் பிரபாகரன் சாகவில்லை எனவும் அவர் உயிர்த்தெழுவார் எனவும் ஆருடம் கூறிக்கொண்டிருந்தார்கள்//
///"ஒரு விடுதலை இயக்கத்தின் போர்கள தவறுகள் ஒரு போராட்டத்தின் நியாயத்தை முடக்கிவிட முடியாது"///
இவ்வளவு பேரையும் தாக்கோ தாக்கு என்று தாக்கி விட்டு தானும் ஒரு தாக்கு தாக்கியிருக்கின்றார்
இவருக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை
இவர் தாக்கிய தமிழ்நாட்டு உணர்வாளர்கள் புலிகளையோ தலைவரையோ குற்றம் சொல்லவில்லை எள்ளி நகையாடவில்லை
ஆக அவர்கள் செய்தது எதுவும் எமக்கு பலன் தரவில்லை
சிலர் இதில் அரசியல் சித்து விளையாடியிருக்கின்றார்கள் அது எல்லோருக்கும் தெரியும்
தமிழகத் தலைவர்கள் கையாலாகாதவர்கள் அல்லது பச்சோந்திகள்
இப்படியானவர்களது கட்டுரைகளை எல்லாம் ஏதோ ஒன்றை சகித்துக்கொண்டு பிரசுரிக்க வேண்டிய கையாலாகதவர்களாக நாமும் இருக்கின்றோம் என்பதை இட்டு வருத்தமடைகின்றேன்
நம்மில் தேசியத் தலைமையின் பிரசன்னமின்மை என்பதன் பின்னர் தான் தமிழர்களின் பலவீனம் நமக்கு வெளிப்படையாகத் தெரிகின்றது
இப்போதைக்கு புலிகளையோ தேசியத் தலைமையையோ இழிவு படுத்தாத வரைக்கும் என்னவாவது எழுதட்டும் செய்யட்டும்
"காகம் கத்தி மாடு சாகாது"