புலம்பெயர் தமிழர்களிடம் யாசிக்கும் சிங்களம்!


தமது காரியங்களைச் சாதிப்பதற்கும், மற்றவர்களை முட்டாள்களாக்குவதற்கும் தாம் மனநிலை தவறியவர்கள் போல நடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

அதை 'காரிய விசர்' என்று அழைப்பார்கள்.

அந்த வியாதி பெரும்பான்மை சிங்கள அரசியல்வாதிகளை, அதுவும் ஆளும் கட்சி சார்ந்தவர்களை முற்றாகப் பீடித்துள்ளது என்றே தோன்றுகிறது.

தடந்த மாதம் பெய்த பெருமழையால் வவுனியா வதை முகாம் வெள்ளக்காடாகியதால் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் பெரும் அவலங்களை எதிர் கொண்டிருந்தனர். மழை வெள்ளத்தால் கூடாரங்கள் சகதிகளாகி நிற்க, உறங்க முடியாத அவலங்களுடன் அவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த மல, சல கூடங்கள் நிரம்பி வழிந்ததால் மனிதக் கழிவுகள் முகாம்களுக்குள் அள்ளுண்டு வந்து அருவருப்பை ஊட்டியதோடு, அந்த மக்கள் மத்தியில் பல தொற்று நோய்களையும் பரப்பியது.

இந்த நிலையை சர்வதேச சமூகங்களும், மனித உரிமைகள் அமைப்புக்களும் கண்டித்தபோது சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தவை இந்த நோய் பலமாகத் தாக்கியிருந்தது. 'யுத்த அகதிகளுக்கான சுகாதார ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டியது ஐ.நா.வின் பொறுப்பே அல்லாமல் அது எமது வேலை அல்ல. குற்றம் சுமத்துவதாக இருந்தால் ஐ.நா. மீது குற்றம் சுமத்துங்கள்' என்று போட்டாரே ஒரு போடு... அனைத்துலகமும் கைகொட்டிச் சிரிக்காத குறைதான்.

வன்னியில் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் செல்வ வாழ்க்கை வாழ்ந்த மக்கள் மீது நாசகாரக் குண்டுகளையும், பல்குழல் பீரங்கிக் குண்டுகளையும் வீசிப் படுகொலைகள் புரிந்ததோடல்லாமல், விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்போவதாகக் கூறித் தமிழின அழிப்பை அரங்கேற்றிய மகிந்த அரசு, அங்கிருந்து வெளியெறிய தமிழ் மக்களையே வவுனியா வதை முகாம்களுக்குள் அடைத்து வைத்துத் தன் இனவாதக் கொடூரத்தை உலகுக்குப் பறைசாற்றி வருகின்றது.

இவர் மட்டும்தான் இப்படி என்றல்ல, இவரது சகோதரன் கோத்தபாய ராஜபக்ஷ முதல் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வரை அத்தனை பேரும் தமிழர்களின் அவலங்கள் பற்றிய கேள்விகளுக்கு இப்படித்தான் மனநலக் குiறாவான 'காமெடி' பண்ணுவார்கள்.

தற்போது, அதே தரத்திலான காமெடி ஒன்றை சிறிலங்கா முதலீட்டுச் சபையின் தலைவரான தம்மிக்க பெரேரா வெளியிட்டு புலம்பெயர் தமிழர்களைச் சிரிக்க வைத்துள்ளார். 'யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை தொடங்குவதற்கான 25 மில்லியன் டொலர் திட்டம் ஒன்றுடன் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை நான் அணுகினேன். ஆனால், தாம் போருக்கு பணம் கொடுப்பதில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்து விட்டார்கள். கல்விக்காக பணம் தர அவர்கள் தயாரில்லை' என்று காமெடி பண்ணியுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாக நடமாடவும், நிம்மதியாகக் கல்வி கற்பதற்குமான வாய்ப்புக்களே மறுக்கப்பட்டு பல சதாப்தங்கள் ஆகிவிட்டது. சுற்றி வழைப்புக்களும், நள்ளிரவுக் கைதுகளும், கடத்தல்களும், காணாமல் ஆக்குதலும் என்றே தமிழர்களின் வாழ்வு அலங்கோலப் படுத்தப்பட்டுள்ளது. 1995-ம் ஆண்டு விடுவிக்கப்பட்ட யாழ் குடா நாடு இன்றும் திறந்த வெளிச் சிறைச்சாலையாகவே உள்ளது.

அந்த மக்களின் அடிப்படை உரிமைகள் ஆயுதப் படையின் கருணையோடு பிணைக்கப்பட்டுள்ளது.

எப்போது வருவான், எப்போது பிடிப்பான்? எங்கே கொண்டு போவான்? எப்போது விடுவான்? அதற்கு எவ்வளவு கேட்பான்? அல்லது எங்காவது கொன்று வீசிவிடுவானா?

என்று ஆயுதப் படைகளுக்கு மட்டுமல்ல, ஆயுதக் குழுக்களுக்கும் அந்த அப்பாவி மாணவர்கள் கோழிக் குஞ்சுகளாக குறுகிப் போய் வாழும் பரிதாப நிலை இப்போதும் மாறவில்லை. அவர்கள் பட்ட காயங்கள் ஆறியிருந்தாலும் மனக் காயங்கள் மருந்திடப்படாமலேயே ரணமாக உள்ளே எரிந்து கொண்டுள்ளது.

தமிழீழ மக்கள் தமிழர் என்ற ஒரே காரணத்தால் பொருளாதார சிதைவுக்குள்ளாக்கப்பட்டு, கல்வியால் தரப்படுத்தப்பட்டு, படுகொலைகள் புரியப்பட்டு, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, புலம் பெயர வைக்கப்பட்டு, அகதிகளாக்கப்பட்டு, அநாதைகளாக்கப்பட்டு நொருக்கப்பட்ட வரலாறு அத்தனை இலகுவாக மறக்கப்படக் கூடியதல்ல. இத்தனையும் புலிகள் களத்திற்கு வருவதற்கு முன்னமே சிங்கள அரசால் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.


இன்று வரை தம் சொந்த இடங்களில் குடியேற அனுமதிக்கப்படாமல் யாழ் குடாநாட்டில் மக்கள் தமிழர்கள் என்பதால் நிரந்தரமாகவே அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள். யுத்தம் முடிந்த பின்னரும் பாதுகாப்பு வலயங்களோ, சோதனைச் சாவடிகளோ, ஆக்கிரமிப்பு முகாம்களோ எதுவுமே இதுவரை அகற்றப்படவில்லை. இராணுவ மயப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் தமிழ் மக்கள் அச்சத்துடன் வாழ விடப்பட்டுள்ளனர்.

எங்கள் பிரதேசங்களிலிருந்து உங்கள் ஆக்கிரமிப்புப் படைகளையாவது அகற்றிவிடுங்கள், எங்கள் மக்களின் அத்தனை தேவைகளையும் நாம் பார்த்துக் கொள்ளுகின்றோம். எங்கள் மக்களை மனிதர்களாக நடாத்துங்கள் எங்கள் மக்கசே சாதித்துக் காட்டவார்கள். உங்கள் பிடியிலிருந்து எங்களது மக்களை மீட்க நாங்கள் பொராடும்போது எங்களிடமே பிச்சை எடுத்து, எங்கள் மக்களை உயர வைப்பதாகக் கூறும் மனநலம் பாதிக்கப்பட்ட கருத்துக்களைக் கண்டு நாமும் பரிதாபகரமாக உங்களைப் பார்த்துச் சிரிக்கிறோம்.

ஈழநாடு (பாரிஸ்)

Comments