வன்னியின் துயரமும் உலகத்தின் பாராமுகமும்!


இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு நடத்திய இனப் படுகொலைப் போரில் தங்களின் குடும்பம், இல்லம், சொந்தங்கள், சொத்துப் பத்துகள், நிலம், தொழில் என்று அனைத்தையும் இழந்து, எந்த வன்னி மண்ணில் ஒராண்டுக்கு முன்னர் வரை வளமாக வாழ்ந்தனரோ அதே பூமியில் இன்று முகாம்களில் அடைப்பட்டுக் கிடக்கும் ஈழத் தமிழர்கள் அனுபவித்துவரும் கொடுமைகள், எங்கே அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுவிடுவரோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறுதிப் போரில் சிறிலங்க இராணுவமும், விமானப் படையும் நடத்திய கொடூரத் தாக்குதலி்ல் உயிரிழந்த பல பத்தாயிரக்கணக்கான மக்கள் போக, குண்டடிபட்டு, கை, கால் இழந்து, மருத்துவ சிகிச்சை ஏதுமின்றி, சிங்கள இராணுவத்திடம் சிக்கிய சற்றேறக்குறைய 3 இலட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள 33 முகாம்களில் கடந்த வாரத்தில் பெய்த அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் அவர்களை பெரும் அவதிக்கு ஆளாக்கியுள்ளது (செய்தியைக் காண்க).


எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. பல இடங்களில் இடுப்பளவிற்கு நீர் பெருக்கு, எங்கும் தண்ணீர் சூழ்ந்ததால், அங்கு பூமியில் குழி வெட்டி ஏற்படுத்தப்பட்ட கழிவுக் குழிகள் சிதைந்து அதில் தேங்கியிருந்த கழிவுகள் வெள்ள நீருடன் கலந்து சுற்றுச் சூழலை கெடுத்துள்ளது, சமைக்க அளிக்கப்பட்ட விரகுகள் மழையில் நனைந்து ஈரமானதால் கொடுத்த கொஞ்ச நஞ்ச உணவுகளை சமைத்து உண்ண வழியில்லை, மழையால் அந்தச் செம்மண் பூமி சேறானதால் அந்தப் பகுதிக்கு வாகனங்களில் தூய குடி நீர் கூட கிடைக்காமல் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இம்மக்கள் நரக வேதனையில் தள்ளப்பட்டுள்ளார்கள் என்று வந்த வந்துக் கொண்டிருக்கும் செய்திகள் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

இப்படிப்பட்ட நிலை ஏற்படும் என்றும், வட கிழக்கு பருவமழை பொழியும் காலத்தில் தாழ்வான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாம்களில் வெள்ள நீர் தேங்கும் நிலை ஏற்படும் என்றும், அதன் காரணமாக, ஏற்கனவே மோசமான சுகாதார சூழல் உள்ள அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் என்று அந்த முகாம்களுக்கு சென்று வந்தவர்கள் அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

பாதுகாப்பு வலயப் பகுதியில் தஞ்சமடைந்துள்ள முன்றரை இலட்சம் மக்களைக் காப்பாற்றுங்கள் என்று உலக நாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களும், மனித உரிமை அமைப்புகளும் அபாய அறிவிக்கை செய்தும் போரை நிறுத்தி மக்களைக் காக்க எந்த நடவடிக்கையும் உலக நாடுகளும் ஐ.நா.வும் எடுக்காததால் இறுதிக் கட்டப் போரில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் சிறிலங்கப் படைகளால் கொல்லப்பட்டது மட்டுமின்றி, அந்த அடையாளங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில், மிகக் கொடுமையான சூழலில், போதுமான அடிப்படைத் தேவைகளும், வசதிகளும் இல்லாத முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை இயற்கையால் ஏற்படும் அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று மனித உரிமை கருத்தரங்குகளில் பேசப்பட்டும், அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்ட சூழலில், சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென்று மழை பெய்து அவர்களின் துயரத்தைப் பண்மடங்காகியுள்ளது.

திசை திருப்பும் சிறிலங்க அரசு!

போர் முடிந்துவிட்டது, விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டோம், இதற்கு மேல் அவர்களால் துளிர் விட முடியாது என்று கொழும்புவில் இருந்து கொண்டு வீர வசனம் பேசிம் சிறிலங்க அரச தலைவர்கள், முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான எந்த வசதியையும் ஏற்படுத்தித் தரவில்லை. அதற்கான நிதிப் பலமும் சிறிலங்க அரசிற்கு இல்லை.

ஈழத் தமிழர்களை அழித்தொழிக்க உலக நாடுகளிடமும், பன்னாட்டு நிதி அமைப்புகளிடமும் வாங்கிய கடன்கள் அனைத்தையும் இராணுவத்திற்கு செலவிட்டுவிட்டு, போரில் இறந்து போன இராணுவ வீரர்களுக்கு அளிக்க வேண்டிய மாத ஊதியத்தைக் கூட தர வக்கற்ற நிலையில், இறந்த போன வீரர்கள் பல்லாயிரக்கணக்கானோரை காணாமல் போனவர்கள் பட்டியலில் வைத்து சிங்கள மக்களை ஏமாற்றிவரும் சிறிலங்க அரசு, முகாம்களில் உள்ள மக்களை ஐ.நா.வின் அகதிகள் அமைப்பிடம் ஒப்படைக்காமல், தனது கட்டுப்பாட்டிலேயே வைத்து விசாரணை என்ற பெயரில் அவர்களைப் பிரித்து, துன்புறுத்தி கொன்று வருகிறது. இதனை உலகம் அறிந்து கொள்ளாமல் தடுக்க முகாம்களுக்கு பத்திரிக்கையாளர்களை அனுபதிக்க மறுத்து வருகிறது. அதன் இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா, சீனா போன்ற தெற்காசிய வல்லரசுகள் துணை போய்க்கொண்டிருக்கின்றன.

முகாமிலுள்ள மக்களை தங்களிடம் ஒப்படைக்காத நிலையிலும், அவர்களுக்குத் தேவையான இருப்பிட வசதிகளை (கூடாரங்கள், சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை) ஐ.நா.வின் அகதிகள் அமைப்புதான் வழங்கி வருகிறது. இந்த மூன்று இலட்சம் மக்களுக்கும் தேவையான உணவும் ஐ.நா.வின் உலக உணவும் திட்டத்தின் கீழ்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்களை நேரடியாக அம்மக்களிடம் விநியோகிக்க அனுமதிக்காமல், சிறிலங்க இராணுவமே பெற்றுக் கொண்டு விநியோகித்து வருகிறது (ஐ.நா.வின் இந்தத் திட்டத்திற்கும் போதுமான நிதி உலக நாடுகள் இடமிருந்து வராததால், தங்கள் திட்டத்தின் கீழ் வழங்கிவரும் உணவு அளவை பாதியாகக் குறைக்கும் நிலை ஏறபட்டுள்ளது என்று இவ்வமைப்பு கூறியுள்ளது). உண்மை இவ்வாறிக்க, மழையினால் முகாம்களில் உள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவதிகளுக்கு ஐ.நா.தான் காரணம் என்று கூசாமல் கூறியுள்ளார் சிறிலங்க பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபக்ச! “தமிழர்கள் எங்கள் மக்கள், அவர்களை எப்படிப் பாதுகாப்பது என்று எங்களுக்குத் தெரியும், இப்போதே அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்த முற்பட்டால் அங்கு புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளில் சிக்கி அவர்கள் உயிரிழக்க நேர்ந்தால் யார் பொறுப்பு? நாங்களல்லவா?” என்று கருணைக் கடலாகப் பேட்டி அளித்துவிட்டு, அவர்களைக் காப்பாற்ற வக்கற்று, எல்லாவற்றையும் ஐ.நா.தான் செய்கிறது, எனவே அவர்களே பொறுப்பு என்று கூறுவது எவ்வளவு வெட்கம் கொட்டப் பேச்சு. ஆனால் வெட்கம், கருணை, மனிதாபிமானம் என்பதெல்லாம் இந்த பெளத்த - சிங்கள இனவெறியாளர்களிடம் தேடினால் எங்கிருந்து கிடைக்கும்!


மூன்று இலட்சம் மக்களுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே கொடுத்துவிட்டு, குடிக்க தண்ணீர் பெறவும், கழிவறைக்கு செல்வதற்காகவும் அவர்களை நாள் முழுவதும் வரிசையில் நிற்க வைத்து நாளும் அலைக்கழித்துவரும் இந்த வெறியர் இன்று கூறுகிறார் ‘அவர்களிடையே பதுங்கியுள்ள புலிகளைத் தேடுகிறோம், எல்லா புலிகளையும் தேடி கண்டு பிடிக்கும் வரை மீள் குடியமர்த்த முடியாது. அவர்களை இப்போதே வெளியில் விட்டால் வன்னிக் காடுகளில் புதைத்து வைத்துள்ள ஆயுதங்களை எடுத்து மீண்டு்ம் போரைத் துவக்கி விடுவார்கள’.

“விடுதலைப் புலிகளே இல்லை, எல்லோரையும் ஒழித்துவிட்டோம். புலிகளின் படியி்ல் இருந்து தமிழர்களை மீட்டு விட்டோம” என்று சிங்களப் படைத் தளபதி சரத் பொன்சேகாவும், நாடாளுமன்றத்தில் ராஜபக்சவும் வீராவேசத்தோடு முழங்கினார்களே? இப்போது மீண்டும் புலிகளைத் தேடுவது எதற்கு?

கோத்தபய கூறியதில் இருந்து ஒரு உண்மை வெளிவந்துள்ளது. முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களில் இருந்த பல ஆயிரக்கணக்கான (24,000 பேர் என்று கூறுகிறார்கள்) இளம் வயதினரை தனியாக பிரித்து அவர்களைப் புலிகள் என்று முத்திரையிட்டு, சித்தரவதை செய்து வருகின்றனர். அந்தப் பகுதிகளுக்கு யாரையும் நுழைய விடாமல் பலத்த பாதுகாப்பு போட்டுள்ளது சிறிலங்க இராணுவம்.

இவர்கள் மட்டுமின்றி, மேலும் 3,000 இளம் பெண்களை அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து பிரித்து கடத்தி சென்றுள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது இன்றுவரை தெரியவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன. மீதமுள்ள மக்களையும் நாளுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கொல்கின்றனர். இப்படிப்பட்ட வதைகளையெல்லாம் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் நாஜி முகாம்களில் நடத்தப்பட்டதை வரலாறு படித்தவர்கள் அறிந்திருப்பர். அதையே இன்று ஈழத் தமிழர்கள் மீது செயல்படுத்துகிறது சிறிலங்க அரசு.

இதையெல்லாம் இந்தியாவும், சீனாவும், பாகிஸ்தானு்ம் ஏற்றுக் கொள்ளலாம், ஏனென்றால் இந்த மூன்று நாடுகளுமே தமிழினப் படுகொலைக்கு எல்லா விதத்திலும் உதவின. ஆனால் மற்ற உலக நாடுகள் ஏன் மெளனம் சாதிக்கின்றன என்பதுதான் புரியவில்லை.

இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்களை படுகொலை செய்ததை அறிந்து அதிர்ச்சியுற்ற உலக நாடுகள், அதற்காக பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிய உலக நாடுகள், இன்று முகாம்களில் 3 இலட்சம் மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் சிறைப்படுத்தியிருப்பதை ஏன் கண்டும் காணாமல் இருக்கின்றன. இது மனித உரிமை மீறலில்லையா? தன்னால் காப்பாற்றப்பட வேண்டிய மக்களை முகாம்களில் அடைத்து வைத்து ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு கொடுத்து கொல்கிறதே சிறிலங்க அரசு, இது அவர்களை காப்பாற்றம் பொறுப்பை திட்டமிட்டே தவிர்க்கும் குற்றம் அல்லவா?

போர் முடிந்துவிட்டது என்று அறிவித்தப் பின்னரும் அப்பகுதிக்கு பத்திரிக்கையாளர்களையும் மற்ற ஊடகங்களையும் அனுமதிக்காததை அம்னெஸ்டி மட்டுமே கண்டிக்கிறதே, ஐ.நா. ஏன் வாய் திறக்கவில்லை? அந்த மக்கள் அனுபவித்துவரும் கொடுமைகளை ஏன் ஐ.நா. பாதுகாப்புப் பேரவை விவாதிக்கவில்லை?


இது மிக ஆபத்தான மெளனம். இந்த மெளனம் இன்னும் சில மாதங்களுக்குத் தொடர்ந்தால் இந்த மூன்று இலட்சம் மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக சிறிலங்க அரசப் படைகளாலும், அங்கு நிலவும் படுமோசமான சூழலால் ஏற்படப்போகும் தொற்று நோய்களாலும் அழிந்து போவார்கள்.

அப்படி ஒன்று நிகழுமானால், இந்த உலகில் ஐ.நா.வும் (ஏற்கனவே அது ‘கைப்பாவை’ என்று அந்தஸ்த்துடன்தான் உள்ளது), அதன் மனித உரிமை அமைப்புகளும், அதன் அமைவிற்கு அடிப்படையான தார்மீக நெறிமுறைகளுக்கும் எந்த மரியாதையுமின்றி போய்விடும்.

இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களை கண்டு கொள்ளாமல் விட்டதுபோல, இன்றுவரை உயிருடன் இருக்கும் இம்மக்களையாவது காத்து தங்கள் தார்மீக கடமைகளை உலக நாடுகள் நிறைவேற்றட்டும்.

இங்குள்ள தலைவர்களும் அங்கு சுமூக நிலை நிலவுகிறது என்று விவரம் தெரியாமல் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, மனிதாபிமான அடிப்படையிலாவது அவர்களை காப்பாற்றுமாறு குரல் கொடுக்கட்டும்.

Comments