அந்த வடிவ மாற்றத்தின் முதன்மை அங்கமாக, வன்முறையற்ற - மென்முறை - வழியில் எமது போராட்டத்தை முன்னெடுத்து - ஜனநாயக விழுமியங்களை கட்டியெழுப்ப வேண்டிய ஒரு கட்டாயப் பணியை காலம் எம் கைகளில் தந்துள்ளது.
இந்த ஜனநாயக விழுமியங்களைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு படிக்கல்லாக - பிறந்துள்ள புதிய சூழலில் முதல் படிக்கல்லாக - எதிர்வரும் சனிக்கிழமை (08.08.09) நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை தமிழ் இனம் பயன்படுத்த வேண்டும்.
மென்முறை வழியினிலே தொடங்கப்பட்ட தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டம், காலத்தின் கட்டாயத்தால் - அடக்குமுறையாளர்களின் நிர்ப்பந்தத்தால் - வன்முறைப் போராட்டமாக உருவெடுக்க வேண்டிய சூழல் அன்று உருவாகியிருந்தது.
முப்பத்தெட்டு வருடங்கள் கழிந்த நிலையில், அத்தகைய போக்கினை இன்றைய பூகோள அரசியல் மாற்றியமைத்துவிட்டது.
வீரம், துணிவு, உறுதி என்பன இரத்தத்திலும், சிந்தனையிலும், பண்பாட்டிலும் கலந்த இனம் எங்களுடையது. ஆனால், நாம் வன்முறையை விரும்புகின்ற ஒரு சமூகம் அல்ல. எம் மீது திணிக்கப்பட்ட வன்முறையை எதிர்ப்பதற்கான ஒரு கருவியாக – ஒரு தற்காப்பு வழியாகவே – நாம் ஆயுதங்களை ஏந்தினோம்.
இப்போது - ஐனநாயகப் பண்பில் எமக்கு இருக்கும் பற்றினை வெளிப்படுத்தி, ஜனநாயக வழியில் எமது பலத்தை நிருபிக்க வேண்டிய தருணம் உருவாகியுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத மாபெரும் நெருக்கடியை எமது இனம் இப்போது சந்தித்துள்ளது.
இந்த நெருக்கடியான காலகட்டத்தை நிரந்தரமாக்கி - தமிழர்களைத் தொடந்தும் அடக்குமுறைச் சிறைக்குள் வைத்திருந்து - அவர்களுடைய அரசியல் வேட்கைகளைச் சிதைத்து – தமிழ் இனத்தையே முழுமையாக அழித்து முடித்துவிடும் உத்தியை சிங்கள தேசம் கையில் எடுத்துள்ளது.
தமிழர்கள் என்ற இன அடையாளத்தை உறுதிப்படுத்தி - எமது இனத் தனித்துவத்தை நாம் நிலைநிறுத்த வேண்டுமானால் - எம் தாயகம் மீது எமக்கு இருக்கும் பிடிப்பையும், எமக்கு இருக்கும் சுதந்திர வேட்கையையும் உலக சமுதாயத்திற்கு நாம் உணர்த்த வேண்டிய வரலாற்றுக் கடமையும், பொறுப்பும் தமிழ் பேசும் மக்களாகிய எம் ஒவ்வொருவருக்கும் உண்டு
இத்தகைய ஒரு சூழலிலே தான் - எதிர்வரும் 8 ஆம் நாள் - யாழ். மாநகராட்சி சபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
தமிழ் இனத்தை இலங்கைத் தீவில் இல்லாமல் செய்துவிடுவதற்கான ஒரு ஜனநாயகக்-கருவியாக இந்த தேர்தல்களைப் பயன்படுத்துவதற்கு சிறிலங்கா திட்டமிட்டுள்ளது.
நாமும் - அதனை முறியடிப்பதற்காக மட்டுமன்றி, எமது தமிழ் இனத்தின் இருப்பையும் அரசியல் விருப்பையும் மீள வலியுறுத்துவதற்காக அதே ஜனநாயகக்-கருவியான இந்த தேர்தலைகளைப் பயன்படுத்த வேண்டும்.
மூன்றரை இலட்சம் தமிழ் மக்கள் முட்கம்பி வேலிச் சிறைகளுக்கு உள்ளே வாழ்கிறார்கள். அவர்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள். அவர்களைத் தமது சொந்த இடங்களில் மீள வாழ வைக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
போர் முடிந்துவிட்டதாக அறிவித்த சிறிலங்கா தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டத்தையும், போக்குவரத்துக்கான அனுமதி நடைமுறைகளையும் தமிழ் பேசும் மக்கள் மீது நடைமுறைப்டுத்தி வருகின்றது.
தொடர்ந்தும் நூற்றுக்கணக்கான சோதனைச் சாவடிகளும், அதி உயர் பாதுகாப்பு வலயமும், இரவு நேர மீன்பிடித் தடையும் தமிழர் தாயகப் பகுதிகளில் இப்போதும் நடைமுறையில் உள்ளன.
தமிழ்த் தேசியத்தையும் தமிழர்களின் அரசியல் வேட்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள் மீதும், அவர்களின் ஆதரவாளர்கள் மீதும் அச்சுறுத்தல்களும், வன்முறையும் ஏவப்பட்டுள்ளன.
வாக்கு மோசடிகள் செய்து தமிழ்த் தேசியத்தின் உண்மையான பிரதிநிதிகளைத் தோற்கடிக்க வைப்பதற்கான ஏற்பாடுகளே மும்முரமாக நடைபெறுகின்றன.
மக்களின் விருப்பத்துக்கும் - ஜனநாயக ஒழுக்க விதிகளுக்கும் மாறாக நடத்தப்படுகின்ற இந்தத் தேர்தல்களை ஜனநாயக ரீதியான ஒரு செயற்பாடு என வரைமுறைப்படுத்த முடியாது என்பது உண்மைதான்.
இருந்தாலும் - தமிழ் பேசும் மக்கள் தமது இன்றைய அரசியல் நிலைப்பாட்டை இந்த உலகிற்கு முரசறைந்து சொல்ல இப்போது இருக்கின்ற ஒரே 'ஜனநாயக முரசு' இந்தத் தேர்தல்கள் தான்.
யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் வாழும் தமிழ் பேசும் மக்கள் எல்லோர் முன்னாலும் இன்று உள்ள தார்மீகப் பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே அமோகமாக வாக்களித்து அதன் வேட்பாளர்களைப் பெருவெற்றி பெற வைப்பதுதான்.
சோர்வில் இருந்து விடுபட்டு - ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் இந்தத் தேர்தலில் பங்கேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாம் வெல்லவைக்க வேண்டும்.
வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் முன்னால் உள்ள கடமை - யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் வாழும் தமது உறவினர்கள் நண்பர்கள் ஒவ்வொருவரையும் தொலைபேசி வழியாக இன்றே அழைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு அவர்களை அன்பாக அறிவுறுத்த வேண்டும்.
கொஞ்சம் அக்கறை காட்டி - தனித்த நாம் ஒவ்வொருவரும் எடுக்கின்ற இத்தகைய முயற்சிகள் - எத்தகைய மோசடிகளையும் தாண்டி தமிழ் இனத்தின் உண்மையான பிரதிநிதிகளைக் கோலாகலத்துடன் வெல்ல வைக்கும்.
இரண்டு நாட்கள் மட்டுமே எம்மிடம் உள்ளன. செயற்படுவோம் உடனடியாக.
நடக்கவிருக்கும் இந்தத் தேர்தல்களின் முடிவுகளை - 'உள்ளூர்த்' தமிழர்களின் முடிவுகளாக அல்லாமல், உலகத் தமிழ் இனத்தினதே ஒன்றுபட்ட முடிவாக இந்த உலகுக்கு - குறிப்பாக இந்தியாவுக்கு உணர்த்துவோம்.
Comments