இந்த வேகத்தில் போனால் மொத்த சனமும் செத்து முடிக்க நீண்டகாலமாகாது. நாளைக்குப் பிணமாக்குவதற்காக இன்றைக்கு தமிழர்களுக்கு நடைப்பிணப் பயிற்சி அளிக்கிறது சிங்கள அரசு. மருந்து மாத்திரை கொடுக்காமல் இழுத்தடிக்கிறது. குடிநீருக்காக கியூவில் நிறுத்துகிறது. சோற்றுக்காகக் கையேந்த வைக்கிறது. பசியோடுகூட கியூவில் நின்றுவிடலாம் அவசர அவசரமாக கழிப்பறைக்குப் போகும்போது கியூவில் நிற்கச்சொன்னால் எப்படியிருக்கும்?
ஆனால், அப்படித்தான் நிற்கச்சொல்கிறது இலங்கை. வேறு வழியில்லாமல் அதற்கும் கியூவில் நின்று கொண்டிருக்கிறார்கள். தங்களது இனம் அழிக்கப்பட்டதைப் பொறுக்கமுடியாமல் போராடிப்பார்த்த தமிழர்கள். பல ஆயிரம் பேருக்கு ஒரு கழிப்பறை என்ற நிலையில் தங்களது உணவுப் பழக்கவழக்கத்தையே மாற்றிக்கொள்ளவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
முகாமில் மனநோய்க்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு இந்த கழிப்பறை பிரச்சினை முக்கியக் காரணமாக இருக்கக்கூடும். இதைப்பற்றியெல்லாம் கேள்விகேட்க நாதியில்லாமல் கேடுகெட்ட சர்வதேசத்துடன் சேர்ந்து மௌனம் சாதிக்கும் கூறுகெட்ட தமிழர்களாகத் தலைகுனிந்து நிற்கிறோம் நாம்.
நம்முடைய இந்த பேடித்தனம் தான் கொலைகார ராஜபட்சேவைக் கூசாமல் பேசவைக்கிறது. 'எனது குடும்பம் தமிழர்களுடன் திருமணம் செய்துள்ளது' என்றுகூட பேட்டிகொடுக்க முடிகிறது. இதே வசனத்தை இங்கேயும் கேட்டமாதிரி இருக்கிறதே என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. எல்லா நாட்டிலும் அப்பாவி மக்களின் தலை பூண்டு நசுக்கத்தான் பயன்படுகிறது.
தான் ஒரு சர்வாதிகாரி அல்ல என்று வாதிட ராஜபட்சே முன்வைத்த வாதம்தான் இந்தப் பேட்டியின் மிகக் கொடுமையான பகுதி.
'எனது அரசாங்கத்தைப் பற்றிய கடும் விமர்சனமொன்று அதை எழுதிய பத்திரிகையாளரின் மறைவுக்குப் பின் இலங்கைப் பத்திரிகையொன்றில் வெளியிடப்பட்டது. அதையே அனுமதித்தவன் நான்'என்கிற தொனியில் பெருமையடித்துக்கொண்டிருப்பது ராஜபட்சேவின் வக்கிர மனோபாவத்துக்கு சான்று.
ராஜபட்சே குறிப்பிடும் அந்தப் பத்திரிகையாளர் லசாந்த விக்கிரமதுங்க. பிறப்பால் சிங்களர். போரின் பெயரால் அப்பாவித் தமிழர்கள் பழிவாங்கப்படுவதைத் தட்டிக்கேட்ட பத்திரிகையாளர். சென்ற ஜனவரி 8ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்ட லசாந்த மகிந்த ராஜபட்சேவின் 25 ஆண்டுக்கால நண்பன். அவரைக் கொன்றது ராஜபட்சே கும்பல்தான் என்று ஒட்டுமொத்த பத்திரிகை உலகும் குற்றஞ்சாட்டியது.
அந்தக் கொலையைக் கண்டிக்காத நாடு அநேகமாக இந்தியாவாகத் தான் இருக்கும். (ஹிந்து பத்திரிகை அதைக் கண்டித்ததா என்பதுபற்றி நமக்குத் தகவல் இல்லை.) லசாந்த மட்டும் இப்போது இருந்திருந்தால் தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் முகாமின் நிலவரத்தை உள்ளது உள்ளபடி எழுதி ராமையெல்லாம் ஆயாராம் காயாராம் ஆக்கியிருப்பார். விசுவாசிகள் யாரும் அம்பலமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் லசாந்தவைத் தீர்த்துக்கட்டியது ராஜபட்சேக்களின் அரசு இயந்திரம்.
லசாந்த "லீடர் குரூப் பப்ளிகேஷன்" வெளியிடும் "சன்டே லீடர்" பத்திரிகையின் முதன்மை ஆசிரியர். சிரிமாவோ காலத்திலிருந்தே மகிந்தவுடன் பழகியவர். மகிந்த என்று உரிமையோடு அழைத்தவர். எந்த அரசாங்கமாயிருந்தாலும் அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்காத லசாந்த மகிந்தவின் தவறுகளை ஊழல்களைத் தட்டிக்கேட்கவும் தவறவில்லை.
பிரபலமான ஹம்பன்கோடா ஊழலை அம்பலப்படுத்தி மகிந்தவின் சுயரூபத்தை வெளிப்படுத்தியவர் அவர். புலிகளுக்கு அஞ்சி கொழும்பிலுள்ள அதிபர் மாளிகையில் 500 மில்லியன் செலவில் அதிநவீன பாதாள அறை அமைக்கப்படுவது பற்றி லசாந்த எழுதிய புலனாய்வுக் கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனாலெல்லாம் நீண்டகால நண்பரான அவர் மகிந்த சகோதரர்களின் ஒன்றாம் நம்பர் எதிரி ஆகிவிட்டார்.
கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே லசாந்தாவைப் போட்டுத்தள்ள முயற்சி நடந்தது. 2 முறை தாக்கப்பட்டார். ஒருமுறை அவரது வீடு துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டது. மயிரிழையில் உயிர்தப்பினார். கொல்லப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்கூட அவரது நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பிவந்த எம்.டி.வி. என்கிற மகாராஜா டெலிவிஷன் நெட்வொர்க் அலுவலகமும் ஸ்டூடியோவும் சூறையாடப்பட்டன.
ஒவ்வொரு நொடியும் மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார் லசாந்த. அதற்காக தனது பத்திரிகைக் கடமையிலிருந்து ஓரங்குலம் கூட விலகவில்லை. அப்பாவித் தமிழர்கள் மீது போரைத் திணிக்காதே என்று துணிவுடன் எழுதினார்.
தமிழர் பிரச்சினையை பயங்கரவாத பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கக் கூடாது வரலாற்றின் அடிப்படையில் தான் பார்க்கவேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தினார்.
எப்போதும் போல இந்த ஆண்டு ஜனவரி 8ம் தேதியும் மரணம் அவரை விரட்டியது. காலையில் அலுவலகத்துக்குப் போகும் வழியில் தனது வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்தவர்களைக் கவனித்ததும் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் லசாந்த கொடுத்தார் லசாந்த. அது அநேகமாக அவர்களாகத் தான் இருக்கவேண்டும் என்று தெளிவாகச் சொன்னார். அதற்குள் சுடப்பட்டார். அன்று பிற்பகல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
லசாந்தவும் தமிழகத்தின் தீப்பொறி முத்துக்குமாரும் ஒரே ஜாதி. பத்திரிகையாளர் ஜாதி. முத்துக்குமார் போலவே தனது மரணத்துக்குமுன்பே விரிவான ஒரு வாக்குமூலத்தை எழுதிவைத்திருந்தார் லசாந்த. அந்த மரணவாக்குமூலம் அவர் கொல்லப்பட்ட மூன்றாவது நாள் "சன்டே லீடரில்" வெளியிடப்பட்டது.
சொந்த நாட்டின் மக்களையே விமானத்திலிருந்து குண்டுவீசிக் கொல்லும் ஒரே நாடு இலங்கை தான். இதை வெளிப்படையாகச் சொல்வதனால் என்னைத் தேசத்துரோகி என்கிறார்கள். இதுதான் தேசத்துரோகம் என்றால் அந்தப் பட்டத்தை நான் பெருமையுடன் ஏற்கிறேன்.....
புலிகளின் மீதான நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பது புத்த தர்மத்தைக் கட்டிக்காப்பதாகச் சொல்லிக்கொள்ளும் சிங்கள சமூகத்துக்கு மிகப்பெரிய அவமானம் அப்படிச் சொல்லிக் கொள்வதற்காக இலங்கை வெட்கப்படவேண்டும்....
இவையெல்லாம் லசாந்தவின் மரண சாசனத்தில் இடம்பெற்ற வாசகங்கள். போர்க்கள வெற்றி இலங்கை நிலவரத்தை மேலும் மோசமாக்கிவிடும் என்று தீர்க்கதரிசனத்துடன் எச்சரிக்கவும் லசாந்த தயங்கவில்லை.
போரின் ரணங்கள் நிரந்தர வடுக்களை ஏற்படுத்திவிடும். அதைச் சமாளிப்பது எளிதல்ல! அரசியல் ரீதியாக தீர்வுகாணக் கூடிய ஒரு பிரச்சினை அனைத்துத் தரப்பு மக்களையும் துன்புறுத்தக்கூடிய சீழ்பிடித்த கொடுங்காயமாக மாறிவிடும். மிக வெளிப்படையாகத் தெரியும் இந்த உண்மை என் நாட்டின் பெரும்பான்மை மக்கள் கண்ணிலும் அரசின் கண்ணிலும் படவேயில்லை. எனது கோபத்துக்கும் சலிப்புக்கும் இதுதான் காரணம்என்றார் அவர்.
உனக்கெதற்கு வம்பு இதையெல்லாம் ஏன் பேசுகிறாய் தேவையில்லாமல் ஏன் விரோதத்தை வளர்த்துக் கொள்கிறாய்.... இப்படியெல்லாம் லசாந்தவைச் சுற்றியிருந்தவர்கள் அவரைக் கேட்டதுண்டு.
லசாந்த அவர்களுக்குச் சொன்ன பதில் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இப்போது நான் பேசாவிட்டால் பிறகு உண்மையைத் துணிவுடன் பேச வேறெவரும் மிஞ்சாமல் போய்விடக்கூடும் என்றார் அவர் உறுதியாக.
இன்றைக்கு லசாந்த மறைவுக்குப் பிறகும் அவரது கட்டுரையை வெளியிட அனுமதித்ததாகச் சொல்லும் ராஜபட்சே உண்மையில் செய்ததென்ன? கொழும்பில் நடந்த லசாந்தவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஜெர்மன் தூதர் ஜர்ஜன் வீர்த் பேச இயலாத நிலையில் இன்று இருக்கிறோம் இதற்குமுன்பே நாம் பேசியிருக்கவேண்டும் இப்போது காலம் கடந்துவிட்டது என்றார். இப்படிப் பேசியதற்காகஇ மறுநாளே தனது வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு அவரை அழைத்துக் கண்டித்தது இலங்கை.
லசாந்தவின் மரணவாக்குமூலம் அவ்வளவு கடுமையாக இருக்கும் என்று தெரிந்திருந்தால் ராஜபட்சே நிர்வாகம் அதை அனுமதித்திருக்குமா? உண்மை அப்படியிருக்க தான் சர்வாதிகாரியாக இல்லாததால்தான் அதை அனுமதித்ததாக வெட்கமின்றித் தம்பட்டமடிக்க முடிகிறது ராஜபட்சேவால்.
லசாந்த என்கிற மனிதனைப் பற்றி ராஜபட்சே மாதிரி ஒரு பிணந்தின்னிக் கழுகு பேசுவதுதான் கொடுமை. தன்னால் கொல்லப்பட்ட ஒருவன் மூலம் தனக்கு மரியாதை தேடிக்கொள்ள முயல்வது அதைவிடக் கொடுமை. லசாந்த கொலையிலிருந்து முள்ளிவாய்க்கால் படுகொலைகள் வரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ராஜபட்சே மீது சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால் எந்தப் பலனும் இல்லை.
அதற்கெல்லாம் பிறகும் கொலைகார ராஜபட்சே தலைகனத்துத் திரிவது சர்வதேசத்தின் கையாலாகாத் தனத்தைத் தான் காட்டுகிறது. சர்வதேசம் போல் பான் கீ மூன் போல் மிலிபாண்ட் போல் ஹிலாரி போல் ராஜபட்சேவை ஒப்புக்குக் கண்டிக்கும் கும்பலாக நாமும் மாறிவிட்டிருப்பது மிகப்பெரிய அநியாயம். அவர்கள் யாருக்கும் ஈழத்தில் அணுஅணுவாகக் கொல்லப்படும் இனம் தொப்புள்கொடி உறவல்ல. அப்படியிருந்தால் அவர்கள் அறிக்கை மட்டுமே விடமாட்டார்கள் கொதித்தெழுவார்கள். நாம்.....?
நமது இப்போதைய கடமை,
கம்பிவேலிகளுக்குப் பின்னுள்ள நரகத்திலிருந்து 3 லட்சம் உயிர்களை மீட்பது மட்டுமல்ல. இலங்கையின் நாசசக்திகளான ராஜபட்சே சகோதரர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் கடமையும் நமக்கு இருக்கிறது. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது.ஓநாய்களைக் கூண்டில் அடைக்காமல் ஆட்டுக்குட்டிகளை வெளியே கொண்டுவர முடியாது கொண்டுவரக் கூடாது.
சர்வதேச நாடுகள் பல இலங்கையின் இனவெறியை பகிரங்கமாகக் கண்டிக்கும் இப்போதைய நிலையில் இனப்படுகொலைக்குக் காரணமான ராஜபட்சேக்களை சர்வதேச குற்றவாளிகளாக அறிவிக்கக் கோரி நாம் உரக்க முழங்கினாலே போதும். உலகெங்கும் அது எதிரொலிக்கும். அந்தக் குரல் ராஜபட்சே சகோதரர்களைத் தூக்குமேடை வரை அழைத்துச் செல்லும் குரலாக வலுவடையும் என்பது நிச்சயம்.
யுத்தம் நடத்தும் துணிவு வேண்டாம் செத்துக்கொண்டிருக்கும் நமது சொந்தங்களைக் காக்கவும் கொன்று குவித்த கொடுங்கோலர்களைக் கழுவில் ஏற்றவும் சத்தம் கொடுக்கும் துணிவுகூட இல்லாவிட்டால் நாம் இருந்தென்ன இறந்தென்ன? இலவச கலர் டி.வி, இலவச வேஷ்டி-சேலை என்று சகல சௌபாக்கியங்களுடனும் சௌகரியங்களுடனும் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் நமது எண்ணிக்கை 7 கோடியைத் தாண்டிவிட்டது.
அதனால் என்ன பயன்? உலகெங்கும் சிதறிப்போன 35 லட்சம் தமிழர்களைக் கொண்ட ஓர் இனம் தான் தமிழன் என்கிற பெயரையும் தமிழின் பெயரையும் உலகெங்கும் பதிவு செய்ததேயன்றி நாமல்ல. குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டியதைத் தவிர வேறென்ன செய்தோம் நாம்?
இந்த நொடியிலாவது ஓர் உண்மையை உணர நாம் முன்வரவேண்டும்...
முகாம்களில் இனிமேல் நிகழும் ஒவ்வொரு மரணத்துக்கும் நமது மௌனம்தான் காரணமாயிருக்கும். முகாம்களில் இனிமேல் நடக்கும் எந்தக் கற்பழிப்புக்கும் எந்தச் சித்திரவதைக்கும் நமது பொறுப்பின்மையும் கோழைத்தனமும்தான் காரணமாயிருக்கும்.
இந்தப் பொறுப்பின்மைக்கும் கோழைத்தனத்துக்கும் முடிவுகட்டுவோம். இனப் படுகொலை செய்த ராஜபட்சேக்களைத் தூக்கில்போடு என்று 7 கோடி பேரும் சேர்ந்து குரல்கொடுப்போம். அவன் இந்தியாவின் நண்பன் அவனைத் தூக்கில் போடச் சொல்வது தேசத்துரோகம் என்று குற்றஞ்சாட்டப்பட்டால் லசாந்த வழியில் அந்த தேசத்துரோகி பட்டத்தைப் பெருமையுடன் ஏற்போம்.
தேசம் முக்கியமில்லை எங்கள் தேசிய இனம்தான் முக்கியம் என்று வெளிப்படையாக அறிவிப்போம். வெறும் சோற்றுப்பிண்டமாகவே வாழ்ந்துகொண்டிருந்தால் நாமும் ஒருநாள் கழிவறைகளுக்கு முன் கியூவில் நிற்கவேண்டியிருக்கலாம். இப்போது பேசவேண்டியதைப் பேசத் தவறினோமென்றால் அப்போது நமக்காகப் பேச எவரேனும் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா?
- தமிழ்க்கதிருக்காக: புகழேந்தி தங்கராஜ்
Comments