வன்முறை அரசியல் தான் வழியா?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயலாளர் நாயகம் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் 5 ஆம் நாள் புதன்கிழமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து வெளிநாட்டுப் புலனாய்வு மற்றும் பாதுகாப்புத் துறைகளின் அனுசரணையுடன் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

திரு. செல்வராசா பத்மநாதன் அவர்கள் ஒரு போர்-சார் செயற்பாட்டாளர் அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயலாளர் நாயகமாக நியமனம் பெறுவதற்கு முன்பு இருந்தே, ஏற்கெனவே - அந்த இயக்கத்தின் அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனராக நியமிக்கப்பட்டுச் செயற்பட்டு வந்த ஒரு இராஜதந்திர - அரசியல் செயற்பாட்டாளர்.

அந்தப் பொறுப்பு நிலையில் அமர்த்தப்பட்ட பின்பு - அனைத்துலக இராஜதந்திர வட்டாரங்களுடன் தொடர்ச்சியான அரசியல்சார் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டு - தொடர்பாடல்களைப் பேணி - போர் சாராத வேறு வழிகளின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் முன்முனைவுகளில் ஈடுபட்டவர்.

2009 மே மாதத்துக்குப் பின்னான இலங்கைத் தீவின் தற்போதைய இராணுவ-அரசியல் சூழலில் - தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயலாளர் நாயகமாக நியமனம் பெறுவதற்கு முன்னதாக இருந்தே –

இலங்கைத் தீவைத் தாயகமாகக் கொண்டு வாழும் தமிழ் பேசும் மக்களின் நியாயமான - அவர்களுக்கே உரித்தான - அரசியல் உரிமைகளை - மாறிவிட்ட புதிய உலகச் சூழலுக்கு ஏற்ப இயங்கி, தற்போதைய உலக ஓட்டத்திற்கு ஒத்திசைவாக நகர்ந்து வென்றெடுப்பதில் அவர் நம்பிக்கையும் விருப்பமும் கொண்டிருந்தார்.

அத்தகைய - வன்முறையற்ற - அரசியல் - இராஐதந்திர வழிகள் ஊடாக தமிழ் பேசும் மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்தும் வழிமுறைகள் பற்றிய திட்டங்களையே அவர் வகுத்தும் செயற்படுத்தியும் வந்தார்.

ஆயுதப் போராட்ட வடிவத்தையே தனது மைய மூலோபாயமாகக் கொண்டு கடந்த 38 வருடங்களாகப் போராடி வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அதன் இயங்கு முறைமையையும் ஒர் அடிப்படையான மறுசீரமைப்புக்கு அண்மைக்காலமாக அவர் உள்ளாக்கி வந்தார்.

மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொண்டு, பெருத்த சவால்களுக்கு முகம் கொடுத்து - வன்முறையற்ற போராட்ட முலோபாயம் நோக்கிய இந்தப் பாரிய கொள்கை மற்றும் செயன்முறை மாற்றத்தை - விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உள்ளேயே எழுந்த ஆழமான முரண்பாடுகளுக்கு மத்தியிலும் - அவர் கடும் சிரமங்களுடன் முன்னெடுத்தார்.

அந்த முன்முனைவினை எடுத்ததன் விளைவாக - கடும் போக்காளர்களின் எதிர்ப்பையும், 'துரோகி' என்ற பழிச்சொல்லையும் அவர் சம்பாதித்தார்.

60 ஆண்டுகாலப் பட்டறிவின் விளைவாக, ஜனநாயக வழிமுறைகள் பற்றிய எண்ணங்களையே தமது மனங்களில் இருந்து முற்றாக இழந்துவிட்டு, ஆயுதப் போராட்டத்தில் மட்டுமே தொடர்ந்தும் விடாப்பிடியான நம்பிக்கை வைத்திருந்தோரையும் சாந்தப்படுத்தி - இன்றைய உலக ஓட்டத்தைப் பக்குவமாகப் புரிய வைத்து -

ஆயுதங்களை அமைதிப்படுத்துவதாகப் பகிரங்கமாக அறிவித்துவிட்டு - சொல்லில் மட்டுமன்றி அதனைச் செயலிலும் காட்டிய வண்ணம் - தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமான தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையே அரசியல் வழிமுறை ஊடாக நகர்த்தும் ஒரு வழிகாட்டியாக திரு. செல்வராசா பத்மநாதன் அவர்கள் செயற்பட தொடங்கியிருந்தார்.

ஒரு பரந்த மனப்பான்மையுடன் - பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைத்து - பல தரப்பட்டவர்களின் கருத்துக்களையும் ஒன்றிணைத்து - புதுமையான - நடைமுறைக்குச் சாத்தியமானதான ஒரு வழியில் பயணிக்க அவர் முனைந்தார். உலகிற்கு 'ஜனநாயகம்' பற்றிய போதனைகள் செய்யும் பெரிய நாடுகள் எல்லாம் இந்தப் பயணத்தில் தமிழ் மக்களோடு துணை இருக்கும் என்று அவர் நம்பினார்.

இவ்வாறாக - கடந்த இரண்டரை மாத காலத்தில் - தூக்கமற்ற இரவுகளும், ஓய்வற்ற பகல்களுமாக, உள்ளும் புறமும் என - தமிழ் மக்களுக்கான அரசியல் இராஜதந்திர முன்முனைவிலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீள்-ஒழுங்கமைப்புப் பணியிலும் என - இரு முனைகளில் அவர் அயராது போராடினார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும், அதன் தலைமையை ஏற்றிருக்கும் தனக்கும் முன்னால் இருக்கும் உடனடிக் கடமையாக - உலகின் மனிதார்ந்த நியதிகளுக்கு மாறாக முட்கம்பிச் சிறைகளுக்குள் அடைக்கப்பட்டு விரக்தியின் விளிம்பில் தவிக்கும் மூன்றரை இலட்சம் தமிழ் மக்களை மீட்டெடுப்பதையே அவர் வரித்துக்கொண்டிருந்தார்.

அந்த மக்களை அவர்களது சொந்த வீடுகளில் மீண்டும் குடியேற வைத்து, அவர்களது சாதாரண சமுக - பெருளாதார இயல்பு வாழ்வை அவர்களுக்கு மீள அளிப்பதையே அவர் தனது முதன்மை இலக்காகக் கொண்டு செயற்பட்டதுடன், அதற்குரிய கலந்துரையாடல்களிலும், ஒழுங்குகளிலுமேயே அண்மைய நாட்களில் அவர் முழுமையாக ஈடுபட்டிருந்தார்.

அதன் அடுத்த கட்டமாக - இந்த உலக சமுதாயத்தின் துணையுடன், குறிப்பாக இந்தியாவின் உதவியுடனும் ஒத்துழைப்புடனும் - இந்த உலகத்தோடு ஒத்துப் போகக்கூடிய வழிமுறைகள் ஊடாக - எமது மக்களின் நியாயமான அடிப்படை அரசியல் வாழ்வுரிமைகளை வென்றெடுப்பதற்கான பணிகளை முன்னெடுக்க அவர் திட்டமிட்டிருந்தார்.

இதுவரை காலமும் - 'பயங்கரவதிகள்' என்ற கீழ்த்தரமான ஒரு முத்திரையைக் குத்தி - அரசியல் விடுதலைக்கான எமது இனத்தின் போராட்டத்தை அழிவின் விளிம்பிற்கே தள்ளிவிட்ட இந்த உலக சமுதாயம், குறிப்பாக இந்தியா - இனிவரும் காலத்தில் - விடுதலைப் புலிகள் இயக்கம் தனது ஆயுதப் போராட்டத்தை இடைநிறுத்தி வைத்திருக்கும் இப்போதைய புதிய சூழலில் - தமிழ் மக்களின் நியாயமான அரசியல் வேட்கைகளைப் புரிந்துகொண்டு தமிழர்கள் எடுக்கும் அரசியல் முன்நகர்வுகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று அவரும், தமிழ் மக்களும் நம்பியிருந்தனர்.

இத்தகைய சூழ்நிலையில் - சில பெரிய சக்திகளின் அனுசரணையுடன் சிறிலங்கா, மலேசியா மற்றும் தாய்லாந்துப் புலனாய்வு மற்றும் பாதுகாப்புத்துறைகளினால் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்கள் கடத்திச் செல்லப்பட்டிருக்கும் நிகழ்வானது தமிழ் மக்களைத் திகைப்புக்கும், கவலைக்கும், கடும் சினத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.

கடந்த காலங்களில் - தனக்கு இடப்பட்டிருந்த பணியின் கரணமாக - அந்தப் பணியினதும், தனதும் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு மறைந்து வாழ வேண்டிய சூழ்நிலைகளுக்குள் இருந்திருந்தாலும் -

தற்போது - தான் ஏற்றிருந்த புதிய பணியின் தன்மைக்கு ஏற்ப - ஜனநாயகப் பாதையில் பயணிக்க முனைந்த ஒர் அரசியலாளனாக - தான் தலைமை ஏற்றிருக்கும் ஒர் ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கத்தையும் அதே ஜனநாயகப் பாதையில் மட்டுமே நகர்த்த அவர் முனைந்தார்.

மறைந்து வாழாமல், ஒளிந்து நடமாடாமல் - பகிரங்கமாக அரசியல் பணி ஆற்ற முனைந்த ஒரு மக்கள் சேவகனாக அவர் இப்போது இயங்க தொடங்கியிருந்தார்.

தனது உயிரும் உடலும் ஆபத்துக்களால் சூழப்பட்டிருப்பதை அறிந்திராத அளவுக்கு அவர் ஒன்றும் அப்பாவி அல்ல; அல்லது, அவர் அலட்சியப் போக்கோடு அலைந்து திரிபவரும் அல்ல.

ஆனாலும், மக்களுக்கான அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு போராளி அந்த மக்களில் இருந்து அந்நியப்பட்டு மறைந்து வாழ்வது முறையல்ல என்றே அவர் கருதினார்.

அதே வேளையில் - மலேசிய நாட்டின் நீதி ஒழுங்கு முறைகளை மதித்து நடக்க வேண்டும் என்பதற்காகவும் - அந்த நாட்டின் சட்ட வரைமுறைகளை மீறி விடக்கூடாது என்பதற்காகவும் - ஆயுதம் தாங்கிய மெய்க்காப்பாளர்களையோ, அல்லது ஆளணிப் பரிவாரங்களையோ தன்னுடன் கூட்டித் திரியாமல் - தனிமனிதனாக அவர் தனது பணிகளைச் செய்து வந்தார்.

இத்தகைய வேளையில் - எத்தகைய அனைத்துலகச் சட்ட நடைமுறைகளுக்கும் உட்படுத்தப்படாமல் - ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டின் ஊடாக முன்றாவது நாடு ஒன்றுக்கு - அந்த நாடுகளினதும், வேறு நாடுகளினதும் அரசுகளது பங்களிப்புடனேயே அவர் இவ்வாறு வஞ்சகமாகக் கடத்திச் செல்லப்பட்ட கீழ்த்தரமான நிகழ்வானது - மென்முறை அரசியலின் மீதும், வன்முறையற்ற அரசியல் வழிமுறைகள் மீது நம்பிக்கை வைப்போரின் மீதும் விழுந்த ஒர் உச்சந் தலை அடியே அல்லாமல் வேறு எதுவுமே இல்லை.

உலக இயங்கு நிலையோடு ஒத்துப்போய் - வன்முறையற்ற வழியிலேயே இனி தமிழ் பேசும் மக்களின் தன்னாட்சி உரிமைப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை வகுத்துச் செயற்பட்ட திரு. செல்வராசா பத்மநாதன் அவர்களின் இந்தச் சட்டவிரோதமான கடத்தலானது -

வன்முயையற்ற அரசியல் வழிக்கு கடும் சிரமங்களின் மத்தியில் அவர் திருப்ப முயன்ற ஓர் ஆயுதப் போராட்ட இயக்கம் - இந்த அனைத்துலக சமுதாயம் மீது தான் கொண்டுள்ள நம்பிக்கையை இழப்பதுடன் - மீண்டும் வன்முறை அரசியல் மீதான நம்பிக்கையோடு மட்டுமே புத்தூக்கம் பெற்று - ஆயுதப் போராட்ட முலோபாயத்தை மீண்டும் அது கைக்கொள்ளவே வழிகோலும்.

இத்தகைய சூழ்நிலையில் - திரு செல்வராசா பத்மநாதன் அவர்களின் உடலுக்கும், உள்ளத்துக்கும், உயிருக்கும் எத்தகைய தீங்கும் நேர்ந்துவிடாமல் பாதுகாப்பதற்கான முழுப் பொறுப்பையும் - உலக நாடுகள், குறிப்பாக இந்தியா ஏற்றுக்கொள்ளுவதோடு, அவர் மீதான விசாரணைகள் அனைத்துலக நீதி ஒழுங்குகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுவதையும் இந்த நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும்.

ஆகக் குறைந்தது - சிதைந்து போய் இருக்கும் தங்கள் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையைச் செப்பனிட்டுச் செழுமைப்படுத்துவதற்காக எனினும் இந்த நாடுகள் அதனைச் செய்ய வேண்டும்.

Comments