நொந்து போன மக்களில் சிலரும் பாடசாலை குழந்தைகளும் இந்த கருத்தூட்டல்களுக்கு எடுபட்டாலும் பரவாயில்லை ஆனால் போராட்டம் பற்றியும் தேசியம் பற்றியும் பாடசாலைகளிலும், பல்கலைகழகங்களிலும் பேசிய தமிழ் புத்தி ஜீவிகள் சிலரும் இத்தகைய செயற்பாடுகளை ஊக்குவித்து வருகின்றமை வேதனைக்குரியது.
வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கு இப்போது தான் தருணம் வந்துள்ளது என்றும், சிங்கள மக்கள் தமிழர்களுடன் சேர்ந்து வாழ விரும்புகின்றார்கள் அவர்களின் நல்லெண்ண செய்திகளை தமிழர்களுக்கு சேர்ப்பதற்கு இப்போது தான் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது எனவும் பாசாங்கு செய்கின்றனர். இவ்வாறு அண்மையில் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் ஜெகான் பெரேரா பங்குபற்றி அவர் இதே கருத்தினை வலியுறுத்தினார். அதாவது தெற்கையும் வடக்கையும் இணைக்கும் செயற்பாட்டை செய்வதன் ஊடாக சமாதானத்தினை ஏற்படுத்த போவதாக கூறியுள்ளார்.
அவரிடம் நாம் கேட்கும் கேள்வி என்னவெனில் தெற்கையும் வடக்கையும் இணைப்பது என்றால் என்ன? என்பதே ஆகும்
இறுதி போரின் போது விடுதலைப்புலிகளின் இடங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பின்னர்
1 தமிழ் மக்களை இன்னமும் போர்க்குற்றவாளிகள் போன்று சிறையில் அடைத்து வைத்திருப்பதா உங்கள் இனத்தின் நல்லெண்ணம்.
2 உங்கள் இனவெறிப்படைகளின் ஆகிரமிப்புக்கு உள்ளான தமிழர் பிரதேசங்களின் அடையாள சின்னங்களை அழிப்பதா உங்கள் நல்லெண்ணம்.
3 நல்லெண்ணம் பேசும் உங்கள் பெற்றோர்களின் பிள்ளைகள் தானே தமிழர்மீது கொலை, பாலியல் வல்லுறவு,சித்திரவதை,கொள்ளை போன்றவற்றை இன்னமும் அரங்கேற்றி கொண்டிருக்கின்றார்கள்.
4 போர்தான் முடிந்து விட்டதே என்று கூறும் நீங்கள் ஏன் ஆகிரமிக்கப்பட்ட கிளி நகரத்தினை இன்னமும் இடித்து துவம்சம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். புனர்வாழ்வு கட்டிடம் , கந்தசாமி கோவில், சந்திரன் மழலைகள் பூங்கா,பரவி பான்சான் மக்கள் வீடுகள், கனிஸ்ட வித்தியாலயம், உட்பட அனைத்தும் உங்கள் எதிரிகளா? இவற்றை இடித்து அங்கு இறந்த படை வீரர்களுக்கு தூபி கட்டுவது தான் உங்கள் நல்லெண்ணமா?
5 தமிழர் அடையாளங்களாக இருந்த அனைத்தையும் இடித்து அங்கு பெளத்த கோவில்களை நிறுவி, அரச மரங்களை நாட்டுவதுதான் உங்கள் நல்லெண்ணமா?
6 முல்லைதீவு நகர், முள்ளி வாய்க்கால் வைத்தியசாலை, பாடசாலை அனைத்தையும் தரைமட்டமாக்கி , போரின்போது தமது உயிரை ஈய்ந்தவர்களுக்காக கட்டப்பட்ட நினைவு சின்னங்களையும், புதைகுழிகளையும் அழிப்பதா உங்கள் நல்லெண்ணம்?
7 பாதிக்கப்பட்ட இளம் தமிழ் பெண்களையும், இளஞ் சிறார்களையும் தத்தெடுத்தல், வேலைவாய்ப்பளித்தல் என்ற பேரில் அடிமைகளாக கொண்டு சென்று அவர்களை பாலியல் மற்றும் வீட்டு வேலைகள் வாங்குதல் ஊடாக நல்லிணக்கம் வருமா?
தமிழ் மக்களுடன் நல்லெண்ணத்துடன் வாழ விரும்பினால் திரு ஜெகான் அவர்களே முதலில் போதிக்கப்பட வேண்டியவர்கள் உங்கள் பெற்றோர்கள், உங்கள் படைகள் அதன் பின் முடிந்தால் உங்கள் அரசியல் தலைவர்களே ஒழிய நொந்து போயிருக்கும் தமிழர்கள் அல்ல.
தெற்கில் இருக்கும் உரிமைகளை வடக்கு மக்களும் அனுபவிக்க வேண்டும் என்று கூறுகின்றீர்கள். நல்ல விடயம் நாம் கேட்பது என்ன வென்றால் தெற்கால் பறிக்கப்பட்ட உரிமைகளை முதலில் தாருங்கள் அதன் பின்னர் அனுபவிப்பது பற்றி தமிழர்கள் முடிவு எடுக்கட்டும். நாம் ஒன்றை மட்டும்தான் உங்களுக்கு சொல்லி வைக்க விரும்புகின்றோம்.
அதாவது எவ்வாறு உங்கள் இனத்திற்கு ஆயுதம் ஏந்திய போராளிகள் தாயகபகுதியில் நிலைகொண்டிருப்பதனை ஏற்கமுடியாது இருந்ததோ, சகிக்க முடியாது இருந்ததோ அவ்வாறு தான் எமக்கும் உங்கள் இனத்தின் ஆயுதப்படைகள் எமது நிலத்தில் இருப்பதனையும் ஆட்சி செய்வதனையும் ஏற்கவும் முடியாது, சகிக்கவும் முடியாது.
இந்த நிலை சிங்கள மக்களுக்கு புரியும் வரை உங்கள் நல்லெண்ணம் நீண்டகாலத்திற்கு தமிழ் மக்களிடம் விலை போகாது.
நன்றி: ஈழநாதம்
Comments