முள்ளிவாய்க்கால் வரை சுற்றி வளைத்து, வன்னி பெருநிலப்பரப்பின் சகல பாதைகளினூடாகவும் படை நகர்வினை மேற்கொண்ட இராணுவம் சந்தித்திராத நிலக்கண்ணிவெடிகள், திடீரென எங்கிருந்து முளைத்தன என்கிற அறிவியல்பூர்வமான கேள்வி ஒன்றினை முன்வைக்கிறார் மனோகணேசன்.
இதில் தப்பேதும் இல்லை போல் தெரிகிறது. மீட்டெடுத்ததாகச் சொல்லப்படும் மக்களை மீளக் குடியேற்றும் அக்கறை அரசாங்கத்துக்கு இல்லை என்பதே இக் கேள்விக்கான பதிலாக அமையும்.
இந்த மீட்பு நடவடிக்கைகளில் கொல்லப்பட்டவர்களின் நிலை குறித்த சரியான தரவுகளை பெறக் கூடிய அனைத்து பாதைகளையும் அரசு மூடி விட்டது. போரில் வெற்றி பெற்றவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், விசாரணைக்கு உட்படுத்தப்படுவதில்லையென்று வரலாற்று விளக்கமொன்றினை அளிக்கிறார் ஒருவர்.
வென்றவர்கள், விமர்சனத்திற்கும் விசாரணைகளுக்கும் அப்பாற்பட்ட சக்திகள் என்பதே புதிய உலகின் ஜனநாயக மரபாக இருப்பது போல் தெரிகிறது.
அதேவேளை வன்னியின் 85 சதவீதமான நிலப்பரப்பில் சிங்கள மக்களைக் குடியேற்றி, இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வன்னி மக்களின் மனித உரிமை, ஜனநாயகம் போன்றவை, வவுனியா முகாம்களிற்குள் நிரந்தரமாக முடக்கப்படும் அபாயம் தோன்றியிருப்பதாக பல மனிதாபிமான ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.
வர்க்க முரண்பாடுகளும் இன ஒடுக்குமுறைகளும் நிலவும் ஒரு சமுதாயக் கட்டமைப்பில் மக்கள் ஜனநாயகம் என்கிற கோட்பாடு எவ்வாறு செயலாக்கம் பெறும் என்பது கேள்விக்
குரிய விடயமே.
இத்தகைய ஒடுக்குமுறைகளை தக்க வைத்தபடி, ஜனநாயகம், சோசலிசம் என்கிற வார்த்தைப் பிரயோகங்களை தமது அதிகார நிலைநிறுத்தலுக்கு எவ்வாறு இந்த நவ காலனித்துவ அரச கட்டுமானங்கள் பயன்படுத்துகின்றன என்கிற விவகாரத்தை மக்கள் உணர்ந்து கொள்வதில்லை.
அவை உணரப்படாதவாறு இனக் குரோதங்களும் திறந்த பொருளாதார கட்டமைவுக்கு ஏற்ப கலாசாரத் திணிப்புகளும் தமது இனமே உயர்ந்தது என்கிற மேலாதிக்க சிந்தனை பூச்சுகளும் மக்கள் மீது சுமத்தப்படுகின்றன. ஆனாலும், முட்கம்பி வேலிகளுக்கு அப்பால் தாம் வாழ்ந்த பூர்வீக நிலங்களில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதைக் கூட உணர்ந்து கொள்ள முடியாத வகையில் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வேற்றுக் கிரக வாசிகள் போல் வாழ்வது மிகக் கொடுமையானது.
தேசிய இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை அழிப்பதில், தமக்கிடையே நிலவும் முரண்பாடுகளை மறந்து ஒன்றுபட்ட சிவப்புகளும் ஜனநாயக பிரம்மாக்களும் கடன் அடிப்படையில் கூட இந்த முகாம் மக்களுக்கு தற்காலிக ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்வரவில்லை.
புலி எதிர்ப்புக்குள் ஜனநாயக மறுப்புகள் சங்கமமாகி விட்டன. மாற்றுச் சிந்தனைகளை முன்னிறுத்தி மக்கள் வாழ்வில் ஜனநாயக ஒளி வீசிடப் பரப்புரை செய்தவர்கள் மௌனமாகி விட்டார்கள். அதனைப் பேரினவாதச் சக்திகளே பொறுப்பேற்று விளக்கேற்ற வேண்டுமென விலகி விட்டார்கள் போல் தெரிகிறது.
முள்ளிவாய்க்காலில் மக்கள் எறிகணைகளால் சூழப்பட்ட போது ஆர்ப்பரித்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கடந்த மூன்று மாத காலமாக தமக்குள் மோதியவாறு முகாம் மக்களின் விடுதலை குறித்துப் போராடாமல் வேறு விவகாரங்களில் தமது கவனத்தை திசை திருப்பியுள்ளார்கள்.
போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபைக்கும், மனித உரிமைக் கண்காணிப்பகத்துக்கும் சில மேற்கு நாட்டு ஊடகங்களுக்கும் இருந்த கரிசனையில் சிறிதளவேனும் இப்புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இருக்கவில்லையென்பது மிகவும் சோகமானது.
கடந்த வாரம் லண்டன் தொலைக்காட்சியொன்றில் வெளியான காணொளிப் பதிவில், குரூரமான முறையில் நிர்வாணமாக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட மனிதர்களின் உடலங்கள் உலகை மிகுந்த அதிர்ச்சியடையச் செய்தது.
புனையப்பட்ட காட்சிப் பதிவு இதுவென்று அரசு அதனை மறுத்தாலும் அதை வெளியிட்டோர், ஜனநõயக ஊடகவியலாளர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்கிற காரணத்தினால் மறுத்துரைப்புகளும் நிராகரிக்கப்படுகின்றன.
பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்கிற புனைவுகள், இன்னமும் நீடிப்பதற்கான காரணிகள் எதுவும் இல்லாத நிலையில் கரும்புலிகளின் அங்கிகள் கண்டெடுக்கப்படுகின்றனவென்றும் அம்பாறையில் இரண்டு புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்களென்றும் செய்திகள் வெளிவருகின்றன.
அதேவேளை அழிக்கப்பட்டாகி விட்டதென்று அரசால் அறுதியிட்டுக் கூறப்படும் விடுதலைப் புலிகள் மீது, மேலும் 5 வருடத்திற்கு தடை விதித்து, நிழல் யுத்தம் புரிகிறது ஒபாமாவின் அமெரிக்க அரசு.
கடந்த 3 வாரங்களாக அமெரிக்கா விடுக்கும் எச்சரிக்கை கலந்த அறிக்கைகளையும் அவதானிக்க வேண்டும்.
முகாமில் முடங்கியுள்ள 3 இலட்சம் தமிழ் மக்களின் விடுதலை மற்றும் அரசியல் தீர்வு என்பவற்றை கருத்தில் கொள்ளாவிட்டால் மறுபடியும் விடுதலைப் புலிகள் துளிர்த்தெழுந்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பார்களென இலங்கை அரசுக்கு அமெரிக்கா எதிர்வு கூறுகின்றது.
ஆகவே இதிலிருந்து ஒரு விடயத்தை மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது, அமெரிக்க கூற்றின் மறுதலையானது, இதுவரை நடந்தேறிய ஆயுதப் போராட்டம், வெறுமனே பயங்கரவாதமல்ல என்கிற விடயத்தை உறுதிப்படுத்துகிறது.
அரசியல் தீர்வொன்று வழங்கப்படாமல் நீண்ட கால ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுபான்மைத் தேசிய இனமொன்று, ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்ததை பயங்கரவாதமென்று கூற வேண்டிய சர்வதேச நிர்ப்பந்தம், அமெரிக்காவுக்கு மட்டுமல்ல இந்தியா, சீனா போன்ற பிராந்திய வல்லாதிக்க நாடுகளுக்கும் உண்டு.
தமிழ் மக்களின் அவலங்களை அம்பலப்படுத்துவோர் சிங்களப் புலிகளாகவும் வெள்ளைப் புலிகளாகவும் சித்திரிக்கப்படும் போக்கு வெறும் விதண்டாவாதங்களாக பார்க்கப்படும் தன்மை தற்போது எழுந்து வருகிறது.
சர்வதேச சுயாதீன ஊடகங்களை, போர் நிகழ்ந்த இடங்களுக்குச் செல்ல விடாது அனுமதி மறுத்து, குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளலாமென அரசாங்கம் கருதுகின்றது.திரண்டு வரும் போர்க் குற்றச் சாட்டுகளை எதிர்கொள்வதற்கு இந்தியப் பேரரசின் உதவி, நிச்சயம் இலங்கை அரசிற்கு இருக்குமென்று நம்பலாம்.
புலம்பெயர் தமிழ் மக்களின் உளவுரணைச் சிதைப்பதற்கும், தாயகச் செய்திகள் அவர்களைச் சென்றடைய விடாமல் தடுப்பதற்கும் மறைமுகமான பல நகர்வுகளில் இந்தியா ஈடுபட்டிருப்பது தெரிய வருகிறது.
-சி.இதயச்சந்திரன்
நன்றி -வீரகேசரிவாரவெளியீடு
Comments