இப்படியான கருத்துக்களை தமிழர் மனதில் மெல்ல மெல்ல விதைத்து, இந்தியா மீது பயபக்தியை ஏற்படுத்த பல காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது ஜரோப்பாவில் இயங்கும் பிரபல ஊடகங்கள் இதுபோன்ற ஒரு மாயை மக்கள் மனதில் ஏற்படுத்தி வருகின்றமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
தமிழ்பேசும் மக்களிடையே இந்தியா இன்றி தீர்வுத் திட்டம் கிட்டாது என்று பேசுவோர் பலர் தற்போது உருவாகியுள்ளனர். பலர் புதிதாக முளைத்து இக் கருத்தை மக்கள் மத்தியில் வேண்டும் என்றே பரப்பி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணியாக சில ஊடகங்கள் இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருவதை நாம் அறிவோம். தமிழ்த் தேசியம் பேசும் இவர்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல இக்கருத்தை பரப்பி வருகின்றனர்.
தமிழர்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்க இந்தியா யார்?
ஏன் ஒட்டுமொத்தத் தமிழினமும் இந்தியாவின் காலடியில் வீழ்ந்து ஒரு தீர்வுத் திட்டத்தை கேட்கவேண்டும்?
இந்தியாவை பகைத்தால் தீர்வுத் திட்டம் கிடையாது என்றால், ஆதரித்தால் மட்டும் கிட்டிவிடுமா என்ன? .
இந்தியாவில் 1965 இல் இருந்த கொள்கை வகுப்பாளர்களால், இலங்கைத் தீவு பற்றி வித்தியாசமான கருத்து காணப்பட்டது. இலங்கையில் ஏற்பட்டிருந்த இனப்பிரச்சனையை சாதகமாகப் பயன்படுத்தி அந்நாட்டில் ஒரு பிரிவினையை தூண்ட இந்தியா முயற்சித்தது. அதற்குச் சாதகமாக பல தமிழ் போராட்டக் குழுக்களை உருவாக்கியது இந்தியா. இதில் வளர்ச்சியுற்ற விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியா எண்ணியதைப் பார்க்கவும் பன்மடங்கு வளர்ச்சியுற்றது.
அமெரிக்க அரசானது ரஷ்யாவை மாநிலம் மாநிலமாக உடைத்தது போல இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளையும் உடைக்க நினைத்தபோது இந்தியா விழித்துக் கொண்டது. தற்போதைய இந்திய கொள்கை வகுப்பாளர்கள், முதலில் அவதானித்தது தமிழ் நாட்டை. ஜம்மு காஷ்மீரை, ஆந்திராவை விட தமிழ் நாடு பிரிந்துசெல்லும் அபாயம் காணப்படுவதை உணர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், உடனடியாக தமிழீழ தனிநாடு உருவாவதை எதிர்த்தார்கள்.
இதன் உச்சக்கட்டமாக தம்மால் உருவாக்கப்பட்ட விடுதலைப் போராட்ட இயக்கங்களை அழிக்க தாமே உறுதுணையாக நின்றார்கள். இதுதான் வரலாறு.
இதை விடுத்து இந்தியா துணைபோகும், இந்தியாவால் தீர்வுத்திட்டம் ஒன்று உருவாகும் எனத் தமிழீழ மக்களிடம் பரப்புரைகள் மேற்கொள்வோரை நம்பி ஒரு பிரயோசனமும் இல்லை. இலங்கையில் தமிழீழம் உருவாவதை இந்தியா விரும்பாது என்பது வெளிப்படையான உண்மை.
மாநில சுயாட்சி போன்ற அலகைக்கூட இலங்கை தமிழர்களுக்கு வழங்குவதை இந்தியா விரும்பாத நிலையில் உள்ளது. காரணம் தமிழ் நாடு.
இந்த யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மாயையில் இருந்து நாம் விடுபடவேண்டும். இந்தியாவில் இயங்கும் புலனாய்வு அமைப்பான ரோ வின் சதிவலையில் நாம் இனியும் சிக்கமுடியாது.
தமிழர்கள் தலைவிதியை தமிழனே நிர்ணயிக்கட்டும், ஏன் வேறு ஒருவன் நிர்ணயிக்கவேண்டும்?
இந்தக் கோட்பாட்டையே நாம் கடைப்பிடிக்கவேண்டும். இதுவே உண்மையான தமிழ்த் தேசியம் உருவாக வழிசமைக்கும்.
ஈழத் தமிழர்களுக்கு தமிழ் நாட்டு மக்களின் ஆதரவு மட்டும் இருந்தால் போதும். மத்திய சரசாங்கத்தின் நிலை எமக்கு அவசியமில்லை.
ஈழக் கிறுக்கன்
Comments