எந்தவொரு சமுதாயத்தின் எதிர்காலப் போக்கும், அதன் கலாச்சார,பொருண்மிய நிலைப்பாடுகளும் சமுதாய வளர்ச்சியும் அந்த சமுதாயத்தினைச் சார்ந்த இளையோரின் பங்களிப்பிலேயே முக்கியமாகத் தங்கியிருக்கின்றன. இது உலகின் அனைத்து சமுதாயங்களிற்கும் பொருந்தும்.ஆனால் ஈழத்தமிழர்கள் என்ற எமது இன சமுதாயத்திற்கு தற்போதைய நிலைமையில் தமிழ் இளையோர்களின் பங்களிப்பென்பது இன்றியமையாத தேவையாக மாறியிருக்கின்றது.
ஈழப்போராட்டமானது தற்போதைய இளையோர்களின் வளர்ச்சிக்காலங்களினூடேதான் கடந்து வந்திருந்தது. குண்டுச் சத்தங்கள் தொட்டில் தூக்கத்தினைக் கலைத்தபோது கண்முழித்தோம், பிஞ்சு வயதில் பதுங்கு குழிக்குள் தூங்கியெழுந்தோம். இரவோடிரவாக சொந்த ஊர்விட்டு இடம்பெயர்ந்தபோது இனம்புரியாத வலியை உணர்ந்தோம். அறியாத வயதில் அவையெல்லாம் ஏன் என்று புரியவில்லை. ஆனாலும் அந்த வலிகளின் வடுக்கள் மட்டும் இன்னும் அழியவேயில்லை.
கொஞ்சம் புரியும் வயதிலும் வலிகள் தொடர்ந்தன. ஆனாலும், ஏன் என்ற கேள்விக்கு முழுமையான பதில்கள் தெரிந்திருக்கவில்லை. பின்னர் வந்த காலங்களில்... முழுமையாக தெரிந்து கொண்டபோது, அதுவரைகாலமும் அனுபவித்து வந்த வலிகள் அனைத்தும் சேர்ந்து விடுதலை உணர்வாய் மாற்றம் பெற்றன. இவ்வாறான விடுதலை உணர்வு இன்றைய இளையோர்கள் அனைவர் மனத்திலும் என்றும் அணையாத தீயாக எரிந்துகொண்டுதான் இருக்கின்றது.
அந்த விடுதலையுணர்வை தலைவன் வழிநின்று களத்தில் காட்டியோர் புலிகள். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை உலகறியக் கொண்டுவந்தது புலிகளின் தீரமிக்க, தியாகம் நிறைந்த போராட்டங்களே. அத்தனை தீரங்களையும் செய்து காட்டியவர்கள் இளையோர்களே.
ஆனால் நடந்து முடிந்திருக்கும் வன்னிச் சமரின் பின் புலிகளை அழித்துவிட்டோம். இனிமேல் புலிகள் என்ற நாமமே இல்லாதொழிக்கப்படும் என சிங்கள அரசு அறிக்கைவிட்டு வருகின்றது. முப்பது வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டுவந்த ஆயுதப் போராட்டமானது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பது உண்மையே.
சில நாடுகளின் சதிவேலைகளும்,சர்வதேசத்தின் பாராமுகமும், சிங்களத்தின் கொலைவெறித்தனமான போரும் வன்னி மண்ணில் பேரழிவை ஏற்படுத்தியிருந்தன. இந்தப் பேரழிவுக்குள் தமிழர்களின் ஆயுதப் போராட்ட வலுவும் பெரும் பின்னடைவைச் சந்தித்து புலிகளும் அஞ்ஞாதவாசம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இதுவரைகாலமும் ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாக, பலமாக இருந்துவந்த புலிகளின் பின்னடைவிற்கு பிற்பாடு , அவர்கள் தொடர்ந்த தமிழினத்திற்கான போராட்டம் கேள்விக்குரியதாக மாறியிருக்கின்றது. ஆயிரமாயிரம் மாவீரர்களின் தியாகங்கள் நிறைந்த போராட்டத்தின் இலட்சியப்பாதை தடம் மாறிவிடுமோ? என்ற ஐயப்பாடும் தற்போது உருவாகியுள்ளது.
ஆனாலும், முன்னதாகவே தமிழர்களின் போராட்ட பரிமாணங்கள் மாற்றமடைந்து புலம்பெயர் தேசங்களிலும் பரிணமிக்கத் தொடங்கியிருந்தன. தீர்க்க தரிசனமிக்க தமிழீழ தேசியத் தலைவரின் கடந்த மாவீரர்தின உரையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களை நோக்கி குறிப்பாக இளையோர்களை நோக்கித் தெரிவிக்கப்பட்ட கருத்தானது, புலம்பெயர் தேசங்களில் இனிவரும் காலங்களில் தொடரப்படும் போராட்டங்களில் இளையோர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தினையே குறித்து நிற்கின்றது. தாயகத்திலுள்ள இளைய தலைமுறையினரின் போராட்ட உணர்வுகள் அடக்குமுறைகளினால் அடக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் இளைய தலைமுறையினரின் முழு அளவிலான பங்களிப்பு அவசியமாகியிருக்கின்றது.
திட்டமிடல்களுடன் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்களில் இளையோரின் பங்களிப்பும் பெரியோர்களின் வழிநடத்தல்களும் ஒருங்கிணைந்து செயற்படுத்தப்படவேண்டும். இதுவரை நாட்களும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இளையோர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தன. அவர்களோடு பெரியோர்களும் தங்களது ஒத்துழைப்பினைக் கொடுத்திருந்தார்கள். இளையோர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்கள் சர்வதேசத்தின் கவனத்தினை பெருமளவில் ஈர்த்திருந்தன. அதன் விளைவாக அவர்களினது நிலைப்பாடுகளிலும் மாற்றங்களை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட நிலையில், அறவழிப் போராட்டத்திற்கான புதிய போராட்டப் பாதை திறக்கப்பட்டிருக்கின்றது. சர்வதேசத்தினை நோக்கி தமிழர்களது நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டிய காலச் சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. வதை முகாங்களில் சிக்கித் தவிக்கும் உறவுகளை மீட்டுக் காப்பாற்ற வேண்டியது நமது கட்டாயக் கடமை. தாயகத்தில் நடந்த படுகொலைகளும், நடந்தேறும் துயரங்களும் அதனாலான வலிகளும் மற்றவர்களுக்கு தெரியாவிட்டாலும் நமக்கு நன்கே தெரியும். அந்த வலிகளும் புரியும். நமது இனத்தின் அவலங்களை உலகின் கண்களுக்கு வெளிக்கொணர வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடப்பாடும் கடமையுமாகும். நமது உணர்வெழுச்சிகொண்ட போராட்டங்கள் மூலம் அவை வெளிப்படுத்தப்பட வேண்டும்.
தமிழினத்தின் தாயகவிடுதலைப் போராட்டம் இளையோர்களின் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், போராட்டத்தினை நிலைநிறுத்தி அதை மேலும் வீரியத்துடன் தொடர்ந்து நடத்தவேண்டிய கடப்பாடும் அவர்களின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது.
ஆயுதப் போராட்டமானது தமிழர்களை மிகவும் பலப்படுத்திய ஒன்றாக விளங்கியபோதும் அதுவே தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தினை சர்வதேசம் "பயங்கரவாதம்" என பொய்முத்திரை குத்தவும் காரணமாக அமைந்தது.
புலிகளைப் பொறுத்தவரையில், நாங்கள் "பயங்கரவாதிகள்" இல்லை. அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடும் "விடுதலைப் போராளிகள்" என்பதை அனைத்துலகத்திற்கு எடுத்துக்கூறியும், செயலில் காட்டியும் அதனை நடைமுறையில் கடைப்பிடித்தும் வந்தனர். ஆனால்,சர்வதேசம் அதனை ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.
இன்றுவரைக்கும் ஈழத்தமிழர்களின் போராட்டம் நியாயமானது என்பதையோ அல்லது சிங்கள பேரினவாதிகளால் தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள், கொன்றொழிக்கப்படுகின்றார்கள் என்பதனையோ முழுமையாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்காக ஆதரவுக்குரல் கொடுக்க எந்தவோரு நாடும் முன்வரவில்லையென்பது தமிழர்களின் துரதிஷ்டம் என்றே கருதத் தோன்றுகின்றது.
ஈழ விடுதலைப் போராட்டத்தினைப் பொறுத்தவரையில் அதிகளவான இழப்புக்களைச் சந்தித்ததும் அதிகளவில் பாதிக்கப்பட்டதும் இளம் சமுதாயமே. கடத்தப்படுவோர், காணாமல் போவோர், கைது செய்யப்படுவோர், சுட்டுக்கொல்லப்படுவோர், சித்திரவதைப்படுத்தப்படுவோர் என அனைத்திலும் இளைஞர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றார்கள்.
அண்மையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் காணொளிக்காட்சியில்கூட அப்பாவித்தமிழ் இளைஞர்கள் படுகோரமாக சுட்டுப் படுகொலை செய்யப்படுவது அம்பலமாகியுள்ளது. உண்மைகள் எப்பொழுதுமே உறங்கிவிடுவதில்லை என்பதற்கிணங்க... சிங்களக் கொலைவெறியர்களின் அட்டூழியத்தினை அப்பட்டமாக வெளிக்கொணர்ந்திருந்தது அந்தக் காணொளிப் பதிவு.
இதைப்போன்ற பல ஆதாரங்கள் இன்னும் வரக் காத்திருக்கின்றன. ஆனால், இதுபோன்ற ஆதாரங்களை சாட்சியங்களாக்கி உலகத்தின் கண்முன் நிறுத்தி, தமிழர்களுக்கான நீதி பெறப்படுவதற்கான முயற்சிகள், முன்னெடுக்கப்படும் போராட்டங்களினால்தான் சாத்தியப்படக் கூடியனவாக இருக்கும்.
இளையோரினால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம், பரப்புரைப் போராட்டம், நடைப்பயண கவனயீர்ப்பு,சிங்களத்தின் தமிழின அழிப்பினை வெளிக்கொணரும் பிரச்சாரப் போராட்டம் என்பன புலம்பெயர் தேசங்களில் பெரும் பாதிப்பினை உண்டுபண்ணி சாதகமான விளைவுகளை உருவாக்கத் தொடங்கியுள்ளன.
செய்தி ஊடகத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை என்பவற்றிலும் இளையோரின் பங்கு அதிகமாக இருப்பதனால், போராட்டங்கள் தொடர்பான தகவல்களும் விளக்கங்களும் அனைத்துலகத்திற்கும் இலகுவாக சென்றடையக்கூடியதாக அமைந்திருக்கின்றது.கல்வியறிவு, செயற்திறன், வேகம், விவேகம், விடுதலையுணர்வு என அனைத்திலும் மேலோங்கி நிற்கும் இளந்தமிழ் சமுதாயத்திற்கு அனுபவமிக்க,பக்குவமிக்க, விடுதலைப் போராட்டம் தொடர்பான ஆழ்ந்த சிந்தனையுள்ள பெரியவர்களினது ஆதரவும் வழிகாட்டலும் கிடைக்குமாக இருந்தால் அனைத்துமே சாத்தியப்படக் கூடியதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
எங்கள் செல்வங்களே! ஈழத் தமிழ் இளையோரே!
உங்கள் ஈழத் தமிழினத்தின் எதிர்கால வரலாற்றை தீர்மானிக்கப் போவது நீங்களும் உங்கள் உணர்வெழுச்சிமிக்க போராட்டமும்தான்.
ஆயுதமேந்தி போராட வேண்டிய அவசியம் இப்போதில்லை. உங்களால் முடிந்தவரைக்கும் அறவழிப் போராட்டத்தினை உணர்வெழுச்சியோடு அறிவுவழி கொண்டு முன்னெடுங்கள். தற்போதைய காலத்தின் கட்டாயத்தில், இதனை மட்டும்தான் நாம் மேற்கொள்ளமுடியும். இத்தருணத்தில், இதை சரிவர மேற்கொள்வோமானால் எம் விடுதலைக்கான காலம் வெகுதொலைவில் இருக்காது.
உறவுகளே!
உங்கள் சகோதரங்களின், மாவீரர்களின் இலட்சியக் கனவினை வீணாக்கி விடாதீர்கள். அவர்களின் தியாகங்கள் உங்களுக்கானதே. உங்களுக்காக, உங்களின் உரிமை தேசத்திற்காக தங்கள் இன்னுயிரையே தியாகம் பண்ணியவர்கள் இந்த மாவீரர்கள். அந்த தன்னலமற்ற ஆன்மாக்களின் தாயகக் கனவினை ஈடேற்ற வேண்டிய கடமை நம் முன்னே வைக்கப்பட்டுள்ளது. நம் தாய் மண்ணுக்காக நம்மால் முடிந்தளவுக்கு தாயகக் கடமையை ஆற்ற வேண்டிய சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது.
இதையும் நாம் தவற விடுவோமானால் "நான் தமிழன்" என்று சொல்லிக்கொள்ள அருகதையற்றவர் ஆகிவிடுவோம். அவர்களை விதைத்த அந்த புனித பூமியில் கால் வைக்கக்கூட உரிமையற்றவர்கள் ஆகிநிற்போம்.
இனிவரும் காலங்களை எமக்குரியதாக மாற்றிக்கொள்ளவேண்டும். இப்பொழுதும் போராடாமல் இருப்போமானால், எம் உறவுகள் எதிரியின் கைகளினால் சின்னாபின்னமாக்கப்பட்டு அழிக்கப்படுவதையோ, இவ்வளவு காலமாய் செய்த அத்தனை தியாகங்கள்,போராட்டங்கள் அனைத்தும் வீணடிக்கப்படுவதையோ, தமிழர் தாயகம் சிங்கள வல்லூறுகளின் கூடாரமாகுவதையோ யாராலும் தடுக்க முடியாததாகிவிடும்.
உயிரைக் கொடுத்து போராடிய மாவீரர்களின் கனவை நனவாக்க நம் உணர்வைக் கொடுத்து போராடுவோம்.
இழப்புக்களின் வலிகளை உணர்வுகளாக்கி மீண்டும் உயிர்த்தெழுவோம்! துவண்டு போய் இருந்த நிலைமாற்றி நிமிர்ந்தெழுவோம்! உறவுகளைக் காக்க உணர்வெழுச்சியோடு பொங்கியெழுவோம் ! இறுதிவரை... போராடுவோம்!
தமிழரிற்கு நிரந்தரமான விடுதலை கிடைக்கும் வரைக்கும்... இலட்சியமான ஈழ தேசத்தினை அடையும் வரைக்கும்... நமது போராட்டம் தொடரும், அதுவரைக்கும் ஈழத் தமிழினம் ஓயாது என்பதனை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்துவோம்!
இறுதியில்.... வெற்றி எமக்கே!
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
- பருத்தியன் -
Comments