புலிகள் நாங்கள் பதுங்கலாம்! உறங்கலாமா?




கடந்த மாவீரர்தின உரையின்போது தேசியத் தலைவர் அவர்கள் எமக்கு தெளிவான செய்தி ஒன்றைச் சொல்லியுள்ளார்.

‘புலம்பெயர் தமிழர்களே போராடுங்கள்! இளையோரே போராடுங்கள்! உலகத் தமிழர்களே போராடுங்கள்!

வன்னி அவலங்கள் உச்சக்கட்டத்தை எட்டிய பொழுது புலம்பெயர் தேசங்களில் உறக்கம் கொண்டிருந்த ஈழத் தமிழர்கள் போர்க் குரல் எழுப்பியவாறு புலிக் கொடிகளோடு வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். உலகம் வியக்கும் வகையில் புலம் பெயர் தேசங்களில் வாழும் 90 வீதமான தமிழ் மக்கள் ‘நாங்கள் புலிகள்’ என்று அறிக்கையிட்டார்கள். சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பை உலகுக்கு அம்பலப்படுத்தினார்கள்.

அந்தத் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்தே மேற்குலக நாடுகள் பலவும் சிங்கள தேசத்தின் இனப் புடுகொலைகளுக்கு எதிராக சர்வதேச அரங்குகளில் கண்டனங்களை எழுப்பியது. இலங்கை அரசு மீது போர்க் குற்ற விசாரணை நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் ஐ.நா.வில் முன் வைத்தது.

உலகின் அசைவியக்கத்தில் உடனடியாகவே பெரும் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. அதற்கான எவ்வளவோ புறக் காரணங்கள் குறுக்கே நந்தி போல் நின்று தடுத்து விடும். தமிழீழ மக்களது விதியும் இந்தியா உருவத்தில் வந்து பேரழிவுகளை நிகழ்த்துகின்றது. இந்தியா என்ற பெரும் சந்தையை எமக்காக இழப்பதற்கு எந்த நாடும் விரும்பவில்லை. அதனால், ஈழத் தமிழர்கள் மீதான உலகின் கரிசனைகளும் இந்தியத் தலையீட்டால் பலவீனப்பட்டுப் போயுள்ளது.

பிராந்திய வல்லாதிக்கப் போட்டியில் எதிர்த் துருவங்களாக கூர்மை பெற்று வரும் சீன – இந்திய ஆதிக்க சக்திகளை சிங்கள தேசம் தமிழீழ மக்களுக்கெதிரான இன அழிப்பு யுத்தத்திற்கு நன்றாகவே பயன்படுத்தியுள்ளது. சீனாவின் முத்துமாலை வியூகத்தை உடைக்க முடியாத இந்திய அரசு, சிங்கள தேசத்தைக் குளிர்மைப் படுத்துவதன் மூலம் சீனாவின் கரங்களுக்குள் முற்றாக அடங்கிப் போவதைத் தடுக்க விரும்புகிறது.

இயல்பாகவே, தமிழகத்துத் தமிழர்களையே ஏளனத்துடன் கையாளும் இந்திய அரசு ஈழத் தமிழர்களைப் பலிக்கடா ஆக்கியது. ஆக மொத்தத்தில்,

புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்களின் விளைவுகள் பாரிய பலன்களை அடையாமல் போனதற்கும் இந்தியாவே காரணமாக இருந்துள்ளது.

இருப்பினும், புலம்பெயர் தேசங்களில் நாம் மேற்கொண்ட போராட்டங்கள் அந்த நாடுகளின் அனுதாபங்களை ஈழத் தமிழர்கள்பால் ஈர்த்துள்ளது என்பதை மறுக்க முடியாது. ‘காலம் தாழ்த்திய இந்தப் போராட்டங்களை இருபது வருடங்களுக்கு முன்பாகவே மேற்கொண்டிருக்க வேண்டும்’ என எம் மீது அக்கறை கொண்ட மேற்குலக சக்திகளே வருத்தம் தெரிவிக்கின்றனர்.

காலம் கடந்தாவது நாம் விழித்துக் கொண்டோம் என்ற நம்பிக்கை தற்போது சிதைவடைந்து போவதாகவே அச்சம் கொள்ள வேண்டியுள்ளது.
தற்போது, புலம்பெயர் தேசங்களில் தமிழீழத் தேசாபிமானிகளால் ஏற்பாடு செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களிலும், ஊர்வலங்களிலும் மிகக் குறைந்த அளவு மக்களே கலந்து கொள்கின்றனர். இது அவர்களது மனத் தெளிவின்மையையே உணர்த்துகின்றது.

நாங்கள் எங்களது மக்களைக் காப்பாற்ற இவ்வளவு தொடர் போராட்டங்களை நடாத்தியும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம்.

கடந்த 35 வருடங்களுக்கும் மேலாகக் கட்டி எழுப்பப்பட்ட தமிழர்களது ஆயுத பலம் முற்றாகச் சிதைக்கப்பட்டு விட்டதே என்ற வேதனை.

முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களும், இரண்டு இலட்சத்திற்கும் மேலான மக்களும் தமது இன்னுயிரை ஈந்தும் அவர்களது தாயகக் கனவு கனவாகவே தொக்கி நிற்கிறதே என்ற ஆற்றாமை.

பல்வேறு நாடுகளின் துணையோடு சிங்கள அரசு சிதைத்துச் சின்னாபின்னமாக்கிய வன்னி மண்ணில் வாழ்ந்த மக்கள் சிங்கள வதை முகாம்களில் சிக்கி மடிகிறார்களே என்ற ஏக்கம்.

இத்தனைக்கும் மேலாக தமிழ்த் தேசியத் தலைவர் பற்றியும், தளபதிகள் பற்றியும் வெளிவந்து கொண்டிருக்கும் பல்வேறு பட்ட செய்திகள் என்று எமது மக்கள் மனங்களைப் பல வழிகளிலும் சிதைத்து விட்டுள்ளது.

ஆனாலும், கடந்த மாவீரர்தின உரையின்போது தேசியத் தலைவர் அவர்கள் எமக்கு தெளிவான செய்தி ஒன்றைச் சொல்லியுள்ளார்.

‘புலம்பெயர் தமிழர்களே போராடுங்கள்! இளையோரே போராடுங்கள்! உலகத் தமிழர்களே போராடுங்கள்!’ என்ற அவரது இந்த வேண்டுகோள் தீர்க்கதரிசனமானது.

பல தசாப்தங்களைக் கடந்து சிந்திக்கும் ஆற்றல் உள்ள எமது தேசியத் தலைவர் எமது தாயக விடுதலைப் போராட்டத்தை எமது கைகளில் ஒப்படைத்துள்ளார்.

அது போதும் நாங்கள் அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணிக்க. இதில் சந்தேகமோ, சோர்வோ கொள்வதற்கு எந்தக் காரணமும் கிடையாது. தமிழீழ விடுதலை நோக்கிய எமது பயணம் தேசியத் தலைவர் அவர்களால் தீர்க்கமான முறையில் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது பாதையில் நம்பிக்கையுடன் பயணிப்பது மட்டுமே எமது பணியாக இருக்க வேண்டும்.

தேசியத் தலைவர் அவர்கள் ஒரு கைத்துப்பாக்கியுடன் விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்த காலத்தில் இயந்திரத் துப்பாக்கிகளுடனும் பீரங்கி வண்டிகளுடனும் சிங்கள இராணுவம் பூதாகரமாகவே இருந்தது. எதிரியின் பலவீனங்கள் அத்தனையையும் தமது பலமாகக் கொண்டே விடுதலைப் புலிகள் அத்தனை வெற்றிகளையும் எமக்காகப் பெற்றுத் தந்தார்கள்.

இப்போதும் எதிரிகள் பூதாகரமாகப் பெருக்கமடைந்திருந்தாலும் அவர்களது பலவீனங்களும் பன்மடங்காக அதிகரித்தே உள்ளன. அவற்றினூடாகப் பயணம் செய்து எமது இலக்கை நாம் அடைய முடியும்.

சிங்கள தேசத்தின் கொடூரங்களை நாங்கள் வாழும் நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் அம்பலப் படுத்துவதனூடாக சிங்கள தேசத்திற்குப் பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தலாம்.

இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் நிதி உதவிகளைத் தடுத்து நிறுத்தலாம். சிங்கள தேசத்து கொடுங்கோல் அரசியலாளர்கள் இந்த நாடுகளுக்கு வருவதையும், உதவிகள் கோருவதையும் கூட எம்மால் தடுக்க முடியும்.

இவ்வளவு சக்தி பொருந்திய போராட்டங்களை நாம் தொடர்ந்தும் மேற்கொள்வதனூடாக எமது தேசத்தின் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்பதை நாம் நம்ப வேண்டும்.

எமது நம்பிக்கைகளை எமது சக மனிதர்களுக்கும் விதைப்பதனூடாக நாம் ஒரு சர்வதேச அழுத்தங்களை சிங்கள அரசு மீது ஏற்படுத்த முடியும்.

புலிகள் நாங்கள் பதுங்கலாம்! உறங்கலாமா?

நன்றி: ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை ஆசிரியர்

Comments