அமெரிக்காவில் தொடரும் சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை புறக்கணிக்கக் கோரும் பரப்புரைப் போராட்டம்
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் கலந்துகொண்ட இந்தப் பரப்புரைப் போராட்டம் 'அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை'யின் [United States Tamil Political Action Council - USTPAC] முன்முனைவோடு மேற்கெள்ளப்பட்டது.
இந்தப் பரப்புரைப் போராட்டம் தொடங்கப்பட்ட பின்னர் - நியூயோர்க், மன்ஹட்டன் நகரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது போராட்டம் இதுவாகும்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமெரிக்காவின் முதன்மையான ஆடை விற்பனை நிறுவனங்களான GAP, MACY’S, Victoria's Secret போன்றவற்றின் பெரிய சில்லறை விற்பனை நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த நிலையங்களில் சிறிலங்காவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகள் மிகப் பெருமளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சிறிலங்காவில் தயாரிக்கப்படும் ஆயத்த ஆடைகளை கொள்முதல் செய்யவேண்டாம் என அந்தக் கடைகளுக்குச் சென்ற வாடிக்கையாளர்களிடமும், மன்ஹட்டன் நகர நடைப் பயணிகள் மற்றும் உல்லாசப் பயணிகளிடமும் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
அந்த வர்த்தக நிலையங்களின் முகாமையாளர்களைச் சந்தித்த தமிழ் பரப்புரையாளர்கள் - அவர்களிடமும் அதே கோரிக்கையை முன்வைத்தனர்.
சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு எதிராகப் புரிந்துவரும் இன அழிப்பின் பரிமாணங்களை விளக்கிக் கூறியபோது - அந்த வர்த்தக முகாமையாளர்கள், வீதியோர நடைப் பயணிகள் மற்றும் உல்லாசப் பயணிகள் ஆகியோர் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.
குறிப்பாக - ஏறக்குறைய 3 லட்சம் தமிழ் மக்களை ஹிட்லரின் 'நாசி' பாணி வதைத் தடுப்பு முகாம்களில் சிறிலங்கா அடைத்து வைத்திருக்கின்றது என்ற ஒரு பெரிய விடயம் அங்கு இருந்த பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட ஆயத்த ஆடைகளில் 50 வீதம் வரையானவை அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஆடைத் தயாரிப்பு தொழிற்துறை மூலமாக சிறிலங்காவுக்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானம் தமிழ் இனத்தை அழிப்பதற்கான தேவைக்கே முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பது அவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
தமிழ் பரப்புரையாளர்கள் வழங்கிய விளக்கங்களைத் தொடர்ந்து - "இது ஒரு இனப்படுகொலையே தான்" என்று ஒரு வர்த்தக நிறுவனத்தின் முகாமையாளர் தன்னிடம் மிகச் சினத்துடன் கூறினார் என இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட - அமெரிக்க தமிழ் அரசியல் செயலவையின் ஒரு செயற்பாட்டாளரான சிவாநாதன் தெரிவித்தார்.
கோபத்துடன் கருத்துத் தெரிவித்த ஒரு அமெரிக்க வாடிக்கையாளர் - "இது ஒரு கலப்படமில்லாத அடிமைத்தனம்" என்றார்.
இந்தப் போராட்டத்தின்போது பல நூற்றுக்கணக்கான பிரசுரங்கள் சாதரண பொதுமக்களுக்கும், வர்த்தக நிறுவன வேலையாட்கள் மற்றும் முகாமையாளர்களுக்கும் வழங்கப்பட்டன.
"இந்த முழுப் போராட்டத்தினதும் - அந்த துண்டுப் பிரசுரங்களினதும் தகவல் மிகச் சுருக்கமானது; ஆனால் மிகப் பலமானது" என்று சிவாநாதன் தெரிவித்தார்.
"தயாரிக்கப்பட்ட ஆடைகளை வாங்குவதற்கு முன்னர் அதன் விபரப் பட்டையைப் பாருங்கள். இந்தப் பொருள் சிறிலங்காவில் தயாரிக்கப்பட்டது என அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்தால் - அவற்றை வாங்காதீர்கள். ஏனெனில் அந்த நாடு இனப்படுகொலையைச் செய்கின்றது; உங்கள் பணம் அந்த இன அழிப்புக்கே பயன்படுத்தப்படுகின்றது." என்பது தான் அந்தத் தகவல்.
அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை முன்னெடுத்துள்ள இந்தப் பரப்புரைப் போராட்டம் - தொடர்ந்தும் - விரைவாக - அமெரிக்காவின் ஏனைய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments