சீமான்-முள்வேலிக்குள் மூன்று லட்சம் தமிழர் படும் துயரம் பற்றிப் பேசும்போது கூடியிருப்போரைக் கலங்கி அழ வைக்கிறார். ‘பிரபாகரன் விரைவில் வருவார்!’ என்று அடித்துச் சொல்லி மிரளவைக்கிறார். என்ன பேசினாலும், எது கேட்டாலும் படபட பட்டாசு பொறிதான். மதுரை, தூத்துக்குடியில் முழங்கிவிட்டு திருப்பூர் ஆரவாரத்துக்குத் தயாராகிக்கொண்டு இருக்கிறார். சீமானின் ‘நாம் தமிழர் இயக்கம்’ அடுத்த மே மாதம் மாநில மாநாட்டை அரங்கேற்றுவதற்கான முனைப்பில் இருக்கிறது.
ஈழத்தின் இன்றைய நிலவரங்கள் அறிய சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சீமானைச் சந்தித்தேன்.
”கொடூரமாகப் பல கொலைகள் நடந்திருப்பதற்கான புகைப்பட, சலனப்பட ஆதாரங்கள் இப்போது வெளியில் வந்துகொண்டு இருக்கின்றன. இது குறித்து இந்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்கிறாரே முதல்வர்?”
”தமிழ் இளைஞனை கண்ணைக் கட்டி, நிர்வாணப் படுத்தி சுட்டுக் கொன்ற கொடூரத்தை இந்திய அரசாங்கம் இதுவரை கண்டிக்கவில்லை. ஏன் என்பதற்கான உண்மையான அர்த்தம் அவர்களுக்குத்தான் தெரியும்.” ”தமிழர்கள் தங்களுக்கு வேண்டிய உரிமைகளை வாங்கிக் கொள்ளலாம், தனி நாடு கேட்பதால்தான் இலங்கை அரசு பயப்படுகிறது என்கிறார்களே?”
”இதெல்லாம் வரலாறு அறியாத அம்மண்ணின் துயர் புரியாதவர்களின் பேச்சு. தமிழீழ மக்களுக்கு அந்தத் தேசத்தில் பங்கு பாத்தியதை இருக்கிறதுதானே? அப்படியென்றால், அம்மக்கள் கொடுமைப்பட்டது ஏன்? சிங்களவன் வைத்திருக்கும் துப்பாக்கி தமிழனை மட்டும் சுட்டது ஏன்? அவன் பேசிய தமிழ் மட்டும் புறக்கணிக்கப்பட்டது ஏன்? தமிழ்ப் பெண்ணை விரட்டி விரட்டிச் சூறையாடியது ஏன்? எல்லாம் இனவாத நோக்கம்தான். இந்த வெறுப்பும் வக்கிரமும் ஆரம்பம்தொட்டே இருந்ததால்தான் தமிழனால் அவர்களுடன் ஐக்கியமாகி வாழ முடியவில்லை. தனி நாடு கேட்டான்.
தமிழனாக இருந்துகொண்டு இதைச் சொல்லவே எனக்கு நாக்கு கூசுகிறது. ஆனாலும், அதுதான் உண்மை. தற்காலத் தமிழன் இனத்தைவிட பணத்தை மதிப்பவன். அதைக் கொடுத்து வாக்குகள் வாங்கிவிடலாம் என்பதால்தான், இந்தத் துரோகம் நடந்தது. ஆனால், கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல சங்கதியாக இன்றைய இளந் தலைமுறை அதைப் புரிந்துவைத்திருக்கிறது. அதை ஆக்க சக்தியாக மாற்றும் வேலையைக் கட்டளையாகப்
பணித்துதான் தலைவர் பிரபாகரன் என்னை அனுப்பியிருக்கிறார்!”
”பிரபாகரனை நீங்கள் சந்தித்தீர்கள் என்று முன்பு செய்தி உலவியது… அதுபற்றி நீங்கள் இப்போதாவது பேசலாமே…”
”இந்திய ராணுவ உதவியுடன் சிங்களவன் தொடுத்த தந்திரப் போர் உக்கிரமடைவதற்குச் சில நாட்களுக்கு முன் தலைவர் பிரபாகரனை நான் சந்தித்தேன். முழுக்க முழுக்க நள்ளிரவுப் பயணமாகவே இருந்தது அது. நானும் நடேசன் அண்ணாவும் பின்னால் உட்கார்ந்திருக்க… ஜீப் எங்களை
அழைத்துச் சென்றது. திடீரென்று நின்ற வண்டியில்இருந்து அதுவரை ஓட்டி வந்தவர் இறங்கிக்கொண்டார்.. தொடர்ந்து நடேசன் ஓட்ட ஆரம்பித்தார். சில கிலோ மீட்டர்கள் போனதும் ஜீப்பின் விளக்கு கள் அணைக்கப்பட்டன. இருட்டுக்குள் ஜீப் தனக்கு மட்டுமே தெரிந்த திசையில் பயணமானது. ஒரு மணி நேரம் கழித்து நான் இறங்கிய இடம் சாதாரண குடிசை. உள்ளே தலைவர் இருக்கிறார் என்று ஆசையுடன் போனேன்.
இல்லை அவர்!
அரை மணி நேரத்தில் பயங்கர சத்தத்துடன் ஒரு வாகனம் வந்தது. ‘புலி உறுமிக்கொண்டு வருகிறது!’ என்றார் நடேசன் சிரித்தபடி.. நான் தங்கியிருந்த குடிசைக்குப் பின்னால் அழைத்துப் போனார்கள். அங்கு இன்னொரு குடிசை இருந்தது. வாசலில் நின்றிருந்தார் என் தலைவர் பிரபாகரன். பார்த்ததும் உருகிப் போனேன். பாய்ந்து சென்று கட்டி அணைத்தேன். வணக்கம் வைத்து, சின்னச் சிரிப்புடன் என்னை
அழைத்துச் சென்றார்.
உள்ளே பொட்டு அம்மான், தமிழேந்தி இருவரும் இருந்தார்கள். வெகுநேரம் வரையில் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவரேதான் நாத்திகம், கடவுள் நம்பிக்கை குறித்துப் பேச ஆரம்பித்தார். ஏன் இதையெல்லாம் என்னிடம் சொல்கிறார் என்று முதலில் புரியவில்லை. அப்புறமாகத்தான் எனக்கு மூளையில் உறைத்தது.
பிரபாகரனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாக,
சுமார் ஒரு வார காலம் அங்குள்ள போராளிகள் மத்தியில் நான் பேசிக்கொண்டு இருந்தேன். அங்கு காசிக் கயிறு கட்டியிருந்தாள் ஒரு பெண் போராளி. ‘நொடியில் சாகும் சயனைடைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, ஆயுளைக் காப்பாற்றும் என்று இந்த காசிக் கயிற்றை எந்த நம்பிக்கையுடன் கட்டியிருக்கிறாய் தங்கச்சி?’ என்று நான் கேட்டது அப்படியே பிரபாகரன் காதுக்குப் போயிருக்கிறது. அதனால்தான் கடவுள் நம்பிக்கை குறித்த தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.
‘சின்ன வயசுல இருந்தே எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஏன்னு தெரியலை. தமிழர்களுக்குத் துரோகம் செய்த துரையப்பாவைச் சுட, முதன்முதலா ஆயுதம் தூக்கிப் போனப்ப அவர் கிருஷ்ணன் கோயில்ல சாமி கும்பிட்டுட்டு இருந்தாரு. குறிபார்க்கும்போது கிருஷ்ணர் முகம்தான் தெரிஞ்சது. ‘அநியாயத்தை அழிக்க யுகம்தோறும் அவதாரமா வருவேன்’ அப்படின்னு நீதானே சொன்னே என்று நினைத்துக்கொண்டே சுட்டேன். துரையப்பா செத்துட்டாருன்னு பிறகு தகவல் வந்து சேர்ந்தபோது, ‘கிருஷ்ணர் என் பக்கம்’னு நினைத்தேன்.
எங்க போராட்டத்துக்கு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அப்போது பணம் கொடுத்தார். அதை எப்படியாவது பாதுகாப்பா இங்க கொண்டு வரணும்னு கவலைப்பட்டபோது, எனக்குத் திரும்பவும் கடவுள் நினைவு வந்துச்சு. பழநிக்குப் போய் முருகனுக்கு நேர்ந்து மொட்டை போட்டேன். கிட்டு இறந்ததற்குப் பிறகுதான் எந்தக் கணத்திலும் கடவுள் எண்ணம் தோன்றாத முழு நாத்திகனா மாறிட்டேன்’ என்றார்.
தமிழோடு பல வார்த்தைகளை ஆங்கிலத்தில் இருந்தே எடுத்துப் பயன்படுத்துவது குறித்து நான் போராளிகளிடம் சற்றே கேலியாகப் பேசியிருந்தேன். அதைப் பற்றியும் அடுத்து விளக்கினார் பிரபாகரன். ‘தமிங்கிலீஷ்ல பேசுவதாகச் சொன்னீங்களாமே. அது உங்க நாட்டுல இருந்து இங்க இறக்குமதி ஆனதுதான். ரொம்ப நாள் வரை அப்படி இங்கே இல்லை. சமாதான காலத்துல உங்க நாட்டு டி.வி-யை இங்கே திறந்துவிட்டதன் விளைவு அது. தமிழீழம் மலரும்போது தமிழ் தமிழாக மட்டுமே இருக்கும்!’ என்றார்.
அடுத்து பேச்சு, திரைப்படங்கள் குறித்துத் திரும்பியது. அடுத்து ‘கோபம்’னு ஒரு படம் செய்யப் போவதாகச் சொன்னேன். ‘அது சம்ஸ்கிருத வார்த்தை. சினம் அல்லது சீற்றம்னு பேர் வைங்களேன்’ என்றார் தமிழேந்தி. உடனே தலைவர், ‘ ‘கோபம்’னு சொல்ற வார்த்தைக்கு இருக்கிற உணர்ச்சி அதுல இல்லை. அதனால ‘கோபம்’னே இருக்கட்டும்!’ என்றார். மேலும், ‘தம்பி’ மாதிரியான படங்கள் தொடர்ந்து பண்ணுங்கள், ‘வாழ்த்துகள்’ மாதிரி தேவையில்லை என்பது அவரது எண்ணம். ‘பூக்கள், பறவைகள் என்று மென்மையான விஷயங்கள் எதற்கு நமக்கு? படத்துலயும் அடிக்கணும்… நிஜத்துலயும் அடிக்கணும். அதுதான் அடிமை விலங்கை உடைக்கும்’ என்றார். தமிழ் சினிமாவில் ஒவ்வொருவரைப் பற்றியும் விசாரித்தார். நம்ம போராட்டத்தை முழுமையாகப் புரிஞ்சுக்கிட்டு ஆதரிக்கிற நடிகர் சத்யராஜ்னு சொன்னேன்.
சந்தோஷப்பட்டார். விஜய் பற்றிப் பேசிட்டு இருந்தப்ப, ‘யாழ்ப்பாணத்துக்காரரின் பெண்ணைத்தானே அவர் திருமணம் செய்திருக்கிறார்’ என்று நினைவுபடுத்திக்கொண்டார். ‘பாலாவும் சேரனும் நம்ம போராட்டத்தின் நியாயத்தை ஆதரிப்பவர்கள்தானே’ என்று என்னிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார்.. அமீர் பற்றி அதிகம் விசாரித்தார். அவருக்கு ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ மாதிரி ஈழப்போராட்டத்தை ஒரு படமாகச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. எத்தனையோ பரிசோதனை முயற்சிகள் செய்து பார்த்தும், முடியாமல் போனதைச் சொல்லி வருத்தப்பட்டார்.
‘பாலுமகேந்திராவை மட்டும் இங்கே கொண்டுவந்து சேர்த்திருங்க. அவரை நான் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன்’னு மெய்சிலிர்த்தார். திடீர்னு என்னை நினைத்தாரோ, ‘சிவாஜிக்குப் பிறகு வடிவேலுவைக் கொண்டாடுறீங்க.. எனக்கும் வடிவேலுதான் தமிழ்க் கலாசாரத்தின் உண்மையான கலைஞன் மாதிரி இருக்கு. நடக்கட்டும்… நடக்கட்டும்!’ என்றார்.
சிங்கள அரசுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது பற்றி அடுத்து பேசினார். ‘வன் முறைக்கு அதை விஞ்சும் வன்முறைதான் பதிலாக இருக்க முடியும். சுமாரான வன்முறையை வைத்து வெற்றி பெற முடியாது. வலிமை உள்ளவன் வெல்வான். எனக்குப் பிறகும் இந்தப் போராட்டம் நடக்கும். என்னுடைய கவலை இளைய தலைமுறை இந்தப் போராட்டத்தின் நியாயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அதைப்புரியவைக்க நீங்கள் உங்களது பேச்சைப் பயன்படுத்த வேண்டும்’ என்றார். ‘பேசிப் பேசித்தான் காலங்கள் கரைந்து விட்டன. இனிமேல் பேசுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை’ என்றேன். ‘இல்லை தம்பி, பேச்சும் ஒரு படையணிதான். என் துப்பாக்கியில் இருந்து வெடிக்கும் வார்த்தைக்கும் உன் வார்த்தைக்கும் ஒரே அளவு வலிமை உண்டு. அதே போல் சினிமாவும் ஒரு படையணிதான். தமிழனுக்குத் தலைவனாகவருபவன் சாகத் துணிந்தவனாக இருக்கணும்.
சாகப் பயந்தவன் தரித்திரம். சாகத் துணிந்தவன் சரித்திரம். இந்தா இருக்காரே…’ என்று ஒருவரைச் சுட்டிக் காட்டினார் பிரபாகரன். ‘இவர்தான் கடாபி. என் பாதுகாவலர். சாதாரணத் துப்பாக்கியை வைத்துக்கொண்டு இரண்டு விமானங்களைச் சுட்டு வீழ்த்தியவர். உங்கள் நாட்டில் இப்படியருத்தர் இருந்தால், அனைத்து உச்ச விருதும் கொடுத்திருப்பீர்கள்.
எல்லாவற்றுக்கும் பயிற்சிதான் காரணம். கடுமையான பயிற்சி… எளிதான சண்டை! இது தான் இங்குள்ள தத்துவம்’ என்றார்.
அவரது உடம்பு கனமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. அதைக் கேட்டேன். ‘குண்டாக இருக்கிறேனே தவிர, எனக்கு எந்த நோயும் இல்லை!’ என்றார். நன்றாகச் சாப்பிடுகிறார். ‘இங்கு நடக்கும் சமையலுக்கும் நான் தான் டைரக்ஷன்’ என்றார். ராணுவம் சம்பந்தமாக ஆயிரக்கணக்கான ஆங்கிலப் புத்தகங்கள் இருந்தன. முக்கியமானவை அனைத்தையும் தமிழில் மொழிபெயர்த்து வைத்திருந்தார்..
எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசும்போது எல்லாம் அவரது முகம் மலர்கிறது. அவர் அமைப்புக்குச் செய்த உதவி பற்றி எல்லாம் சிலாகித்துச் சொன்னார். அமைதிப்படையுடன் விடுதலைப் புலிகள் சண்டை போட்டுக்கொண்டு இருந்த காலத்தில், திடீரென்று ஒருநாள் கிட்டுவை அழைத்த எம்.ஜி.ஆர், ஒரு பெட்டியில் 36 லட்சம் ரூபாய் பணத்தை வைத்துக் கொடுத்தாராம். ‘உங்களது நாட்டை எதிர்த்துப் போரிடும்போது எம்.ஜி.ஆர்.. கொடுத்தார். ‘அது தேசத் துரோகமா?’ என்றெல்லாம் அவர் யோசிக்கவில்லை. எங்களது நோக்கத்தை மட்டும்தான் பார்த்தார்!’ என்று வார்த்தைகளில் அத்தனை நன்றி தொனிக்கப் பேசிக்கொண்டே இருந்தார்.
அவரைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு, என்னுடன் இருந்த சேரலாதனிடம் அதைப் பற்றிப் பெருமை பேசிக்கொண்டு இருந்தேன். அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை. ‘ஏன்?’ என்று கேட்டேன்.
அது உங்களுக்கும் தலைவருக்குமான தனிப்பட்ட சந்திப்பு. அது பற்றி எனக்குச் சொல்ல வேண்டியதில்லை என்றவர்,
‘இங்கு தலைவர் மட்டுமே நம்பிக்கைக்கு உரியவர். மற்றவரில் யாரும் துரோகியாகலாம். நான் உட்பட!’என்று கூறி நிறுத்தினார். என் இதயம் அதிர்ந்து அடங்கியது.
மயூரி என்ற காயம்பட்ட பெண் போராளிகளின் காப்பகத்துக்குச் சென்றேன். ‘கண்டேன் பிரபாகரனை’ என்று அங்கிருந்த தங்கை யிடம் சொன்னேன். ‘யாருக்கும் கிடைக்காத பாக்கியம் அது. நீங்கள் இந்த இனத்துக்கு உண்மை யாக இருங்கள்’ என்றாள் அவள்.
உண்மையாக இருக்கவே போராடி வருகிறேன்.” ”இனியும் காண்பீர்களா பிரபாகரனை?” ”ஆம்.. காண்பேன்! 20 முறை அவரைக் கொலை செய்திருக்கிறார்கள். அவர் மீண்டு வந்திருக்கிறார். அமைதிப்படை கொன்றதாகச் சொன்னார்கள்.. வந்தார். சுனாமியில் அடித்துப் போய்விட்டார் என்றார்கள். மீண்டும் வந்தார். கால் கருகிப்போய், ஒரு காலை எடுத்துவிட்டதாகச் சொன்னார்கள். அதுவும் பொய். அவரது கால் நன்றாகத்தான் இருந்தது. இப்போதும் அவர்களது ஆசைப்படி இறந்திருக்கிறார். பார்க்கலாம். அவரது வருகைக்காக நாங்கள் வழக்கம் போல் காத்திருக்கிறோம்!”
நம்பிக்கையும் உறுதியுமான வார்த்தைகள்!
நன்றி: ஆனந்தவிகடன்
Comments
we will beat ettappans like karunanidhi,sonia gang!