கொழும்பின் விளக்கம், வியாக்கியானம் சர்வதேச சமூகத்தை சமாளிக்கமாட்டாது


வன்னியில் நலன்புரி மையங்கள் என்ற பெயரில் இயங்கும் தடுப்பு முகாம்களில் சுமார் மூன்றுலட்சம் தமிழ் அகதிகளை முடக்கி வைத்திருக்கும் கொழும்பின் போக்குத் தொடர்பாக சர்வதேசம் இனியும் சகித்துக் கொண்டிராது என்பது அரசுத் தலைமைக்கு இப்போது நன்கு உணர்த்தப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது. "இந்த மக்களை மீளக்குடியேற்றும் விடயத்தில் அரசுக்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவை. இந்த விவகாரத்தில் கண்ணிவெடி அகற்றுவது உட்பட அரசு எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும்" என்று ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதித்தலைமைச் செயலாளர் நாயகம் லியன் பாஸ்கோவிடம் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவரின் இந்த விளக்கத்தை ஐ.நாவும், சர்வதேச சமூகமும் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளுமா? இந்த விளக்கத்தை உள்வாங்கி ஒப்புக்கொண்டு அதனடிப் படையில் தொடர்ந்தும் இந்நிலைமை தொடர அவை பார்த்துக்கொண்டு வாளாவிருக்குமா? என்பவையே இப்போது எழும் கேள்விகளாகும்.
இந்த அகதிகள் "சிறை வைப்பு" விவகாரத்தை ஒரு நாட்டின் அரசினுடைய பிரச்சினையாக மட்டுமோ அல்லது நடைமுறைச் செயற்பாடுகளை ஒட்டிய அடிப்படைப் பிரச்சினைகளின் ரீதியில் மட்டுமோ சர்வதேச சமூகம் கணிப்பிடாது; மதிப்பிடாது.

அதற்கும் அப்பால் இந்த விவகாரங்களோடு தொடர்புபட்ட பல அம்சங்களின் ஒப்பீடுகள், தொடர்புகளுடனேயே இந்த விடயத்தை சர்வதேசம் சீர்தூக்கி மதிப்பீடு செய்யும் என்பது நிச்சயம்.

  • இலங்கை அரசு வெற்றி கொண்டதாக அறிவிக்கப்பட்ட யுத்தத்தின் இறுதி நாள்களில் சம்பந்தப்பட்ட தரப்புகள் நடந்துகொண்ட முறைமை, மனித உரிமையைப் பேணுதலும், மனித உயிர்களை மதித்தலும் கையாளப்பட்ட விதம்
  • இடம்பெயர்ந்த தமிழ் அகதிகளை தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலைமை, அங்குள்ள வசதிகள், அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள், அந்த அகதிகள் நடத்தப்படும் முறைமை

  • இந்த அகதிகளைத் தொடர்ந்து தடுத்து வைக்கப் பட்டிருக்கின்றமைக்குக் கூறப்படும் காரணங்கள், அவற்றின் பின்னணிகள், உண்மைத் தன்மைகள்

  • வன்னியில் முடக்கப்பட்டுள்ள அகதிகள் மற்றும் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் தொடர்பில் அரசு வெளியிடும் தகவல்கள்,

  • உண்மைத் தகவல்களையும், புள்ளி விவரங்களையும் வெளிப்படுத்துவதில் காட்டப்படும் பின்னடிப்புகள், வெளிப்படைத் தன்மை இல்லாதபோக்கு, பொறுப்புக் கூறும் கடப்பாடு மறுக்கப்பட்டு, மறக்கப்பட்டிருக்கின்றமை

  • இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாணும் விவகாரத்தில் கொழும்பு பிரதிபலிக்கும் அசிரத்தைப் போக்கு, அந்த விவகாரத்தைவிட ஆட்சிப் பீடத்தின் அரசியல் நலனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், முன்னுரிமை.

  • தீர்வுக்கான எத்தனத்துக்கு முன்பாக சிறுபான்மையினரான தமிழர்களின் தாயகம் தொடர்பான புவியியல் கணிப்பீட்டை மாற்றியமைக்கும் விதத்தில் குடியேற்றங்களை மேற்கொள்ள எடுக்கப்படும் முயற்சிகள்.

  • நீதியான தீர்வையும், கௌரவமான வாழ்வையும் சிறுபான்மையினருக்குத் தாமதிக்காமல் வழங்கவேண்டும் என்ற அரசியல் யதார்த்தத்தை கட்டாயத்தை பெரும்பான்மையின மக்களுக்கு உணர்த்தி, அந்தத் திசையில் நடவடிக்கைகளை எடுப்பதை விடுத்து தனிப்பட்ட ஆள்களின் அரசியல் அதிகாரத்தை ஸ்திரப் படுத்தி, வலுப்படுத்துவதில் மட்டும் காட்டப்படும் சிரத்தை.

  • மனித உரிமைகளைப் பேணுதல், ஊடக சுதந்திரத்தை மதித்தல் போன்ற ஜனநாயகப் பண்பியல்புகளை உறுதிப்படுத்தாமல், தொடர்ந்தும் அடக்குமுறைப் போக்கை நாட்டில் நிலைநிறுத்துகின்றமை.

  • ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு அடிப்படையான அரசமைப்பின் 17ஆவது திருத்த ஏற்பாடு களை நடைமுறைப்படுத்தாமல் தொடர்ந்தும் எதேச்சாதிகாரப் போக்கில் செயற்படுவதில் காட்டப்படும் முனைப்பு.

இவை அனைத்துக்கும் அப்பால் நீதி, நியாயமான செயற்பாடுகளுக்காக வலியுறுத்தும் சர்வதேசத் தரப்புகள் குறித்து கொழும்பு வெளிப்படுத்தும் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகள் எடுத்தெறிந்தால் போல வெளியிடப்படும் அறிவிப்புகள், மேற்குலகை மட்டந்தட்டும் எண்ணத்துடன் பிரதிபலிக்கப்படும் கருத்துகள் இவை போன்ற இன்னோரன்ன பிற விவகாரங்களையும் பரிசீலனைக்கு எடுத்து அவற்றின் பின்புலத்திலேயே இலங்கை அரசுக்குள்ள பொறுப்பை சர்வதேசம் மதிப்பிடும்.

இந்த வகையில் நோக்கும்போது கொழும்பு அரசின் விட்டேத்தியான போக்கு மற்றும் திமிர்த் தன்மையான பேச்சுகள், பிரகடனங்கள் தொடர்பில் சர்வதேசம் குறிப்பாக மேற்குலகு இனியும் சகித்திருக்காது என்பதை எவராலும் ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.

Comments