அமார்க்ஸியத்தின் இறுதி - அறத்திற்கு ‘மாற்று’ அரசியல் சந்தர்ப்பவாதம்


‘அவதூறு செய்கிறார்கள், என்னைத் திட்டுகிறார்கள், அறிவில்லாமல் எழுதுகிறார்கள், சதி செய்கிறார்கள்’. அ.மார்க்ஸ் தன்மீதான விமர்சனங்களை இப்படித்தான் எதிர்கொள்வார்.

பிறர் மீதான விமர்சனங்களை எவ்வாறு மேற்கொள்வார்? முதலில் எதிரியின் சாதி கண்டுபிடிப்பார்; வரவு செலவு பற்றிப் பேசுவார். தனது புகலிட பரப்புரையாளர்களான ஷோபா சக்தி, சுகன் இன்னபிற சிலபல தமிழகப் பரப்புரையாளர்களையும் வைத்து எதிரிகள் பற்றி நரகல் நடையில் எழுதச் சொல்வார். இவர்கள் அ.மார்க்ஸின் விமர்சகர்களை மிரட்டவும் செய்வார்கள். இதுதான் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தனது கருத்துக்களை எதிர்கொள்பவர்களை அ.மார்க்ஸ் அணுகும் முறை.

அ.மார்க்ஸ் தமது பரப்புரையாளர்கள் செய்கிற அனைத்துத் தகிடுதித்தங்களையும் மௌனமாக இருந்து பார்த்துக் கொண்டிருப்பார். அ.மார்க்ஸின் மேற்கோள்களை முன்வைத்து அவரது பரப்புரையாளர்கள் செய்கிற விளையாட்டுக்களை முதன்மையான தத்துவம் எனச் சான்றிதழ் கொடுப்பார்.

அ.மார்க்ஸின் மேற்கோள்களை அவரது பரப்புரையாளர்கள் காவித் திரிய, அதே மேற்கோள் பரப்புரைகளைத் தமிழக இதழ்களில் உரையாடல்கள் என்றும் கட்டுரைகள் என்றும் அவர்கள் முன்வைப்பார்கள். இவ்வாறாக அ.மார்க்ஸின் மேற்கோள்கள் தமிழகம் - புகலிடம் - புகலிடம் - தமிழகம் எனச் சுற்றுக்குள் இருந்து கொண்டே இருக்கும்.

நாகார்ஜூனன் மார்க்சியத்தை வறட்டுத்தனம் எனச் சொன்னார் என்பதனைப் ‘புதுவிசை’யில் போய் அ.மார்க்ஸ் சொல்வார். புதுவிசையைப் படிக்கிற மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் அ.மார்க்ஸ் மார்க்சியத்திற்காகப் பேசுகிறார் என மகிழ்வார்கள்.

மார்க்சியம் ‘பெருங்கதையாடல்’ என அ.மார்க்ஸ் புதுவிசையில் போய் சொல்ல மாட்டார். மார்க்சியம் பெருங்கதையாடல், இது குறுங்கதையாடல்களின் காலம் என்றால் என்ன அர்த்தம்? ‘மார்க்சியம் காலாவதி ஆகிவிட்டது’ என்று அர்த்தம். ஆதவன் தீட்சண்யாவுக்கு இது தெரிய வேண்டுமானால், மார்க்சிஸ்ட் கட்சியின் கோட்பாட்டாளரான இஜாஸ் அஹமதுவை அவர் படிக்க வேண்டும்.

நாகார்ஜூனன் மாவோயிஸ்ட்டாக தன்னைக் காட்டிக் கொண்டால் அ.மார்க்சுக்கு என்ன நஷ்டம்? எவரும் இனி அ.மார்க்சிடம் சான்றிதழ் வாங்கிவிட்டுத்தான் அவரவர் ஈடுபாடு பற்றிப் பேச வேண்டும் என்கிறார். என்னே அறிவுத்துறை அதிகாரம்? அ.மார்க்சுக்கு இந்த அதிகாரத்தை எவர் கொடுத்தார்?

அ.மார்க்சும் சரி அ.மார்க்சின் பரப்புரையாளர்களும் சரி பற்பல விசயங்களை ஒழுங்காக வாசிக்கக் கூடமாட்டார்கள். சின்னதான எடுத்துக்காட்டு வளர்மதியின் கீற்று தொடர்கட்டுரை குறித்த அ.மார்க்சின் அவதானம். கதிர்காமர் எனும் பெயர் தகவல் பிழையாகிவிட்டால், வளர்மதி எழுதும் கட்டுரை முழுக்கவும் நம்பகத்தன்மையற்றதாக ஆகிவிடும் என்பது அவர் வாதம். இது அ.மார்க்சின் அற்பமான தந்திரம். இதனையும் கூட வளர்மதியின் கட்டுரையைப் படித்துவிட்டு அ.மார்க்ஸ் சொல்லவில்லை. அவரைத் ‘திட்டுவதாக’ எவரோ சொன்னதன் அடிப்படையில் எழுதுகிறார்.

வளர்மதி அவரது கட்டுரையில் ஐரோப்பிய அரசு உருவாக்கம், வரிவிதிப்பு, அரசு உருவாக்கத்தில் எதிரியைச் சுட்டி பீதி உருவாக்குதல், வெகுமக்களை அச்சுறுத்தல் என எத்தனையோ விடயங்களை எழுதிச் செல்கிறார். கட்டுரையின் இருபகுதிகளை வாசித்தவர்கள், அந்தத் தகவல் பிழை, கட்டுரையின் தர்க்க நீட்சியில் எந்த விததிலும் 'உடைவை' (logical break) உருவாக்கவில்லை என்பதனை அறிந்து கொள்ளவது சுலபம்.

கட்டுரை ஒரு தொடர் கட்டுரை. அது முடியட்டும். அதன்பின் கட்டுரையுடன் முரண்படலாம் அல்லது உடன்படலாம். அது அவரவர் பார்வையைப் பொறுத்தது. அதைவிட்டுவிட்டு, கட்டுரையையும் முழுமையாகப் படிக்காமல், எவரோ சொன்னதை வைத்துக் கொண்டு, அதனது நம்பகத்தன்மையை, ஒரு சின்ன தகவல் பிழையை (அந்தத் தகவல் பிழையை வளர்மதி ஒப்புக் கொண்டிருக்கிறார்) வைத்துக் கொண்டு, நிராகரிக்க முற்படுவது என்னவிதமான அறிவிஜீவி அறம்? அறிவுஜீவி பெயரிலான வக்கிரமான தனிநபர் அற்பத்தனம் என்பது இதுதான்.

வளர்மதியின் கட்டுரையைத் தகவல் பிழையின் அடிப்படையில் நிராகரிப்பதற்கான குறைந்தபட்ச தகுதி கூட அமார்க்சுக்கும் அவரது பரப்புரையாளர்களான சுகனுக்கும் ஷோபா சக்திக்கும் கிடையாது.

எடுத்துக்காட்டு சொல்கிறேன் :

பின்நவீனத்துவ விஞ்ஞானம் எனும் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரையை ஷோபா சக்தியும் சுகனும் தொகுத்த ‘கறுப்பு’ நூலில் அவர்கள் பிரசுரித்தார்கள். அமெரிக்க விஞ்ஞானியான அலன் சாக்கலின் அக்கட்டுரையை ‘பிரணவன்’ என்பவர் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தப் பிரணவன் யார் என்கிற மர்மம் இதுவரைக்கும் தொடரும் மர்மம்.

அ.மார்க்ஸ் ஒரு விஞ்ஞானப் போதனை செய்கிற பேராசிரியர் என்பதை மட்டும் நாம் இப்போதைக்கு ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். ஷோபா சக்தி, சுகன் முன்வைத்த அந்தக் கட்டுரை தமிழ்ச் சூழலில் பின்நவீனத்துவ விஞ்ஞானம் தொடர்பாக வந்த ஒரு மோசடிக் கட்டுரை.

பின்நவீனத்துவவாதிகள் எவ்வளவு மேம்போக்காகவும் அர்த்தமற்றும் விஞ்ஞான சூத்திரங்களைத் தமது எழுத்துக்களில் பாவிக்கிறார்கள் என்பதைக் காண்பிப்பதற்காக அலன் சாகல் எழுதிய ஒரு ‘எள்ளல்’ (parody) கட்டுரை அது. அலன் சாகலின் இதே தர்க்கத்தின் அடிப்படையில் இந்து விஞ்ஞானம் பற்றிப் பேசுபவர்களை விமர்சித்து இந்தியச் சூழலில் மீரா நந்தா எழுதியிருக்கிறார்.

கடந்த இருபது ஆண்டுகளாக அலன் சாகலின் கட்டுரையைப் பற்றி உலகெங்கிலும் அறிவுத்துறைகளின் மட்டத்தில் விவாதங்கள் நடந்து வருகிறது. பின்நவீனத்துவ விஞ்ஞானம் எனப்படும் போலிக் கோருதலை விமர்சித்து எழுதப்பட்ட ஒரு கட்டுரை சுகன் ஷோபா சக்தியால் பின்நவீனத்துவக் கட்டுரை எனத் தமிழ்ச் சூழலில் வைக்கப்படுகிறது. இவர்களது தத்துவ ஆசான் அ.மார்க்ஸ் அதே தொகுப்பில் கட்டுரையும் எழுதியிருக்கிறார்.

சுகன் ஷோபா சக்திக்கு ஆதரவாகத் தமிழ்ச்சூழலில் எழுதுகிறவரும் அ.மார்க்ஸ்தான். மட்டுமல்ல அ.மார்க்சும் தானாகவே ஒரு பின்நவீனத்துவ விஞ்ஞானக் கட்டுரையையும் அதிருஷ்டவசமாக எழுதியிருக்கிறார். அலன் சாகல் தொடர்பான பச்சை அறிவு மோசடிக்கு இதுவரையிலும் பதிலிறுக்காமல் அ.மார்க்சும் அவரது இரு பரப்புரையாளர்களான சுகனும் ஷோபா சக்தியும் மௌனம் காப்பது மட்டுமல்ல, அதனைச் சுட்டிக்காட்டுகிறவர்களை அவதூறு செய்வதையும் மிரட்டுவதையுமே அறமாகக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன கொடுமை என்றால், இவ்வளவு பெரிய அறிவுத்துறை மோசடியைச் செய்த அ.மார்க்ஸ் குழுவினர் ஒரு தகவல் பிழையின் அடிப்படையில் வளர்மதியின் ஒரு முழுக்கட்டுரையையும் வாசிக்காமல், செவிவழிக் கேள்வியின் வழி நிராகரிப்பது வேடிக்கைக் கதையன்றி வேறென்ன? பிற தமிழ் எழுத்தாளர்கள் குறித்து அ.மார்க்ஸ் செய்கிற அதே எள்ளல் அ.மார்க்ஸ்க்கும் அவரது நடத்தைக்கும் பொருந்தும்.

எழுதிக் குவித்திருக்கிற அவரது எல்லா எழுத்துக்களையும் எவரும் படித்திருக்க மாட்டார்கள் என்கிற அலட்சியம் அவருக்குள் அதிகம் இருக்கிறது. முன்னுக்குப் பின் முரணாக எழுதுவதில் அவருக்கு நிகர் அவர்தான். அ.மார்க்ஸ் கீற்று இணையதளக் குழுவினர் பற்றிச் சொல்கிறார் பாருங்கள்:

சாரு நிவேதிதா ஒரு முறை சொன்னதுதான் எனக்கு நினைவுக்கு வரும். பொதுப் பிரச்சினைகள் குறித்து நம் பொதுமக்கள் அறிந்த அளவையும் விடக்குறைவாகக் தெரிந்தவர்கள்தான் இவர்கள். (அ.மார்க்ஸ் : ஈழப் பிரச்சினையும் தமிழக எழுத்தாளர்களும் : புதுவிசை: 2009).

ஈழம் குறித்தும், தமிழக எழுத்தாளர்கள் குறித்தும் சொல்வதற்காக சாருவின் மேற்கோளை எடுத்துக் காட்டியதைவிட வேறு அபத்தம் இருக்க முடியாது.

இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்று சிங்களப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தது என்கிற ‘அறிவை’ வைத்துக் கதை எழுதியவர் சாரு. அதனாலேயே சிங்களவர் தமிழர்களைக் கொல்ல இலங்கை ராணுவத்தில் சேர்ந்து தமிழரைக் கொன்றனர் எனவும் ‘அறிவுடன்’ கதை எழுதியவர் சாரு. அதனைத் தமது 'சமதருமபோதினி' தொகுப்பில் பிரசுரித்தவர்கள் அ.மார்க்சின் வழித்தோன்றல்களான ஈழ ‘அறிவுஜீவிகளான’ சுகன் மற்றும் ஷோபா சக்தி.

வெறும் புனைவு என்றும் அதற்கான கற்பனா சுதந்திரம் எவருக்கும் இருக்கிறது எனவும் சாருவின் இந்த ‘அறிவுக்கு’ அ,மார்க்ஸோ அல்லது அவரது ‘வழித்தோன்றல்களோ’ சப்பைக் கட்டுக் கட்டிக் கதை விட முடியாது. அப்புறம் அவர்கள் பேசுகிற பிரதிக் கட்டுடைப்பு ‘பணால்’ ஆகிவிடும். புதுமைப்பித்தனில் சாதி பார்க்கிற அவர்தம் பின்நவீனத்துவமும் ‘பணால்’ ஆகிவிடும்.

ஈழத்தில் இந்திய ராணுவம் 'சிங்களப் பெண்களை' வன்புணர்ந்தது என எந்த அறிவிலியும் கூட சொல்ல மாட்டான். இந்திய அமைதிப்படை ஈழத் தமிழ்ப் பெண்களைப் பாரிய அளவில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியது. ராஜீவ்காந்தியின் படுகொலைக்கான உணர்ச்சிவசமான காரணமாகவும் அது ஆகியது. இது வரலாறு.

சாரு என்ன ‘அறிவுடன்’ தன் ‘உன்னத சங்கீதம்’ கதையை எழுதியிருக்கிறார்? அ.மார்க்சின் வழித்தோன்றல்களான சுகன், ஷோபா சக்தி அதை என்ன ‘அறிவுடன்’ பிரசுரித்தார்கள்? சரி, இதுவெல்லாம் போகட்டும், அ.மார்க்ஸ் என்ன ‘அறிவுடன்’ ஈழம் குறித்துப் பேசும்போது, ஈழம் குறித்து மிக மோசமான ஒரு ‘வரலாற்றுப் பிழையை’ எழுத்தில் பதிந்த சாருவை, பிற தமிழக எழுத்தாளர்களை நக்கல் பண்ணத் தேர்ந்து கொள்கிறார்?

ஈழப் பிரச்சினை குறித்து நம் சக எழுத்தாளர்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்? பிரச்சினையின் ‘பன்முகப் பரிமாணங்களை’ இவர்கள் புரிந்து கொண்டு இருப்பார்களா? குறைந்த பட்சமான சில அடிப்படைத் தகவல்கள் - எடுத்துகாட்டாக இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 7.5 சதமுள்ள தமிழ் முஸ்லிம்கள் தம்மைத் தனித் தேசிய இனமாகக் கருதக் கூடிய நிலை உள்ளது - என்பது போன்றவற்றைக் கூட நம் எழுத்தாள நண்பர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் (அ.மார்க்ஸ் : ஈழப் பிரச்சினையும் தமிழக எழுத்தாளர்களும் : புதுவிசை) என்கிறார் அமார்க்ஸ்.

இந்தியாவில் முஸ்லீம் மக்களது பிரச்சினையும், தலித் மக்களது பிரச்சினையும் மிகவும் உணர்ச்சிகரமான, உக்கிரமான அரசியல் பிரச்சினை. ஈழப் பிரச்சினையை அறிவுவழிப்பட்ட வகையில் அணுகமுடியாமல் செய்வதற்காக அமார்க்ஸ் உடனடியாகப் பாவிக்கும் தந்திரோபாயம் இது.

பாலஸ்தீனப் பிரச்சினைக்கும் ஈழப் பிரச்சினைக்கும் நிறைய ஒப்புமைகள் உண்டு. பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய ராணுவம். இலங்கையில் சிங்கள ராணுவம். இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீனர்களில் ஹமாஸ் அல்லது பதா அல்லது பாலஸ்தீனக் கிறித்தவர்கள் எனப் பிரித்துப் பார்த்துக் குண்டுபோடுவதில்லை.

பாலஸ்தீனர்களில் சியா, சன்னி, கிறித்தவர் என இன வேறுபாடுகள் உண்டு. அடிப்படைவாதிகளான ஹமாஸினர் பதாவினரைப் படுகொலை செய்கிறார்கள். ஹமாஸை மஹ்மத் தர்வீசும், எட்வர்ட் ஸைத்தும் கண்டிக்கிறார்கள். பாலஸ்தீனத்திலும் குழுச் சண்டைகளும் பன்முகப்பட்ட போக்குகளும் உண்டு. பாலஸ்தீனப் பிரச்சினையைப் பேசும்போது இந்தப் பன்முகப்பட்ட பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காணவேண்டும் என அ.மார்க்ஸ் விரும்புகிறாரா?

காஸாப் பிரதேசத்தின் சன்னி இஸ்லாமியர்களான ஹமாசுக்கு தனித்துவமான கலாச்சார மரபு உண்டு. எனில் அ.மார்க்ஸ் அவர்களுக்கான தனி அலகை பாலஸ்தீனப் பிரச்சினையின் முன்பாகத் தீர்க்கவேண்டிய பிரச்சினை என முன்மொழிகிறாரா?

அ.மார்க்ஸ் தெளிவாகச் சொல்கிறார்: பாலஸ்தீனப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறி, முழுமையான இறையாண்மை உள்ள நாடுகள் உருவாகும் வரை அங்கே அமைதி சாத்தியமில்லை என்பதுதான் நிதர்சனம் (அ.மார்க்ஸ் : ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு அரசியல் - சுனாமி முதல் ஒபாமா வரை : புலம், 2009).

ஈழப் பிரச்சினைக்கு வருவோம். இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 7.5 சதமுள்ள தமிழ் முஸ்லிம்கள் தம்மைத் தனித் தேசிய இனமாகக் கருதக் கூடிய நிலை உள்ளது என எழுதுகிறார் அமார்க்ஸ். முரண்பட எந்த முகாந்திரமும் இல்லை. அதே அளவு நியாயம் அங்கு வாழ்கிற தமிழ்க் கிறித்தவர்களுக்கும், இந்துத் தமிழர்களுக்கும் உண்டுதானே?

இலங்கை இராணுவம் குண்டுபோட்டுக் கொல்லும்போது தமிழ் முஸ்லீம், தமிழ் இந்து, தமிழ் கிறித்தவன், தமிழ் தலித்துகள் என வித்தியாசம் பார்த்தா குண்டுபோடுகிறான்? அல்லது முகாம்களில் இலங்கை அரசினால் அடைக்கப்பட்டுள்ள மக்களை - தமிழ் முஸ்லீம் - தமிழ் கிறித்தவன் - தமிழ் இந்து - தமிழ் தலித்துகள் என வித்தியாசப்படுத்தியா கொடுமை செய்கிறான்? தமிழர்கள் என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் இலங்கை அரசு அவர்களை இவ்வாறு நடத்துகிறது. இது நிஜமா இல்லையா?

பின் ஏன், அமார்க்ஸ் அவர்களே, ‘முழுமையான இறையாண்மை உள்ள நாடுகள் உருவாகும் வரை அங்கே அமைதி சாத்தியமில்லை என்பதுதான் நிதர்சனம்’ என்று ஈழப் பிரச்சினை பற்றி உங்களால் சொல்ல முடியவில்லை?

விடுதலைப் புலிகள் கடுமையான தவறுகள் செய்திருக்கிறார்கள். ஈழவிடுதலைப் போராட்டம் இவ்வளவு பின்னடைவுக்கும் அவர்களது நடத்தைதான் காரணம். நெடுமாறன், வைகோ, ராமதாஸ், சீமான் போன்ற தமிழக விடுதலைப் புலி ஆதரவு அரசியல்வாதிகளின் உணர்ச்சிவசமான பேச்சுக்களும், புகலிடத் தமிழர்களின் அரசியல் விவேகமற்ற ஆலோசனைகளும்தான் பிரபாகரனதும் ஈழத்தமிழ் மக்களினதும் பேரழிவுகளுக்குக் காரணம் என்ற புரிதலுடனேயே இதனைச் சொல்ல முடியும். பிரபாகரனது ஏகப்பிரதிநிதித்துவம் ஈழத்தில் சீரழிந்த அரசியலின் துவக்கம் என்ற புரிதலுடனேயே இதனைச் சொல்ல முடியும்.

நீங்கள் உயர்த்திப் பிடிக்கிற சுசீந்திரன் இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்கிறார். நீங்கள் உயர்த்திப் பிடிக்கிற ஷோபா சக்தி, அவ்வப்போது பக்கம் மாற்றிப் பேசினாலும், இலங்கை அரச ஆதரவாளர்களுடன்தான் மேடைகளைப் பகிர்ந்து கொள்கிறார். அவர்களுடன்தான் அவர் அரசியல் ரீதியில் நட்பு பாராட்டுகிறார். நீங்கள் உயர்த்திப் பிடிக்கிற சுகன் சிங்கள அரசும் - இலங்கை பௌத்தமும் பற்றி புனிதப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறார்.

சுகன் தமிழ்க் கவிஞர் சந்திப்பில் பேசியதைப் பாருங்கள்:

பௌத்தம் அன்பையும், கருணையையும் போதிப்பது, சிங்களப் படையின் பின்னால் உள்ளது பௌத்தவெறி என்று சொல்வது மிகவும் தவறானது. விகாரமான இந்திய இந்து மனத்தின் தட்டையான புரிதலே பௌத்தம் குறித்த இந்த புரிதல் என்று கூறியவர், இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாடிக் காண்பித்தார். காசி ஆனந்தன், சேரன் உள்ளிட்டவர்கள் போரை ஆதரித்துப் பாடினார்கள். இன வெறுப்பை வளர்த்தவர்கள் இப்படித்தான் தலைமுறைக்கும் போர் காணிக்கையிடப்பட்டது. போர் அனைத்தையும் அழித்துவிடும். ஈழத்தில் உருவான பிரச்சினை வெள்ளாளர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே உருவானது இன்றுவரை அங்கு தலித்துகளுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை (கவிதை - ஒன்றுகூடல் - உரையாடல் : தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் வால்பாறை மற்றும் சென்னை : 2009 : லீனா மணிமேகலை - செல்மா பிரியதர்ஷன்).

சிங்களப்படைகளின் பின்னால் உள்ளது பௌத்த வெறி அல்ல என்கிறார்; ஈழத்தில் உருவான பிரச்சினை வெள்ளாளர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே உருவானது என்கிறார் சுகன்.

[Rajapakse] ஸ்டான்லி தம்பையா ஈழ இந்து இல்லை. ஈழக் கிறித்தவர். கல்வியாளர். அவருடைய Budhdhism Betrayed : Religion, Politics, And Violence In Sri Lanka (1992) எனும் புத்தகம் புத்த பிக்குகள் எவ்வாறு இலங்கையில் அரசியல் சக்தியாகப் பரிமாணம் பெற்றார்கள் என்று சொல்கிறது. புத்தத்தின் பெயரிலிலேயே புத்தமதப் போதனைகள் எவ்வாறு மீறப்படும் என்று சொல்கிறது. இலங்கைப் புத்தமத பிக்குகள் பௌத்தத்திற்கு துரோகம் இழைத்தார்கள் என்று அப்புத்தகம் சொல்கிறது.

தமது போர்வெற்றியின் பின் ராஜபக்சேவும் முப்படைத் தளபதிகளும் இலங்கையின் உச்சபட்ச பௌத்தமதத் தலைவர்களின் ஆசியைப் பெற்றுக் கொண்டார்கள். சிங்கள இனவாதத்தை தமிழர்களுக்கு எதிராகக் கக்குவதில் அங்குள்ள பிக்குகளின் அமைப்பு முன்னணியில் இருக்கிறது. இலங்கை பௌத்த உயர்பீடம் நடந்து முடிந்த உயிர் அழிவுகள் பற்றிப் பேசவில்லையே? நாட்டை ஒன்றுபடுத்தியதற்காக முப்படைத் தளபதிகளுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவுக்கும் ஆசி அல்லவா வழங்கியிருக்கிறது?

பிற்பாடு இலங்கைப் படையையும் இலங்கை பௌத்தத்தையும் தொடர்புபடுத்தக் கூடாது என சுகன் சொல்வது என்னவிதமான பின்நவீனத்துவத் தத்துவம்?

இலங்கை பௌத்தத்திற்கும் இலங்கை அரச அமைப்புகளுக்கும் அதனது ராணுவத்தினருக்கும் இருக்கும் திட்டவட்டமான உறவை பொதுப்புத்தி மட்டத்தில் இருக்கும் ஒருவராலேயே புரிந்து கொள்ள முடியும். 'சிங்கள ராணுவம் - பவுத்தம் - பாலுறவு - திரைப்படம் - அதிகாரம்' என இலங்கைப் பேராசிரியர் நிலுபர் டீமெல் ஒரு விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார். அ.மார்க்ஸ் அதனை வாசிப்பது நல்லது.

அம்பேத்கரின் 'கோட்பாட்டு பௌத்தத்தை' (theoritical budhdhism) முன்வைத்து இலங்கையிலுள்ள பௌத்தத்தின் குணத்தை அறிய முடியாது. ‘விகார இந்து மனம்’ என்று சுகன் விமர்சிப்பது அம்பேத்கரினது கோட்பாட்டு பௌத்தத்தின் அளவில் பொருத்தமான சொற்றொடர். இலங்கையின் குறிப்பான பௌத்த மரபிற்கு அது பொருந்தாது.

ஷோபா சக்தி, சசீந்திரன், சுகனுக்கு ஆதரவாகக் கட்டுரை எழுதுகிற அ.மார்க்ஸ் இவர்களது இந்தத் ‘தத்துவ நிலைபாடுகளுக்கும், அரசியல் நிலைபாடுகளுக்கும்’ என்ன விளக்கம் வைத்திருக்கிறார்?

யாழ் பகுதியினருக்கும், கிழக்கு மாகாணத்தினருக்கும் உள்ள கலாச்சார அரசியல் வேறுபாடுகள் முதலானவற்றையோ, யாழ் சமூகத்தில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமை குறித்தோ கூடவும் அவர்கள் (தமிழக எழுத்தாளர்கள்) கிஞ்சித்தும் அறியார்கள் என்கிறார் அ.மார்க்ஸ்.

இலங்கையில் நான்கு பிரதேசங்களில் தமிழர்கள் இருக்கிறார்கள். வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு. வடக்கு கிழக்குத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, கொழும்புத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் இடையிலும் கூட வித்தியாசங்கள் இருக்கிறது.

யாழ் சமூகத்தில் கடைபிடிக்கப்படும் தீண்டாமை என்று தனித்துக் காட்டுகிறார் அமார்க்ஸ். (அப்போதுதான் விடுதலைப் புலிகளை இவரால் தலித் அரசியலின் வழி ஓரம் கட்ட முடியும்). இந்த தனித்த சுட்டுதலே முதலில் அபத்தமானது.

நான்கு பிரதேசத்திலும் வாழும் தமிழர்களுக்கிடையிலும் தீண்டாமை உண்டு. விடுதலைப் புலிகளுக்கு முன்னும் தீண்டாமை உண்டு. அவர்கள் காலத்திலும் இருந்தது. அதனை அவர்கள் தடை செய்தார்கள். எனினும் தடை செய்வதானலோ அல்லது சட்டம் போடுவதானாலோ மட்டும் தீண்டாமையை முழுக்க ஒரு சமூகத்தின் மத்தியிலிருந்து ஒழித்துவிட முடியாது.

விடுதலைப் புலிகளின் அரசு அமைந்திருந்தாலும் கூட அப்போதும் தீண்டாமை இருந்திருக்கும். எனில் அதற்கெதிரான தமது நடவடிக்கைகளை அந்தச் சமூக அமைப்பில் அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்திருப்பார்கள். சாதி தொடர்பாக அதுவே அவர்களது அரசியல் நிலைபாடு என்பது மட்டுமல்ல, இது ஒரு தொடர்போராட்டம் என்பதனை இந்திய அனுபவத்திலிருந்து எவரும் அறியமுடியும்.

இலங்கையில் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்களவர்கள் மத்தியிலும் சாதிப் பிரிவினைகளும் சாதிய ஒதுக்குதலும் உண்டு. இலங்கைப் பௌத்தத்திறகு பட்டுக் குஞ்சலம் கட்டுவது சுகனின் அறியாமை என்பதை அ.மார்க்ஸ் அறிந்து கொள்ளட்டும்.

எதற்காக இந்தக் கலாச்சார வேறுபாடுகளையும் தனித்தன்மைகளையும் பன்மைத்துவ அடையாளத்தையும் அ.மார்க்ஸ் இப்போது பேசுகிறார்?

வடக்கு கிழக்கு ஒற்றுமை இல்லை என்கிறார் ராஜபக்சே. வடக்கு கிழக்கு ஒற்றுமை தேவை இல்லை என்கிறார் கருணா. சிறுபான்மையினர் என்ற பேச்சே இனி இல்லை என்கிறார் ராஜபக்சே. தமிழ் என்ற சொல்லோ அல்லது எந்தக் குறிப்பிட்ட மத அடையாளம் சார்ந்த சொல்லோ அரசியல் அமைப்புக்கு வைத்தால் அதற்குத் தடை என்கிறார் ராஜபக்சே.

இந்தத் தருணத்தில் அ.மார்க்ஸ் வடக்கு-கிழக்கு அடையாள அரசியல் பேசுகிறார். தமிழில் சிங்கள தேசிய கீதம் பாடுகிறார் சுகன். இலங்கை பௌத்தம் புனிதமானது என்கிறார் அவர். இலங்கை அரசு இனக்கொலை அரசு அல்ல என்கிறார் சசீந்திரன். எனில் எவரிடம் அ.மார்க்சும் அவரது ஈழவழித்தோன்றல்களும் பன்மைத்துவத்தையும் கலாச்சாரத் தனித்துவ அடையாளத்தையும் கோரப் போகிறார்கள்?

இந்தக் கேள்வியைத் தமிழகச் சூழலில் கேட்டுப் பார்ப்போம்.

கன்னியாகுமரி நாடார்கள் தனிமாவட்டம் கேட்கிறார்கள். மருத்துவர் ராமதாஸ் தமிழகத்தைத் தனது வன்னியர் சாதி அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கக் கேட்டார். கொங்கு வேளாளர்கள் கோவையைப் பிரித்துக் கேட்பார்கள். இதுவும் பன்மைத்துவம் மற்றும் அடையாள அரசியல்தான்.

இம்மாதிரியான போக்கு குறித்து அமார்க்சின் பின்நவீனத்துவக் கோட்பாடு என்ன சொல்கிறது?

அ.மார்க்ஸ் முன்வைக்கிற பன்மைத்துவ அரசியலின் பேரில் மூன்று தலித் சாதிகள் தனித்தனியே பிரிந்திருக்கிறார்கள். பன்மைத்துவம் நிலைநாட்டப்பட்டுவிட்டது. அ.மார்க்ஸ் அவர்களே ‘அப்புறமாக’ உங்கள் பின்நவீனத்துவமும், பன்மைத்துவ அரசியலும் என்ன சொல்கிறது? ‘தலித்தியம் எதிர்கொள்ளும் சவால்கள்’ என்று அந்தரத்தில் ஆடிக்கொண்டிருந்தது போதும், பன்மைத்துவ அரசியலின் அடுத்த நகர்வு என்ன? அடையாள அரசியல் நிலைநாட்டப்பட்ட பின், அடுத்த நகர்வு என்ன?

எந்தக் குறைந்தபட்ச பன்மைத்துவத்தினையும், அது சாதி அடையாளமோ மத அடையாளமோ எதுவாயினும் அடையாள அரசியலின் ஒரு துளியையேனும் ஒப்பாத சிங்கள இலங்கை அரசின்பாலான உங்களது அணுகுமுறை என்ன? இந்தப் புள்ளிதான் நீங்கள் தமிழகத்தில் தொடுவதற்குத் தயங்கி நிற்கும் புள்ளி; நீங்கள் யார் யாரையெல்லாம் ஜனநாயகவாதிகளாக உயர்த்திப் பிடிக்கிறீர்களோ அவர்களெல்லாம் ஒன்றுபடும் புள்ளியும் இதுதான்.

உங்களதும், உங்களது தத்துவ அடிப்படைகளைக் காவித்திரியும் உங்களது ஈழ-தமிழக வழித்தோன்றல்களதும் சிந்தனையமைப்பு இரு தளத்திலானது. முதல் தளம், பின்நவீனத்துவ காலத்திலான - நவீனத்துவ யுகத்தின் மீதான விமர்சனம், மார்க்சிய நெருக்கடி, அரசியல் மொழியில் பின் சோவியத், பின் செப்டம்பர், தொழில்நுட்ப யுக, உலகவயமாதல் கால - யதார்த்தங்களைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவது தொடர்பானது.

இரண்டாவது தளம், நீங்கள் அறுதியாக முன்வைக்கும் பன்மைத்துவ அரசியல் தொடர்பானது.

பகுப்பாய்வுக் கட்டத்தில் நீங்கள் பேசுகிற பல விடயங்களில் குறைந்தபட்ச அறிவுள்ள எவரும் முரண்பட நியாயமில்லை.

உதாரணமாக பின் புரட்சிகர சமூகங்கள் குறித்த விமர்சனங்கள், விடுதலைப் புலிகளின் ஏகப் பிரதிநித்துவம், பன்மைத்துவப் பிரச்சினைகள - முஸ்லீம் மற்றும் தலித்தியப் பிரச்சினைகள், பால்தன்மை குறித்த பிரச்சினைகள் - விடுதலைக்கான முன்நிபந்தனைகளாக ஏற்பது குறித்தமை போன்றவற்றில் உங்களோடு மார்க்சியர்களுக்கோ அல்லது இலங்கை அரசை எதிர்ப்பவர்களுக்கோ, விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சிப்பவர்களுக்கோ எந்த முரண்பாடும் இல்லை.

முரண்பாடு எங்கு வருகிறது? தலித்தியத்தின் பெயரிலும், முஸ்லீம் மக்களின் பெயரிலும் நீங்கள் உயர்த்திப் பிடிப்பவர்கள் இலங்கை அரசு இனக்கொலை செய்யவில்லை என்கிறார்கள். இலங்கைப் பௌத்தம் பவித்திரமானது என்கிறார்கள்.

இந்துத்துவத்தையும் சாதியையும் ஒழிப்பதை நீங்கள் ஒரு மக்கள் கூட்டமெனும் அளவில் ஈழத்தின் இந்துக்களை அழிப்பது எனப் புரிந்து கொண்டிருக்கிறீர்களோ என்றே தோன்றுகிறது. ஈழத்தின் இனப்படுகொலைகளைப் பற்றிப் பேசுகிறபோது நீங்கள் சாதியைப் பற்றியும்; அடையாள அரசியலைப் பற்றியும் வித்தியாசப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

என்ன துயரம், இந்தவிதமான எந்த வித்தியாசப்படுத்தலும் இல்லாமல்தான் இலங்கை அரசு தமிழ் மக்களை அழித்துக் கொண்டிருக்கிறது.

வெறுமனே தமிழக புலி ஆதரவாளர்களை எதிர்த்துக் கொண்டிருப்பது மட்டுமே விடுதலை அரசியல் இல்லை. அதனைத்தான் நீங்களும் நீங்கள் உயர்த்திப் பிடிக்கிற மூவரும் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
திசைக்கொன்றாக, நூறு நூறு முரண்களுடன் அவர்கள் பேசிக் கொண்டிருக்கிற அரசியலினிடையில், அவர்கள் ஒன்றுபடும் புள்ளி அரச ஆதரவாளர்களுடன் அவர்கள் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்வதுதான்.

இவர்களுக்கு ஆதரவாக, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு பதிலிறுத்துக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து நகர்ந்து, இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கான ஆதரவு அரசியலை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள் என்பதைப் பேசத் துவங்குங்கள்.

பல்லாயிரம் மக்களின் படுகொலைக்குப் பின், மூன்று இலட்சம் மக்கள் இலங்கையின் சித்திரவதை முகாம்களில் அடைபட்டிருக்கிற சூழலில், ஒரு மனித உரிமையாளராக நீங்கள் மேற்கொள்ள வேண்டிய பணி இதுவாகத்தான இருக்கும்.

அ.மார்க்ஸ் ஆதரித்துக் கட்டுரை எழுதியிருக்கிற மூவரில் சுகன் இலங்கை பௌத்தத்தின் புனிதம் குறித்துப் பேசுகிறார். இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்ட லசந்தாவின் கொலையும் புலிகளால் செய்யப்பட்டதாக ஏன் இருக்கக் கூடாது என பாரிசில் சந்தேகம் எழுப்பியிருக்கிறார் சுகன். பத்திரிக்கையாளர் திசைநாயகத்திற்கு இலங்கை நீதியமைப்பு 20 ஆண்டு கடூழியத் தண்டனை விதித்திருக்கிறது.

இலங்கை அரசு செய்ததாகச் சொல்லப்படுகிற எல்லாக் கொலைகனையும் அவர்கள் செய்திருப்பார்களா எனச் சந்தேகம் எழுப்பிக் கொண்டேயிருக்கிறார் சுகன்.

‘வாழ்க நீ அம்மான்’ எனக் கருணாவுக்காக 'கவித்துவ அறம்' தோன்ற அவர் வாழ்த்துப் பாவும் எழுதியிருக்கிறார்.

சுசீந்திரன் இலங்கையில் இனக்கொலை நடக்கவில்லை என்கிறார். திருவனந்தபுரத்தில் அரசுடன் நேரடியாக உறவு கொண்டிருப்பவர்களுடன் இணைந்து கருத்தரங்குகள் ஏற்பாடு செய்கிறார்.

ஷோபா சக்தி, இலங்கை அரசின் கொலைகளை சுகன் சந்தேகத்துக்கு ஆட்படுத்துவதையிட்டு, எம்மீது 'இரத்தப் பழி வந்துவிடும்' எனச் சுகனுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

சுசீந்திரன் சொல்வதற்கு மாறாக இலங்கையில் இனக்கொலை நடக்கிறது எனத் திட்டவட்டமாகச் சொல்கிறார்.

ஷோபா சக்தியின் வலைத்தளத்தில் சுசீந்திரனின் நேர்காணலும், சுசீந்திரனின் வலைத்தளத்தில் ஷோபா சக்தியின் கட்டுரைகளும் நேர்காணலும் வருகிறது.

அ.மார்க்ஸ் ஆதரித்து எழுதுகிற மூன்றுபேரும், விடுதலைப் புலிகளின் அழிவின் பின் 'இன்று' மூன்று அரசியல் நிலைபாடுகளில் நிற்கிறார்கள். இதனை வெறுமனே 'பன்மைத்துவம்', 'மாற்றுக் கதையாடல்கள்' என வழமைபோலக் கதையடித்துக் கொண்டிருக்க முடியாது.

புகலிடத்தில் ஷோபா சக்தி, சுகன் பேசிவந்த தலித்தியம் என்பது, தமது புலி எதிர்ப்பு முகத்தை மறைத்துக் கொள்ள, மூடிக்கட்டிய ஒரு சந்தர்ப்பவாத போலிக் கோட்பாட்டுப் படுதா என்பது நிதர்சனம் ஆகியிருக்கிறது.

கருணாவிடமோ அல்லது பிள்ளையானிடமோ அல்லது மகிந்த ராஜபக்சேவிடமோ தலித்தியப் பிரதிநிதித்துவம் குறித்துப் பேசுகிற நிலைமையில் அ.மார்க்ஸ் பரப்புரையாற்றுகிற எவரும் இன்று இல்லை.

தமிழகத்தின் புலி ஆதரவாளர்களின் அரசியல் பற்றி அ.மார்க்ஸ் பேசியது போதும், அவர்களது யதார்த்தமற்ற புனைவு அரசியல் பற்றிப் பேசியது போதும். இன்னும் அமார்க்ஸ் தனது வெற்றுப் புலியெதிர்ப்பையும் பன்முகத்துவத்தையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்க முடியாது.

இலங்கையின் இஸ்லாமிய மக்கள் இனி புலிகளிடம் எந்தவிதமான பிரதிநிதித்துவமோ, புரிதலோ கோரிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் புலிகள் ஒரு அரசியல் சக்தியாக ஈழமண்ணில் இல்லை.

அ.மார்க்சும் சுகனும் ஷோபா சக்தியும் தாம் தொடர்ந்து கோரிவந்த தலித்தியப் பிரதிநிதித்துவம், இஸ்லாமிய மக்களின் உரிமைகளை அவர்கள் உரத்துப் பேச வேண்டிய தருணம் இது. இம்முறை புலிகளுக்காக அவர்கள் காத்திருக்கத் தேவையில்லை.

அ.மார்க்ஸ், சுகன், ஷோபா சக்தி, சுசீந்திரன் போன்றவர்களால் ஜனநாயக வேஷம் கட்டப்படுகிறவர்கள்தான் இன்று இலங்கையில் ஆட்சியில் இருக்கிறார்கள். சிறுபான்மையினர் உரிமைகளை, அவர்தம் மனித உரிமைகளை எப்படிக் காப்பாற்றப் போகிறார்கள் என்பதற்கான திட்டம் குறித்து அவர்கள் பேச வேண்டிய காலம் இது.

மண்டேலா சொன்னபடி, மன்னிக்கலாம், மறக்க முடியாது என்பது சரியான நிலைபாடு. சந்தேகமில்லை. அதையும் தாண்டிய அரசியல்தான் இன்று பேசப்பட வேண்டியது.

இலங்கைச் சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்கள், அதினிலும் சிறுபான்மையினரான தமிழர்கள், அதனிலும் சிறுபான்மையினரான தலித்தியர்கள், அதனிலும் சிறுபான்மையினரான ஆதிவாசி மக்கள் குறித்துப் பேச வேண்டிய ‘சமாதான’ காலம் இது.

திசைக்கொன்றாக நிற்கிற ஷோபா சக்தி, சுகன், சசீந்திரன் என மூவரையும் தாண்டி, அ.மார்க்ஸ் இது பற்றிப் பேசவேண்டும்.

பேசுவாரா அ.மார்க்ஸ்?

- யமுனா ராஜேந்திரன் -
பயனாளர் தரப்படுத்தல்

Comments

superb article. thanks. naaikalin mukathiraiyai kilithirukkreerkal.