சென்ற பகுதியில் ஈழத் தமிழ் இனத்தின் இன்றைய நிலையும் தமிழின இனவெறி அரசுகளின் அடங்காத கொலைவெறி பற்றியும் கவனத்தில் எடுத்தோம். இந்தப் பகுதியில் தமிழினத்தின் செயலற்ற அசமந்த நிலையும் அதன் பிரதிபலிப்புக்களையும் பார்க்க உள்ளோம்.
சிங்கள இன மேலாதிக்க அரசுகள் இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சனைகள் இருப்பதாக எந்த ஒருகால கட்டத்திலும் ஏற்றுக்கொண்டது கிடையாது.
டீ.எஸ் முதலாக மகிந்த வரை எல்லா சிங்களத் தலைவர்களின் எழுதப்படாத கொள்கையாக இதுவாகவே இருந்து வருகிறது. ஒரு சில தலைவர்கள் தமிழர் தரப்புப் பலம் மேலோங்கிய காலங்களில் மட்டுமே ஒப்புக்கு அப்படி ஒரு பிரச்சினை இருப்பதாக ஏற்று வந்துள்ளனர்.
அதன் அடிப்படையில் பண்டாவும் டட்லியும், பிரேமதாசாவும், சந்திரிகாவும், ரணிலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிர்ப்பந்தங்களின் நிமித்தம் செய்யப்பட்ட ஒப்பந்தங்களையே வரலாறு கண்டுள்ளது.
சிங்களம் செய்த ஒப்பந்தங்கள் எல்லாம் காரியம் ஆகும் வரைதான் என்பதைத் தமிழரும் குறிப்பாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனும் நன்கு தெரிந்து வைத்திருந்தனர்.
இத்தகைய வரலாற்றுப் பட்டறிவு காரணமாகவே விடுதலைப் புலிகள் இயக்கம் பேச்சு வார்த்தைகளின் போது மிகக் கடுமையானதும், தமிழ் மக்களுக்கு நேர்மையானதுமான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வந்துள்ளனர்.
இது ஒரு நியாயமான நிலைப்பாடு என்பதைச் சிங்களமும் குறிப்பாக இந்தியா உள்ளிட்ட சர்வதேச அரசுகளும் அறியாது இருக்க நியாயம் இல்லை. இவர்களுக்கும் இப்படியான அனுபவங்கள் பாகிஸ்தானுடன் சீனாவுடன் மற்றும் சர்வதேசப் பேச்சுவார்த்தைகளின் போது ஏற்படவே செய்யும். அப்போதெல்லாம் அவர்களும் தமது கடும் போக்குகளை விட்டுக்கொடுப்பது கிடையாது.
நமது இனம் எமது கடும் போக்குக்கான நியாயப்பாடுகளைச் சர்வதேச அளவில் மிகக் குறைவாகவே எடுத்துச் செல்லும் வல்லமையைக் கொண்டவர்களாக இருந்து விட்டோம். எமது அரசியல் தலைவர்கள் தமது அறிவியலை ஆட்சியாளரை மகிழ்ச்சிப் படுத்துவதில் மட்டுமே செலவிடுவதைப் பெரும் பேறாகக் கொண்டிருந்தனர்.
1947 இல் ஜீ.ஜீ. 1965 இல் முருகேசு திருச்செல்வம், 1977 இல் அமிர்தலிங்கம் தமிழ் மக்களிடம் இருந்து தாம் பெற்ற ஏகோபித்த ஆணையை ஆட்சியாளரின் அடிவருடிச் சேவகம் செய்யப் பயன்படுத்தினர். அதனால் தமிழர் தரப்பில் எவர் உரிமைக் குரலை எழுப்பினாலும் அது வாக்குச் சாவடியோடு நின்றுவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சிங்களத் தலைமையிடம் உருவாக்கப்பட்டுவிட்டது.
எனவேதான்
உரத்து உரிமைக்குரல் எழுப்பிய யோசப் பரராஜசிங்கம், ஊடகவியலாளர்கள் நிர்மலராஜன், தராகி சிவராம், அரசியல்வாதிகள் குமார் பொன்னம்பலம், ரவிராஜ், புலிகள் இயக்க முதன்மைப் பேச்சாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோரது கொலைகள் மூலம் தமிழினம் பேச்சற்றவர் ஆக்கப்பட்டுவிட்டது. இன்று கே.பி. இன்னும் யார் எவரோ எவராயினும், அவர்களின் குரலை நிறுத்துவதைச் சிங்களம் நிறுத்தப் போவது கிடையாது.அன்று படித்தவர்களாகிய கதிர்காமர், நீலன் திருச்செல்வம் போன்றோரின் செல்வாக்கைப் பணம் பதவி மூலம் தமிழருக்கு எதிராகப் பயன்படுத்திய சிங்களம் இன்று துப்பாக்கி, கப்பம் கடத்தல் கற்பழிப்பு கொலை என்பவற்றில் பலமை பெற்றவர்களையே ஐ.நா. போன்ற சர்வதேச அரங்குகளில் தமிழருக்கு எதிரான பரப்புரையைச் செய்யச் சிங்களம் பயன்படுத்தி வருகிறது.
இத்தகைய நிலையைத் தமக்கான நியாயப்பாடாகத் தமிழர் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் எடுத்துக்கொண்டு தமிழினத்தின் நிரந்தர ஒட்டுமொத்த அழிவுக்கு துணை போவது வெளிப்படையாகத் தெரிகிறது.
13 ஆவது திருத்தச் சட்டம் என இந்தியா பல்லவி பாடுவதும் அதுவே சகல நோய் நிவாரணி என்று எம்மவர் பக்கப் பாட்டுப் பாடுவதும் ஒருபுறம். 13 ஆவது திருத்தச் சட்டம் என்ற பருப்பே ஆகாது அது இங்கே அவியாது எனச் சிங்களத் தரப்பு எதிர்ப்பாட்டுப் பாடுவது மறுபுறம்.
இவற்றுக்கிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தர் உட்பட மகிந்தவின் அரவணைப்பில் ஏதாவது பெற்றுவிடலாம் என உலகத்தையே ஏமாற்றும் வேலையில் இறங்கி விட்டது தெளிவாகிறது. இந்தப் பேர முடிவில் எத்தனை பேர் மகிந்தவின் வலையிலிருந்து தப்புவர் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
ஸ்ரீகாந்தா, மாவை சேனாதிராசா, சிவநாதன் கிஷோர் என அவரவர் தெரிவிக்கும் கருத்துகள் தமிழர் தாயகக் கோட்பாட்டுக்கு விரோதமாகவே வந்து கொண்டிருக்கின்றன. இவர்கள் எல்லாம் எத்தனைதான் அறிக்கை மழை விட்டாலும் தமிழீழத்தில் தமிழரின் உரிமைக் குரல் ஊமைக் கனவாகவே இருக்கப் போகிறது என்பதையே கட்டியம் கூறுகின்றன.
எவரும் அங்கே தமிழ், தமிழன் என்று பேச முடியாது. வடக்கிலும் கூடத் தமிழ்க் கிராமங்கள் சிங்களப் பேரோடு விளங்கத் தலைப்பட்டு விட்டன. மொத்தத்தில் தமிழர் தாயகம் சிங்கள மயம் ஆக்கப் பட்டுவிட்டது. இதுவரை படையின் பாதுகாப்புக் காரணங்களுக்காக தமிழ் மக்கள் விரட்டப்பட்ட நிலை இனிச் சிங்களப் படையினரின் குடியிருப்புகளாக நிரந்தர நிலப்பறிப்பாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.
ஸ்ரீலங்காவின் போர்க் குற்றங்களையும் தமிழருக்கான நீதி விசாரணையும் பற்றி எதுவித அக்கறையும் காட்டாது சிங்களத்துக்கு சர்வதேச அளவில் பாதுகாவலனாக இருக்கிறது இந்தியா.
22 வருடங்களுக்கு முன்பே தமிழர் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றை அதுவும் சிங்களம் வழங்க முன்வராத நிலையில் தமிழர்களின் தலைவர்கள் எனக் கூறிக் கொள்வோர் முதலில் இந்தியாவின் ஆதரவுடன் பெற்று விடலாம் என்றனர்.
இலங்கைளின் மறுப்பின் காரணமாக இவர்கள் இப்போ மகிந்தவின் காலடியில் சரணடைந்து விட்டனர். உயிர் அச்சம் என்பது உண்மைதான். அப்படியானால் எதற்கு உரிமை பற்றிப் பேசுகிறீர்கள்? டக்ளசும் கருணாவும் பிள்ளையானும் போல் வெளி வெளியாகவே அரசியலை நடத்துங்கள். இனிமேலும் தமிழரின் உரிமைப் போர் பற்றிய பேச்சு எம்மிடம் எதற்கு?
தமிழினம் தொடர்ந்தும் நாடு கடந்த அரசின் மூலம் தனது உரிமைப் போரைத் தொடரும். புலம்பெயர் தமிழினம் நிச்சயம் தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுத்துப் வெற்றி காணும்.
தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது போன்றே புலத்தில் தமிழரை இதுவரை காலமும் வழிநடத்தி வந்த விடுதலை அமைப்புக்கும் பொறுப்பு உள்ளது. ஆனால் அந்தப் பொறுப்பை சிலர் உணர்ந்து செயற்படத் தவறியமை தமிழினத்துக்குச் செய்யப்பட்ட துரோகமாகவே வரலாறு பதிவு செய்யும்;.
ஓட்டுமொத்தத் தமிழினம் கொன்று அழிக்கப்பட்டும் கொடுஞ் சிறையில் பால், வயது வேறுபாடின்றி வதைபடும் நிலை கண்டும் எதுவித சூடு சொரணையும் இல்லாது தமிழ் மக்களை முடமாக்கி வைத்திருக்கும் மர்மம் என்ன? தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தாமே என உலக வீதிகளில் உரக்கக் குரல் எழுப்ப வைத்து இன்று அகில உலகமும் எமது மக்களின் அவலம் கண்டு கொதிக்கையிலே உங்களுக்கு நடந்தது என்ன?
சூரியத் தேவனென்று துதிபாடிய உங்கள் வாயால் ஒரு இரங்கல் செய்தி கூடவா கூற முடியாமற் போனது? தன்னையும் தனது வாழ்நாளையும், முழுக் குடும்பத்தையும் ஆகுதி ஆக்கியவனுக்கும் ஆயிரம் ஆயிரம் போராளிகளுக்கும் கலைஞர்கள், அறிவுஜீவிகள் மற்றும் சிறையில் செத்து மடியும் இலட்சக்கணக்கான எமது உறவுகளுக்கு நீங்கள் செய்யும் கைமாறு என்ன? இரவு, பகல் எமது வீட்டுப் படியேறி கெஞ்சிக் கூத்தாடி உருட்டி மிரட்டிப் பெற்ற பணத்துக்கு என்ன பெறுமதி? இதுவா மக்கள் விடுதலை இயக்கம்? இதுவா உங்கள் மனித நேயம்?
நிலத்திலும் புலத்திலும் காட்டிக்கொடுக்கும் உங்களைத் தமிழினம் எப்படி இனியும் தலைமை தாங்க அனுமதிக்க முடியும்? உங்கள் போன்ற தலைமைகளை நிறையவே கண்டுவிட்டோம். அவர்களை எமக்கு நினைவூட்டிய உங்களுக்கு நன்றி கூறி வரலாற்றை மீளப் பார்க்கிறோம்.
1905 ஆண்டில் உருவான யாழ்ப்பாண வாலிபர் சங்கம், ஈழத் தமிழரின் விடுதலைக் குரலை ஆங்கில அரசுக்கு எதிராக எழுப்பியது.
ஆங்கில ஆட்சியாளரின் பல தமிழர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து மிகக் கடுமையான கண்டனக் குரலை எழுப்பி அன்றைய யாழ் ஆங்கிலேய அரச அதிபர் துவைணம் அவர்களுக்கு எதிராக இலங்கையின் ஆளுநரிடம் முறையிட்டுத் தமிழ் மக்களின் சார்பாக உரிமைக்குரல் எழுப்பியவர் ஆறுமுகநாவலராவர்.
அதனை ஒட்டி உருவானதே யாழ்ப்பாண வாலிபர் சங்கம். ஈழத் தமிழினத்தின் முதல் விடுதலை அமைப்பாக உருவாகி வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசத்தின் சுதந்திரம் கோரிப் போராடியது.
ஹன்டி பேரின்பநாயகத்தின் தலைமையில் உருவான இயக்கம் மகாத்மா காந்தி, வல்லபாய் பட்டேல் உட்படப் பல இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களை யாழ்ப்பாணம் வரவழைத்து எம் இனத்தின் விடுதலைக் குரலை உலகறியச் செய்தனர்.
அப்போது சிங்களத் தலைமை ஆங்கிலேய மோகத்திலும் அடிமை வாழ்விலும் ஆனந்தம் கண்ட காலம். அன்றும் ஒரு தமிழரான அருணாச்சலம் யாழ்பாணம் ஓடிவந்து எமது விடுதலைக் குரலை சிங்களத்துக்கும் சேர்த்து முழு இலங்கையின் விடுதலைக்கும் எனப் பேரம் பேசித் திசை திருப்பினார். 1920-களில் பண்டாவும் ஜே.ஆரும் சமஷ்டி ஆட்சி பற்றிப் பேசியும் அவற்றைத் தமிழினம் மறுத்துத் தேர்தலைப் புறக்கணித்துத் தமது எதிர்ப்பை ஜனநாயக வழிமுறையில் வெளிப்படுத்தினர்.
அப்போது ஈழத் தமிழ் மக்களைப் புலிகள் தடுக்கவில்லை. ஈழத் தமிழினத்துக்கு சுயநிர்ணய உரிமையோ இறையாண்மையோ கிடையாது எனக் கூறும் அளவுக்கு எந்தக் கொம்பனும் பிறந்திருக்கவும் இல்லை.
இன்று எம் இனத்தையும் தேசத்தையும் அழித்து அட்டூழியம் செய்யும் ஸ்ரீலங்காவும் இந்தியாவும் அன்று அடிமைகளாய் ஆங்கிலேயரின் காலடியில் கிடந்தவர்களே.
தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்தார்கள் என்பதைச் சாட்டாகக் கொண்டு சட்ட சபையில் பிரதமராகத் தெரிவான டீ.எஸ்.சேனாநாயக்க சிங்கள மந்திரிகளை மட்டுமே கொண்ட அமைச்சரவை உருவாக்கி முதல் தனிச் சிங்கள இனவெறி அரசைத் தொடங்கி தமிழப் பிரதேசங்களில் சிங்களக் காடையரைக் அரச உதவியுடன் குடியமர்த்தி தமிழரைத் தமது புராதனக் கிராமங்களில் இருந்து வெளியேற்றி இனச் சுத்திகரிப்புக்கு முதல் வித்திட்டார்.
டீ.எஸ்ஸின் பிரத்தியேகச் செயலராக செயற்பட்ட தமிழரான க.வைத்தியநாதன் அதற்கு விலையாகச் சேர். கந்தையா வைத்தியநாதன் என்ற பெருமை தேடிக்கொண்டார்.
சேர் பட்டம் வாங்கித் தனக்கும் தமிழ் இனத்துக்கும் வரலாற்றில் நீங்காத சேறு பூசிய சேர்.பொன். இராமநாதன் வழியில் இணைந்து கொண்ட இரண்டாவது நபராக வைத்தியநாதன் சேர்ந்து கொண்டார்.
சட்ட சபையில் சட்ட நிபுணர்களாக விளங்கியவரும் எலிசபெத் மகாராணியாருக்குக் கணிதம் கற்பித்த பெருமை படைத்த அரச சட்டவாதி, வவுனியா பிரதிநிதி சீ.சுந்தரலிங்கம் தமிழர் தரப்புத் தலைவர்களில் ஒருவராக தமிழினத்தைக் காவு கொடுத்தார்.
தமிழரின் உரிமைக் குரலை 50-க்கு 50 என்ற கொட்டொலியோடு 1947 பொதுத் தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை நிறுவி செல்வநாயகம் வன்னியசிங்கம் உட்பட பெருவெற்றி கண்டு நாடாளுமன்றம் சென்றவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம்.
போன வேகத்தில் தான்தோன்றித் தனமாக நடந்து கொண்ட கொள்கையைத் துறந்து இனவெறியன் டீ.எஸ்ஸின் ஏவல் ஏற்று மந்திரிப் பதவிக்காக தமிழனின் மானத்தை விற்றார்.
மானமுள்ள தமிழ்ச் சாதி எனத் தானே அடிக்கடி மேடைகளில் பேசிக் கைதட்டல் வாங்கிய ஜீ.ஜீ. 50-க்கு 50 கேட்டுப் போனவர் 100-க்கு 100 கோட்டை விட்டு மலையகத் தமிழர் 9 இலட்சம் மக்களை நாடற்றவராக்கி நடுக்கடலில் விட்டதன் மூலம் தமிழினம் 10-க்கும் அதிகமான பிரதிநிதித்துவத்தை இழந்தது.
அன்று சௌமியமூர்த்தி தொண்டமானும் ஜீ.ஜீ.யும் தொடக்கிய பணி இன்று அவர்களின் பேரன்மார் ஆறுமுகன் தொண்டமான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காலத்தில் நிறைவு கண்டுள்ளதை வரலாறு காட்டிவிட்டது. அடுத்த தேர்தலில் இலங்கையில் தமிழினம் தனித்து எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாத நிலை அப்பட்டமாகத் தெரிகிறது.
இந்திய பாகிஸ்தானிய பதிவுச் சட்டம் அதனைத் தொடர்ந்து தனிச் நிங்கள மொழிச் சட்டம் இரண்டுமே பாரபட்சமான சட்டங்களாக இனப் பாகுபாடு காட்டுவனவாக மிக எளிதாக நீதிமன்றத்தில் சோல்பரி அரசமைப்பு விதி 29(2) உப விதியின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தி அவற்றைச் சட்டப் புத்தகத்தில் இடம் பெறாமல் செய்திருக்க முடியும். அதற்கான சட்ட வலுவும் ஆற்றல் நிறைந்த சட்டவாதிகளும் தமிழரின் தலைமையை ஏற்றிருந்தனர். ஏனோ தேர்தல் மேடைகளில் போர்க் கோலம் பூண்டு சன்னதம் ஆடிவிட்டுத் தமிழினத்தைச் சிங்களவனுக்கு விற்றுச் சோரம் போயினர்?
இனிமேலும் ஏமாற்றுத் தலைமைக்குத் தமிழினம் இடமளிக்க முடியாது. துவக்கு எடுத்தவன் எல்லாம் சேகுவேரா ஆகிவிட முடியாது. எமக்குள் ஒரு அரசியல அறிவு மிகுந்த சர்வதேச நடைமுறையில் பாண்டித்தியம் கொண்ட தலைமை உருவாக்க உழைப்போம். அந்தத் தலைமை ஜனநாயக நடைமுறைகளுக்கு ஏற்ப ஒளிவு மறைவற்ற செயற்பாட்டுடன் விளங்க வேண்டும். அது பற்றியதாக அடுத்த பகுதி அமையும்.
-த.எதிர்மனசிங்கம்-
Comments