புலம்பெயர் தமிழர்களது பலம் யாராலும் சிதைக்க முடியாதது!


புலம்பெயர் தமிழர்களது பலம் யாராலும் சிதைக்க முடியாதது. எங்கள் மக்களுக்காகவும், எங்கள் மண்ணுக்காகவும் நாங்கள் கொண்ட போர்க்கோலம் தமிழீழம் மலரும்வரை தொடரும். இவ்வாறு பரிஸிலிருந்து வெளிவரும் இன்றய ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமாகியுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படவேண்டும்! தமிழீழ விடுதலைப் போராட்டம் முற்றாகத் தோற்கடிக்கப்படவேண்டும்! என்ற சிங்கள தேசத்தின் ஆசையும், இந்திய தேசத்தின் இலட்சியமும் புலம்பெயர் தேசத்துத் தமிழர்களை நோக்கித் திசை திருப்பப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின்னர் இலங்கைத் தீவினுள் வாழும் தமிழர்கள் அனைவரும் மெளனமாக்கப்பட்டுள்ளனர். மூச்சு விடுவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் வதை முகாம்களுக்குள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் பெற்ற இராணுவ வெற்றியை நிலையானதாக மாற்றும் சிங்கள விருப்பங்களுக்கு புலம்பெயர் தேசத்துத் தமிழர்கள் இடைஞ்சலாக உள்ளனர்.

என்ன விலை கொடுத்தாவது விடுதலைப் புலிகளை அழித்தே தீருவோம் என்ற இலங்கையின் யுத்த பேரிகையும், அதன் பின்னரான வெற்றி முழக்கங்களும் புலம்பெயர் தமிழர்களால் முறியடிக்கப்பட்டு விடும் என்ற அச்சம் காரணமாக சிங்கள தேசம் அதற்கும் எந்த விலையையும் கொடுப்பதற்குத் தயாராகவே உள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான இந்திய வெளிவிவகாரக் கொள்கை வகுப்பு தோல்வியைத் தழுவிய நிலையில், இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தான் எதிரி நாடாகவே உள்ளது.

இந்தியாவால் உருவாக்கப்பட்ட வங்காள தேசமும் இந்தியாவுடன் இணக்கமாக இல்லை. பூட்டானும் இந்தியாவின் கையைவிட்டு நழுவிச் சென்றுவிட்டது. இந்தியாவின் கைக்குள் அடங்கி நின்ற நேபாளமும் சீனாவின் பக்கம் முற்றாகச் சாய்ந்துவிடும் நிலையில் உள்ளது.

இப்படி இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் எல்லாம் எதிரிகளாகியுள்ள நிலையில், எஞ்சியுள்ள இலங்கைத் தீவிலும் சீனா நிலைகொண்டு விடுமோ என்ற அச்சம் காரணமாக சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பு உட்பட, அத்தனை ஆசைகளுக்கும் இந்தியா வாரி வழங்கவேண்டிய நிலையிலேயே உள்ளது.

தெற்காசிய பிராந்தியத்திலேயே இந்தியாவுக்கு இருந்த ஒரே ஆதரவு சக்தியான ஈழத் தமிழர்கள் இப்போது தமது இந்திய ஆதரவு நிலையை மீள்பரிசோதனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தினுள் தள்ளப்பட்டுள்ள நிலையில், இந்தியா ஈழத் தமிழர்களது மனோபலத்தைச் சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதுவரை இந்தியாவின் கட்டுக்குள் சிக்க முடியாத நிலையில், தமிழீழ விடுதலைக்கான அரசியல் தளமாக இருந்து செயற்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது ஆசைக்கும் வாழ்தலுக்கும் பணிந்து போக ஆரம்பித்துள்ளது போலவே தெரிகின்றது.

ஏற்கனவே, ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு’ என்ற இந்திய புராணம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் காதுகளுக்குள் ஓதப்பட்டு, அதற்கான விலையும் இந்தியாவால் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.

முரண்டு பிடிக்கும் அரசியல்வாதிகளையும், ஊடகவியலாளர்களையும் முடித்துக் கட்டும் இலங்கை அரசை எதிர்த்து நிற்க முடியாத நிலையில் இந்தியாவின் கரத்தைப் பற்றியவாறு தமிழீழ மக்களை இந்திய விருப்பத்தினுள் கொண்டு செல்ல தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெரும் முயற்சி எடுத்து வருகின்றது.

இதே வேளையில், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் முன்னரிலும் பார்க்க மேலெழுந்துள்ள தமிழீழ விடுதலை உணர்வும், அதற்கான போராட்டங்களும் இந்தியக் கனவைச் சிதைப்பதாகவே உள்ளது.

புலம்பெயர் தமிழர்களது தொடர் போராட்டங்கள் காரணமாக, ஈழத் தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் மேற்குலகில் உருவாகி வருவது இந்தியாவை மகிழ்ச்சிக்குள்ளாக்காது.

இலங்கை விவகாரத்தில் இந்தியா கடைப்பிடிக்கும் அணுகுமுறை மேற்குலகத்திற்கு சலிப்பையே கொடுத்துள்ளது. தமது வர்த்தக நலன்களுக்கும் மேலாக ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஏதாவது செய்தேயாக வேண்டும் என்ற நிலைக்கு மேற்குலகு தள்ளப்பட்டிருக்கின்றது.

இலங்கைத் தீவில் தமிழர்களது வாழ்வுரிமைக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் பார்க்க, அங்கு தனது பிடி தளர்ந்துவிடக் கூடாது என்பதில் இந்தியா வெகு கவனமாகவே உள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் இந்தியாவை நம்பத் தயாராக இல்லாத நிலையில், அவர்களிடையே குழப்பங்களை உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்திய உளவுத் துறையால் தயார்படுத்தப்பட்ட சில பிரபலங்கள் இதற்காகக் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தீவிர தமிழீழப் போராளிகளாக உணரப்பட்டு, நம்மால் மதிப்பளிக்கப்பட்டு, உள்வாங்கப்பட்ட தமிழக அரசியல் பிரமுகர்களின் ஆவேச உரைகள் மே 18 ற்குப் பின்னர் தடம் மாறிச் செல்வதை உணரக் கூடியதாக உள்ளது.

விடுதலைப் புலிகளின் வீரதீரச் செயல்களைப் புகழ்ந்து, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை 21-ம் நூற்றாண்டின் இணையற்ற வீரத் தமிழன் என்று ஆவேசப் பேச்சுக்களால் அதிரவைத்த தமிழகத்துச் சொற்சிலம்பர்கள் தற்போது சுருதி மாறும் பேச்சுக்களால் புலம்பெயர் தமிழர்களின் மனவுரணைச் சிதைக்க முயல்வதைக் காண முடிகின்றது. ‘

விடுதலைப் புலிகள் தவறு செய்துவிட்டார்கள்… இந்தியாவை அனுசரித்துப் போகாமல் எந்தத் தீர்வையும் கண்டுவிட முடியாது… பிரிக்கப்படாத இலங்கைக்குள் அரசியல் தீர்வு…’ என்றெல்லாம் இந்திய புராணத்தை புலம்பெயர் தேசங்களிலும் விலைப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

புலம்பெயர் தேசங்களில் சிதைவடையாத நிலையில் உள்ள தமிழீழ மக்களின் பலம் குறித்தே இப்போது இலங்கையும் இந்தியாவும் அதிகம் அலட்டிக் கொள்கின்றனர். இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம். கே. நாராயணன் முதல் இலங்கைப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க வரை புலம்பெயர் தமிழீழ மக்களது எழுச்சி குறித்தே அச்சப்படுகின்றனர்.

இந்தியாவின் முழுமையான வழங்கல், ஆதரவுடன் சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு நடவடிக்கை புலம் பெயர் தமிழர்களை வேறு வழிகளில் சிந்திக்கத் தூண்டியுள்ளது. பின் தொடர்ந்துவரும் இந்தியத் துரோகங்களிலிருந்து விடுபடுவதற்கான மாற்று வழிகளைத் தேட ஆரம்பித்துள்ளனர்.

மேற்குலகின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பிவரும் புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டங்கள் அவர்களது மேற்குலக ஆதரவுத் தளத்தை விரிவாக்கம் செய்து வருகின்றது. இது இந்தியாவுக்கு மகிழ்ச்சியைத் தரப் போவதில்லை.

இலங்கையில் தன்னை மீறிய மேற்குலகின் தலையீடுகளுக்கு இனியும் குறுக்கே நிற்கவே இந்தியா முயற்சி செய்யும். அது சாத்தியப்படாத வகையில் புலம்பெயர் தமிழர்களையும் பிளவு படுத்துவதற்கும், அவர்களது பலத்தைச் சிதைப்பதற்கும் இந்தியா பெரும் முயற்சி எடுத்து வருகின்றது. அதற்காகத் தயார்படுத்தப்பட்டவர்களே இதற்காகக் களம் இறக்கப்பட்டுள்ளார்கள்.

‘துரோகிகள் எப்போதும் எம்மை விடவும் தீவிரவாதிகளாகவே உள் நுழைவார்கள்’ என்பது தேல்வியின் பின்னர் நாங்கள் கற்ற பாடம் என்பதை இவர்கள் வெகு சீக்கிரமாக மறந்துவிட்டார்கள்.

புலம்பெயர் தேசங்களில் இவர்களது சுருதி மாற்றம் எடுபடாது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 30 வருடங்களுக்கும் மேலான ஆயுதப் போராட்டம் எங்களுக்கு நிறையவே கற்றுத் தந்துள்ளது.

நாங்கள் ‘இழப்புக்களிலிருந்து எப்படி மீண்டு வருவது, இறப்புக்களின் பின்னரும் எப்படி நிலைத்து வாழ்வது’ என்ற சூத்திரம் அறிந்தவர்கள்.

புலம்பெயர் தமிழர்களது பலம் யாராலும் சிதைக்க முடியாதது. எங்கள் மக்களுக்காகவும், எங்கள் மண்ணுக்காகவும் நாங்கள் கொண்ட போர்க்கோலம் தமிழீழம் மலரும்வரை தொடரும்.

Comments