சுமார் 25 ஆயிரம் மாவீரர்களின் அர்ப்பணிப்புடன் 30 ஆண்டு காலம் நடைபெற்ற தமிழீழ விடுதலைப்போராட்டத்தை உலகமயமாக்கி தமிழர்களின் அடையாளம் என்ன என்பதை உலகின் மூலை முடுக்கெங்கும் எடுத்துக்கூறி –
தமிழர்களின் வீரத்தினதும் தியாகத்தினதும் உச்சத்தை இன்னும் பல்லாண்டு காலம் இந்த உலகம் உச்சரிக்கும்வகையிலான ஓர் ஒப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி –
தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008
தமிழினத்தின் அடுத்த கட்டப்போராட்டத்தை அடுத்த சந்ததியினரிடம் ஒப்படைத்துள்ளார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.
புலம்பெயர்ந்து வாழும் இளம் தலைமுறை அந்தப்பொறுப்பினைப் பெற்றுக்கொண்டு அதனை மிகவும் பக்குவமாக – உணர்வுபூர்வமாக – தமக்கு தமது இனத்தின் தலைவன் இதுவரை காலமும் காட்டிய அந்தக் கொள்கை பிசகாத பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் இளம் சமுதாயம் ஈழ விடுதலைப்போராட்டத்தின் மிகப்பெரும் தாங்கு சக்தியாக கடந்த பல மாதங்களாக காண்பித்த உணர்வும் தியாகமும் எழுச்சியும் அர்ப்பணிப்பும் உலகின் புருவங்களையே உயரவைத்திருக்கின்றன என்றால் மிகையில்லை.
தாயகத்திருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் கடல்கடந்து வாழுகின்ற இந்தச் சமுதாயத்தினரில் பலர் அந்தந்த நாடுகளில் பிறந்து வளர்ந்து வெளிநாட்டு நாகரிகம் மற்றும் வாழ்க்கை முறைகளுக்குப் பழக்கப்பட்டவர்கள். அதிகமாகவே அந்தச் சூழ்நிலைகளுக்குள் உள்வாங்கப்பட்டவர்கள்.
இவர்களது வாழ்க்கைமுறைகளும் போக்கும், ஒவ்வாத ஒரு நாகரிக கலாச்சார பொறிக்குள் இவர்களை உள்ளீர்த்துவிடுமோ என்று பல பெரியவர்கள் பீதியடைந்தார்கள். பெற்றோர்கள் பலரும் தமது அடுத்த சந்ததி தமக்குத் தொடர்பில்லாத ஒரு பாதையில் சென்றுவிடுமோ என்று மனக்கிலேசத்துக்கு உள்ளானார்கள்.
ஆனால், தாம் மொழியால் - நாகரிகத்தால் - உணர்வால் - பண்பாட்டால் - கலாச்சாரத்தால் தமிழீழ விடுதலை உணர்வுடன் பின்னிப்பிணைந்துள்ளதை இடித்துரைத்தாற்போல் இந்த இளையவர்கள் காண்பித்துவரும் வீரியம் மிக்க விடுதலை தாகம் இன்றும் என்றும் தமிழினத்துக்கான மிகப்பெரும் வரப்பிரசாதம்.
பாரெங்கும் வாழ் தமிழ் இளையோர்களை விடுதலையின்பால் ஓர்மம் மிக்க சக்தியாகக் கட்டியெழுப்பி இந்த வரலாற்றுத் தேவைமிக்க கட்டமைப்பை உருவாக்கிய அந்த முழு பெருமையும் தமிழீழத் தேசியத்தலைவரையே சாரும்.
களத்திலே நடைபெற்ற வேலைத்திட்டங்களுக்குச் சமாந்தரமாக வெளிநாடுகளிலும் இளையோர்கள் அணிதிரளவேண்டும் என்ற தலைவர் உருவாக்கிய கடல்கடந்த இந்தக் கட்டமைப்பு–
தமிழினத்தின் விடுதலைக்காக உலகின் மனச்சாட்சியை உரிமையுடன் பிடித்து உலுப்பக்கூடிய பலம்பொருந்திய சக்தியாக பெரு வளர்ச்சி பெற்றிருக்கிறது.
வன்செயல்களை விரும்பாத – தமிழினத்துக்குப் பெருமை சேர்த்துத் தரவல்ல – உலகமே உற்றுப்பார்க்கும் ஓர் இனத்தின், ஒழுக்கத்தை நன்மதிப்பைப் பேணக்கூடிய – உயரிய சக்தியாக தமிழ் இளையோர் அமைப்புக்கள் இன்று உலகமெல்லாம் கிளைபரப்பி நிற்கின்றன.
இந்த அமைப்பின் எதிர்காலத்திட்டங்கள் என்ன வகையில் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதில் பல ஆரோக்கியமாக சிந்தனைகளும் ஆலோசனைகளும் காணப்படுகின்றன.
அவை எவையாக இருப்பினும் தாயக உறவுகளுக்குப் பலம் சேர்க்கும் - அவர்களின் விடிவுக்கும் விடுலைக்குமான பலம் பொருந்திய நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களாகவே அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.
அப்படியானால், அடுத்த பத்து அல்லது இருபது வருடங்களில் இந்த இளையோர் அமைப்புக்களின் சாதனைகள் என்ன வழியில் அமையப்போகின்றன?
அல்லது,
குறிப்பிட்ட ஒரு காலப்புள்ளியில் நின்று திரும்பி பார்க்கும்போது இந்த அமைப்பு சாதித்திருக்ககூடிய பணிகள் எவையாக இருக்கப்போகின்றன?
கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட விடுதலைப்போராட்டத்தின் பெரும்பகுதி இன்றைய தினத்தில் பலம்பொருந்திய புலம்பெயர் தமிழ் இளையோர்களின் கைகளிலேயே பொறுப்பளிக்கப்பட்டிருக்கின்றது என்றால் -
இந்த இளையோர் அமைப்பு இனிவரப்போகும் சந்ததியிடம் இந்தப்; பொறுப்பைக் கையளிக்கும்போது – அதுவரை தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்காவிடில் - என்ன சாதனைகளை நிறைவேற்றி அதனைக் கையளிக்கும் உத்தேசத்தில் உள்ளது?
இந்தக் கேள்விகளுடாக புலம்பெயர் இளம் சமுதாயம் தமக்கான நேர்த்தியான பாதையை வரைந்து கொள்ளலாம்.
யதார்த்தம் என்ன?
தமிழீழ விடுதலைப்போராட்டம் இன்றைய தினத்தில் ஆயுத வழியில் ஓய்வடைந்திருக்கிறது. அதன் அர்த்தம் அது முடிந்துவிட்டது என்று ஆகாது.
முள்ளிவாய்க்கால் படுகொலை ஊடாகவோ மூன்று இலட்சம் மக்களை வதை முகாம்களுக்குள் போட்டுக் கொடுமைப்படுத்துவதாலோ தமிழ் மக்களுக்குள்ள சுதந்திரப் பசியை எந்தச் சக்தியாலும் அடக்கமுடியாது. கொண்ட கொள்கை தவறாத இலட்சியப் போராட்டத்தின் முன் சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிர்களை இழந்திருக்கின்ற தமிழினம் இன்றைய நாளில் முடங்கிவிட்டதாகப் பலருக்கும் தெரியலாம்.
ஆனால், இன்று வவுனியாவிலும் புல்மோட்டையிலும் கையிழந்து காலிழந்து தனது பெற்றோரை இழந்து நிர்க்கதியாக நிற்கும் பாலகனோ சிறுமியோ இன்னும் பத்து வருடங்களில் வளர்ந்து வந்து –
எனக்கு இந்த நிலைமை ஏன் நேர்ந்தது?
என் பெற்றோருக்கு ஏன் இந்த அழிவு நடந்தது?
என் இனத்துக்கு ஏன் இந்தக் கொடுமை நேர்ந்தது?
என்று கேள்விகளை எழுப்பினால் அவர்களை ஆசுவாசப்படுத்த கூடிய பதில்கள் எவரிடமும் கிடையா. அந்தச் சந்ததி ஆயதமேந்தித்தான் போராடி தமது உரிமையை வெல்வோம் என்று கூறினால் அதனைத் தடுக்க எவருக்கும் உரிமையும் கிடையாது.
இனி ஒரு கெரில்லாப் போருக்கோ அல்லது மரபுவழிப் போராட்டத்துக்கோ தமிழினம் போகக்கூடிய சாத்தியம் இல்லை என்றோ அதற்குரிய ஏது நிலைகள் இல்லை என்றோ அதற்கு உலக நாடுகள் விடமாட்டாது என்றோ கருதுவது காலம் முந்திய கணிப்பீடுகள்.
இன்று, தனிப்பட்ட பழிவாங்கும் உணர்ச்சியைத் தீர்ப்பதற்கு பாடசாலை ஒன்றினுள் புகுந்து 15 பேரைச் சுட்டுக்கொல்லுமளவுக்கு 15 வயது சிறுவன் ஒருவனுக்கு ஆயுதம் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதியிருக்குமானால் –
ஓர் இனத்தின் விடிவுக்காக ஒரு கொடுங்கோல் அரசினை எதிர்த்துப் போரிடத் துடிக்கும் ஒரு விடுதலை இயக்கத்துக்கு ஆயுதம் பெறுவதோ அல்லது அவற்றைக்கொண்டு ஒரு பாரிய இராணுவக் கட்டமைப்பை மீள உருவாக்குவதோ பெரிய விடயமன்று.
அந்தக் கட்டுமானம் - அந்த முயற்சி தற்போதைக்கு ஒத்துவராத அல்லது நடைமுறைக்குச் சாத்தியமற்றதாக இருக்கலாம். ஆனால், அது என்றைக்குமே சாத்தியமாகாத அண்ட பிரகண்டமாக இருக்காது. இருக்கப்போவதுமில்லை.
தாயகத்தில் தமிழர்களின் இராணுவக் கட்டமைப்புக்கான எதிர்வுகூறல்கள் இவ்வாறிருக்க அரசியல் கட்டமைப்பும் அதனையொட்டிய இராஜதந்திர தேவைகளும் எப்போதோ ஒருநாள் இன்றைவிட பல மடங்காக ஏற்படத்தான் போகின்றன.
இவ்வாறு தாயகத்தில் நடைபெறப்போகும் மாற்றங்கள் காலநீட்சியை அடிப்படையாகக் கொண்டவை. தமக்கான விடுதலைப் பாதையைக் களத்திலிருக்கும் மக்கள் தேர்வு செய்யும்போது அதற்குரிய வலுவூட்டல்களைச் சகல வழிகளிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்தக் காலம் வரும்வரை அதற்கான கட்டமைப்புக்களையும் செயற்பாடுகளையும் தொடர்ச்சியாகப் பேணிக்கொண்டிருக்க வேண்டியது மிகமிக அவசியம்.
எதிர்காலப் பணி என்ன?
இவை அனைத்துக்கும் புலம்பெயர்ந்த இளையோர் சக்தியே எதிர்காலத்தில் தனிப்பெரும் தாங்கும் சக்தியாக நின்று உழைக்க வேண்டியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
இவ்வாறு அந்தந்த நாடுகளில் பலம்பொருந்திய சக்தியாக நின்று தாயகத்துக்காகப் பணிபுரிய வேண்டுமாயின், தற்போது இறுக்கமான கட்டமைப்புக்குள் வந்துவிட்ட இளையோர் அமைப்புக்கள் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது இங்குக் கேள்வியாக எழுகிறது. இந்த அமைப்பின் நன்மதிப்பை ஒவ்வொரு நாட்டிலும் அங்கு வாழும் மக்கள் மத்தியில் கட்டியெழுப்ப வேண்டும்.
இந்த அமைப்பின் ஆத்மார்த்தமான பணி உண்மையில் மகத்தானது என்று கூறும்வகையில் அமைப்புக்களின் செல்நெறிகள் விரிவாக்கப்படவேண்டும்.
தாயக உறவுகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும் அதேவேளை அந்தந்த நாடுகளில் உள்ள பொதுப்பணிகள், மனிதாபிமான உதவிகள், அரசியல் பணிகள் ஆகியவற்றிற்குள்ளும் இளையோர் அமைப்பின் செயற்பாடுகள் விரிவாக்கப்படவேண்டும்.
பல்லின மக்கள் வாழும் நாடுகளில் எவ்வகையான வேலைத்திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் அந்தந்த நாடுகளில் செல்வாக்கு மிக்க சக்தியாக மாறலாம் -
அரசியல் வேலைத்திட்டங்களில் கலந்துகொள்வதன் மூலம் அந்நாட்டு அரசியலில் தமிழ் மக்களின் செல்வாக்கை எவ்வாறு மேலும் வலுவாக்கலாம் அல்லது அந்நாட்டு அரசியலில் பேரம் பேசும் சக்தியாக தமிழ்மக்கள் எவ்வாறு மாற்றுவது –
அரசு மட்டத்தில் தமிழ் இளையோர் அமைப்பினது நற்பெயரைக் கொண்டு செல்வதானால் அதற்கு எவ்வகையான நிகழ்ச்சிநிரல்களின் கீழ் பணிமுன்னெடுப்புக்களை மேற்கொள்ளவேண்டும் -
போன்ற பல முயற்சிகளை விரிவாக்கம் செய்துகொள்ளவேண்டிய காலகட்டம் இது.
அந்தந்த நாடுகளில் பிறந்து வளர்ந்த தமிழ் இளையோர் மற்றும் பலரிடமும் ஆற்றல் மிகுந்த வளர்ச்சிகள் உள்ளன. மேற்குறித்த அல்லது அவற்றைவிட புதுமையான சிந்தனைகள் இளையோரிடம் கொட்டிக்கிடக்கின்றன.
எதையும் நவீன யுகத்தின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு எவ்வாறு மாற்றுவது என்ற கூரிய சிந்தனைத்திறன் உடைய - பல்துறைத் தகைமை உடைய - இளையோர் பல்லாயிரக்கணக்கானவர்கள் பாரெங்கும் பரந்து வாழ்கிறார்கள்.
அவர்களது உழைப்பை தேசத்துக்காக ஒருங்கமைக்கவேண்டிய மிகப்பெரிய காலகட்டம் இது.
மியா எனப்படும் பொப் இசை பாடகி முதல் ஜனனி ஜனநாயகம் வரை சாதனைகளிலும் -
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் தன்னைத்தானே எரித்து உயிரை மாய்த்த முருகதாஸ் முதல் பிரிட்டனில் 23 நாட்கள் உண்ணா நிலையிருந்த பரமேஸ்வரன் வரை தியாகத்தாலும் -
தமிழ் இளையோரின் நடவடிக்கைகள் உலகம் முணுமுணுக்கும் பெயர்களாக சர்வதேச அரங்கில் நன்மதிப்பையும் கௌரவத்தையும் பெறத்தொடங்கியுள்ளன.
அவற்றைச் சரியான நெறிப்படுத்தலுடன் முன்நகர்த்தவேண்டிய காலமும் வந்துவிட்டது.
இனி முடிவு இளையோரின் கைகளில்.
Comments