தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலளார் செல்வராசா பத்மநாதனின் கைது அல்லது கடத்தல் தெளிவான செய்தி ஒன்றை உலகத் தமிழர்களுக்கு சொல்லி நிற்கின்றது.
ஸ்ரீலங்கா அரசாங்கத்துடனான சர்வதேசத்தின் உறவு நிலை மிகவும் நெருக்கமானதாகவே இருக்கின்றது என்பது தான் அந்த கசப்பான செய்தி.
கே.பி அல்லது செல்வரசா பத்மநாதன் என்பவர் தாய்லாந்து நாட்டு பிரஜை அவரை மலேசியா என்ற மற்றுமொரு நாட்டில் வைத்து கைது செய்வது அல்லது கடத்துவது என்பதும் அவரை இலங்கைக்கு அழைத்து வருவது என்பதும் சர்வதேசத்தின் ஒத்துழைப்பின்றி நடைபெற்றிருக்கக் கூடிய ஒன்றல்ல.
சர்வதேச நாடுகளுடன் கே.பியின் நடவடிக்கைகள் குறித்து நன்கு அறிந்த கொண்ட தரப்பும் அவருடைய இந்த கைது நடவடிக்கையின் பின்னணியில் இருந்திருக்க வேண்டும் என்பது வெளிப்படை உண்மை.
தாய்லாந்தில் வைத்து அவரை கைது செய்ய முடியாது என்பதை அறிந்த ஸ்ரீலங்காவின் புலனாய்வு துறை அவரை மலேசியா வரை அழைத்து வந்து அங்கு வைத்து அந்த நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் அவரை கைது செய்துள்ளதாகவே தெரியவருகின்றது.
இத்தனை வருடங்கள் சர்வதேச காவல்துறைக்கே தண்ணி காட்டிய ஒருவர் இப்படியாக இலகுவாக கைது செய்யப்படும் நிலை தானாகவே உருவாகியிருக்காது என்பதே பலரின் கருத்தாகும்.
கடந்த 30 வருடங்கள் உலகின் மிகப் பலமான போராட்ட வலையமைப்பை தலைமை தாங்கிய வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் குறித்த மர்மங்கள் அடங்கும் முன்பு மற்றுமொரு மர்ம முடிச்சு கே.பியின் கைதின் மூலமாக போடப்பட்டுள்ளது.
இவை இரண்டும் ஏதோ ஒரு வகையில் எங்கோ எதற்கோ திட்டமிடப்பட்ட ஒழுங்கில் நடைபெறும் சங்கிலி தொடர் நிகழ்வின் அங்கமாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது.
கே.பி ஒரு சாகசக்காரர் வெளிநாட்டு புலனர்வு அமைப்புகளுக்கு சிம்ம சொப்பமனாக திகழ்ந்தவர். எப்போது எங்கே என்ன பெயரில் என்ன உருவத்தில் அவர் உலாவுவார் என்பதே மண்டை குடையும் கேள்வியாக புலனாய்வு அமைப்புகளை வாட்டி வந்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்படியான கே.பி எப்படி இவர்களின் கைகளில் சிக்கினார் என்பது பல மில்லியன் டொலர் கேள்வி தான். அதைவிடவும் அவர் வெளியிட்ட அண்மைய புகைப்படங்களும் அவரா இவர் என்ற சந்தேகங்களை எழுப்பாமல் இல்லை. ஏற்கனவே புலிகளின் தலைவரின் உடல் எனக் காட்டப்பட்ட அந்த உடலம் குறித்த சந்தேகங்கள் தீராத நிலையில் பத்மநாதனின் கைதும் அவரின் புதிய புகைப்படங்களும் இன்னும் இன்னும் சந்தேகக் கோடுகளை கீறி விடுவதை தவிர்க்க முடியவில்லை.
உலகில் மிகப் பலம் வாய்ந்த போரதட்ட அமைப்பாக புலிகள் வளர்ச்சி பெற்றதில் கணிசமான பங்கு கே.பியிற்கு உண்டு. ஸ்ரீலங்கா அரசாங்க படைகள் கூட அறிந்திருக்காத புதிய ஆயுதங்களை கூட புலிகளுக்கான தருவித்துக் கொடுத்தவர். எத்தனை கப்பல்கள் சுற்றி வளைத்து நின்றாலும் புலிகளின் ஆயுதக் கப்பல்களை பாதுகாப்பாக கரை சேர்த்த கெட்டிக்காரரர் கே.பி. கே.பியின் காலத்தில் புலிகளின் ஆயுத விநியோகம் பின்னடைவினை சந்தித்திருக்கவில்லை அதற்கு கே.பியின் அனுபவம் மற்றும் ஆயுதக் கொள்ளவனவு சுட்சுமங்கள் குறித்த அறிவு என்பன தான் காரணம்.
ஆயுத சந்தைகளின் பிந்திய நிலவரங்கள் குறித்தும் கப்பல் போக்குவரத்து வாய்ப்புகள் குறித்தும் விரல் நுனியில் தகவல்களை கொண்டிருந்தவர். ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆயுதம் வாங்கும் சந்தையில் அவர்களுக்கு முன்னரே அதே ஆயுதங்களை வாங்கி சாதனை படைத்துக் காட்டியவர். ஸ்ரீலங்கா படைகளால் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களை புலிகளின் கப்பலில் ஏற்றி முல்லைத்தீவிற்கு அனுப்பி ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் அதன் ஆயுத முகவர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியமும் செய்தவர் கே.பி.
கே.பியின் கட்டாய விலக்கி வைப்பை தொடர்ந்து புலிகளின் புதிய ஆயுத முகவர்கள் மிகப்பெரும் பணத்தை செலவு செய்து கொள்வனவு செய்த அதிநவீன ஆயுதங்கள் எவையும் புலிகளை வந்து சேரவில்லை அது தான் புலிகளின் இராணுவ ரீதியிலான தோல்விக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் கே.பியின் அவசியத்தை உணர்ந்த புலிகளின் தலைமை மீண்டும் கே.பி ஊடாக ஆயுதங்களை தருவிக்க முனைந்தது. தனக்கு முன்னர் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மீண்டும் ஏற்படக் கூடாது என்பதாலும் மீண்டும் தன்னை புலிகள் கழற்றி விடக் கூடாது என்பதாலும் தனக்கான பதவி நிலை ஒன்றை இந்த வருட ஆரம்பத்தில் அவர் புலிகளின் தலைமையிடம் கோரி பெற்றிருந்தார்.
விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதானி என்ற அந்த பதவி நிலையை ஏற்படுத்திய புலிகளின் தலைவர் பிரபாகரன் அதற்கு பத்மநாதனை நியமித்தும் இருந்தார். கே.பி 2003 ம் ஆண்டு புலிகள் அமைப்பில் இருந்து விலகி இருந்த போதிலும் பிரபாகரனுடன் நெருக்கமான தொடர்பினை கொண்டிருந்தாகவே சொல்லப்படுகின்றது. புலிகளின் இராணுவ ரீதியிலான தோல்வியை ஒப்புக் கொண்டு அறிக்கை வெளியிட்டதன் மூலம் புலம்பெயர் வாழ் புலி ஆதரவாளர்களால் இவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டதோடு இவரின் தலைமையினை ஏற்கவும் புலம் பெயர் புலிகளின் பெரும்பான்மையினர் மறுத்திருந்தனர். எனினும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவரின் தலைமையில் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு இணங்குவதாக புலிகளின் வெளிநாட்டு முகவர்கள் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்திருந்தனர். இவ்வாறான ஒரு நிலையில் தான் கே.பி கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
மலேசியாவிற்கு கே.பி சென்ற விடயமும் அங்கு புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடசேனின் மகனை அவர் சந்திக்கப் போகும் விடயமும் நிச்சயம் புலிகள் தரப்பின் மூலமாகவே அரச புலனாய்வு பிரிவிற்கு கசிந்திருக்க வேண்டும் என்பது கே.பி தரப்பு ஆதரவாளர்களின் குற்றச்சாட்டாக இருக்கின்றது. தனது நாட்டு பிரஜையின் கைது குறித்து விசாரணை நடத்துமாறு தாய்லாந்து பிரதமர் உத்தரவிட்டுள்ள போதிலும் பிராந்திய வல்லரசுகளின் முன் இந்த அறிக்கைகள் எடுபாடு என்பது எல்லோருக்கும் தெரியும். விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஆகாமலேயே புலிகளின் முக்கியஸ்தராக வலம் வந்த கே.பியின் கைது புலிகளின் சர்வேதச வலையமைப்பிற்கு பெருமளவில் பாதிப்பெதனையும் ஏற்படுத்தாது என்றும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. கே.பியின் நடவடிக்கைகள் இராணுவ நலன்சார் அம்சங்களுடன் தொடர்புபட்டனவே அன்றி புலம் பெயர் நாடுகளின் புலிகளின் நடவடிக்கைகள் அவர்களின் வர்த்தக முயற்ச்சிகள் நிதி முகாமைத்துவம் ஊடக செயல்பாடுகள் போன்றவற்றில் கே.பி ஈடுபாடு கொண்டிருக்கவில்லை.
எனவே கே.பியின் கைது புலிகளின் வெளிநாட்டு செயல்பாடுகளை முடக்கி விடும் என்ற ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் எண்ணம் வெற்றியளிக்காது என்பதே ஆய்வாளர்களின் கருத்தாகவுள்ளது. ஆனாலும் புலிகளின் தலைமை குறித்தும் முக்கிய சில உறுப்பினர்களின் நிலை குறித்தும் உலகத்திற்கும் வேறு பல புலிகளின் முக்கியஸ்தர்களுக்கும் தெரியாத பல விடயங்கள் கே.பிக்கு மட்டுமே தெரிந்திருக்கின்றது. இந்த விடயங்கள் ஸ்ரீலங்காவின் புலனாய்வு பிரிவிற்கு தெரிய வருவது ஆபத்தானது. புலிகள் எந்த வகையிலும் எதிர்காலத்தில் மீள் உருவாக்கம் பெறக் கூடாது என்பதில் இலங்கையை விடவும் அதிக அக்கறை இந்தியாவிற்கு உண்டு. அதன் காரணமாகவே இந்த கைது நடவடிக்கைக்கு தனது பூரண ஒத்டதுழைப்பை இந்தியா வழங்கியுள்ளதாக நம்பப்படுகின்றது.
இராணுவ ரீதியில் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து மீட்சி பெறும் வரை பத்மநாதன் ஊடாக வன்முறைகளற்ற போராட்ட வடிவங்கள் குறித்து பேசி சிலமாதங்களின் பின்னர் மீண்டும் புலிகள் ஆயுதப் போரட்டத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளதான சந்தேகம் ஸ்ரீலங்கா மற்றும் இந்திய புலனாய்வு பிரிவுகளிடம் நிலவுகின்றது. ஊண்மையான கள நிலைமைகள் மற்றும் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளை புலனாய்வு துறையினர் நன்கு அறிவார்கள் என்பதால் தான் இலங்கையில் புலிகளின் தோல்விக்கு பின்னரும் பாதுகாப்பு நடைமுறைகளில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. கே.பியின் கைது மூலம் புலிகளின் திட்டம் என்ன எத்தனை விரைவில் அவர்கள் மீள் எழுச்சிக்கு திட்டமிட்டுள்ளார்கள் அதற்கான மூலோபாயங்கள் எவை போன்ற விடயங்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் புலிகள் மீண்டும் இராணுவ ரீதியிலான ஒரு போராட்டத்திற்கு தம்மை தயார் படுத்தி வருவார்களேயானால் நிச்சயமாக அந்த போரட்டம் என்பது நிலங்களை கைப்பற்றுவதற்கான போரட்டமாக இருக்காது என்றும் ஸ்ரீலங்காவின் அரச மற்றும் இராணுவ தலைமைகளை இல்லாதழிக்கும் விதமான மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களாகவே இருக்கும் என்றும் ஆசிய வெளிவிவாகர புலனாய்வு சஞ்சிகை தெரிவித்துள்ளது.
புலிகள் தமது அழவிற்கு காரணமானவர்கள் என்று கருதும் இலக்குகளை எப்படியும் அழிப்பார்கள் என்றும் அதற்கான தருணம் வரை அவர்கள் உறங்கு நிலையில் இருப்பார்கள் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. அவ்வாறான உறங்கு நிலையில் உலகின் கவனத்தை ஈர்பதற்கான முயற்சியாகவே நாடு கடந்த அரசாங்கம் மற்றும் இந்திய ஒத்துழைப்பிற்கான கே.பியின் அழைப்பு போன்றவை நோக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் பழிவாங்கலுக்கான இலக்குகள் குறித்து ஏற்கனவே ஸ்ரீலங்கா புலனாய்வு துறைக்கு தகவல்கள் கசிந்துள்ளதாகவும் இதனை அடுத்தே அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தான் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களில் குண்டு துளைக்காத கண்ணாடி தடுப்புகளை பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலிகளின் உறங்கு நிலைக் காலம் குறித்து கே.பி எதாவது பயன்மிக்க தகவல்களை வழங்கக் கூடும் என்பதும் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை தருவிப்பதில் அவருக்கு உதவிய முக்கிய சக்திகள் பற்றிய சில அதிர்ச்சி தகவல்களை பெறலாம் என்பதும் ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவின் எதிர்பார்பு. புலிகளின் மீள் எழுச்சியில் கே.பியின் கைது நிச்சயமாக ஒரு பின்னடைவாகவே கொள்ளப்பட வேண்டும் ஆனால் அதுவே புலிகளின் முடிவாகிவிடும் என்று கருதவியலாது என்று ஸ்ரீலங்காவின் மூத்த அமைச்சர் ஒருவரின் கருத்து கவனிக்க பட வேண்டியது தான்
Comments
Comment i post panna thairiyam irunthaal post pannungo...