33 ஆண்டாக எம்மால் நடத்தப்பட்ட போராட்டம் நடுத்தெருவில் நிற்கிறதே ஏன்?

உங்களுடன் எனக்குள் உதித்த சில சிந்தனைகளைப் பகிர்வதற்காக வந்துள்ளேன். தற்போது எம்முள் எழுந்துள்ள ஜனநாயக சிந்தனைக்கு நாம் புலம்பெயர் நாட்டில் எவ்வாறு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்பதே எனது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நான் ஒருவரையும் திடீரென்று ஒரு நேர்கோட்டில் வாருங்கள் என்று கட்டளையிடவில்லை. நடந்த பிழைகளையோ நீங்கள் அடைந்த துன்பங்களையோ மறக்கும்படியும் கூறவில்லை. ஆனால்

ஏன் இவை நடந்தன?

இவை நடந்ததற்கு யார் காரணம்?

இவற்றை இனி எவ்வாறு நடக்காமல் பார்ப்பது?

போன்றவற்றிற்கு விடை காணவேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் ஒவ்வொருவரும் உள்ளோம் என்பதை முதலில் கூறவிரும்புகின்றேன். இதை ஏற்பதும் விடுவதும் உங்கள் விருப்பம். ஆனால் நீங்கள் இதை அறியாமல் இருந்தால் மேலும் மேலும் நாம் அழிந்துவிடுவோம் என்பதையே கூறவிளைகிறேன்.

இலங்கை 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததும், 1956 இல் தனிச்சிங்களச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் பின்பு இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் தமது அதிருப்தியை பலவழிகளில் காட்ட முயன்று, அகிம்சைப் போராட்டங்கள் நடத்த முயன்றபோது அவர்கள் தாக்கப்பட்டார்கள். பின்பு தமிழ் அரசியல்வாதிகள் இளைஞர்களைத் திரட்டி போராட்டங்கள் ஆரம்பித்தனர். இவ்வாறு போராட்டங்களை ஆரம்பித்து வைத்த அரசியல்வாதிகள் அவ்விளைஞர்களை முன்னின்று வழிநடத்தாமல் இரட்டைவேடம் பூண்டார்கள். பின்பு ”சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது” என்று நகைத்தார்கள். அதன்பின்பு ஆயுதத்தால் அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.

அதனைத்தொடர்ந்து பல இயக்கங்கள் உருவானது. அவர்களுக்குள் போட்டிகள் ஏற்பட்டு ஒரு தெருச்சண்டியனையும் பிச்சைக்காரனையும் சிறுகளவு எடுத்தவனையும் சுட்டு மரணதண்டனை கொடுத்துவிட்டு 32 இயக்கங்களுக்குள் யார் செய்தார்கள் என்று தெரியாமல் பிணத்தைச் சுற்றிநின்று நாம் வேடிக்கை பார்த்தோம். இவ்வாறு எல்லைகளை நோக்கி நீட்டியிருக்க வேண்டிய துப்பாக்கிகள் எமக்குள் நீட்டப்பட்டதற்கு யார் காரணம், யாருடைய அறியாமை காரணம் என்பதே எனது கேள்வி?

இலங்கையில் வாழ்கின்ற பெரும்பான்மை இனத்தவன் 61 ஆண்டாக ” தன்னைக் கடிக்கின்ற கொசுகூட தமிழ்க்கொசு என்று நினைத்தே அடிக்கின்றான்.

ஆனால் எம்மில் சிலர் இந்தக் கொசு அது இல்லை. அதோ இருக்கிறது தமிழ்கொசு என்று காட்டிக்கொடுக்கின்றான். சிங்களவனுக்குள்ளும் எல்லாப் போட்டிகளும் இருக்கின்றது.

ஆனால்

தமிழர்களை அழிப்பதில் யார் கூடஅழிப்பது என்ற போட்டியையே அவன் வைத்திருக்கின்றான் என்பதை நாம் உணர்கின்றோமில்லை.

இப்படிப்பட்ட உதாணங்களை எழுதி உங்களுக்கு இலங்கைப் பிரச்சனை என்ன என்று தெரியாதவர்களாக்க நான் எண்ணவில்லை.

இருப்பினும் 33 ஆண்டாக எம்மால் நடத்தப்பட்ட போராட்டம் நடுத்தெருவில் நிற்கிறதே! ஏன்?

இதுவே எனது கேள்வி இதற்கு மீண்டும் சிலர்மேல் பழிபோட்டுவிட்டு ஆபிரிக்க நாடுகளை நோக்கியும் நாம் புலம்பெயர நினைக்கப் போகின்றோமா என்பதே எனது ஆதங்கம்.

ஏனெனில் ஒரு சில சம்பவங்கள் என்னை வேதனையடைய வைத்துவிட்டன. உதாரணமாக

3 மாதம் தெருக்களை மறித்து சில பெரிய நாடுகளின் மத்தியில் எங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று போராட்டம்,

ஒன்றரை இலட்சம் பேர் பலி எங்களுக்கு உதவுங்கள் என்று கோரிக்கை.

ஆனால் அடுத்த சில மாதங்களில்

அதே நாடுகளில் தெருக்களை மறித்து கோயில் ஊர்வலங்கள், பெரிய அளவிலான கேளிக்கைக் கொண்டாட்டங்கள்.

இவைதான் எம்மை இக்கதிக்கு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் எம்மத்தியிலும் செல்லாக்காசு ஆக்கிய விடையங்கள்.

இவற்றை உணராமல் விடுவோமாயின் விரைவில் உலகில் ஒரு மதிப்பற்ற இனமாக மாறிவிடுவோம் என்பதே எனது வேதனை. ஒரு வீட்டில் இழப்பு ஏற்பட்டால் அவ்வீட்டார் ஒரு வருடத்திற்கு உண்ணாநிலை இருப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்காக வெள்ளையடித்து விழாக் கொண்டாடுவதில்லை என்பதையே நான் கூற விளைகின்றேன்.

சற்று சிந்தியுங்கள்!

ஐந்தறிவு படைத்த யானை தனது குட்டி காட்டில் இறந்துவிட்டால் 30 – 35 நாட்களுக்குள் மறக்காமல் அந்த இடத்திற்கு வந்து அதன்காரணத்தை யோசிக்குமாம்.

ஒரு சிறிய குருவிகூட தனது கூட்டை யாரும் பிரித்துவிட்டால் 3 நாட்களுக்கு அந்த இடத்தைச் சுற்றிச்சுற்றி வந்து அதை ஆராயுமாம்.

ஆனால்

நாங்களோ 50 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் ஒரே நாளில் கொல்லப்பட்டிருந்தும் ஏதும் தெரியாதது போல் கட்டுநாயக்கா விமானநிலையம் ஊடாக வெளிநாட்டில் இருந்து பூப்புனித நீராட்டுவிழாவிற்கும் திருமணவிழாவிற்கும் செத்தவீட்டிற்கும் என்று சென்று வருகிறோம்.

கேட்டால் அங்கு எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்கிறோம். ஆனால் எல்லாப் பிழைகளையும் ஒரு தலைமையிலே மட்டும் போட்டுவிட்டு, பிழை என்று சொல்லித் தப்பிக்கப் பார்க்கிறோம். இப்படியான ஒரு போக்கையே நான் உங்களை யோசிக்கச் சொல்கிறேன்.

முட்கம்பிக்குள் இருக்கும் 3 இலட்சம் மக்களையும் கட்டுநாயக்கா விமானநிலையமூடாக வெளிநாடு ஒன்றிற்கு வர விடுவார்களாயின் நான் இதை உங்களிடம் கேட்கமாட்டேன். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்று கூறினார்கள். எல்லா விதத்திலும் தமிழர்களைத் தரப்படுத்தி ஒதுக்கினார்கள். ஒற்றுமையாய் தம்முடன் இரு என்றார்கள். பின்பு தமக்குள் ஏற்பட்ட பிரச்சனைக்குக்கூட எம்மையே அடித்துத் துரத்தி உங்கள் இடம் வடக்கு, கிழக்கு அங்கு செல்லுங்கள் என்றார்கள். பின்பு அங்கும் வந்து அடித்தார்கள். நாம் திருப்பி அடிக்க முற்பட்டபோது, எம்மை ஆயுதத்தால் அழிக்க முடியாமற்போக, உங்களை உங்களாலேயே வெல்கிறோம் பார் என்று எம்மில் சிலரை வாங்கி, தற்காலிகமாக எம்மை வென்று நிற்கின்றார்கள். அத்துடன் நின்றுவிடாமல் இதற்கெல்லாம் காரணம் தமிழர்களின் ஒற்றுமை இன்மையே என்று அவர்களே சொல்லி நகைக்கின்றார்கள். இதற்கெல்லாம் அப்பாற்பட்டு மீண்டும் எமக்கு ஜனநாயகத்தைப் போதிக்க தமது நட்பு நாடுகளுடன் சேர்ந்து வகுப்பு எடுக்க முற்படுகின்றார்கள்.

இவர்களுக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கப் போகிறோம் என்பதே எனது கேள்வி. நாம் ஒன்றிணைந்து ஒரு வழி சென்று, மேற்கண்ட தவறுகள் இனிமேல் நடக்காமல் எம்மையும் பாதுகாத்து எம் இனத்தையும் பாதுகாக்க ஒற்றுமைப்படுவோம்! அதற்கான வழிமுறைகளை ஆரம்பிப்பவர்களை அடையாளங்கண்டு, அனுசரணை வழங்குவோம்! சிந்தித்துச் செயலாற்றுவோம்!

அன்பார்ந்த தமிழ் பேசும் தமிழீழ மக்களே எமக்கு ஒரு விடிவு தேவை என்பதை எல்லோரும் உணர்கின்றோம். அதற்கு அடித்தளம் நாம் அனைவரும் இணைந்து செயற்படுவதே. அதை தனியே ஒரு அமைப்பு ஆரம்பித்து செயற்படுத்த முடியாது. அதில் மீண்டும் பிழைகள் வரச் சந்தர்ப்பமுண்டு.

ஆகவே நாம் நமக்குள் இணைந்து அதை ஒரு அமைப்பாக மாற்றி, அல்லற்படும் அந்த 3 இலட்சம் மக்களையும் மீட்டெடுத்து, விலை போகா ஜனநாயக வழியில் மீண்டும் நாம் இணைவோம் என்று எனது விருப்பத்தை உங்களிடம் கூறி, எனக்கு முதலாம் வகுப்புப் படிப்பித்த வாத்தியார், முதலாம் வகுப்பிற்கு தொடர்ந்தும் படிப்பிக்க, நான் பத்தாம் வகுப்பிற்கு முன்னேறிப் படித்தமாதிரி. நான் கூறிய சில துளியை வைத்து, நீங்கள் இன்னும் திறம்பட சிந்தித்துச் செயலாற்றுவீர்கள் என நம்புகிறேன்.

நன்றி.

நிமல்

Comments