எழுத்துலக மௌனம் : நீங்களே யோசியுங்கள்! நீங்கள் எப்படி ஆனீர்களென்று!

கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் மக்களை வெளியேற்றி சட்டத்துக்குப் புறம்பாகக் கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி உணவு விடுதியைத் திறந்துவைக்க வர வேண்டாம் என, அப்போதைய மாநில முதல்வர் உம்மன்சாண்டியை எழுத்தாளர் சுகுமார் அழிக்கோடு கேட்டுக் கொண்டார்.

எழுத்தாளருக்கென்ன ஆயிரங்கைகளா தடுக்க! வேண்டுகோளைப் புறந்தள்ளி முதல்வர் உம்மன் சாண்டி அடுக்குமாடி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

ஆயிரம் கைகளை விட வலிமைகொண்ட ஆயுதம் இலக்கியவாதியின் கையில் இருக்கிறது - அவன் பெற்ற இலக்கிய விருது அது. கேரளத்தின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ‘எழுத்தச்சன் விருது’ அப்போது எழுத்தாளர் சுகுமாரன் அழிக்கோடுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஊழல் பேர்வழிகளுக்குத் துணை போன முதலமைச்சரின் கைகளிலிருந்து விருதைப் பெறமாட்டேன் என, விலக்கித் தள்ளினார் சுகுமாரன் அழிக்கோடு.
Image

“சனநாயக மக்கள் விரோத அரசிடமிருந்து நான் பரிசு பெற விரும்பவில்லை. மோதல்கள் என்ற பெயரில் (Encounters) நூற்றுக்கணக்கான மக்களை, அப்பாவி இளைஞர்களைக் கொன்று குவித்த அரசின் எந்த அங்கீகாரமும் எனக்குத் தேவையில்லை”.


காளிப்பட்டணம் ராமாராவ் ‘யக்ஞம்’ என்ற தனது சிறுகதைத் தொகுதிக்கு ஆந்திர அரசு அளித்த பரிசையும் இதேபோல் மறுத்தார். இரு ஆண்டுகள்முன் - ராமாராவ் எந்தக் காரணத்திற்காக பரிசை உதறி எறிந்தாரோ அதே காரணம் ரா.வீ.சாஸ்திரி என்ற புகழ்பெற்ற தெலுங்கு எழுத்தாளரையும் மறுக்கச் செய்தது. ஆந்திர அரசு அளித்த இலக்கிய பரிசைப் பெற மறுத்து விட்டார். பிரித்தானிய ஏகாதிபத்திய அடக்கு முறைகளுக்கு எதிராய் ஒரு இலக்கியவாதி தனது கம்பீரத்தையும் உயர்வையும் நிலை நிறுத்திய நிகழ்வு 1913-ல் நடந்தது. அமிர்தரசரஸ் அருகேயுள்ள ஜாலியன் வாலாபாக் திடலில் எல்லா வழியையும் அடைத்துவிட்டு, தப்பியோட ஒரு வழியுமில்லாதபடி நூற்றுக்கணக்கில் மக்களைத் துப்பாக்கிக்குப் பலியாக்கினான் ஜெனரல் டயர். 1913 - ல் நடந்த அந்த மக்கள் அழிப்பு நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வங்கத்திலிருந்த கவி தாகூரைக் கலக்கியது

1905 - ல் பிரித்தானிய அரசு அவருடைய மேதமையைக் கௌரவிக்க Knight Hood (மாவீரர்) விருது வழங்கியிருந்தது தனக்களிக்கப்பட்ட மாவீரர் விருதை ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து, திருப்பி அனுப்பிவிடுகிறார் தாகூர். இவர்கள் காட்டிய எதிர்ப்பின் புள்ளியில் தமிழகக் கவிஞர் அப்துல் ரகுமானைப் பொருத்திப் பார்க்க நாம் ஆசைப் படுகிறோம். அப்துல் ரகுமான் அரசின் கிளையான வக்பு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். வாரியத் தலைவர் பதவிக்கு உங்களை பரிந்துரை செய்யலாமென நினைக்கிறேன் என்று முதல்வர் சொன்னபோது, தயக்கமேதும் காட்டாமல் ‘சரி’ என்கிறார். அதனால் அந்தப் பதவி அவர் மீது திணிக்கப்பட்டதல்ல.

அவருக்கும் உடன்பாடு என்பதால், மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார். “மொத்தத்தில் நியாயங்களுக்கு எதிரான விவகாரங்களில் எந்தச் சூழலிலும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன் என்ற அடையாளம் எனக்கிருப்பதால், குறுக்கீடுகள் வராது. மீறிவந்தால், அத்தகைய குறுக்கீடுகள் என்னை வெற்றி கொள்ள முடியாது” - என உறுதி கொள்கிறார். ஈழப்படுகொலை முடிந்து விட்டது. துயரம் நீளுகிறது.

2006 - லிருந்து ஒரு லட்சம் மக்களும் 30 ஆயிரம் போராளிகளும் கொல்லப்பட்டார்கள். கடைசி இரு நாளில் 25 ஆயிரம் உயிர் கொய்யப்பட்டது.

நேரடி நெறியாளன் இந்தியா. இந்நாட்டின் அங்கமான தமிழர்களையும் தாண்டி இந்தியா செய்தது துரோகம் என்றால், துரோகத்தின் வேர் தமிழகத்தில் இருந்தது.

தமிழகத் துரோகத்தின் ஆணிவேர் கலைஞர் தலைமையிலுள்ள தமிழக அரசு. போரை நிறுத்து - என்ற எழுச்சி தமிழகத்தில் தொடங்கியபோது, தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சார்பில் சென்னையில் நடத்தப்பெற்ற ஒருநாள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்திற்கு வந்து, ரகுமான் உரையாற்றினார். பின்னொரு நாளில் விழுப்புரத்தை மையம் கொண்டு இயங்கும் தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டமைப்பு நடத்திய ஒரு நாள் உண்ணாநிலைப் போராட்டத்திலும் உரையாற்றினார். முன்னர் நிறைவு செய்த கடமையை, இப்போது அவர் ஆற்ற முடியுமா? முன்னர் பேசிய பேச்சு இப்போது வருமா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாது. அவருடைய இப்போதைய உரைகளில் மட்டும் அல்ல, முந்திய உரை நிகழ்த்துதல்களிலும் மற்றவர்களுக்கு அவருடைய நாக்கில் வாளிருந்தது; கலைஞருக்கு அவருடைய இதயத்தில் மயில்தோகை இருந்தது.

விருதுகள் பெறுவது வேறு; அதிகாரத்தில் பங்கு பெறுவது வேறு; எவருடைய அதிகாரத்தில்? அதுவும் எந்தக் காலத்தில்? இது என்ன காலம்? வதைபடும் ஈழத்தமிழினத்தின் காலம், உலகின் இருண்ட காலங்களில் ஒன்றாக சமீபத்திய இந்நிகழ்வு இடம் பிடித்துள்ளது.

சுய மரியாதையுள்ள எந்தக் கலைஞனும் இந்தக் காலத்தின் குரலுக்கு செவிகொடுப்பான். வதைகளால் வலியும், வதைசெய்வோரிடம் சினமும் கொள்வான். இச்சினம் இந்திய, தமிழக அரசுகளுக்கு எதிரானதாக திரும்புதல் இயற்கை. ஆனால் அதிகாரத்தில் பங்கேற்றபின், தொண்டைக் குழிக்குள்ளே அடங்கிப்போகும் எதிர்ப்பின் குரல். பொதுவாக - எதிர்ப்பின் குரல்கள் எழுந்து வரவேண்டிய தொண்டைகள் அடைத்திருந்தன. ஆனாலும் மனிதப் படுகொலைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் தருகிற கவிஞர் இன்குலாப்,

“மனிதன், தமிழன், படைப்பாளி என்ற வகையில் இந்தக் கொடுமைகளுக்கு எதிராக செயல்பட வேண்டிய கடமை எனக்கிருக்கிறது. இந்தவகையில் 2006-ம் ஆண்டு தமிழக அரசின் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தால் வழங்கப்பட்ட கலைமாமணி விருது, எனக்குக் கௌரவமாக அல்லாமல், முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. இதைத் தமிழக அரசிடமே திருப்பித் தருவதுதான் எனது மனித கௌரவத்தை தக்க வைத்துக் கொள்வதாக அமையும்”

என்று கலைமாமணி விருதை திருப்பி அனுப்பி, தன் கௌரவத்தைக் காத்துக் கொண்டுவிட்டார். ஈழப்படுகொலைகளுக்கு எதிராய் எந்தக் காரியமும் ஆற்றாத இந்திய அரசையும், துணைபோன கலைஞர் அரசையும் கண்டிக்கும் விதத்தில், கவிஞர் அறிவுமதி தமிழக அரசினால் தனக்களிக்கப்பட்ட திரைப்பட விருதுகள் தேர்வுக்குழு உறுப்பினர் பதவியை உதறி, உயர்ந்தார்.

“போடா போ, நீயும் உன் பத்மஸ்ரீ விருதும்” - என்று பத்மஸ்ரீ விருதையே திருப்பி அனுப்பினார் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா.

“இந்தக் கணத்தில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, தமிழ் என்ற மொழிப் பிரதேசத்தில் வாழ்பவன் என்ற முறையில் என்னை ஒரு அகதியாக, நாடற்றவனாக, நிலமற்றவனாக, மிகக்குரூரமாக தோற்கடிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நாஜிகளால் படுகொலை செய்யப்பட்ட யூதர்கள் இவ்வாறுதான் உணர்ந்திருக்கக் கூடும்.”

என்று கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கண்ணீரும் கண்டனமுமான தலையங்கம் வெளியானது. (உயிர்மை ஜூன் 2009) அடையாளமும் வாழ்வும் இழந்த தமிழ்ச்சமுதாயத்தின் மொத்த குரலையும் எதிரெலித்தது காலச்சுவடு தலையங்கம். (ஜீன், 2009) ஜூலை, 2009 தீராநதி இதழில் வெளிப்பட்ட சி.மோகனின் ஒளிகொண்டு வருபவன் என்ற கவிதை விடுதலையை நேசிப்பர்களின் கர்ப்பப் பையை நிறைத்தது.

இவ்வாறு சில வெளிப்பாடுகள் தவிர பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் மௌனம் காத்தனர். மௌனமோ, செயலற்ற தன்மையோ, எதிர்ப்பு நிலையோ இவையனைத்தும் இலங்கையின் இன அழிப்புக்குத் துணை செய்வதாகவே முடிந்தன. மூன்று லட்சம் பேர் வதை முகாம்களில் ஆற்றாது அல்லற்பட்டு அழுவதற்கு - இங்குள்ள துரோகங்களோடு, எழுத்தாளர் துரோகமும் ஏதோ ஒருவகையில் இணைந்தது. அரசியல்வாதிகள் எந்தப்பிரச்சினையிலும் மக்களுக்கு நேர்மையாயில்லை; அது போலவே ஈழப்பிரச்சினையிலும்; ஆனால் சமூகத்தின் மனச்சாட்சி என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் எழுத்தாளன், தன் மனச் சாட்சியை இயங்க வைக்காமல் ஏன் செத்துப் போனான்?

பரபரப்பை உண்டு பண்ணும் ஒரு செயலாக இருந்த போதும், புதுமையான ஒரு போராட்டமுறையை தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டமைப்பின் (விழுப்புரம்) ஜோதி நரசிம்மன் (அடியாள் தன்வரலாற்று நூலின் ஆசிரியர்) ஒரு யோசனையை முன்வைத்தார். ஒவ்வொரு படைப்பாளியும் எதிர்ப்பின் அடையாளமாய் தனது ஒரு நூலை நெருப்பிட்டுக் கொளுத்துவது என்பது திட்டம். இது ஊடகங்கள் வழியாய் போய்ச் சேர்ந்து உலகின் கவனத்தை ஈர்க்கும். பல்லாயிரக் கணக்கான எம் மக்கள் கொல்லப்படுவது கண்டும், அந்தக் கொடூரத்திலிருந்து மக்களைக் காக்க முடியாத எமது படைப்புக்களால் என்ன பயன் என்ற போர்க்குண அர்த்தம் இதனுள் ஊடாடுகிறது இந்த முயற்சியை படைப்பாளிகள் கண்டுகொள்ளாததால் முயற்சி கைவிடப்பட்டது.

ஈழத்தமிழர் தோழமைக் குரல் சார்பில் படைப்பாளிகள் சிலரும் தமிழுணர்வாளர்கள் பலருமாய் டெல்லி சென்று குரல் எழுப்பினர். அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெளிப்பட்ட எதிர்வினைகளில் ஒரு தொடர்ச்சி இல்லை. ஒரு நேரத்தில் செய்து, கடமை முடிந்தது என ஓய்ந்து விழுகிற மனப்பான்மை தென்பட்டது. கிராமங்களில் களையெடுப்பு, கதிரறுப்பு நடக்கிறபோது, மதியம் வரை மட்டுமே வேலை முடித்து வருவதற்கு ‘ஒரு நேரக்களை’ என்று பேர். அது போல் ஒரு நேரக் கடமையாற்றி, ஈழமக்கள் வதை நின்று விட்டதாக மௌனித்தோம். உலகின் ஒரு பகுதி மக்களை நாம் சாகவிட்டோம் என்ற குற்றச் சாட்டிலிருந்து தப்ப முடியாது.

மனித உரிமை ஆர்வலர்கள், யுத்த எதிர்ப்பாளர், அமைதி விரும்புவோர் என அனைவரும் “இலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலை - இந்நூற்றாண்டின் கொடூரமான பாதகச் செயல்” என்று கண்டித்தனர்; ஆனால் எழுத்தாளர்களிடமிருந்து இப்படிப்பட்ட உக்கிரக் குரல் எழுந்து வரவில்லை. உயிரோடு கோழிக்கு ரோமம் பறிப்பது போல், உயிர் பறிக்கப்படுபவர்கள் தமிழர்கள் என்று கூட அல்ல. உலகின் இன்னொரு சகமனிதர்கள் என்று பார்க்க பட்டிருக்க வேண்டும். பார்த்திருந்தால், ஒரு துளி நெருப்பு - பல விளக்குகளை சுடர் விடச் செய்வது போல் - பிறமொழி - பிறநாடுகள் என் எல்லோருக்கும் சேர்ந்து அறிவுலகைப் பேசவைத்திருக்கும்.

இதற்கு முன்பொரு முறையும் தமிழக வரலாற்றில் இது போல் எழுத்தாளர்களின் செயல்பாடற்ற தன்மை நிகழந்தது. கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்டு வனத்துக்குள் வைக்கப்பட்ட நாட்களில், கன்னடத்தின் முன்னணி இலக்கியவாதிகள் பலர் சென்னை வந்து எங்களைச் சந்தித்து, பழ.நெடுமாறன் போன்றோர் சென்று தான் ராஜ்குமாரை மீட்க முடியும் எனக் கேட்டுக் கொண்டனர். பழ.நெடுமாறனை சந்திக்க கன்னட எழுத்தாளர்களுக்கு துணை செய்தோம். அவர்கள் இனப்பற்றோடு வந்திருந்தனர். கவிஞர் சந்திரகாந்த பாட்டில் முதல் தேவனூரு மகாதேவா வரை வந்து உரையாடினர். இதே எழுத்தாளர்கள் 22.09.2002 அன்று மைசூரில் ஒன்று திரண்டு, தமிழகத்துக்கு காவிரிநீரை திறந்து விடக்கூடாது என முழக்கங்களிட்டு பேரணி நடத்தினர். அதையெல்லாம் தொலைக் காட்சியிலும் பத்திரிகை ஊடகங்களிலும் நாம் கண்டோம். கண்டபின்னும் தஞ்சை, திருச்சி விவசாயிகள் செத்தாலும் பரவாயில்லை என்று தமிழர்களாய் உணர்வதினும், இந்தியர்களாய் உணர்வதே சாலச் சிறந்தது என மேன்மக்களாய் முடிவெடுத்தோம்.

மக்களின் நிகழ்ச்சி நிரலில் எது இல்லையோ அது பற்றி உரையாடல் செய்தல், தமிழிலக்கிய உலகின் யதார்த்தமாக இருந்துவருகிறது. குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட பிரச்சினைகள் கொதிநிலை கொள்கின்றன. கட்டு விரியனாய் இலங்கைப் பாசிசம் உயிர் விழுங்கியபடி நகர்ந்தவேளையில், இலக்கிய தளத்தில் செயற்கையாய் சில பிரச்னைகளை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாடினார்கள். வங்கக் கடலின் இந்தக் கரையில் கலைஞர் உண்ணாநோன்பு இருந்தபோது, அதே கடலின் இன்னொரு கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் மரணத்துக்குள் போய்க்கொண்டிருந்தார்கள். இது போன்ற எள்ளல் முரண்களில் இலக்கியவாதிகளும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். கடந்த 50 ஆண்டுகளில் சில பிரச்சினைகள் நிலப்பிளவின் விறுவுகளுக்குள்ளிருந்து பீய்ச்சியடிக்கும் வாயு போல்; தமிழ்ச் சமூதாயத்தில் மேலெழுந்து வந்திருக்கின்றன. தலித் விடுதலை, பெண்விடுதலை, சாதிமறுப்பு, சுற்றுச் சூழல் உரையாடல், கலாசாரத்தில் மேல் கீழ் மாற்றம், தேசிய இன விடுதலை எனப் பல முன்னணிக்கு வந்துள்ளன. யோசிப்புக்கு அப்பாற்பட்டு இன்னும் சில விடுபட்டிருக்கலாம்.

இப்பிரச்சினைகளுக்குள் புகுந்து, இடையீடு செய்வதை வரவேற்கிறோம். ஈடுபாட்டுடனான, உணர்வுபூர்வமான இடையீடு அவசியமானது. இப் பிரச்சினைகளில் இடையீடு செய்கிற சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் பலரும் தேசிய இனப்போராட்டத்தை கணக்கில் கொள்ளாமல் ஒதுக்கியே வைக்கின்றனர். இன்றைய புதிய ஒழுங்கமைவில் தேசிய இனப் போராட்டம் முற்றுப் புள்ளியாகி விட்டதென்றோ, கவனிப்புக்குரியதல்லவென்றோ இவர்கள் கருதுகிறார்கள். இனவிடுதலை கோரி நடத்தப்படும் போராட்டம் வர்க்கப் போராட்டத்துக்கு எதிரானது, வன்முறையானது என்று பேசுகிறார்கள். இவ்வாறு உரை நிகழ்த்துபவர்களே, ருசியப் புரட்சியின்போது நடைபெற்றவைகளை வரவேற்கிறார்கள். ருசியப் புரட்சியின்போது நடைபெற்ற ரத்தக் களரியை டால்ஸ்டாய் விமரிசித்தார் “மேதகு கோமான் அவர்களே” - என அவரை விளித்து மார்க்சிம் கார்க்கி பதில் தந்ததையும் அறிவார்கள். இவை பற்றியெல்லாம் மேலதிகமாய் அறிந்துள்ள தோழர்களிடம் தொடுக்க வேண்டிய கேள்வி;Image

“அருமைத் தோழர்களே இந்த விவாதத்தில் நீங்கள் கோமான் டால்ஸ்டாய் பக்கமா, மார்க்கிம் கார்க்கி பக்கமா?”


தேசிய இனப்பிரச்னையில், மார்க்சிய லெனினியத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு, மார்ச்சிஸ்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் கோட்பாட்டின் கீழ் நேரடியாய் நின்றியங்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தினை நோக்கியே இக்கேள்வியை எழுப்புகிறேன்.

அதிகாலை ஸ்பெஷல்
சூரியதீபன்

Comments