அந்த வலியை நாம் உணர்ந்துள்ளோம் - ஓவியர் புகழேந்தி

தமிழ்.வெப்துனியா.காம்: அவரைக் கூட நீங்கள் ஓவியமாகப் படைத்தீர்கள். அவர் அதைப் பார்த்தாரா?


ஓவியர் புகழேந்தி: பார்த்தார். எல்லா ஓவியங்களையும் பார்த்து கருத்து சொன்னவர், அந்த ஓவியத்தைப் பார்த்து மட்டும் கருத்து சொல்லவில்லை. அவர் கருத்து சொல்லும் வரை நானும் விடவில்லை. இதுதான் நடந்தது. எல்லா ஓவியத்தையும் பார்த்து, திலீபன் ஓவியத்தைப் பார்த்தார். கடைசி நேர திலீபனுடைய நிலையை வரைந்திருக்கிறீர்கள். எப்படி உங்களால் அதைப் பார்க்க முடிந்தது. உண்மையிலேயே மக்களே கேட்டார்கள். எங்கள் திலீபன் அண்ணாவை எப்படி இவ்வளவு நுட்பமாக, அந்த கடைசி நேரத்தினுடைய உணர்வுகளை‌க் கொண்டு வந்திருக்கிறீர்களே என்று கேட்டார்கள். அதே வெளிப்பாட்டை அண்ணனும் கேட்டார்கள். நான் சொன்னேன் அப்பொழுது, ஈழத்திலே திலீபன் உண்ணாவிரதம் இருந்தால், நாங்கள் தமிழ்நாட்டிலே இருந்தோம். எங்கள் உடல்கள் வெவ்வேறாக இருந்தாலும், உணர்வுகள் ஓரிடத்தில்தான் இருந்தது. என்னுடைய உணர்வுகள் எல்லாம் ஈழத்தில்தான் இருந்தது. அதனால் என்னால் உணரக்கூடியதாக இருந்தது. அதனால்தான் செய்ய முடிந்தது.

இதுமட்டுமல்ல, பல்வேறு வகையான ஈழம் குறித்த ஓவியங்களைப் பார்த்துவிட்டு மக்களும் கேட்டார்கள், போராளிகளும் கேட்டார்கள், அண்ணனும் கேட்டார், எப்படி இவ்வளவு நுட்பமாக எங்கள் வாழ்க்கையை வாழாத நீங்களும் பதிவு செய்திருக்கிறீர்களே எப்படி என்று கேட்டார்கள். உண்மையிலேயே நான் வாழ்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். உங்கள் வீடுகள் அங்கு வீழுகின்ற போது அங்கே கேட்கின்ற கதறல்கள் எங்கள் காதுகளில் கேட்கின்றபோது அதை நான் உணர்ந்தேன். அதனால் நான் அனைத்து வகையான உணர்வுகளையும் பெற்றேன். அதனால்தான் என்னால் இப்படி செய்ய முடிந்தது. அதனால்தான் நீங்கள் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள் என்று நான் சொன்னேன். அதுதான் உண்மை. அந்த வலியை நாம் பெற்றிருக்கிறோம்.

25
ஆண்டுகளாக அந்த மக்கள் எவ்வளவு துன்பங்களையும், துயரங்களையும் அடைந்தார்கள் என்பதெல்லாம் நாம் பார்த்திருக்கிறோம். அதனால்தான் அந்த ஓவியங்களை பார்த்து மக்கள் உணர்கிறார்கள் என்றால், அந்த வலியை நாம் உணர்ந்திருக்கிறோம். அதன் வெளிப்படாகத்தான் அந்த ஓவியத்தில் இருக்கிறது.

webdunia photo
WD
தமிழ்.வெப்துனியா.காம்: உங்களுக்கு ஈழப் பிரச்சனையில் ஈழ மக்கள் பட்ட துயரம், துன்பம் எல்லாம் உங்களுக்கு ஒரு பெரிய தாக்கத்தை, வலியை ஏற்படுத்தியது. இதுபோன்று, இதற்கு ஈடாகவோ அல்லது சற்று குறைவாகவோ, கூடுதலாகவோ வேறு எந்த சம்பவமாவது உலக ரீதியில் உங்களை பாதித்து இவ்வாறு ஓவியம் தீட்டுவதற்கு தூண்டுதலாக அமைந்துள்ளதா?

ஓவியர் புகழேந்தி: ஒரு உண்மையை நான் இங்கு பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து நான் இதை சொல்லி வருகிறேன். நம்முடைய பாரம்பரியத்தில் நமக்கென்று ஏற்கனவே இருந்த பல்வேறு உணர்வுகள், நாம் தமிழர், நம் மொழி தமிழ் மொழி என்ற உணர்வு நமக்கு இருந்தது. ஆனால், ஈழ விடுதலைப் போராட்டத்தை நான் ஓவியங்களில் பதிவு செய்த பிறகுதான், அது நமக்கு ஒரு உலகப் பார்வையைத் தந்தது. அந்த ஈழப் போராட்டம்தான் உலகத்தில் எந்த இனம் ஒடுக்கப்பட்டாலும், எந்த மக்கள் பாதிக்கப்பட்டாலும் அந்த மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்கின்ற உலகப் பார்வையை, சர்வதேசப் பார்வையை நமக்கு கொடுத்தது.

ஆக, ஈழப் போராட்டம் என்ற ஒன்று இல்லாவிட்டால் உலகப் பார்வையே நமக்கு இருந்திருக்காது என்றுதான் நான் கருதுகிறேன். அந்த ஈழப் போராட்டம், உலகத்தில் எந்த மூலையில் மக்கள் ஒடுக்கப்பட்டாலும் அதற்காக குரல் கொடுக்க வேண்டும், அந்த மக்கள் படுகின்ற துன்பங்களை, துயரங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்கின்ற உந்துதலை எனக்கு கொடுத்தது.

அப்படி நான் தென் ஆப்ரிக்க விடுதலைப் போராட்டத்தை பதிவு செய்திருக்கிறேன். தென் ஆப்ரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் நெல்சன் மண்டேலாவினுடைய வாழ்க்கையையும் நான் அதில் பதிவு செய்திருக்கிறேன். யாசர் அராஃபத்தினுடைய பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை பதிவு செய்திருக்கிறேன். அதேபோல்...
தமிழ்.வெப்துனியா: ஆனால், எல்லாவற்றிற்கும் தூண்டுதலாக அமைந்தது ஈழப் போராட்டமா?

webdunia photo
WD
புகழேந்தி: ஆமாம், என்னைப் பொறுத்தவரை அதன்பிறகுதான், உலகத்தில் எது நடந்தாலும் பார்க்கத் தூண்டியது. ஏனென்றால், நம்ம மக்கள் அடிபட்டு வலிக்கும் போது நாம கதறுகிறோம். அதேபோன்ற கதறுதல்தானே அடுத்தவர்களிடம் இருக்கும் என்கின்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.

தமிழ்.வெப்துனியா: உங்களுடைய அரசியல் பார்வை கூட, விடுதலைப் புலிகள், ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒட்டியதாக ஏற்பட்ட நிகழ்வுகளின் காரணமாக அரசியல் ஏற்பட்டதா? அல்லது பள்ளி, கல்லூரி வாழ்க்கையிலேயே ஏற்பட்டதா?

புகழேந்தி: பள்ளி இறுதி முடிக்கும்போதே எனக்கு தமிழ் உணர்வு இருந்தது. எங்கள் குடும்பம் திராவிடர் இயக்க பின்னணியில் இருந்தது. எங்களுக்கெல்லாம் புகழேந்தி, மதிவாணன், பூங்கோதை என்ற பெயர்களை சூட்டியதெல்லாம் திராவிடர் இயக்கத்தினுடைய தாக்கம். ஒரத்தநாடு தொகுதி என்பது திராவிடர் இயக்கத்தின் மிக முக்கியமான கோட்டை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருந்தது. அதன் அடிப்படையிலே நாங்கள் பாரதிதாசன் பாடல்கள், பாரதியார் போன்று தமிழ் கவிதையெல்லாம் அந்த காலத்தில் எங்களுடைய தந்தை எங்களுக்கு ஊட்டினார், சொல்லிக் கொடுத்தார். ஒவ்வொரு நாளும் பாரதிதாசன் பாடல்களையெல்லாம் நாங்கள் ஒப்பிப்பது உண்டு. அது ஒரு உணர்வை, தமிழ் உணர்வைக் கொடுத்தது. ஈழப் பிரச்சனை, ஈழப் போராட்டம் தமிழன் என்கின்ற உணர்வைக் கொடுத்தது.

தமிழ்.வெப்துனியா: கொழும்புவில் இருந்து ஈழத்திற்குச் செல்லும் போது அந்த உணர்வு எப்படி இருந்தது? சி்ங்கள மக்களையும் நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா?

புகழேந்தி: நான் முதன் முதலில் கொழும்புவில் போய்தான் இறங்கினேன். கொழும்புவில் போய் இறங்கிய பிறகு, நான் வந்திருக்கிற செய்தி அறிந்து பத்திரிக்கையாளர்களே வந்துவிட்டார்கள். யாருக்கும் தெரியாமல்தான் போகவேண்டும் என்று நினைத்தோம். ஆனால் செய்தி எப்படியோ பரவி பத்திரிக்கையாளர்கள் வந்தார்கள். வந்திருந்தவர்கள் தமிழ்ப் பத்திரிக்கையாளர்கள்தான். அவர்கள் உடனே நிறைய செய்தியைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களிடம் நான் சொன்னேன், தயவு செய்து நான் திரும்பிப் போகும்வரை நேர்காணல்களை வெளியிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டேன். ஏனென்றால், என்னுடைய நோக்கம் வேறு. அப்படியிருந்தும் அவர்கள் பத்திரிக்கைகளில் போட்டுவிட்டார்கள்.

அவர்கள் பல்வேறு செய்திகளைச் சொன்னார்கள். என்னதான் சமாதான காலமாக இருந்தாலும் அந்தவொரு பதற்றம் தொற்றிக் கொண்டிருந்தது. அப்பொழுதே அந்த சமாதானத்தை உடைக்கின்ற பல்வேறு நிகழ்வுகளையெல்லாம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். எந்தவொரு புரிதல்களும் இல்லாத புரிந்துணர்வு ஒப்பந்தம். புரிதலே இல்லாத ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டு வைத்துக்கொண்டு, கொழும்புவிலும் பதற்றம், வெவ்வேறு இடங்களிலும் பதற்றம் என்று நிலவிய சூழல். அந்தச் சூழலில் நாங்கள் ஒவ்வொரு இடமாக சென்று, மகிழுந்துவில்தான் நாங்கள் பயணம் செய்தோம்.

போகின்ற ஒவ்வொரு இடங்களிலும் பார்க்கின்ற பொழுது சிங்கள மக்கள் பகுதிகளையெல்லாம் கடந்து சென்றோம். மிகவும் ஒரு அழகான நாடு. நல்ல பசுமையாக இருக்கின்ற ஒரு சூழல். நிறைய நதிகள் ஓடுகின்ற பகுதியாக சிங்களப் பகுதி இருக்கின்றது. உண்மையிலேயே பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. சில இடங்களில், புத்தளம் போன்ற பகுதிகளில் பயணம் செய்கின்ற போது, பல்வேறு பகுதிகள், தமிழ்ப் பகுதிகள் எல்லாம் சிங்கள மயமாக்கப்பட்டதை என்னுடைய நண்பர் சொல்லிக் கொண்டே வந்தார். பிறகு வவுனியா சென்றடைந்தோம். புத்தளமே தமிழ்ப் பகுதிதான். ஆனால் அது கலப்பு அதிகம் உள்ள பகுதி. அதைக் கடந்து வவுனியா செல்லுகின்ற பொழுது முழுக்க அது தமிழ்ப் பகுதி.

ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிதான் வவுனியா. அந்தப் பகுதியை கடக்கும் பொழுதே, ராணுவ நடமாட்டம், காவல்துறை நடமாட்டம் என்று அதிகம் தெரிந்தது. வவுனியாவைத் தாண்டி ஓமந்தை. இதுதான் எல்லைப் பகுதி. தமிழீழப் பகுதியையும், ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியையும், வவுனியாவும் தமிழீழம்தான். ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி என்று சொல்வதற்கு கூட தமிழ் மக்கள் தயாராக இல்லை. ராணுவத்தினுடைய ஆக்கிரமிப்புப் பகுதி என்று சொல்லுவார்கள். அந்தப் பகுதிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழீழப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதி. அதுதான் செக்போஸ்ட் என்று சொல்லக்கூடிய அந்தப் பகுதி.

தமிழ்.வெப்துனியா: போகும் வழியில் ராணுவத்தினர் உங்கள் ஓவியத்தைப் பார்த்தார்களா?

புகழேந்தி: எல்லாவற்றையும் பார்த்தார்கள். நான் வரைந்த ஓவியம் என்று சொன்னேன். ஆனால், பார்க்கணும் என்று சொன்னார்கள். ஒவ்வொரு ஓவியமாக எடுத்து பிரித்தார்கள். ஓவியங்களை சுற்றிதான் வைத்திருந்தேன். அங்கே போய்தான் காட்சிப்படுத்தணும்கிற நிலையில எல்லாவற்றையும் சுருட்டி வைத்திருந்தேன். அதை ராணுவத்தினர் பரிசோதிக்க வந்தார்கள். என்ன என்று கேட்டார்கள், பெயிண்ட்டிங்ஸ் Dont Open அப்படின்னு சொன்னேன். No we should check everything அப்படின்னாங்க. You can proceed என்று சொன்னேன். அதை எடுத்து பிரித்து பார்க்க ஆரம்பித்த உடனேயே ஆர்வத்தில் எல்லாவற்றையும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு என்ன இருக்கிறது என்பது புரிந்துவிட்டது. யார் செய்தது என்று கேட்டார்கள். நான்தான் செய்தேன் என்று சொன்னேன். எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள். சொன்னேன். ஒவ்வொரு ஓவியமாக பார்க்க ஆரம்பித்து பிறகு அதைப் பார்க்க மேலும் ராணுவத்தினர் வர ஆரம்பித்துவிட்டனர்.

webdunia photo
WD
இவர்கள் ஆர்வத்தில் பார்க்க வர ஆரம்பித்ததும் எனக்கு கொஞ்சம் பதட்டம் வந்துவிட்டது. ஏனென்றால், அதில் அண்ணன் படமெல்லாம் இருக்கிறது. அது தேவையில்லாத சிக்கலை உருவாக்கும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். அப்படி ஒவ்வொரு ஓவியமாகப் பிரித்துப் பார்க்கும் போது சொன்னேன், அழுக்காக்கி விடாதீர்கள். இதற்குப் பிறகும் அதைப் பார்க்காதீர்கள் என்று சொன்னேன். பிறகு அதிலிருந்த ஒருவர், பாவம் விட்டுவிடு என்று சொன்னார்.

உண்மையிலேயே அவர்கள் ஆர்வத்தில்தான் பார்க்கிறார்கள். அ‌தி‌ல் ஏதோ இருக்கிறது என்று அவர்கள் பார்க்கவில்லை. ஆனால், நமக்கு என்னன்னா, கீழே அண்ணன் படமெல்லாம் இருக்கிறது. தேவையில்லாமல் சிக்கலைக் கொடுக்குமே என்பது. பிறகு அவர்களே சுருட்ட ஆரம்பித்தார்கள். அப்புறம் நானே சுருட்டிக் கொள்கிறேன் என்று வாங்கி உள்ளே வைத்துவிட்டேன். பிறகு எங்கே போகிறீர்கள் என்று கேட்டார்கள். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டோம்.

தமிழ்.வெப்துனியா: உங்களுடைய பேச்சில், முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கூட போனேன் என்று சொன்னீர்கள். நந்திக் கடல் பகுதி தாண்டி அந்த இடத்திற்கு சென்றிருப்பீர்கள். அங்கே எப்படி இருந்தது அந்த நேரத்தில்?

புகழேந்தி: உண்மையிலேயே முள்ளிவாய்க்கால், முள்ளியவலை அந்தப் பகுதியெல்லாம் நான் கண்காட்சி நடத்திய இடம்தான். மிகவும் அடர்ந்த காட்டுப் பகுதி போன்ற ஒரு பசுமையான சூழல், தென்னை மரங்கள் அழகாக இருந்தது. சண்டை இல்லாத காரணத்தினால், அதுவும் முக்கியமாக என்னவென்றால் மீள்கட்டமைப்பு செய்து கொண்டிருந்தார்கள். நிறைய மரங்கள் நட்டு, ஏனென்றால் நிறைய காடுகளை அழித்துவிட்டார்கள். குண்டுகளை போட்டு மரங்களை அழித்து, கொஞ்சம் கூட ஈவிரக்கம் இல்லாமல், சுற்றுச்சூழலைப் பற்றி கவலையில்லாமல் ஒட்டுமொத்தமாக அழித்துவிட்ட நிலையில், புலிகள் மீள்கட்டமைப்பில் ஈடுபட்டு, வன வளத்துறை ஒன்று உருவாக்கி அதிகமான மரங்களை நட்டு வனத்தை பாதுகாக்கின்ற ஒரு பாதுகாப்பை ஏற்படுத்தி நிறைய மரங்களை நட்டிருந்தார்கள். ஒரு பசுமையான சூழலை உருவாக்கியிருந்தார்கள். அந்தச் சூழலில்தான் நான் அந்த முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்றேன். அற்புதமான ஒரு இடம். நம்முடைய மக்கள் எவ்வளவு செழிப்போடு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்கு மிகவும் உதாரணமாக இருக்கின்ற, புரிந்துகொள்வதற்கு ஒன்றாக இருக்கின்ற நிலையில் அங்கே நான் சென்றேன்.

அவர்களுடைய வாழ்க்கையைப் பொறுத்தவரை, நம்முடைய வாழ்க்கை, இங்கே சராசரியான வாழ்க்கை என்பது அங்கே மிகவும் பின்தங்கிய வாழ்க்கை. பொருளாதார ரீதியாக, செழிப்போடு வாழ்ந்த மக்கள்தான் தமிழீழ மக்கள். அவர்கள் சுயமாக தங்களுடைய மண்ணில் உழைத்து, சம்பாதித்து செலவு செய்து வாழ வேண்டும் என்கின்ற உணர்வோடு இருக்கின்றவர்கள். அதைச் செய்தவர்கள். அப்படி அந்த மக்கள் நிறைய தொழில்கள் செய்து, விவசாயம் செய்து, பல்வேறு தோட்டங்களை உருவாக்கி, அவர்களுக்கென்று தனிப்பட்ட பொருளாதாரத்தை, மறுசீரமைப்பை கட்டமைத்துக் கொண்டிருந்த காலம் அது. அந்தச் சூழலில்தான் அந்த இடத்திற்குச் சென்றேன். பரந்த அளவில் ஒட்டுமொத்தமாக அழகான ஒரு நாட்டை அங்கே நீங்கள் பார்க்கலாம். அது முள்ளியவலை என்று அல்ல, அனைத்து இடங்களிலும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள அத்தனை இடங்களிலும் எந்த வேறுபாடும் இல்லாமல் கட்டமைத்திருந்தார்கள்.

அதற்கு ஒரு சின்ன உதாரணத்தை நான் சொல்ல வேண்டும். என்னுடைய கண்காட்சியை - என்னுடைய நிகழ்ச்சிநிரலை முதலில் திட்டமிட்டார்கள் - பல்வேறு இடங்களிலே நடத்துவது என்று திட்டமிட்டு பல்வேறு ஓவிய பயிலரங்குகளை நடத்தி, அந்த நிகழ்ச்சி நிரலை ஒரு மாதத்திற்கு முன்பே வெளியிட்டிருந்தார்கள். அதன்படி நிகழ்ச்சி நிரல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள், தமிழ்ச்செல்வனும், அவருடைய அரசியல் துணைப் பொறுப்பாளராக இருந்த சுதா மாஸ்டர் என்று சொல்லக் கூடிய தங்கன் அவர்களும் வந்தார்கள்.

அண்ணே என்ன செய்வீர்களோ தெரியாது, இரண்டு நாள் மன்னார் பகுதிக்கு வரணும் என்றார். நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே நெருக்கடியாக இருக்கிறதே, உங்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லையே, நான் எப்படி இரண்டு நாள் ஒதுக்குவது என்று சொன்னேன். என்ன செய்வீர்கள் என்று தெரியாதுண்ணே, மன்னாரில் இருந்த மக்கள் தலைவருக்கு கடிதம் எழுதிவிட்டார்கள். எங்களை நீங்கள் ராணுவத்துடனேயே தள்ளிவிட உத்தேசித்திருக்கிறீர்களா? யார் வந்தாலும் வன்னியோடு வைத்து அவர்களை நீங்கள் அனுப்பி விடுகிறீர்கள். எங்கள் மன்னார் என்ன செய்தது? ஏன் எங்கள் மன்னாரை நீங்கள் கண்டுகொள்ளவில்லை. இல்லை ராணுவத்தோடு எங்களை நீங்கள் விட்டுவிடுகிறீர்களா? என்று கேட்டு கடிதத்தை எழுதிவிட்டார்கள்.

webdunia photo
WD
தலைவர் கூப்பிட்டு எங்களிடம் சொல்லிவிட்டார். புகழிடம் எப்படியாவது பேசி இரண்டு நாள் ஒதுக்கிவிடுங்கள் என்று சொல்லிவிட்டார் என்று கேட்டபொழுது, உண்மையிலேயே அந்த மக்களுடைய எதிர்பார்ப்பு நியாயமானது என்று பட்டது. ஒன்றுமே சொல்லவில்லை, கவலையை விடுங்கள், யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் குறைத்துவிடுவோம், கொழும்புவில் ஒரு நாள் குறைத்துவிடுகிறேன். மன்னாரில் இரண்டு நாட்கள் கண்காட்சியை வைத்துவிடுங்கள் என்று சொல்லி மன்னாருக்கு இரண்டு நாட்களுக்கு திட்டமிட்டோம்.

யாழ்ப்பாணத்தில் 5 நாட்கள் நடக்க வேண்டிய கண்காட்சியை ஒரு நாள் குறைத்து 4 நாட்களாக்கிவிட்டு, நான் ஊருக்குத் திரும்பும்போது கொழும்புவில் ஒரு நாள் இருப்பதாகத் திட்டம். அதையும் தவிர்த்துவிட்டு இரண்டு நாட்களை ஒதுக்கி மன்னாரில் கண்காட்சி வைத்தோம். ஆக, அந்த மக்களுடைய உணர்வை எந்த அளவிற்கு மதிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.

நான் மன்னாருக்குச் சென்ற பிறகுதான், மன்னார் மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியாக இருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன். அந்த மக்களுடைய வாழ்க்கை, அந்தப் பகுதி, மீன் பிடி தொழில், மடு தேவாலயம் இருக்கின்ற பகுதியை எந்த அளவிற்கு சிங்கள ராணுவம் சீரழித்திருக்கிறது என்பதையும் பார்த்தேன். எந்தவிதமான மின்சார வசதியும் இல்லாமல் அந்தப் பகுதி இருக்கிறது. படிக்கின்ற குழந்தைகள் மிகவும் பின்தங்கிய பகுதியில் இருந்து படிக்கிறார்கள். உண்மையிலேயே ஈழத்திற்கு நான் சென்றிருந்தபோது, மன்னாருக்குச் சென்றிருந்தபோதுதான் முழுமை பெற்றது கண்காட்சி. அந்த மக்களோடும், குழந்தைகளோடு நான் இருந்ததும், அவர்களோடு நான் நேரத்தை பகிர்ந்துகொண்டதும் எனக்கு மிகவும் மறக்க முடியாத ஒரு அனுபவம்.

உண்மையிலேயே அங்கு செல்லாமல் வந்திருந்தால் தமிழீழ பயணம் முழுமை பெற்றிருக்காது என்றே நான் எழுதியிருப்பேன். ஏன் இதை சொல்கிறேன் என்றால், தமிழீழத்தின் எந்தவொரு பகுதியையும் புலிகள் புறக்கணிக்கத் தயாராக இல்லை. எல்லோரையும், எல்லா பகுதிகளையும் சமமாக மதித்தார்கள். அந்த அளவிற்கு முக்கியத்தும் கொடுத்தார்கள். அதுவும் குறிப்பாக அண்ணன் பிரபாகரன் அவர்கள் எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரியான உரிமைகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைத்தார். எல்லா பகுதிகளையும் ஒரே மாதிரியாக கட்டமைக்க வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தார். அதற்காக வேலைத் திட்டங்களையும் செய்தார். அப்படி ஒட்டுமொத்த தமிழீழத்தையுமே ஒரு அழகான நாடாக, ஒரு மாதிரி நாடாக உருவாக்க வேண்டும் என்பதிலேயே அவர் குறியாக இருந்தார்.

தமிழ்.வெப்துனியா: மிக்க நன்றி. தமிழீழத்திற்கு சென்று வந்தது போன்று ஒரு உணர்வு இரு‌க்கிறது. நன்றி.


Comments