கொலைஞர் இதற்கெல்லாம் கலங்கிப் போவாரா… என்ன?

ஈழத் தமிழர்கள் இன அழிப்புக்குள்ளாகி, பல்லாயிரக் கணக்கில் பலி கொள்ளப்பட்டு, எஞ்சிய தமிழர்கள் தொடர்ந்தும் படுகொலை செய்யப்பட்டும், வதைமுகாம்களில் அவலப்பட்டும் வரும் நிலையில் கருணாநிதியினால் அறிவிக்கப்பட்ட ‘உலகத் தமிழ் மாநாடு’ பற்றிய அதிருப்தி தமிழகமெங்கும் அதிகரித்து வருகின்றது. இவ்வாறு பாரிஸ் ஈழநாடு தனது இன்றைய இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

தமிழக முதல்வர் கொலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மீண்டும் ஒரு அரைநாள் உண்ணாவிரதப் போராட்டக் களம் திறக்கப்பட்டுள்ளது போலவே தெரிகின்றது.

வன்னி மீதான சிங்களப் படைகளின் தாக்குதல் உச்சம் பெற்று, தமிழீழ மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போது தமிழகத்தில் எழுந்த உணர்ச்சி அலைகளை உச்ச நிலையை அடைந்த வேளையில், சோனியா காந்தி அம்மையாரின் நரபலி வேட்டை தடைபட்டு விடக் கூடாது, அவர் தரும் வரம் இடை நின்று போகக்கூடாது என்ற கடமை உணர்வோடு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆடிய நாடகமும், எழுதிய கடிதங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.

இப்போதும் அவர் கடிதம் எழுதிய சாதனையை ‘கின்னஸ்’ சாதனையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வார ஏடுகள் கூட அடிக்கடி கேலிச் சித்திரம் வரையும் அளவிற்கு அவரது கடித சாதனை ஏற்கப்பட்டுள்ளது.

கருணாநிதி அவர்களது இந்தத் துரோக நாடகத்தைக் கண்டு வெகுண்டெழுந்த முத்துக்குமரன் தன்னைத் தீயிற்கு இரையாக்கித் தமிழகத்தைப் போர்க் கோலம் பூணச் செய்தார். அவரைத் தொடர்ந்து, மேலும் பல தமிழுணர்வாளர்கள் தம்மைத் தீயுக்கு இரையாக்கி தமிழீழ மக்களைக் காப்பாற்றக் கோரினார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பல்வேறு தமிழுணர்வுக் கட்சிகளும் அமைப்புக்களும் தொடர் போராட்டங்களை நடாத்தினார்கள். தமிழகப் பெண்கள் பலர் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். தமிழுணர்வுப் பெரியார் பழ. நெடுமாறன் ஐயா அவர்கள் தலைமையில் மேலும் பல போராட்டங்கள் என்று தமிழகம் போர்க் களமானது.

கொலைஞர் இதற்கெல்லாம் கலங்கிப் போவாரா… என்ன? அணிசேர்க்கக்கூடிய கட்சிகளை அணி சேர்த்து, அதே சோனியாவின் தமிழக காங்கிரஸ் கட்சியுடன் களமிறங்கினார். டெல்லி அசைகின்றது என்றார். டெல்லி பணிகின்றது என்றார். கலைஞர் அவர்களது நாடகத்தில் மன்மோகனும் காமடி சீனுக்கு வந்தார்.

எம்.கே. நாராயணனும், சிவ்சங்கர் மேனனும் அநுமான் வேடத்துடன் கலைஞரிடம் வந்தார்கள். அதே வேகத்துடன் இலங்கைக்கும் சென்றார்கள். தமிழகத்துத் தமிழர்கள் நம்பிவிட்டார்கள் மீண்டும் சீதைகளை சிறை மீட்க ராமர்கள் புறப்பட்டுவிட்டார்கள் என்று. பாவம், அவர்களுக்குப் புரியவில்லை நடைபெறுவது மகாபாரதம் என்று. கடல்கடந்து சென்றவர்கள் சகுனிகள் என்று.

கொழும்புக்குச் சென்ற சகுனிகள் ராஜபக்ஷ சகோதரர்களுடன் விருந்துண்டுவிட்டு, அவர்களது இன அழிப்புப் போருக்கு ஊக்கமும் ஆதரவும் கொடுத்துவிட்டுத் திரும்பினார்கள். கலைஞர் அகமகிழ்ந்து போனார். என்னால்தான் அவர்கள் கொழும்புக்குப் போனார்கள். இதோ வருகிறது யுத்த நிறுத்தம் என்றார்.

முள்ளிவாய்க்கால் வரை வன்னித் தமிழர்களைத் துரத்திச் சென்ற சிங்களப்படை தமிழர்கள்மீது கொத்துக் குண்டுகளையும், விஷ வாயுக் குண்டுகளையும், தடைசெய்யப்பட்ட பேரழிவு ஆயுதங்களையும் கொண்டு கொத்துக் கொத்தாகத் தமிழர்களைக் கொன்று குவித்தது.

தமிழகம் மீண்டும் கொந்தளிக்கத் தொடங்கியது. போராட்டங்கள் தீவிரமாகியது. டெல்லியின் தீர்மானத்தை எதிர்த்து நின்றால், காங்கிரஸ் கட்சியின் தயவு இல்லாமல் போய்விடும். எனவே, டெல்லியையும் எதிர்க்காமல், தமிழகத்தையும் எழுச்சி கொள்ளாமல் செய்வதற்கு கலைஞர் தேர்ந்தெடுத்த நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது.

அதன் இயக்குனரும், கதாசிரியரும், நடிகருமாகக் கலைஞர் அவர்களே இருந்து, காலை உணவுக்குப் பின்னர், அண்ணா சமாதி அருகே அரைநாள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

தகவல் அறிந்ததும் அவரது மனைவியார் தலைமாட்டிலும், துணைவியார் கால் மாட்டிலும் கதிரை போட்டு அமர்ந்து கொண்டார்கள். தமிழ் சினிமா கதாநாயனுக்கான அத்தனை ஏற்பாடுகளும் தடல்புடலாக நடந்தேறியது.

டெல்லிக்குச் செய்தி அனுப்பப்பட்டது. அங்கிருந்து பதிலும் வந்தது. உண்ணாவிரதம் வெற்றி என்ற அறிவிப்போடு மதிய உணவுக்காக வீடு போய்ச் சேர்ந்தார். அத்துடன் போராட்டங்கள் நிறைவுக்கு வந்தது.

டெல்லியின் திட்டப்படி கலைஞரது ஆதரவுடன் ஈழத் தமிழர்கள் மீதான படுகொலைகள் நடாத்தி முடிக்கப்பட்டது.

அந்த இடைவெளியில் நடாத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் சோனியாவுடன் மீண்டும் கைகோர்த்த கலைஞர் வெற்றியும் பெற்று, தன் வாரிசுகளுக்கான மந்திரிப் பதவிகளையும் போராடிப் பெற்றுக் கொண்டார்.

கலைஞர் கருணாநிதியின் அத்தனை துரோகங்களும் தமிழக மக்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவருக்கு எதிரான அணி மிகப் பலவீனமாக இருந்ததனால் மக்களது நம்பிக்கையை அவர்களால் திரட்ட முடியவில்லை.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் சிங்கள அரசு அந்த யுத்தத்தில் உயிர்தப்பிய தமிழர்களை வதை முகாம்களுக்குள் வைத்துக் கொடூரமாக சித்திரவதை செய்து, படுகொலைகள் புரிந்துவருவதனால், மீண்டும் தமிழகம் எழுச்சி பெற ஆரம்பித்துள்ளது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் சிங்களக் கடற்படையினரால் கொல்லப்பட்டு வரும் நிலை கலைஞர் மீது கரையோரத் தமிழ் மக்களும் அதிருப்தியில் உள்ளார்கள். இதைத் தனக்குச் சாதகமாக்க அ.தி.மு.க. தலைவி செல்வி ஜெயலலிதா அவர்கள் கையிலெடுத்துப் போராட ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில், கலைஞர் கருணாநிதி அவர்களால் அறிவிக்கப்பட்ட ‘உலகத் தமிழ் மாநாடு’ பற்றிய அதிருப்தி தமிழகமெங்கும் அதிகரித்து வருகின்றது. ஈழத் தமிழர்கள் இன அழிப்புக்குள்ளாகி, பல்லாயிரக் கணக்கில் பலி கொள்ளப்பட்ட நிலையில், எஞ்சிய தமிழர்கள் தொடர்ந்தும் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில் இப்படியான விழா தேவையில்லை என்று பல அரசியல் கட்சித் தலைவர்களும் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

கலைஞர் கருணாநிதி அவர்களைச் சுற்றி எங்கும் அவருக்கு எதிரான கருத்துக்கள் மேலெழுந்து வருவதால், கலைஞர் அவர்கள் மீண்டும் ஒரு அரை நாள் உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்ற வேண்டிய கால கட்டாயத்தினுள் நுழைந்துள்ளார்.

கொலைஞர் இதற்கெல்லாம் கலங்கிப் போவாரா… என்ன?

நன்றி: ஈழநாடு(பாரிஸ்)

Comments

NEDUNJAVADIYAR said…
avar than theliva solrar kelunga "Tamalarkale tamilarkale ennai kadalil thokki pottalum kattu maramai methappen athil erri niggal payanam seiyalam nan kavilnthu vidamatten" endru.
Kavanikkavum enn arumai thamilarkalai kavilnthu vidamatten endru mattumthan avar sonnar. Kavilthu vidamadden endru aver solla villai.