பறிக்கப்படுகிறது வன்னி மண்! பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா?

சிங்கள அரசின் கொடூர யுத்தத்தினால் இடம்பெயர்ந்த வன்னி மக்கள் திட்டமிட்டு அவர்கள் நிலங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். வன்னி மண் சிங்கள தேசத்தினால் அபகரிக்கப்படும் அபாயம் உள்ளதை நாம் மறந்துவிட முடியாது. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு நாளிதழ் தனது இன்றைய கட்டுரையில் தெரிவித்துள்ளது.

அதில் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளதாவது:-


வன்னி மக்களைச் சிறுகச் சிறுக முற்றாக அழித்தெழிக்கும் சிங்கள அரசின் திட்டத்திற்கு, மேற்குலக நாடுகளும் பல மனித உரிமைகள் அமைப்புக்களும் தெரிவித்துவரும் கண்டனங்களை சிங்கள அரசு செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை. இந்த நாடுகளின், அமைப்புக்களின் அழுத்தங்களைச் சமாளித்தவாறே தனது கொடூரங்களை நிறைவேற்றி வருகின்றது.

வன்னி வதை முகாம்களுக்குள் வைத்திருந்த மூன்று இலட்சம் மக்களில் முப்பதாயிரம் பேருக்கு என்ன நடந்தது, என்பதே இதுவரையில் தெரியப்படுத்தப்படவில்லை. அது குறித்து யாரும் அலட்டிக் கொள்வதாகவும் தெரியவில்லை. இதுவரை தெரிய வந்த கணக்குப்படி 5,000 ற்கும் குறைவானவர்களாலேயே இராணுவத்தினருக்கும், ஒட்டுக் குழுவினருக்கும் இலஞ்சம் வழங்கித் தப்பிச் செல்ல முடிந்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்பவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் முகாம்களுக்குத் திரும்பி அழைத்து வரப்படுவதில்லை. ஏற்கனவே இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் என்று சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட பத்தாயிரம் என்ற கணக்கு தற்போது பதின்மூவாயிரமாக அதிகரித்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்த மூவாயிரம் விடுதலைப் புலிகளையும், முகாமிலிருந்து தப்பிச் சென்ற சுமார் ஐயாயிரம் தமிழர்களையும் சேர்த்தாலும் முகாமில் இல்லை என்று அறிவிக்கப்பட்ட மேலும் 22,000 பேர் இலங்கையின் பல்வேறு சித்திரவதைக் கூடங்களுக்குள் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது இலங்கை அரசின் உத்தரவின்பேரில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அண்மையில் பிரித்தானிய ‘சனல் 4′ தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட படுகொலைக் காட்சிகளில் சிங்கள தேசத்தின் ஒட்டு மொத்த காட்டுமிராண்டித்தனமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா வதை முகாம்களுக்குள் தடுத்து வைத்திருக்கும் தமிழர்களை விடுவித்து அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் என்ற பெரும்பாலான சர்வதேச நாடுகளின் அழுத்தங்களைச் சமாளிக்க சிங்கள தேசம் மேலும் பல தடுப்பு முகாம்களை உருவாக்கி வருகின்றது. வவுனியா முகாம்களில் இருந்து விடுவிக்கிறோம் என்ற விளம்பரத்தோடு, அங்கிருந்த மக்கள் வடக்கிற்கும், கிழக்கிற்கும் அழைத்துச் செல்லப்பட்டு, ‘இடைத்தங்கல் முகாம்’ என்ற பெயரில் அமைக்கப்பட்ட பல்வேறு தடை முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு வருகின்றார்கள். சிலர் அங்கிருந்து அழைத்துச் சென்று அவர்களுக்குப் பரிச்சயம் அல்லாத அரச ஒட்டுக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுப்பகுதியில் மக்களால் கைவிடப்பட்ட வீடுகளில் கட்டாயமாகக் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

வன்னியில் தமிழ் மக்களது மீள் குடியேற்றம் என்பது திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்பட்டு, வன்னி மக்கள் நிரந்தர அகதிகளாக்கப்பட்டு, வேறு பிரதேசங்களில் கட்டாய குடியேற்றம் செய்யப்படுவது மிகவும் அபாயகரமான விடயமாகும். 1995-ம் ஆண்டில் சிங்களப் படைகள் யாழ். குடாநாட்டை ஆக்கிரமிக்கும் யுத்தத்தை மேற்கொண்டபோது, அங்கிருந்த ஐந்து இலட்ச் மக்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்த போதும் அவர்கள் பட்டினி தெரியாத அளவுக்கு வன்னி மண் அவர்களுக்கு வாழ்வு வழங்கியது. தற்போது, சிங்கள அரசின் கொடூர யுத்தத்தினால் இடம்பெயர்ந்த வன்னி மக்கள் திட்டமிட்டு அவர்கள் நிலங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். வன்னி மண் சிங்கள தேசத்தினால் அபகரிக்கப்படும் அபாயம் உள்ளதை நாம் மறந்துவிட முடியாது.

ஏற்கனவே, சிங்கள அரசுகள் திட்டமிட்டு எமது வளம் கொழிக்கும் பூமிகளை அபகரித்து வந்துள்ளது. கிழக்கே தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களும், கரையோரக் கிராமங்களும் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் ‘மணலாறு’ என்ற வளமான பகுதி சிங்களக் குடியேற்றங்களால் அபகரிக்கப்பட்டு, ‘வெலியோய’ என்ற முற்றுமுழுதான சிங்களப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. ‘மகாவலி கங்கை’ திட்டத்தால் பல்வேறு தமிழ்க் கிராமங்கள் சிங்களவர்களின் குடியேற்றங்களாக மாற்றப்பட்டு, அங்கு பூர்வீகமாக வசித்து வந்த தமிழர்கள் விரட்டப்பட்டுள்ளனர்.

வவுனியாவரை ஊடுருவியுள்ள சிங்கள குடியேற்ற மண் அபகரிப்பு வன்னிவரை விரிவாக்கம் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. தமிழர்களின் வளமான பூமிகளை வல்வளைப்புச் செய்வதன் ஊடாக, தமிழர்களின் தேசிய சிந்தனையைச் சிதைக்கும் சிங்கள இனவாதிகளின் திட்டங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிழக்கில் தமிழர்களின் பூர்வீக பூமியான சாம்பூர் தற்போது சிங்கள அரசால் அபகரிக்கப்பட்டு, அங்கே இந்திய அரசின் துணையோடு அனல் மின் நிலையம் உருவாக்கும் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.

யாழ். குடாநாட்டில் தமிழர்களின் வளமான நிலங்களும் வீடுகளும் அபகரிக்கப்பட்டு, உயர் பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டு, அங்கே தமிழர்களின் மீள் குடியேற்றம் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறே, வன்னியும் பல கூறுகளாக்கப்பட்டு, பாரிய பல படை முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, அங்கே நிலை கொண்டுள்ள இலட்சத்திற்கும் அதிகமான படையினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தங்கும் விடுதிகள் அமைக்கப் பாரிய நிலப்பகுதி சிங்கள அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே புத்த கோவில்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

தமிழர்களுக்குப் பாரிய அழிவுகளை ஏற்படுத்தி, இலட்சக்கணக்கான தமிழர்களைப் பலிகொண்டதுடன் திருப்திப்படாத ராஜபக்ஷ அரசு, எஞ்சியுள்ள தமிழர்களையும் அவர்களது பூர்வீக நிலங்களிலிருந்தும் அப்புறப்படுத்தி நிரந்தர அகதிகளாக்குவதன் மூலம் அவர்களை அடுத்த வேளை உணவுக்கு மட்டுமே சிந்திக்க வைக்கும் நிலைக்குள் வைத்திருக்கும் சதி முயற்சியில் இறங்கியுள்ளது.

வன்னி முகாம்களிலிருந்து எமது மக்களை உடனடியாக விடுவிக்கும் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதுடன், அந்த மக்களுக்கான மண்ணை மீட்கும் போராட்டத்தையும் தொடர வேண்டிய கடமை புலம்பெயர் தமிழர்களுக்கு உள்ளது.

நாகரியமடையாத, அடைய விரும்பாத காட்டுமிராண்டி இனமாக மேற்குலகால் அடையாளம் காணப்பட்டுள்ள சிங்கள அரசுமீது மேலும் பல அழுத்தங்களைக் கொண்டு வருவதன் மூலமே எஞ்சியுள்ள எமது மக்களையும், எமது மண்ணையும் சிங்கள இனவாதிகளிடமிருந்து மீட்க முடியும்.

எமது மக்களை மட்டுமல்ல… அவர்களது மண்ணை மட்டுமல்ல… எமது தேசத்தை மீட்கும் போராட்டத்திலும் நாம் தொடர்ந்து செல்வோம்!

எமது மக்களையும், எமது மண்ணையும், எமது தேசியத்தையும், எமது தேசியத் தலைவரை நேசிக்கும் தமிழர்களே, களம் நோக்கி வாருங்கள்! கைகோர்த்துப் போராடுவோம்!!

ஈழநாடு (பாரிஸ்)

Comments