தமிழருக்கென ஒரு நாடு மலர்ந்திட காலம்தோறும், தேசம்தோறும் தமிழ்செய்வோம்

"...இன்று, தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை. தமிழ் இன்று அதன் எல்லைகளைத் தாண்டி கண்டங்களையும் கடல்களையும் தாண்டி தேசங்களைக் கடந்த தேசியமாக பர்ணமித்துள்ளது.

புலம் பெயர்ந்த தமிழ் யுவதிகளும் ,வாலிபர்களும் பிரான்ஸ், ஜேர்மன், ஆங்கிலம், ஒல்லாந்து எனப் பல மொழிகளில் பல்கலைக்கழகம்வரை பயில்கின்றனர்.

இவர்களில் சிலராவது இந்த மொழிகழில் பாண்டித்துவம் பெறுவாராயின் அதன் மூலம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பல வகைகளில் உரம்சேர்ப்பதோடு (ஒப்பியல் இலக்கிய ஆய்வுகள் உட்பட ) களத்திற்கும் புலத்திற்கும் பாலம் அமைத்து தமிழை உலகச் செம்மொழியாக்க உழைத்திடலாம்...

தமிழீழத்தில் புலிகள் ஆட்சியில் உருவான கட்டுமானங்களில் மொழிப்பல்கலைக்கழகமும் ஒன்றாகும். வன்னியில் அறிவுநகரத்தில் இதற்காக மலர்ந்த கட்டிடம் அழிக்கப்படலாம். ஆயின் அதன் பின்னால் உள்ள கனவுகள், தாயகக் கனவைச் சுமந்த அந்தச் சந்தனப்பேழைகளின் கனவுகளோடு வாழும்.

அதை வாழ வைக்கவேண்டிய கடமையும், உரிமையும் புலம் பெயர்ந்து வாழும் எம் இளம் சமுதாயத்தினதாகும்... உலகமயமாக்கல், சுருங்கும் உலகம் என்பன பல சவால்களையும் அதே சமயம் பல வாய்ப்புக்களையும் அளிக்கின்றது. நாம் எங்கும் சிறகுடன் பறந்தாலும் தமிழுக்கென, தமிழருக்கென ஒரு நாடு மலர்ந்திட காலம்தோறும், தேசம்தோறும் தமிழ்செய்வோம்."

தொன்று நிகழ்ந்த அனைத்தும்
உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் இவள்
என்று பிறந்தவள் என்று உணராத
இயல்பினளாம் எங்கள் தாய் - மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

" The speech of a dying people may, perhaps, be allowed to die. But this canot be said of the Tamil race. Heaven forbid! ....Let the Tamilians cease to be ashamed of their vernacular... To seek for and to find a noble language and to dedicate one's life to the study of it is the best life-work a man could wish for... Whenever I die, 'A student of Tamil' will be inscribed on my monument " - Dr. G.U Pope

" It is not perhaps extravagant to say that in its poetic form the Tamil is more polished and exact than the Greek, and in both dialects, with its borrowed treasures, more copious than the Latin. In its fulness and power, it more resembles English and German than any other living language " The Monumental Tamil –English Dictionary - Dr Winslow

" The Tamil language is extraordinary in its subtlety and sense of logic " Dr. Gilbert Slater

" It is one of the most copious, refined and polished languages spoken by man " Wiliam Taylor (Quoted in preface to Winslow's Tamil-English Dictionary. Madras 1862)

தமிழரின் தத்துவ தரிசனத்தை அதன் தொன்மையை விளக்கவந்த டாக்டர் ஜி.யூ.போப்பையர்

சைவ சித்தாந்தமானது தென்னிந்தியாவிற்கே சிறப்பாக உரிய தமிழர் சமயமாகும். தென்னிந்தியாவிலே வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழம் பெரும் சமயம் சைவம். ஆரியர் வருகைக்கு முற்பட்ட இச்சமயம் தமிழ் மக்கள் நெஞ்சத்தில் நிறைந்து விளங்குகிறது,

எனக் கூறியுள்ளார்.

Thiruvasagamதென்னாடுடைய சிவனே போற்றி எனத் திருவாசகமும் சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை எனத் திருமந்திரமும் செப்புகிறது.

ஆயினும் தமிழ்மக்களின் ரிசி மூலத்தைத் தேடுவோர் சிந்துநதிப் பள்ளத்தாக்கில் புதையுண்டுபோன மொகஞ்சதாரோ, ஹரப்பா என்னும் அகழ்ந்தெடுக்கப்பட்ட நகரங்களுக்கு எம்மை அழைத்துச் செல்வர்.

சிவ வழிபாட்டிற்கு உரிய சின்னங்கள் காணப்படினும் அங்கு முதலிடம் பெற்று விளங்குவது பெண்தெய்வ வழிபாடே. சிந்துவெளி நாகரீகம் அழிந்து, வரலாறு தெளிவின்றிக் காணப்படும் நிலையில் மீண்டும் திரை விலகும்போது கி.மு 5 ஆம் நூற்றாண்டளவில் நனிநாகரிகம் கொண்ட சங்ககால மக்களை காண்பதோடு கிரேக்கர்களின் பாடுனரை ஒத்த பாணரின் தமிழ்ப் பாடல்களை கேட்கின்றோம், விறலியரின் ஆட்டங்களைக் காண்கிறோம். இங்குதான் தமிழ் மொழியின் நாதத்தைக் கேட்கின்றோம்.

சங்கககாலம்.

இக்காலத்தை சங்ககாலம் என்பர். இக்காலத்தில் எழுந்த பாடல்கள் பிற்காலத்தில் எட்டுத்தொகையாகவும் பத்துப்பாட்டாகவும் தொகுக்கப்பட்டது. முடியுடை மூவேந்தரும் குறுநில மன்னர்களும், பாரி போன்ற வள்ளல்களும் ஆண்ட இந்த நிலப்பரப்பை, தொல்காப்பியத்திற்குச் சிறப்புப்பாயிரம் எழுதிய அவர் சககல்லூரியைச் சார்ந்த பனம்பாரனார்

" வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறு நல்லுலகம்" எனக்கூறி ,தொல்காப்பியனார் இந்தத் தமிழ் கூறும் நல் உலகத்தில் வழங்கிய

"......வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும், சொல்லும் பொருளும் நாடி
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு ..... "

இலக்கணம் கண்ட தன் சகபாடியை ஜந்திரம் நிறைந்த தொல்காப்பியர் எனச் சிறப்பிப்பார்.

பல நாடுகளை பல மன்னர்கள்க ஆண்டபோதும் அவை தமிழால் ஒன்று என்ற கருத்துருவாக்கம் நவில்தொறும் இன்பம் பயக்கிறது. இதுபோன்றே இக்கால இலக்கியங்களில் தமிழ் என்ற சொல் தமிழ்மொழி, தமிழகம், தமிழ்ப்படை, இனிமை, வீரம் என்ற அர்த்தங்களில் பல இடங்களில் வந்துள்ளன. புறநாலிற்றில் தமிழ்ப் படை கைகலந்த போரை

" தமிழ் தலை மயங்கிய தலையானங்கானத்து " (புறம் 19) என குறிக்கின்றார் புலவர். மேலும்

" தமிழ் கெழு கூடல்" (புறம் 58 )
" வையகவரைப்பில் தமிழகம் கேட்ப " (புறம் 168 )
"தண்டமிழ் வரைப்பகம் கொண்டியாக " (புறம் 198)
" தமிழ்க் கிழவர் " (புறம் 35 )
" தமிழ் கெழு மூவர்காக்கும்" (அகநாநூறு 27)
" இமிழ் கடல்வேலித் தமிழகம் விளங்க " (பதிற்றுப்பத்து)

என பல இடங்களில் தமிழ் என்னும் பதம் எடுத்தாளப்பட்டுள்ளது.

சஙகம்மருவிய காலம்

சங்ககாலத்தின் பின்னர் தமிழ்நாட்டின்மீது களப்பிரர் என்போர் படை எடுத்து ஆட்சி செய்தனர். இதனால் இக்காலத்தை இருண்டகாலம் என வரலாற்று ஆசிரியர் சிலர் வர்ணிப்பர்.

ஆயின் அன்னியர் ஆட்சியில் தமிழ் வல்லபங்களை அதன் விழுமியங்களை அழியாது காப்பதற்கே சேரமுனி இளங்கோ சிலம்மை இசைத்தார்.

Cilapathikaram - Kannagi Statueஇதில் தமிழின் புகழ் மண்டிக்கிடப்பதால் நெஞ்சை அள்ளுவதாக பாரிதி பாடுவார். சிலம்பிற்கு உரை எழுதிய அடியார்க்குநல்லார் ;

".........பழுதற்ற முத்தமிழின் பாடற்கு " உரை எழுதத் துணிவதாகக் கூறுகின்றார். நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தில் " தமிழ் வரம்பறுத்த தண்புனல் நாடு " தண் தமிழ் வரைப்பு "

என தமிழகத்தின் எல்லைகளைக் குறிக்கும்போது தமிழ் என்னும் சொற்பதம் பெய்யப்பட்டுள்ளது.

இது போன்று தமிழ்மன்னரின் வீரத்தைக் கூறவந்த இளங்கோ அடிகளார்

" தென்தமிழ் ஆற்றல் அறியாது மலைத்த ஆரிய மன்னர் "

எனக் குறிப்பிடுகிறார். இங்கு தமிழ் என்ற பதம் வீரத்தைக் குறித்து நிற்கிறது.

சங்ககாலத்தில் இடம் பெற்ற ஓயாத போர்கள், தமிழ் மன்னர்கள் தம்மிடையே முட்டிமோதிய " தமிழ்தலை மயங்கிய தலையானங்கானத்து " போரின் விழைவுகள், ஒற்றுமையின்மை என்பன தமிழ்நாட்டில் முடிவில் அன்னியர் ஆட்சி ஏற்பட வழிவகுத்தமையை மனதில்கொண்டோ என்னவோ முடியுடை மூவேந்தர்களின் தலைநகரங்களான பூம்புகார், மதுரை, வாஞ்சி என்னும் நகரங்களில் தன் காவியத்தை நகர்த்தும் அடிகளார் தமிழால் தமிழ்த்தேசியத்தை உருவாக்கும் தேசியகாப்பியத்தை அளித்துள்ளார்.

பல்லவர்காலம்

இதற்கு அடுத்த காலப்பகுதியான பல்லவர்கால இலக்கியங்களில் தமிழ், தமிழ் என்னும் ஆவேசக் குரலை அதுவும் பக்தி இலங்கியங்களில் கேட்கின்றோம். நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தரும், தமிழோடு இசைபாடல் மறந்தறியாத அப்பர்சுவாமிகளும் சிவனோடு தமிழையும் நேசிப்போராக வலம் வருகின்றனர்.

" நெடுந்தமிழால் இம்மாநிலத்தோர்க்குரை சிறப்ப "
" மறைகளாய நான்குமென மலர்ந்த செஞ்சொற் தமிழ்ப்பதிகம்"
" மிக்க சொற் தமிழினால் வேதமும் பாடினார்"
" தமிழ்ச் சொல்லும் வடசொலுந் தாணிழர் சேர் "
" தாழந்தெழுந்து தமிழ் வேதம் பாடினார் தாளம் பெற்றார்"
தண் தமிழ் யிற் புலவனார்க்கோரம்மானே "
" தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன் "

என சமயகுரவர் தமிழ் தமிழ் என உருகுகின்றனர்.

தமிழ் ஞானசம்பந்தரைப் பற்றி " தேசிய இலக்கியம் " என்னும் நூலின் ஆசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் பின்வருமாறு கூறுகின்றார்:

" தமிழ் முரசு கொட்டித் தமிழ்க் கொடி ஏந்தித் தமிழ்க் கவிதையால் தமிழ்க் கடவுளைப்பாடி, தூங்கும் தமிழினத்தைத் தட்டி எழுப்பின வீரத் தமிழர் ஒருவர் உண்டு என்றால், அவர் ஞானசம்பந்தர் அல்லாமல் வேறு யார் "

நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகளும், "நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தன் " எனப் பாடி பரவுகிறார்.

நாயன்மார்களுக்கு சளைக்காத வகையில் தமிழ் ஆழ்வார்கள் தமிழின் சுவையை பாடிப் பரவுவதை தமிழ்வேதம் என அழைக்கப்படும் நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் காணலாம்.

வரலாற்றில் ஒரு மக்கள் பின்னடைவுகளைச் சந்திக்கும்போது மொழி, தேசம் என்ற பிரக்ஞைகள் வலுப்பெறுகின்றன.

இக்காலத்தில் சமண பௌத்த மதங்களுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய ஞானசம்பந்தர் தமிழ்ஞானசம்பந்தராகவும், மருண்நீக்கியார் தமிழ்மறவாத நாவுக்கரசராகவும் தமிழகம் எங்கும் மின்னல் வேகத்தில் சுற்றுப்பயணம் செய்து தமிழ் இசை மூலம் சமய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினர்.

நாயன்மார்களும் ஆழ்வார்களும் தமது பாடல்களில் பாமர மக்களின் அன்றாட சொற்களைப் பெய்து அந்தச் சொற்களுக்கு ஒசையும் ஒலியும் ஒளியும் ஏற்றி தமிழ்மொழியை தண்மையும் நெகிழ்சியும், இன்பமும் பயக்கும் மொழியாக்கினர்.

இவர்கள் நாவில் தமிழ் நற்றனம் செய்தாள்.

இறைவனுடன் அல்லும் பகலும் அனவரததும் பேசுவதற்கு சாதாரண மக்களின் பேச்சுவழக்கில் உள்ள சொற்களைப் பயன்படுத்தி பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட இவர்கள் பாடிய தேவாரங்களையும் திருவாசகத்தையும் சிறு வயதில் மனனம் செய்யாத தமிழ்ச் சிறுவர்கள் தமிழீழத்தில் இல்லை எனலாம்.

audio by Sudha Ragunathan

" எப்படிப் பாடினரோ—அடியார்
அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே (எப்படிப்)
அப்பரும், சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்,
அருள் மணி வாசகரும் பொருள் உணரந்தே உன்னையே (எப்படிப்)
குருமணி சங்கரரும் அருமைத் தாயுமானாரும்,
அருணகிரினாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக் கடலில் பெருகி காதலினால் உருகி
கனித் தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம் (எப்படிப்) "
Suddhananda Bharathy

இன்று சிங்களப்பெரும்பான்மைத் தேசியத்தின் சகிப்புத்தன்மை இன்மையாலும் அதன்வழிவந்த வன்முறைதழுவிய அடக்குமுறைகளாலும் புலம்பெயர்ந்து அன்னிய சூழல்களில் தனிமையில் வாடும் எமது முதியோருக்கு, அவர்களின் " பயந்த தனிவழிக்கு" பற்றுக்கோடாக இருப்பது அவர்கள் தம் சிறுவயதில் விரும்பியோ விரும்பாமலோ மனனம் செய்த தேவார திருவாசகங்களே.

ஊனையும் உயிரையும் உருக்கி உள்ஒழி பரப்பும் இந்தத் தமிழ்ப் பக்தி, தமிழர் உலகிற்கு அளித்த கொடைகளில் ஒன்று என்கிறார் தமிழ் ஆய்வில் மூழ்கித் தோய்ந்த செக்நாட்டு அறிஞரான டாக்டர் கமில் சுவலபில்.

ஆண்டவனுடன் உரையாடும் பக்தி மார்க்கம் தமிழ் மொழியில் இருந்தே ஏனய இந்திய மொழிகளுக்குப் பாய்ந்தது என்பது அறிஞர் உலகத்தின் ஏகோபித்த கருத்தாகும். வாழ்வின் அடிநாதம் அன்பே. அந்த அன்பு செய்யும் வாழ்வே தமிழ். அதனால்தான் தமிழும் பக்தியும் வேறல்ல. அன்பும் சிவமும் வேறல்ல என்பர்.

சோழர்காலம்


Chola Empire at the height of its Power circa 1050 AD


இந்தியாவிலேயே கடல்கடந்து தமது சாம்ராச்சியத்தை அகலித்தவர்கள் சோழர்கள் மட்டுமே. சாம்ராச்சியங்களுக்கு உரிய நல்ல கெட்ட அம்சங்கள் சோழசாம்ராச்சியத்திற்கும் பொருந்தும்.

Kavichakravati Kamban
Kavichakravati Kamban, 900AD

ஆயின் சுந்தரத் தமிழ் இக்காலத்தில் பெரும் உச்சங்களைத் தொட்டு நிற்கின்றது. கம்பன் தன் இராமகதைக்கான கருவினைக் கடன்வாங்கியபோதும் அவன் படைத்த காப்பியம் தனித்துவமான தமிழ்காப்பியம் .

தமிழும், தமிழ்நாடும், தமிழர் சமயங்களும், பண்பாடும் காப்பியம் எங்கும் பொங்கி வழிவதை காணலாம். அகத்திய முனிவரை "தமிழ்த் தலைவன்" எனக் கூறும் கம்பன் தமிழை, தண்டமிழ், இன்தமிழ், முத்தமிழ், தமிழ் எனும் அளப்பரும் சலதி என்றெல்லாம் குறிப்பிடுவர்.

கம்பனைப் போன்றே கல்லாடரும் (கல்லாடம் ) திருத்தக்கதேவரும் (சீவகசிந்தாமணி) தோலாமொழித்தேவரும் (சூளாமணி), ஒட்டக்கூத்தரும் (குலோத்துங்க சோழனுலா, தக்கயாகப் பரணி) புகழேந்தியாரும் (நளவெண்பா) சேக்கிழார் பெருமானும் (பெரியபுராணம்) கச்சியப்பரும் (கந்தபுராணம்) புத்தமித்திரரும் ( வீரசோழியம்) தமிழை பல அடைகள் கொண்டு போற்றுகின்றனர்.

தமிழை தமிழ் இராச்சியங்களை உள்வாங்கும் தேசியச் சின்னமாக இளங்கோ அடிகளார் தமிழ்த்தேசியக் காப்பியம் செய்ததுபோல் சோழர் காலத்தில் சேக்கிழார் பெருமான் தமிழ்ப் பக்தியின் மூலம் தமிழகத்து மக்களை சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் இணைக்கும் 63 நாயன்மார்களின் வாழ்வைக் கொண்ட காப்பியம் செய்தார்.

கண்ணப்பன் என்ற வேடனும் நந்தனார் என்ற பறையனும் சுந்தரர் போன்ற பிராமணர்களும், அரசர்களும் தமிழ் பக்தியின்மூலம் ஒருங்கிணைகப்படுவதை பெரியபுராணத்தில் தரிசிக்கின்றோம்.

காப்பியச் சுவை குறையாமல் அதேசமயம் அந்த மத்தியகாலத்தில்கூட யதார்த்தப் பண்புகளையும் தழுவி பறைஞர் சேரியை, வேடுவர் குடிகளை சேக்கிழார் பெருமான் படைத்திருக்கும் தமிழ்கண்டு வியக்கின்றோம்.

நாயக்கர் காலம்

இக்காலத்தில் பாரதம்பாடிய வில்லிபுத்தூரரும் அவர் மகனான வரந்தருவாரும் தமிழைப் பல அடைகளில் வர்ணிப்பர். தமிழை ஒரு பெண்ணாக உருவகித்து அவள் பொதியமலையிலே பிறந்து, பாண்டியமன்னனின் புகழுக்கு ஆளாகி, பாண்டியர்கள் உருவாக்கிய சங்கங்களில் இருந்து, வைகை நதியிலே எதிர்நீச்சல்போட்டு (சம்பந்தரின் தேவாரப்பதிகம்) நெருப்பிலே நின்று, கற்றோர் நினைவிலே நடந்து தமிழ் அயலிலே வளருகின்றாள் என்னும் அர்தத்தைத் தரும்

" பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்
திருப்பிலேயிருந்து வைகையேட்டிலே தவழ்ந்தபேதை
நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோரென
மருப்பிலே பயின்றபாவை மருங்கிலே வளருகின்றாள் "

பாடல் வில்லிபுத்தூரரின் மகனால் பாடப்பட்டது என்பர்.

இதே போண்று இக்காலத்தில் தோன்றிய திருவிளையாடற் புராணத்திலும் தமிழ் என்னும் பதம்

" முத்தமிழ் சொக்கன், செந்தமிழ்க்கினிய சொக்கன், தென்தமிழ்பயிலும் சுந்தரன் ,செந்தமிழ்குரு "

என்றெல்லாம் பயிலப்பட்டுள்ளது. இவர்போல் குமரகுருபரரும், திருக்குற்றாலக் குறவஞ்சி ஆசிரியரும் பிறரும் தமிழை இனிமைக்கும். குளிர்மைக்கும் ஒப்பிட்டு பாடியுள்ளனர்.

ஜரோப்பியர் காலமும் நவீனகாலமும்

அன்னியர் ஆட்சியின் விளைவால் ஏற்படும் அனர்த்தங்கள் பல. பிரித்தானிய இந்தியாவில் ஆங்கிலக் கல்வி மூலம் தமக்கும் தம்மால் ஆளப்படும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் இடையே பாலமாக விளங்கக் கூடிய ஒரு வர்க்கத்தை உருவாக்கும் கல்வித் திட்டத்தை உருவாக்கினர்.

" We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste, in opinions, in morals, and in intellect." Lord Macaulay, Minute on Indian Education, 1835

இந்தக் கல்வியைச் சுப்பிரமணிய பாரதியார் செலவு தந்தைக்கு ஆயிரம் என்றும் தீமை தனக்கு பல்லாயிரம் என்றும் சாடுவார். ஆயினும் இக்காலத்தில்தான் உ.வே சாமிநாதையர், சி.வை தாமோதரம்பிள்ளை போன்றவர்களின் கடும் உழைப்பால் சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற காப்பியங்களும் தேடிக் கண்டு பிடிக்கப்பட்டு ஓலையில் இருந்து அச்சுவாகனம் ஏற்றப்பட்டது.

இவையும், திராவிடமொழிகழின் ஒப்பிலக்கணம் என்ற கால்ட்வெல் பாதிரியாரின் நூலும்பாரதி, பாரதிதாசன் போன்றோரின் கவிதைகளே சாட்சியாகும். ஆங்கிலம் மூலம் கல்வி கற்ற தமிழ் அறிஞர்களிடையே ஒரு பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. இவை ஏற்படுத்திய தாக்கங்களை இச் சிறு கட்டுரையில் கூறமுடியாது. இவற்றின் தாக்கங்களை விளக்க

சோழர் காலத்தின் பின்னர் ஆக்கஇலக்கியத்தின் வீரியமும், கம்பீரமும் இழந்து பண்டிதர்களிடமும், ஆதினங்களிலும் சிறைபட்டு கிடந்த தமிழ் பாரதியின் வருகையுடன் கரையுடைத்து, மதகு உடைத்து காட்டாற்று வெள்ளம்போல் பாய்வதையும், அதனால் மருபுகள் பல உடைக்கப்படுவதையும் புதிய மரபுகள் பல ஏற்படுத்தப்படுவதையும் காண்கிறோம்.

பாரதியுடன் 20ஆம் நூற்றாண்டுக்குள் நுழைந்த தமிழ் புதுமைப்பித்தனின் சிறுகதைகளுடன் உலகின் முக்கிய மொழிகளின் ஆக்க இலக்கியங்களுடன் சரியாசனம் பெறுவதைக் காண்கின்றோம்.

முன்னைப் பழமைக்கும், பின்னைப் புதுமைக்கும் பேற்றியனாய் பேறு பெற்ற தமிழ் " யாமறிந்த மொழிகளிலே இனிதாவது " எங்கும் காண முடியாத நிலை காட்டப்படுகிறது. விரிவு அஞ்சி இவைபற்றி அதிகம் கூறாது வாசகரின் மனங்களுக்கு விட்டுவிடுகிறேன்.

தமிழீழம்

ஈழத்தின் தமிழும் அதன் தொன்மையும் தொடர்ச்சியும் தமிழ்நாட்டின் கதைக்கு சளைத்தல்ல. சங்க இலக்கியங்களில் ஈழத்து பூதந்தேவனார், மதுரை ஈழத்து பூதந்தேவனார் ஆகியோரின் பாடல்களை மட்டும் உதாரணமாகப் பார்க்கும் கற்கையே இன்னமும் நிலவுகிறுது.

ஆயின் வரலாற்றில் தமிழகத்துடன் பண்பாட்டுரீதியில் ஒன்றாக இருந்த ஈழத்தின் தமிழ்த் தொன்மை இன்னமும் உரிய முறையில் ஆய்வு செய்யப்படவில்லை எனத் துணிந்து கூறலாம்.

சோழவழநாடே விரும்பி ஏற்கும் பண்டங்களும் ஈழத்தில் இருந்து சென்றதை கரிகாலச் சோழனை பாட்டுடைத் தலைவனாகக்கொண்ட பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடுகிறார்.

எது எவ்வாறு இருப்பினும் தமிழகத்தில் தமிழ் உணர்வு குன்றியபோதும் அது பொங்கிப்பாய்வது தமிழீழத்திலேதான். 19 ஆம் யிற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் யிற்றாண்டின் முற்பகுதியிலும் ஆறுமுக நாவலர், சி.வை தாமோதரம்பிள்ளை, வி.கனகசபைபிள்ளை, சுவாமி விபுலானந்தர் போன்றோரின் தமிழ்க் குரலுக்கு ஓப்புண்டோ கூறுமின்.

சிங்கள அடக்குமுறைகள் அதன்வழி தூறிட்ட தமிழ்க் குரல்கள்,

" ஓடையிலே என் சாம்பல் கரையும்போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓட வேண்டும்
பாடையிலே படுத்து ஊரைச் சுற்றும் போதும்
பைந்தமிழால் அழும் ஓசை கேட்க வேண்டும் "

என்றெல்லாம் பாடச் செய்தது.

விரிவஞ்சி இவைபற்றியும் எழுத அஞ்சுகிறேன்'

தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள்

தமிழ்த்தேசியத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் ஏற்படுத்திய தாக்கத்தை அறியாதோர் இல்லை எனலாம். அதுவும் யாழ்ப்பாணத்தில் 1974 இல் இடம் பெற்ற நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும் அது ஏற்படுத்திய உணர்வலைகளும் தமிழ் மக்கள் அறிந்த ஒன்றே.

ஆயினும் இந்த ஆராய்சி மன்றத்தின் தோற்றத்திற்கு வடிகால் அமைத்தவர் தமிழீழத்தைச் சார்ந்த தனிநாயகம் அடிகளார் என்பதை சிலர் அறியாது இருக்கலாம். சென்ற இடமெல்லாம் எவராலும் நியமிக்கப்படாத தமிழின் தூதுவராக வலம் வந்த அடிகளாரின் தமிழ் வாழ்வு காலம்தோறும் தமிழ் செய்யும் ஒரு பண்பாட்டின் தொடர்ச்சியே.

மலேசிய நாட்டில் கோலாலம்பூரில் முதல் மாநாட்டை ஆரம்பித்து வைத்து தனது கடவுளுக்கு வீரமாமுனிவரின் தேம்பாவணியில் இருந்து,

" கலை அணிச் செல்வன் கமலச் சேவடி
தலை அணி புனைந்து சாற்றுதும் தமிழே "

எனத் தமிழால் தலைவணங்கி அதன்பின்

" என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே "

என்ற திருமந்திர வாக்கியங்களைக் கூறி மாநாட்டு பேருரையை ஆற்றினார். இந்த வாக்கியங்கள் தமிழ்கூறும் நல் உலகை எந்தளவில் பாலித்து நின்றது என்பதைக் கூறவும் வேண்டுமா.

C.N.Annadurai Statue in Coimbatoreஇதன் பின்னான இரண்டாவது உலகத் தமிழ் ஆராய்சி மாநாடு தமிழ்நாட்டில் சென்னையில் பூம்புகார் திடலில் ஏற்படுத்திய உணர்ச்சிப் பிரவாகங்களையும் அறிஞர் அண்ணாவின் சொல் ஓவியங்களையும் நாம் அறிவோம். அவர் ஆற்றிய உரையில் தமிழ் மக்கள் தங்கள் மொழிக்கு கொடுக்கும் உன்னதத்தைக் கண்டு நிற்கும் வெளிநாட்டார் தத்தமது நாட்டிற்குச் சென்று

" எந்தத் தமிழைப் பற்றி ஆராயத் தமிழகம் சென்றோமோ அந்தத் தமிழகத்தில் உள்ள மக்கள், எங்களுக்கு முன்பே நெடுங்காலம் தொட்டு ஆராய்ந்து, அந்த ஆராய்ச்சியால் அகமகிழ்ந்து, அந்தத் தமிழ் மொழியை தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கிறார்கள்; .........அந்தத் தமிழுக்கு எந்தப் பக்கமிருந்து, எவரிடமிருந்து, எந்த வகையான ஊறு வந்தாலும், ஊறு வரும் என்று ஜயப்பட்டாலும் தமது இன்னுயிரைத் தந்தேனும் தமிழைக் காப்போம் என்கிற உறுதி பூண்டவர்கள் தமிழர்கள் இப்படியெல்லாம் அந்த வெளிநாட்டு வித்தகர்கள் கூறுவார்கள் "

எனப் பேசினார். அவர் கூறியதற்கு இலக்கணமாக அமைந்த மாநாடே யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற நான்காவது மாநாடு என்பதை விரித்துக் கூறவும் வேண்டுமோ.

இந்த இடத்தில் பிரான்சு தேசத்தில் பாரிஸ் நகரில் இடம் பெற்ற மூன்றாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கும் ஒரு அதி விசேடம் உன்று. மல்கம் ஆதிசேசையாவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த மாநாட்டில் தன் பாட்டுத் திறத்தாலே இந்த வையகத்தைப் பாலித்திட வரம் கேட்ட எங்கள் பாரதியின் கனவு பலித்தது.

Bharathy - Jayalakshmi Satyendraவரப்போவதை எல்லாம் முன்கூட்டியே பாடிச் சென்ற இந்த வரகவி, வறுமையில் வாடியபோது உதவி கேட்டு எட்டயபுர ராஜாவிற்கு கடிதம் எழுதுமாறு இவரின் நண்பர்கள் தொல்லை கொடுத்தனர். அந்தத் தொல்லையால் அவர் எட்டயபுர மன்னனுக்கு ஒரு கவிதை மடல் வரைந்தார். ஆயின் அது பிச்சை கேட்கும் மடல் அல்ல, அந்த மடலில்

" புவியனைத்தும் போற்றிட வான் புகழ்படைத்துத்
தமிழ் மொழியைப் புகழில் ஏற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக்கில்லை என்னும்
வசை என்னால் கழிந்த தன்றே
சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
சொற்புதிது எந்நாளும் அழியாத மாகவிதை என்று நன்கு

பிரான்ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டின் உயர்
புலவோரும் பிறரும் ஆங்கே
விராவுபுகழ் ஆங்கிலத் தீங்கவியரசர் தாமும் "

தன் தமிழ்கவியை மொழிபெயர்த்துப் போற்றுகின்றார். என நடந்து முடிந்ததாகக் கவி பாடியதை பாரிஸ் மாநாட்டில் எடுத்து ஆய்ந்தனர்.

இது போன்று மதுரையில், மொறிசியஸ் நாட்டில், தஞ்சையில் நடந்த மாநாடுகள் காலம்தோறும் தமிழ் செய்யும் வாழ்விற்கு வளம் சேர்த்துள்ளன.

இன்று

தமிழன் இல்லாத நாடில்லை,
தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை
.


Google Analytics Report on Visitors to tamilnation.org for the month of August 2009

Top Twenty Two Cities 1. Chennai 2. Bangalore 3. London 4. Coimbatore 5. Singapore 6. Colombo 7. Dubayy 8. Mumbai 9. Delhi 10. Sydney 11. Kuala Lumpur 12. Madurai 13. Thanjavur 14. Hyderabad 15. New York 16. Melbourne 17. Riyadh 18. Doha 19. Petaling Jaya 20. Abu Dhabi 21. Don Mills 22. Pondicherry ...- a growing togetherness

தமிழ் இன்று அதன் எல்லைகளைத் தாண்டி கண்டங்களையும் கடல்களையும் தாண்டி தேசங்களைக் கடந்த தேசியமாக பர்ணமித்துள்ளது.

புலம் பெயர்ந்த தமிழ் யுவதிகளும் ,வாலிபர்களும் பிரான்ஸ், ஜேர்மன், ஆங்கிலம், ஒல்லாந்து எனப் பல மொழிகளில் பல்கலைக்கழகம்வரை பயில்கின்றனர்.

இவர்களில் சிலராவது இந்த மொழிகழில் பாண்டித்துவம் பெறுவாராயின் அதன் மூலம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பல வகைகளில் உரம்சேர்ப்பதோடு (ஒப்பியல் இலக்கிய ஆய்வுகள் உட்பட) களத்திற்கும் புலத்திற்கும் பாலம் அமைத்து தமிழை உலகச் செம்மொழியாக்க உழைத்திடலாம்.

தனிநாயகம் அடிகளாரின் கடும் உழைப்பாலும் , மதிநுட்பத்தாலும் தோற்றம் பெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இன்று அரசியல்கூடி ஆராய்ச்சி தேய்ந்து காணப்படுகிறது.

இதனைச் சரி செய்யும் தகமை புலம் பெயர்ந்த தமிழ் வாலிபர்களுக்கும் யுவதிகளுக்கும் உண்டு. தாம் வாழும் நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு ஊடாக இதற்கான ஆரம்பப் பணிகளைச் செய்வதற்கான கருத்துப் பரிமாற்றங்களை இவர்கள் ஆரம்பிக்கலாம்.

தமிழீழத்தில் புலிகள் ஆட்சியில் உருவான கட்டுமானங்களில் மொழிப்பல்கலைக்கழகமும் ஒன்றாகும். வன்னியில் அறிவுநகரத்தில் இதற்காக மலர்ந்த கட்டிடம் அழிக்கப்படலாம். ஆயின் அதன் பின்னால் உள்ள கனவுகள், தாயகக் கனவைச் சுமந்த அந்தச் சந்தனப்பேழைகளின் கனவுகளோடு வாழும். அதை வாழ வைக்கவேண்டிய கடமையும், உரிமையும் புலம் பெயர்ந்து வாழும் எம் இளம் சமுதாயத்தினதாகும்.

புதிய விபுலானந்தர்களும், தாமோதரம்பிள்ளைகளும், தனிநாயங்களும் புலம் பெயர்ந்து அந்த நாட்டு மொழியை பல்கலைக்கழகத்தில் சிறுப்புப் பாடமாகப் பயில்வோரிடையே ஏன் உருவாக முடியாது?

உலகமயமாக்கல், சுருங்கும் உலகம் என்பன பல சவால்களையும் அதே சமயம் பல வாய்ப்புக்களையும் அளிக்கின்றது. நாம் எங்கும் சிறகுடன் பறந்தாலும் தமிழுக்கென, தமிழருக்கென ஒரு நாடு மலர்ந்திட காலம்தோறும், தேசம்தோறும் தமிழ்செய்வோம்.

" மொழி, கலை, கலாசாரம் என்பன ஒரு தேசிய இனத்தின் கட்டமைப்பிற்குத் தூண்களாக விளங்குகின்றன. ஓரு தேசியத்தின் ஆன்மாவாகத் திகழ்கின்றன. ஒரு தேசிய நாகரிகத்திற்கு அத்திவாரமாகின்றன. " தமிழீழத் தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன்.


பயன்பட்ட நூல்கள்

1. தமிழும் தமிழரும், பேராசிரியர் வி.சிவசாமி
2. Collected Papers of Thani Nayagam Adigal , International Institute of Tamil Studies
3.மகாகவி பாரதியார் கவிதைகள்
4. தொல்காப்பியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
5.எட்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு , தஞ்சாவூர் விழாமலர்
6. நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நினைவுமலர்
7.Tamil Heroic Poems by Dr.G..U Pope
8. வெளிச்சம் பவளஇதழ் 2001 ,விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்.

- ம.தனபாலசிங்கம்-

Comments