அண்மையில் மு.திருநாவுக்கரசு அவர்களின் அரசியல் வரலாற்று நூலான சமஷ்டியா தனிநாடா என்னும் அற்புதமான நூலைப் படிக்கும் வாய்ப்புக்கிட்டியது. அதில் கூறப்பட்டவற்றையும் நான் அறிந்து கொண்டவற்றையும் பதிவுசெய்தல் பயன்தரும் என எண்ணுகிறேன். ஆளுமை மிக்க தமிழ்ச் சொற்களால் ஆசிரியர் தனக்கென வகுத்துக்கொண்ட ஒரு பாணியில் அரசியல் அறிவினை நல்ல நீரோட்ட நடையில் ஓடவிடுகிறார்.
நூலின் அறிமுகத்தின் ஆரம்பமாக:
- " வரலாற்றுக்குத் தெரியாததென்று ஒன்றுமில்லை. மன்னிக்கத் தெரியாததைத்தவிர. ஆதலால்தான் வரலாற்றைக் கண்டிப்பான கிழவி என்று வர்ணிப்பர். மனிதனை ஒரு வரலாற்றுப்பிராணியாக கருதும் இந்நூல் சமஷ்டி முறையை அதன் நீண்ட வரலாற்றுப் பின்னணியில் வைத்து மதிப்பிட முற்படுகின்றது "
எனக் கூறும் ஆசிரியரின் இந்நூலின் முதற்பதிப்பு சனவரி 2005 இல் கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. ஆயின் இதற்கான ஆரம்ப எழுத்துக்கள் 2002 இல் ஆரம்பமாகின.
நூலின் முடிவில் :
- " எல்லா மதங்களையும் எல்லாத் தத்துவங்களையும் எல்லா நீதிநூல்களையும் எல்லாக்கோட்பாடுகளையும் எல்லாத் தர்ம போதனைகளையும் எல்லாச் சீலங்களையும் தாண்டி இரத்தமும் கண்ணீரும் முன்னே பாய்கின்றன.
சந்திரனில் நின்று பார்க்கும்போது பூமியிலுள்ள மனிதனது படைப்பாகக் கண்ணிற்குத் தெரியக்கூடியது சீனப்பெருஞ்சுவர் ஒன்றுதான். அதிசயிக்கத்தக்க இப்பெரும் சாதனையை மனிதன் மீதான பகைமையின் நிமிர்த்தமும், தற்பாதுகாப்பின் நிமிர்த்தமுமே மனிதன் செய்ய நேர்ந்தது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான வேலிச் சண்டையினதும் பகைமையினதும் சின்னமாய் 2400 கி.மீ நீளமுள்ள சீனப் பெருஞ்சுவரை பூமியும் வரலாறும் சுமந்து நிற்கின்றன.
பகைமையின் சின்னமான சீனப்பெருஞ்சுவர்கள் மனித நாகரிக வளர்ச்சியால் தகர்ந்துபோக வேண்டுமென்றே விரும்புகிறோம். ஆனால் அதுவரை ஈழத்தவர்களின் பாதுகாப்பிற்கும் சுவர்கள் தேவைப்படுகின்றன. அது எது? - ஜக்கிய இலங்கைக்குள் சமஸ்டிச் சுவரா? அல்லது பிரிந்து செல்லும் தனிஅரசா? இதில் முடிவென்பது சிங்கள ஆட்சியாளர்களின் அணுகுமுறையில்தான் தங்கியுள்ளது "
என முடிக்கிறார்.
சந்திரனில் இருந்து பார்க்கும்போது சீனப்பெரும்சுவர் தெரியவில்லை எனவும், விண்வெளியில் இருந்து பூமியில் மனிதர்களின் படைப்புக்கள் பலவற்றைப் பார்க்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதுபற்றிய வாதத்தில் நாம் ஈடுபடவேண்டியதில்லை. தான் சொல்ல வந்ததை அழுத்திச் சொல்ல மு.திருநாவுக்கரசுக்கு இது பயன்பட்டிருக்கலாம்.
இன்று தமிழர்களின் விடுதலை இலட்சியத்தின் பலமாக இருந்த புலிகளின் ஆயுதப்போராட்ட வடிவத்தை அழித்து விட்டார்கள். ஆதலால் மு.திருநாவுக்கரசின் முடிவு சாத்தியமா எனப் பலர் எண்ணலாம். முடிவடைந்தது ஒரு போராட்ட வடிவமே. அதன் பின்னரான சிங்கள ஆட்சியாளரின் வெற்றிக் களிப்பின் எக்காளச் சிரிப்பும், வதைமுகாங்களும் முரண்பாட்டை இன்னமும் கூர்மையாக்கும் என்பதே வரலாற்றின் இயங்கியல் விதியாகும்.
சமூகப் பிராணியான மனிதனின் வரலாற்றில் முதன் முதல் அரசு என்ற நிறுவனத்தின் தோற்றத்ததுடன் சமஸ்டிக்கான பிறப்பையும் இனம் கண்டாலும் மாக்சீய சிந்தனையாளரான மு.திருநாவுக்கரசு சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்வதன் அடிப்படையில் தேசிய இனங்களின் பிரச்சனையையும் சமஸ்டி முறையையும் லெனினே பாட்டாளிவர்க்கக் கண்ணோட்டத்துடன் உருத்திரட்டியதை விளக்கிச் சென்று 1991 இல் சோவியத் யூனியன் வீழ்ந்து சிதறிச் சின்னாபின்னப் பட்டதற்கு 1924 இல் லெனினின் மரணத்தைத் தொடர்ந்து அங்கு பெயரளவில் சமஸ்டி இருந்தாலும் நடைமுறையில் செத்துவிட்டமையை காரணமாகக் காட்டுகிறார்.
தேசிய இனங்களை அடக்க நினைப்பவர்களுக்கு சோவியத்தின் உடைவு ஒரு வராற்றுப் படிப்பினையாகும்.
ஆனால் மாக்ஸிகஸ சோஷலிசந்தான் அரசிற்குள் இருக்கக்கூடிய பல்தேசிய இனங்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பிரிந்து செல்லும் உரிமை என்பதைக் கோட்பாட்டு ரீதியாக வளர்த்தெடுத்தது. அமெரிக்காவும் மேற்குலகும் கூறும் சுயநிர்ணயம் இவ்வாறு அடித்தளத்தில் இருந்து கோட்பாட்டுரீதியில் வடிவம் பெறவில்லை என்பதை விளக்குகிறார். முதலாளித்துவ அரசியல் பிரசவித்த சுயநிர்ணய உரிமை அரசின் அர்தத்துக்குள்ளால் மட்டுமே பார்க்கப்படுகிறது. அரசிற்குள் இருக்க்கூடிய பல்வேறு தேசிய இனங்களின் அர்த்தத்துக்குள்ளால் அல்ல.
சோவியத்தின் உடைவுடன், பனிப்போரின் முடிவுடன் சுயநிர்ணய உரிமை என்பது உலக மயமாதலில் இருந்தும், உலகளாவிய பேரரசுப் போக்கிலிருந்தும், பிராந்திய நிலைமைகளிலிருந்தும் நாடுகளுக்கிடையிலான நலன் சார்ந்த உறவு முறை நிர்பந்தங்களிலிருந்தும், உள்ளும் புறமுமான அரசியல் உள்ளடக்கத்திலிருந்தும், செயல்களின் தொகுக்கப்பட்ட விளைவுகளிலிருந்தும் பிரித்துப் பார்க்க முடியாத ஒரு கூட்டு மொத்த வடிவமாக உள்ளது என விளக்கிச் செல்லும் நூலாசிரியர் இதனை வரலாற்று நடைமுறையில் பார்த்தால் "சுயநிர்ணய உரிமை " என்பது கண்ணகியின் கற்புமல்ல ; மாதவியின் அரவணைப்புமல்ல என சுவைபடக் கூறுகிறார்.
இறைமை என்பது கற்பல்ல (sovereignty is not viginity ) என்ற பிரித்தானிய அமைச்சர் ஒருவர் கூறியது ஞாபகத்திற்கு வருகிறது. இதற்காகாகத்தான் அக சுயநிர்ணயம் புற சுயநிர்ணயம் என்ற கருத்துருவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன.
உலகிலேயே முதன்முதலாக எழுதப்பட்ட சமஸ்டி அரசியல் யாப்பைக் கொண்ட அமெரிக்காவில் சமஸ்டி என்பது பிரதேசம் சார்ந்ததாகும். 1777 ஆம் ஆண்டு உருவான அமெரிக்க அரசியல் யாப்பானது கூட்டாட்சி முறையை கொண்டிருப்பதாய் இருந்தது. இக் கூட்டாட்சி முறையின் கீழ் அரசுகள் தனித்தனியே பிரியவல்ல இயல்புடன் காணப்பட்டன. ஆனால் 1789 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த புதியயாப்பு பிரியவல்ல கூட்டாட்சிக்குப் பதிலாக பிரிய முடியாச் சமஸ்டிமுறையை ஏற்படுத்தியது என்கிறார். அவுஸ்திரேலிய சமஸ்டியும் இந்த வகையினதே. ஆனால் பல்லினங்களைக் கொண்ட நாடுகளில் சமஸ்டிமுறை இனப்பரிமாணத்திற்கு ஊடாகவே அணுகப்படவேண்டுமென்பதால் இனம்சார்ந்த உரிமைகள், சுயநிர்ணய உரிமை, இறைமை, இறைமை பங்குபோடப்படும் விதம் என்பனவெல்லாம் அதிக கவனத்திற்குரியவை என்கிறார்.
சமஸ்டி யாப்புக்கள் என்ற தலைப்பில் அமெரிக்க சுவிஸ் அனுபவங்களை விரிவாகவும் சுவையாகவும் விளக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து அரசியல் யாப்பை விளக்க வந்தவர் லெனினைப்பற்றி மொஸ்கோவில் பேசப்படும் சுவையான ஒரு கற்பனையை அவிழ்த்து விடுகிறார். இறந்த லெனினுக்கு றஸ்சிய விஞ்ஞானிகள் உயிர் கொடுத்து ஸ்ராலினது ஆட்சிப் பீடத்தை லெனினிற்குச் சுற்றிக் காட்டினர். மறுநாட்காலையில் லெனினை அவரது படுக்கை அறையில் காணவில்லை. அங்கு ஒரு சிறுதுண்டு இருந்தது. அதில்
- " எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு நான் சுவிட்சர்லாந்திற்குத் திரும்பிச் செல்கிறேன் "
என எழுதப்பட்டிருந்ததாம்.
அடைக்கப்பட்ட புகைவண்டியில் சுவிட்சர்லாந்தில் இருந்தே லெனின் றஸ்சியா சென்றதும் அங்கு அவரை அனுப்பியவர்கள் எதிர்பார்த்திருக்காத புரட்சி வெடித்ததையும் வாசகர் அறிந்திருக்கலாம். இதனை விளக்கவே ஆசிரியர் இவ்வாறான கதையை கூறுகிறார்.
பல்லினங்களைக் கொண்ட ஒரு தேசத்தைச் சமஸ்டி முறையின் கீழ் வெற்றிகரமாக வடிவமைத்த முதலாவது தேசம் என்ற பெருமை சுவிட்சர்லாந்திற்கே என்கிறார். இதன் பின்னால் உள்ள வரலாற்றை அவர் விளக்கியதை விரிவஞ்சி தவர்க்கின்றேன். இருபதுக்கு மேற்பட்ட கன்ரன்களைக் கொண்ட இந்த நாட்டில் நான்கு மொழிகள் பேசப்படுகின்றன. பெரும்பான்மையினர் பேசும் ஜேர்மானிய மொழி, 25 வீதத்தினர்பேசும் பிரெஞ்சுமொழி, 4 சத வீதத்தினர் பேசும் இத்தாலிய மொழி ,மிகச்குறைந்தோர் பேசும் றோமன்ஸ் மொழி என்பனவே அவை. இந்த இடத்தில் சுவிஸ்சர்லாந்தின் பிரபல வரலாற்று ஆசிரியர் Herbert Luthy
- " While every country in Europe undertook an ambitious program of centralization to make itself more powerful, the secret of Switzerland's survival is that it never became a modern state; the cantons would not tolerate it. To this day, medieval communal traditions linger. Swiss citizens have a " commune of origin " rather than the place of birth, stamped in their passport, and a foreigner seeking Swiss naturalization must first be accepted by a commune. ..."
எனக் கூறியுள்ளது உற்று நோக்கத்தக்கது. அந்த நாட்டில் தேசியத்திலும் கூடுதலாக இனக்குழும உணர்வே முந்தி நிற்பதற்கு அதன் வரலாற்றை அறிதல் வேண்டும்.
பல்லினங்களைக்கொண்ட சமஸ்டிக்கு சுவிற்சர்லாந்து ஓரு உதாரணமெனின் பிரதானமாக இரண்டு இனங்களைக் கொண்ட சமஷ்டி அமைப்பாக விளங்கும் கனடாவின் அனுபவங்களையும் அழகாக விளக்குகிறார்.
இங்குள்ள பத்து சமஷ்டி அலகுகளில் ஒன்று பிரஞ்சு இன மாநிலமாகவும் ஏனையவை ஆங்கில இன மாநிலங்களாகவும் உள்ளன. ஜரோப்பாவில் ஆங்கிலேயர்களுக்கும் பிரஞ்சுக்காரருக்கும் இடையே காணப்பட்ட வரலாற்றுப் பகைமை கனடாவிலும் எதிரொலிப்பதாயிற்று. இந்தப் பின்புலத்தில்கூட பரஸ்பர விட்டுக்கொடுப்புக்களைச் செய்யும் ஓர் அரசியற் கலாச்சாரத்தின்மூலம் பிரச்சனைகள் அணுகப்பட்டன.
கனடா ஆங்கிலேயருக்குச் சொந்தமா? பிரஞ்சுக்காரருக்குச் சொந்தமா ? என்ற இழுபறிக்குப் பதிலாக இருவருமே புதிய நாட்டின் இணைத்தாபகர்கள் ( Co-founders of a new nation ) என்னும் எண்ணப்பாங்கு வளர்க்கப்பட்டது. இந்தச் சுழலில்கூட கியூபெக் மாநிலத்தில் தனிநாட்டுக்கோரிக்கை காலத்திற்குக்காலம் தலைதூக்கியதை எடுத்துக்காட்டும் ஆசிரியர் அந்த அரசியல் நாகரிகத்தைக் காட்டும் இன்னொரு சம்பவத்தை கூறுகிறார்.
கியூபெக் மாநிலத்தின் தனிநாட்டுக்கோரிக்கை வலுப்பெற்ற 1996 இல் கனடாவின் ஏனைய மாநிலங்களில் இருந்தெல்லாம் மக்கள் கியூபெக்கை நோக்கிப் படையெடுத்தனர். அவர்களுடன் சண்டை போட்டுக்கொள்வதற்காக அல்ல. " நீங்கள் ஏன் எங்களைவிட்டுத் தனியாகப் பிரிந்து செல்லவேண்டும் " என்று கேட்பதற்காக. இவ்வாறான அணுகுமுறைகளால் " தாங்கள் தனித்து விடப்பட்டவர்கள் " என்ற உணர்வு கியூபெக் மக்களிடம் இல்லாதுபோயிற்று. இந்த மனமாற்றத்திற்கு மக்களே முன்னின்றனர். இத்தகைய ஒரு கலாச்சாரத்திற்கு ஊடாகத்தான் கனடிய சமஸ்டியை புரிந்துகொள்ள வேண்டும்.
சிங்கள அதிகாரவர்க்கமும் , பௌத்தமதபீடங்களும், சிங்கள ஊடகங்களும், சிங்கள புத்திஜீவிகிளும் பெரும்பான்மையான சிங்கள வரலாற்று ஆசிரியர்களும் தமிழர்களை எதிரிகளாக, பகைவர்களாக. வந்தேறு குடிகளாக சிங்கள மக்களுக்கு காலம் காலமாக தீனிபோட்டு வளர்த்து வந்த பௌத்த சிங்கள கலாச்சாரத்தில் கனடிய உதாரணத்தை கைக்கொள்ள முடியுமா?
யுத்தங்கள் இன்றி, கத்தியும் இரத்தமும் இன்றி அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளை நாகரீகமாக அணுகும் நாடுகளின் சமஷ்டிகளை சிங்கள தமிழ் இனமோதுகைக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ள முடியுமா என்பது ஒரு பெரும் கேள்வி.
சுவிஸ்சர்லாந்து, பெல்ஜியம், கனடா ஆகிய நாடுகளில் உருவான சமஷ்டி அமைப்புக்கள் நீண்ட காலங்களின் முன் உருவானவை. அதில் சம்பந்தப்பட்டோர் யுத்தங்களில் மோதிக் கொள்ளவும் இல்லை. இந்த இடத்தில் நான் இன்னொரு உதாரணத்தைக் காட்டலாம் என எண்ணுகின்றேன். அதுதான் Bosnia - Herzegovina
ஒற்றை ஆட்சி அமைப்பையும் யுத்தத்தையும் கண்ட பொஸ்னியாவில் சேபியரும், குறோசியரும், முஸ்லிங்களும் இனத்தால் தெற்கு சிலாவியர். வேறு எழுத்துவடிவங்களைக் கொண்டிருந்தபோதும் அவர்கள் பேசும் மொழியும் ஒன்றே.
குறிப்பிட்ட பிரதேசத்தில் அவர்கள் செறிவாக வாழவும் இல்லை. மதத்தால் குறோசியர் றோமன் கத்தோலிக்கராகவும், சேபியர் ஓதொடக்ஸ் கிறீஸ்தவராகவும், முஸ்லிம் மக்கள் இஸ்லாமியராகவும் காணப்படுகின்றனர்.
இவர்களுக்கு இடையிலான யுத்தம் மூன்று ஆண்டுகாலமாகவே (1992 இல் இருந்து 1995) இடம் பெற்றது. அமெரிக்க ,நேட்டோ தலையீட்டால் 1995 இல் தத்தமக்கான இராணுவத்துடனான சமஸ்டி இங்கு ஏற்படுத்தப்பட்டது. சிங்கள தமிழ் முரண்பாட்டிற்கு இதுவும் முன் உதாரணம் அல்ல. பொஸ்னிய ஹேர்சிகோவினா சமஸ்டி யாப்பின் கட்டிய உரையில் (Preamble) இவ் அரசின் முக்கிய இலட்சியங்களில் ஒன்றாக சுதந்திர வர்த்தகச் சந்தை அமைந்திருக்கும் என்பது மிகத் தெளிவாக எழுதப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்ட மு.திருநாவுக்கரசு தவறவில்லை. 1994 மார்ச் வோஷிங்டன் உடன்படிக்கை மூலமும் (Washington agreements ) 1995 டிசம்பர் டேரென் உடன்படிக்கை மூலமும் ( Dayton agreements) மேற்குலகின் முனைப்புடன் இச் சமஸ்டி ஏற்படுத்தப்பட்டது என்பதை மனங்கொள்ளல் வேண்டும்.
இந்த இடத்தில் யூதமக்கள் சம்பந்தமாக மேற்குலகும் ஸ்டாலினின் றஸ்சியாவும் நடந்து கொண்டமையை மு.திருநாவுக்கரசின் பார்வையில் பார்ப்பது சுவையானது. தேசிய இனம் பற்றிய ஸ்ராலினின் நான்கு வரையறைகளும் பிரபலமானவை. பொதுப் பிரதேசம், பொதுப் பொருளாதாரம், பொது மொழி, பொது வரலாறும் அதனாலான பொது உளவியல் உருவாக்கமும் என்பனவே அவை. இது ஒரு எளிமையான வரைவிலக்கணம். இதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆனால் தன் வரைவிலக்கணத்தையே முதலில் மீறியவர் ஸ்ராலின்தான் என்கிறார் மு.திருநாவுக்கரசு.
- " அதாவது ஜரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் சிதறி வாழ்ந்த யூதர்களுக்கு ஒரு பொதுப் பிரதேசம் என்பது இல்லை. அவ்வாறே அவர்களுக்கு ஓரு பொதுப் பொருளாதாரமும் இல்லை. தாம் தாம் வாழும் நாடுகளிலுள்ள மொழிகளையே அவர்கள் பின்பற்றியதால் பொது மொழியுமில்லை. பொதுப் பிரதேசத்தில் வாழாததால் அவர்களிடம் பொது வரலாறோ அது சார்ந்த உளவியலோ இல்லை. ஸ்ராலினின் நான்கு வரையறைகளும் யூதர்களுக்குப் பொருந்தவில்லை. ஆனால் தனது கோட்பாட்டைத் தானே மீறி ஜரோப்பிய யூதர்கள் ஒரு தேசிய இனம் என்றும் அவர்கள் பாலஸ்தீனம் சென்று தனிஅரசு அமைக்கலாம் என்பதையும் அங்கீகரித்தார். ஸ்ராலின் கூறிய வரையறைகள் நான்கிற்கும் வெளியே யூதர்களிடம் ஒரு பொது உளவியல் உணர்வு இருந்தது. அதாவது அவர்கள் ஜரோப்பா எங்கும் காலத்திற்குக் காலம் தாக்கப்பட்டு வந்ததால் யூதர் என்ற இன உணர்வு துளிர்க்க முடிந்தது "
என்கிறார்.
ஆனாலும் யூதர்கள் பற்றிய இவரின் பார்வையை முற்றான தீர்ப்பாகக் கொள்ள முடியவில்லை. என்றோ ஜெறூசலம் என்ற கனவும், அதைக் கைவிடாத வரலாறும், யூததேசத்தின் உருவாக்கத்துடன் ஹீபுறூ மொழியை தழுவிய சாதனைகளும் தனித்துவமானவை எனலாம்.
ஜரோப்பியர் யூத அரசு அமைக்க அங்கீகரித்தமை என்பது யூதர்களுக்கு ஜரோப்பா எங்குமிருந்த தேசிய சிறுபான்மையின உரிமைகளை மறுத்து அவர்களை ஜரோப்பாவை விட்டுத் துரத்துவது என்பதுதான். இப்படித் துரத்தும் பணியில் ஜரோப்பாவும் றஸ்சியாவும் முழு அளவில் கைகோர்த்து நின்றது என்கிறார்.
தமிழ்மக்களும் ஜரோப்பியரிடம் இதை எடுத்துக் காட்டலாம். எங்களுக்கு என்று ஒரு நாட்டை அங்கீகரித்தால் நாங்கள் உங்களுக்குப் பாரமாக இருக்கமாட்டோம் எனக் கூறலாம்.
இலங்கையில் சமஷ்டிக் கோரிக்கை என்னும் அத்தியாயத்தில் இலங்கையில் சமஷ்டிக் கோரிக்கையின் வரலாற்றை தீர்க்கமாக விளக்குகிறார். சமஷ்டியை முதலில் கண்டிச் சிங்களத் தலைவர்களும் பின்பு கரையோரச் சிங்களத் தலைவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்காவும் பின்னர் தமிழ்த்தலைவர்களும் முன்வைத்ததை விளக்குகிறார். ஆனால் 1972 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த குடியரசு அரசியல் யாப்பு சமஷ்டிக்கு எதிரான தடை மதிலைப் போட்டது என்கிறார்.
இந்த மதில்தான் வட்டுக்கோட்டையில் பண்ணாகத்தை நோக்கி தமிழர்களை அழைத்துச் சென்றது இன்னொரு வரலாறு.
ஆனால் தமழர்களின் சமஷ்டிக் கட்சி அதற்கான அகிம்சைப் போராட்டத்தை அதற்குரிய உச்சம்வரை முன்னெடுத்துச் செல்லவில்லை என்பதை அழுத்திக்கூறும் ஆசிரியர் தமிழ்பேசும் மக்கள் வெகுஜனப் போராட்டங்களுக்குத் தயாராக இருந்தனர் என்பதை 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகம் தெளிவாக வெளிக்காட்டியது என்கிறார்.
1956 ஆம் ஆண்டு காலிமுகத் திடலில் சில மணித்தியாலங்கள் இருந்த சத்தியாக்கிரகமும் 1956 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருமலை யாத்திரையும், 1961 ஆம் ஆண்டு மேற்கொண்ட இரு மாதங்கள் தழுவிய சத்தியாக்கிரகப் போராட்டமும்தான் சமஷ்டிக் கட்சி மேற்கொண்ட முக்கிய அகிம்சைப் போராட்டங்களாகும் என்கிறார்.
பொட்டி ஸ்ரீ ராமுலுவின் ஆந்திரமாநிலக் கோரிக்கைக்கான அகிம்சைப் போராட்டத்தையும் ஆந்திர மக்களின் எழுச்சிகளையும் சமஷ்டிக் கட்சியினரால் மனதளவில் எட்டிக்கூடப் பார்க்கமுடியவில்லை என ஆசிரியர் சலித்துக் கொள்வதை வாசிக்கும்போது மக்களை அரசியல் மயப்படுத்தத் தவறிய தமிழர் கூட்டணியையும், புலிகளையும் சாடிய மாமனிதர் சிவராமை இந்த இடத்தில் நினைவு கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
மனிதனுக்குரிய பொதுவான இயல்புகள் அனைத்து மனித சமூகங்களுக்கும் பொது என்ற போதிலும் குறிப்பிட்ட வரலாற்றுச் சுழலின் நிர்ப்பந்தத்திற்கேற்ப இயல்புகளில் முனைப்பு வேறுபாடுகள் ஏற்பட இடமுண்டு எனச் சுட்டிக்காட்டும் ஆசிரியர் யூதமக்களை இதற்கு ஓர் உதாரணமாகக்காட்டி அவர்களிடம் முக்கியமாக நான்கு அடையாளங்கள் காணப்படுகின்றன என்கிறார்.
அவை (1) அறிவியல் ஈடுபாடு (2) சளைப்பற்றோராய் இருப்பது (persevering people ) (2) சுயநல மையம் (self-centered)
(4) பழிவாங்கும் போக்கு என்பனவாகும்.
யூதர்களின் " சுயநலமையம் " அவர்களின் சமூக முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தது. ஆனால் இரண்டாம் உலகமகா யுத்த காலத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் பேரழிவும் அவர்களை வேறொரு மையத்திற்குத் தள்ளியது.
அதாவது இத்தகைய கொடிய இனஅழிப்பு அனுபவத்தின் நிர்ப்பந்தத்தால் அவர்கள் தனிமனித சுயநல மையத்தில் இருந்து யூத இன சுயநல மையத்திற்கு மாறினர். பல்லுக்குப் பல்லு என்ற நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டது என விளக்கும் ஆசிரியர் ஈழத் தமிழரும் தம்இயல்பில் வரலாற்றுச் சுஸ்ரீழலிற்கூடாக நீண்டகாலப்போக்கில் சில இயல்புகளைப் பெற்றிருப்பர் எனக்கூறி இவற்றில் சரியானவையும் தவறானவையும் என இரு இயல்புகள் குடிகொண்டு வளரமுடியும்.
அவற்றில் காலப்பொருத்தமற்று இருக்கின்ற தவறானவற்றை அடையாளம்கண்டு களைவதுடன் சரியானவற்றை மேலும் காலகட்டத் தேவைக்கேற்ப மெருகூட்டி வளர்த்தெடுக்க வேண்டியது அவசியம் என அழுத்துகின்றார். மானிடவியல், சமூகவியல் சார்ந்த ஆய்வுகள் இவற்றை வெளிக்கொணரும்.
தமிழரின் இயல்புகளை மாற்றார் கண்கொண்டு பார்ப்பதற்காக தமிழர் பற்றி கலாநிதி என்.எம்.பெரேரா தனிப்பட்ட உரையாடல் ஒன்றின்போது கூறியதாகக் கூறப்படும் ஒரு கருத்து மிகவும் சுவாரஸ்யமானதாகும் என்னும் ஆசிரியர் ,சமசமாஜக் கட்சியைச்க சேர்ந்த என்.எம்.பெரேரா கொல்வின் ஆர்.டி.சில்வா பேணாட்சொய்சா போன்ற தலைவர்கள் வடக்கிற்கு வருகை தரும்போது பெருங் கூட்டங்கள் கூடுவதும் பெரும் வரவேற்பளிப்பதும் வழக்கம்.
இப்படி ஒவ்வொரு முறையும் பெருங்கூட்டங்களையும் வரவேற்புபசாரங்களையும் கண்டு என்.எம்.பெரேரா நினைத்தாராம் வடக்கில் தமது வேட்பாளர் அம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் வெல்லுவார் என்று. அவ்வாறு பலமுறை பார்த்ததில் ஒருமுறைதானும் ஒரு வேட்பாளராயினும் வெற்றிபெற்றதில்லை.
இந் நிலையில் சலிப்படைந்துபோன என்.எம்.பேரரா தமிழரைப்பற்றி பின்வருமாறு கூறினாராம். அதாவது தம்மைக் கண்டு கூட்டம் கூடுவார்கள். தம்மை வரவேற்பார்கள், உபசரிப்பார்கள்,மாலைபோடுவார்கள், நன்றாகவே கையும் தட்டுவார்கள் ஆனால் புள்ளடியை மட்டும் ரகசியமாகச் சமஷ்டிக் கட்சிக்குப் போட்டுவிடுவார்கள் என்றுகூறிச் சிரித்தாராம்.
அடக்குமுறைகள், மோசடிகள், மிரட்டல்கள் என்பவற்றின் மத்தியில் அண்மையில் அரங்கேற்றப்பட்ட யாழப்பாண, மற்றும் வவனியா மாநகரசபைத் தேர்தல்களும் இந்த மனப்பாங்கிற்கு கட்டியம் கூறுகின்றன.
நூலாசிரியரின் இன்னொரு அவதானிப்பையும் தமிழர் மனங்கொள்ளல் வேண்டும். அதாவது சராம்சத்தில் தமிழீழத்தேசியம் ஒடுக்குமுறையால் கூர்மை பெற்றது என்பதாகும்.
இதனால் எதிர்நிலை தேசியத் தன்மையைத்தான் அதிகம் கொண்டுள்ளது. தன்னிலைத் தேசியத்தன்மை ஒப்பீட்டு ரீதியில் போதிய அளவில் அமையவில்லை. வட தமிழீழம், தென் தமிழீழம் (யாழப்பாணம் மட்டக்களப்பு) என்பவற்றிற்கிடையேயான பிரதேச ஒருமைப்பாட்டை ஏற்படுத்தவல்ல வீதி, புகையிரத வீதி மற்றும் உட்கட்டுமானத் தொடர்புகள் இல்லை. இத்துடன் கூடவே சமூக கலாசார பரிவர்த்தனைகளும் போதியளவு வளரவில்லை. பொதுப் பொருளாதார பரிவர்த்தனைகள் எதுவும் இல்லை. இதற்கப்பால் தமிழ் மக்கள் மத்தியில் சாதி சமூக வேறுபாடுகள் உள்ளதையும் சுட்டிக்காட்டுகிறார்.
சுதந்திர இலங்லையில் தமிழ் மக்கள் பல காலகட்டத் தலைமைகளைக் கண்டுள்ளனர் எனக்கூறி அந்தக் காலங்களை பொன்னம்பலம் காலம் (விண்ணப்பகாலம்கக அல்லது விவாத அரங்குக்காலம்) செல்வநாயகம் காலம், (சிறிதளவு நேரடிப்போராட்டம், சாத்வீகப்போராட்ட காலம் )அமிர்தலிங்கம் காலம்,( சாத்வீகத்திற்கும் ஆயுதப்போராட்டத்திற்கும் இடையிலான இடைமாறுகாலம்) இதில் திரு அமிர்தலிங்கம் தன்னைச் சாத்வீகத் தலைவன் என்று கூறிக்கொண்டு ஆயுதப்போராட்டத்தை தனக்கு நிழலாகக் காவிக்கொண்ட ஓர் இரு நிலைக்காலம். பிரபாகரன் காலம் (ஆயுதப்போராட்டகாலம்) என வகைப்படுத்தி
ஒழுங்குமுறைக்கான இராணுவ நடவடிக்கைகளை விடவும் சமாதானத்திற்கான போராட்டம் மிகவும் கடினமானது. இலங்கை வரலாற்றில் அரசின் இராணுவ வழிமுறை என்பது ஒரு நடவடிக்கைதான். ஆனால் சமாதான வழிமுறை என்பது ஒரு பெரும் போராட்டமாகும். சமாதானத்திற்கான முக்கிய சிங்களக் கட்சிகள் தெருவில் இறங்காமல் மிகப் பெருமளவில் சிங்கள, ஆங்கில ஊடகங்களைச் சமாதானத்திற்காக முடக்கிவிடாமல் சமாதானமென்பது சாத்தியப்படல் அரிது. உரிமைப் போராட்டங்களை அங்கீகரிப்பதிலிருந்தே சமாதானம் உதயமாக முடியும் என அடித்துக் கூறும் இந்தக்குரல் உள் இருந்து ஒலித்த ஒரு குரல் என்பது ஒரு பலமாகும்.
நூலின் மேலுறை 1983 இனப்படுகொலைக் காட்சிகளில் ஒன்றான நிர்வாணப்படுத்தப்பட்ட தமிழனை அடித்து வேடிக்கைபார்க்கும் காட்சியைக் கொண்டிருக்க, நூலின் பின்னுறையில் பின்வரும் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
- " உலகின் கண்களில் சமஷ்டித்தீர்வு ஒரு நியாயம். இந்தியாவின் கண்களில் சமஷ்டி அதன் நண்பன், ஈழம் அதன் எதிரி. அமெரிக்கக் கண்களில் சமஷ்டியும் அதன் எதிரியல்ல, ஈழமும் அதன் எதிரியல்ல. சிங்களக் கண்களில் சமஷ்டியும் அதன் எதிரி ஈழமும் அதன் எதிரி. தமிழ்க் கண்களில் சமஷ்டி இல்லையேல் ஈழம்,
தேசிய, சர்வதேசிய அரசியலை அவற்றின் அரசியற் பொறிமுறைக்கூடாக விளங்கிக்கொள்ளவேண்டுமே தவிர ஆட்சியாளரின் அறிக்கைகளுக்கும் தோற்றப்பாடுகளுக்கும் ஊடாகவல்ல. ஆதலால் பொறிமுறைபற்றிய ஆய்வும் அணுகுமுறையுமே இறுதியானது "
மு.திருநாவுக்கரசுவின் சமஷ்டியா தனிநாடா என்னும் அரசியல் வரலாற்று நூல் சமஷ்டியை, சுயநிர்ணயத்தை, தேசியத்தை கோட்பாடுகளுக்கும் பொறிமுறைகளுக்கும் ஊடாக ஆராய்கின்றது. தமிழில் இவை இடம் பெற்றுள்ளமை மிகவும் பயன்தரும்.
இன்று சிங்களத்தின் வெற்றிக் களிப்பும் அதன் எக்காளச் சிரிப்பும் , வதைமுகாங்களில் வதைக்கப்படும் எம் உடன்பிறப்புக்களும், முட்கம்பி வேலிகளைப் பற்றியவண்ணம் வெளி உலகைப் பார்த்து நிற்கும் அந்தச் சின்னம் சிறுசுகளும், அந்த சிறுசுகளின் கண்களில் தோய்ந்துகிடக்கும் ஆயிரம் கேள்விகளும் தமிழ்த்தேசியத்தை ஒரு ஆறாக்கியுள்ளது. ஆறுகள் பின்நோக்கிப் பாய்வதில்லை.
ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா
தமிழ் நேசன் இணையம்
Comments